Published:Updated:

"மக்கள் ரோபோக்கள் அல்ல... அப்படி அவர்களை மாற்றுவதுதான் ஆபத்து!" - ஃபூக்கோ நினைவுகள்

மக்கள் அனைவரையும் கிட்டத்தட்ட ரோபோக்கள் போல, ஒத்த சிந்தனையுடையவர்களாக ஆக்குவது மிகவும் ஆபத்தானது. அந்த இடத்தில் அதிகாரம் குவிவது பற்றி கூறியவர் ஃபூக்கோ

"மக்கள் ரோபோக்கள் அல்ல... அப்படி அவர்களை மாற்றுவதுதான் ஆபத்து!" - ஃபூக்கோ நினைவுகள்
"மக்கள் ரோபோக்கள் அல்ல... அப்படி அவர்களை மாற்றுவதுதான் ஆபத்து!" - ஃபூக்கோ நினைவுகள்

``ரலாறு என்பது வெறும் தகவல் திரட்டு அல்ல. மனிதர்கள் ஒவ்வொரு காலத்துக்கும் எப்படித் தங்களை மாற்றிக்கொண்டார்கள், அவர்களுடைய குணாதிசயம் எப்படி இந்த வரலாற்றினை எழுதியது என்பதனை அறிந்துகொள்வதன் மூலமாக, நிகழ்காலத்தில் சந்திக்கும் இடையூறுகளுக்கு விடை தேடலாம்" என்று எண்ணியவர் பிரெஞ்சு அறிஞர் மிஷேல் ஃபூக்கோ. வரலாறு என்பதனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அணுகிக்கொண்டிருந்தபோது, அதனைத் தத்துவவியலின் கண் வழியாக அறிந்துகொள்ள முயற்சி செய்தவர் ஃபூக்கோ. அதன் காரணமாகவே அவருடைய சிந்தனைகள் மற்ற 20 ம் நூற்றாண்டு சிந்தனையாளர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கின்றன. பின் நவீனத்துவம், பின் கட்டமைப்பியல் போன்ற தத்துவங்களில் ஃபூக்கோவின் பங்கு அதிகம். அரசியலில் சிறிது காலம் ஈடுபட்ட அவர் பேராசிரியராகவும், இலக்கிய விமர்சகராகவும்கூட பணியாற்றினார். தத்துவவியலில் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்த ஃபூக்கோ மறைந்த தினம் இன்று. 

ஃபூக்கோவின் குடும்பம் பாரிசில் செல்வச்செழிப்பு மிக்க ஒன்றாகத் திகழ்ந்தது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் மருத்துவர்களாக விளங்கினார்கள். ஆனால், ஃபூக்கோவுக்கோ மருத்துவத்தில் ஈடுபாடு இல்லை. அதே சமயம் கல்வி பயின்ற காலத்தில் தத்துவவியலில் மிகச் சிறந்த மாணவராக விளங்கினார். 
தன்பாலின ஈர்ப்பாளரான அவருடைய இளமைக்காலம் அவ்வளவு சிறப்பாக அவருக்கு அமையவில்லை. சொந்த வாழ்க்கையில் பல குழப்பங்கள் ஏற்பட்டதால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானதோடு மட்டுமல்லாமல், பலமுறை தற்கொலைப்பாதைக்கும் சென்று மீண்டார் ஃபூக்கோ.

மிக மிகச் சிக்கலான குழப்பங்கள், ஃபூக்கோவை இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சிந்திக்க வைத்தது. 1950களில் பிரெஞ்சு கம்யூனிசத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு அதிலிருந்து விலகிய அவர், 1966 ம் ஆண்டு `the order of things' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதுகிறார். பிறகு 70களின் தொடக்கத்தில் அமெரிக்காவில் பேராசிரியராகப் பணிபுரியத் தொடங்கிய ஃபூக்கோவுக்கு மாணவர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கிறது. குருவுக்கு முரணான சிஷ்யன் அமைவது இயற்கையோ என்னவோ, ஃபூக்கோவிடம் பயின்ற ழாக்ஸ் டெர்ரிடா இவருடைய சித்தாந்தங்களுக்கு எதிரான கருத்துகளை எழுதி தத்துவவியலை மேலும் செழுமையாக்கினார். 

எழுபதுகளின் இறுதியில் நடந்த இரானிய புரட்சி குறித்தும் விரிவாக எழுதிய ஃபூக்கோவின் எழுத்துகளில், லேசாகச் சிந்தனையாளர் நீட்சேவின் சாயல் இருந்தது. எடுத்துக்காட்டாக, இவர் எழுதத் தொடங்கிய காலத்தின் ஆராய்ச்சிக் கட்டுரையில், ``மனநிலை பிறழ்வு என்பது, மனிதர்கள் முதலாளித்துவத்தின்கீழ் ஒடுக்கப்படும்போது, அவர்கள் அந்நிய மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அப்போது ஆற்றப்படும் எதிர்வினையே மனநிலைப் பிறழ்ச்சி என்றும், அது சமூகக் காரணிகளால் தீர்மானிக்கப்படும் ஓர் உளவியல் நிகழ்வு" என்றும் எழுதினார் ஃபூக்கோ. ஆனால், ஃபூக்கோவின் எழுத்தும் சிந்தனையும் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதப்பட்ட பக்கங்கள், இன்றும் ஆராய்ச்சி மாணவர்களை வியப்பிலும், கேள்விகளிலும் ஆழ்த்துகின்றன. இதற்கு அவருடைய `Discipline and Punish', `Birth of the Clinic', `History of Sexuality' போன்ற புத்தகங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

மனம் சார்ந்த விஷயங்களுக்கு வரலாற்றின் வழி பதில் தேடிய ஃபூக்கோ, அறிவுக்கும் அதிகாரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்றும், அதன் கட்டமைப்பு காலம் காலமாக இருந்து வருகிறது என்றார். அவரின் எழுத்துகள், அதிகாரத்தினால் கைகள் ஓங்கிய நிலையில் இருக்கும் அனைவருக்கும் எதிராக எழுதிய எழுத்துகளாகப் பார்க்கப்பட்டன. அதிகாரம் எப்படித் தன்னுடைய முகத்தினைக் காட்டி வருகிறது என்பதனை விளக்க ஃபூக்கோ எடுத்துக்கொண்ட இடம், சிறைச்சாலை!

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தண்டனை என்பது அனைவரும் காணும் வகையில் பொது இடங்களில், கடுமையான முறையில் நிகழ்த்தப்பட்டது. அது ஒரு கட்டத்தில், தண்டனை பெறுபவர்மீது ஒரு வகையான பரிதாபத்தை மக்களிடம் உண்டாக்குகிறது. அந்தப் பரிதாபம் ஆட்சியாளனுக்கு எதிரான கோபமாக உருவெடுக்கிறது. இந்த நிலையிருந்து அதிகாரம் என்பது, மக்களிடமிருந்து சற்று விலகி நிற்கப் பார்க்கிறது. தண்டனைகள் நேரடியாக நிகழ்த்தப்படாமல், மறைமுகமாக நிகழ்த்தப்படுகின்றன. நான்கு சுவர்கள் கொண்ட சிறைச்சாலையின் உள்ளே என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. அது தெரிந்தால்தானே மக்களால் கிளர்ந்தெழவும், போராடவும் முடியும்? இந்த அறியாமைக்கும் அதிகாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறியவர்தான் ஃபூக்கோ. 

மக்கள் அனைவரையும் கிட்டத்தட்ட ரோபோக்கள் போல, ஒத்த சிந்தனையுடையவர்களாக ஆக்குவது மிகவும் ஆபத்தானது. அந்த இடத்தில் அதிகாரம் என்பது இன்னும் எளிமையாக வேலை செய்யும் என்று கூறிய ஃபூக்கோ, 1984 ம் ஆண்டு ஹெச்.ஐ.வி பாதிப்பினால் மரணமடைந்தார்.