Published:Updated:

எஸ்பிரஸ்ஸோ, லாட்டே, கேப்புச்சினோ... ஒரு சூடான காபி ரவுண்டப்!

எஸ்பிரஸ்ஸோ, லாட்டே, கேப்புச்சினோ... ஒரு சூடான காபி ரவுண்டப்!
எஸ்பிரஸ்ஸோ, லாட்டே, கேப்புச்சினோ... ஒரு சூடான காபி ரவுண்டப்!

அடுத்த முறை காபி ஷாப்புக்குச் செல்லும்போது எந்த காபி எப்படிப்பட்டது என்று தெரிந்துகொண்டால் வேலை ஈசியாகுமே பாஸ்! இதோ குட்டியாக ஒரு காபி ரவுண்டு! 

கடைசி நாள் தேர்வு `ட்ரீட்’முதல் கல்யாணப் பேச்சுவரை இப்போது எல்லாமுமே காபி ஷாப்பில் நடக்கிறது. முதல் முறையாக ஒரு காபி ஷாப்பிற்குள் நுழைந்த அனுபவத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டோம். நம் வீடுகளில் காய்ச்சியப் பால், சர்க்கரை, காபித்தூள்/டிகாக்ஷன் என்று இருந்த காபி திடீரென்று நூறு வகை தோசை மாதிரி நூறு வகையாக, லேசாக வாயில் நுழையாதப் பெயர்களாக மாறியதும்,ஏதோ ஒரு காபி ஆர்டர் செய்து சுவைத்த அனுபவமும் நம்மில் பலருக்கு வாய்த்திருக்கும்தானே? அடுத்த முறை காபி ஷாப்பிற்குச் செல்லும்போது எந்த காபி எப்படிப்பட்டது என்று தெரிந்துகொண்டால் வேலை ஈசியாகுமே பாஸ்! இதோ குட்டியாக ஒரு காபி ரவுண்டு! 

முதலில் காபிக்கொட்டை பற்றிப் பார்ப்போம். இதில் இரண்டு வெரைட்டி. இரண்டும் கொஞ்சம் வெவ்வேறு தட்பவெப்ப சூழ்நிலையில் வளர்வதால் ருசியும் குணமும் சற்றே மாறுபடும். 

முதல் வகை: அராபிகா – கொஞ்சம் உயரமான இடங்களில் மட்டுமே வளரும் காபிக்கொட்டை இது. மென்மையான சுவை கொண்டது, எனவே, கொஞ்சம் உயர்தர காபியில் மட்டுமே இதனைப் பயன்படுத்துவார்கள். 

இரண்டாம் வகை: ராபஸ்டா – எளிதாக வளர்க்கலாம். அராபிகாவைவிட caffeine அளவு அதிகம் என்பதால் கசப்புச்சுவை அதிகமாக இருக்கும். இன்று பெரும்பாலான இடங்களில் பயன்படுத்துவது இந்த வகை காபிக்கொட்டையைத்தான். 

இனி, காபி வகைகள்:

எஸ்பிரஸ்ஸோ:

ஒரே ஒரு தோசைமாவை வைத்துக்கொண்டு நம்ம மக்கள் எப்படி விதம்விதமாக தோசையைச் சுட்டுத்தள்ளுகிறார்களோ, அதைப்போலத்தான் இந்த எஸ்பிரஸ்ஸோவின் கதையும். குட்டியாக நம் வீடுகளில் பாப்பாவுக்கு எல்லாம் பால் புகட்ட பாலாடை வைத்திருப்போமே, அந்த சைசில் குட்டியாக( ரொம்பவே குட்டியாக ) ஒரு ஷாட் திக்கான, சர்க்கரை கலக்காத, தூய காபி டிகாக்ஷன்தான் எஸ்பிரஸ்ஸோ. கொஞ்சோண்டு இருந்தாலும் ரொம்ப அடம். எவ்வளவு சர்க்கரை கலந்தாலும் அவ்வளவு கசப்பாக இருக்கும். சில மணி நேரம் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். தூக்கம் வரக் கூடாது என்று நீங்கள் விநோத வேண்டுதல் ஏதாவது வைத்திருந்தால் எஸ்பிரஸ்ஸோ உங்களுக்குக் கைகொடுக்கும்! இதுதான் அடிப்படை காபி. இதிலிருந்துதான் மற்ற காபி எல்லாம் செய்வார்கள்- வெவ்வேறு அளவில் பால், பால் நுரை, தண்ணீரின் அளவு, இல்லை அதில் சேர்க்கப்படும் சாக்லேட் சிரப் போன்றவற்றைவைத்துதான் மற்ற காபி மாறுபடும். 

மாக்கியாட்டோ (macchiato) 
எஸ்பிரஸ்ஸோவின் கசப்பு தாங்க முடியாமல் அதன் மண்டையில் கொஞ்சம் பாலும், பால் நுரையும் சேர்த்தபோது பிறந்ததுதான் இந்த மாக்கியாட்டோ. இதிலே இரண்டு வகை உண்டு – short மற்றும் long. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், long மாக்கியாட்டோவில் இரண்டு மடங்கு எஸ்பிரஸ்ஸோ சேர்க்கப்படும். 

லாட்டே(latte): 
ஒரு பங்கு எஸ்பிரஸ்ஸோ, மூன்றுமுதல் ஐந்து மடங்கு காய்ச்சிய பால். இதுதான் லாட்டே. கூட இன்னும் கொஞ்சம் ருசி வேண்டும் என்று நினைப்பவர்கள் வெனிலா, சாக்லேட், ஹஸல்நட் போன்ற இத்யாதிகளைச் சேர்த்துக்கொண்டு ருசியோ ருசியென்று ருசிப்பார்கள். 

கேப்புச்சினோ(cappuccino): 
கொஞ்சம் பாப்புலரான காபி. இரண்டு மடங்கு எஸ்பிரஸ்ஸோ. கூடவே காய்ச்சிய பால் சேர்த்துக் கலக்கும்போது ஒரு இரண்டு அல்லது மூன்று சென்டிமீட்டருக்கு நுரை தளும்பி நின்றால் அதுவே கேப்புச்சினோ. இந்த வகை காபிக்கும் வெனிலா, சாக்லேட், ஹஸல்நட் போன்ற சடங்கு சம்பிரதாயம் எல்லாம் உண்டு

மோகா(mocha): 
ஹாட் சாக்லேட் மற்றும் காபி இரண்டுக்கும் நடுவில் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்கும் காபி வகை இது. எஸ்பிரஸ்ஸோ, சாக்லேட் பவுடர், காய்ச்சிய பால் என்று அனைத்தையும் கலந்து, மண்டை மேலே கொண்டையாக பால் நுரையையும், இன்னும் கொஞ்சம் இருக்கட்டும் என்று சாக்லேட் பவுடரையும் தூவி (இப்போவே கண்ணக்கட்டுதே என்று நினைத்தால் கம்பெனி பொறுப்பில்லை) இறக்கினால் கமகம மோகா ரெடி. சில சமயம் இதில் கேரமல் போன்றவற்றையும் சேர்ப்பார்கள். 

அடுத்த கட்டுரைக்கு