Published:Updated:

95 வயதில் குஸ்தி... இயற்கை ஜிம்மில் அசத்தும் அதிரடி 'இளைஞர்கள்'!

95 வயதில் குஸ்தி... இயற்கை ஜிம்மில் அசத்தும் அதிரடி 'இளைஞர்கள்'!
95 வயதில் குஸ்தி... இயற்கை ஜிம்மில் அசத்தும் அதிரடி 'இளைஞர்கள்'!

கைகளில் மண்ணை தடவி, தொடயை தட்டியபடி கோதா களத்தில் இறங்கி குஸ்தியில் ஈடுபட்டனர் 95 வயது பழனி தாத்தாவும் , 85 வயது ராமு தாத்தாவும்.

கைகளில் மண்ணைத் தடவி, தொடையைத் தட்டியபடி கோதாவில் இறங்கி குஸ்தியில் ஈடுபட்டனர் 95 வயது பழனி தாத்தாவும், 85 வயது ராமு தாத்தாவும்! கரகோஷம் எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தினர் ஜிம்மின் இளம் மாணவர்கள். ஆம்... இது தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் வீர விளையாட்டுதான். `மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருக்கும் இயற்கை ஜிம்மில் பயிற்சி வழங்கிவரும் வி.கே.பி.பழனி மற்றும் ராமு ஆகியோரைச் சந்தித்தோம்.

95 வயது பழனி ஐயா பேசுகையில், `` `புதுயுக வாலிபர் தேகப் பயிற்சிசாலை’ என்கிற இந்த ஜிம்மை, எல்லாரும் `இயற்கை ஜிம்'முனுதான் சொல்வாங்க. இந்தப் பயிற்சிக்கூடத்துல ஒழுங்குமுறையா பயிற்சி செய்ததுனாலதான் நான் 95 வயசுலையும் ஆரோக்கியமா இருக்கிறேன். இப்பவரைக்கும் எனக்கு எந்த நோயும் இல்லை. வயசுதான் முதிர்ச்சி அடைஞ்சிருக்கு. இன்னிக்கு என்னால இளைஞர்களுக்குச் சமமா ஓட்டப்பந்தயம் ஓட முடியும். இந்த ஜிம்முல அதிக வயதுடைய மாணவன்னா, அது நான்தான். இந்த ஜிம்முக்கு மாஸ்டரெல்லாம் கிடையாது. ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்ச விஷயங்களைப் பரிமாறிக்குவோம். நாங்க கத்துக்கிட்ட விஷயங்களை இப்ப உள்ள மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கோம். அவங்க புதுசா வர்ற இளைஞர்களுக்குச் சொல்லிக்கொடுக்குறாங்க. இந்த ஜிம், யாருக்கும் சொந்தமில்லை. ஒரு டிரஸ்ட் மாதிரி உருவாக்கி, செயல்பட்டுக்கிட்டிருக்கோம்.

நவீன காலத்துலயும் கோதா மண்ணில் மண்வெட்டும் பயிற்சி, கல் தூக்கும் பயிற்சி, நீர்த் தொட்டியில் மூச்சுப் பயிற்சி, தென்னைமரம் ஏறும் பயிற்சினு 50-க்கும் மேற்பட்ட வித்தியாசமான பயிற்சிகள் இந்த ஜிம்ல கொடுக்கிறதால, இந்த ஜிம்முலயிருந்து பல இளைஞர்கள் போலீஸ், மிலிட்டரினு பல துறைகளுக்குப் போயிருக்காங்க. இந்த ஜிம்முக்கு வரும் மாணவர்கள், மது அருந்தக் கூடாது; புகைப்பிடிக்கக் கூடாதுனு சில ஒழுக்கக் கட்டுப்பாடுகள் இருக்கு. அதனாலதான் இங்க பயிலும் மாணவர்கள் திறமையானவர்களாகவும் நல்ல மனிதர்களாகவும் இருக்கிறாங்க. இந்த ஜிம்முல 1956-லிருந்து குஸ்திப் பயிற்சி தர்றோம். இருந்த சிறிய தொகையைச் சேர்த்து கோதா மண் தயார்பண்ணோம். பயிற்சிகள் எடுத்து வெளியிடங்களுக்குப் போய் பல போட்டிகள்ல கோப்பை ஜெயிச்சிருக்கோம். குஸ்திப் பயிற்சி செய்றதால உடல்ல வலு சேரும். யாரையும் தைரியமா எதிர்கொள்ள முடியும். அதேசமயம் இந்தப் பயிற்சியைத் தவறான செயலுக்குப் பயன்படுத்தக் கூடாதுனு முனைப்போடு இருப்போம்'' என்று துள்ளளோடு பேசினார்  பழனி ஐயா.

``இந்த ஜிம்மோட மொத்தப் பரப்பளவு 26 சென்ட். ஜிம்ல சில பொருள்கள் வாங்கிறதுக்காக 8 சென்ட்டை வித்துட்டோம்'' எனப் பேச ஆரம்பிக்கிறார் ராமு. ``எங்ககிட்ட பயிற்சிக்கான பெரியப் பெரிய இயந்திரங்களோ, எலெக்ட்ரானிக் சாதனங்களோ இல்லை. ஆனா, உடலை வலுவாக்க பலவிதமான பயிற்சிகள் இருக்கு. நூற்றுக்கணக்குல தண்டால் போடுவேன். என் உடம்புல நிறைய வலு இருக்கு. எங்க வயசுல இருந்த நபர்கள் எல்லாரும் இறந்துட்டாங்க. ஆனா, நாங்க இன்னும் குஸ்திப் பயிற்சியில இருக்கோம். நான் வட இந்தியர்கள்கூட குஸ்திச் சண்ட போட்டு ஜெயிச்சிருக்கேன். அவங்க கொஞ்சம் நூதனமா குஸ்தி போடுவாங்க. கொஞ்ச நேரம் அவங்க வித்தையைக் கவனிச்சா போதும், நம்ம ஊர் ஸ்டெயில்ல வாரித் தூக்கிப் போட்ருவேன். முட்டையில வெள்ளைக்கருவையும் உளுந்துமாவையும் நல்லெண்ணையில் உருட்டி வெச்சிருவேன். 500 தண்டாலுக்கு 2 உருண்டை சாப்பிடுவேன். அதனால்தான் என் உடம்பு இன்னும்கூட கட்டுமஸ்தாவா இருக்கு'' என்று தன் மார்பில் தட்டி, மாணவர்களை உற்சாகப்படுத்துகிறார் .

என்ன பாய்ஸ்... பழனி, ராமு தாத்தாக்களோடு குஸ்திபோட ரெடியா?!

அடுத்த கட்டுரைக்கு