Published:Updated:

தலித் பெண்கள் மீதான வன்முறையில் ஐந்து சதவிகிதத்துக்குக் குறைவாகவே வழக்குப்பதிவு!

இந்திய சமூகத்தில் பெண்களின் நிலை மிகவும் ஒடுக்கப்பட்டே வருகிறது

தலித் பெண்கள் மீதான வன்முறையில் ஐந்து சதவிகிதத்துக்குக் குறைவாகவே வழக்குப்பதிவு!
தலித் பெண்கள் மீதான வன்முறையில் ஐந்து சதவிகிதத்துக்குக் குறைவாகவே வழக்குப்பதிவு!

ந்திய சமூகத்தில் பெண்களின் நிலை மிகவும் ஒடுக்கப்பட்டே இருந்து வருகிறது. சட்டங்களில் பெண்களுக்கான உரிமைகள் உருவாக்கப்பட்டு இருந்தாலும், நடைமுறையில் எந்த உரிமையும் இல்லை என்பதே உண்மை. வேலைக்குச் செல்வோரில் மிகவும் குறைந்த சதவிகித பெண்களைத் தவிர, பெரும்பான்மையான பெண்கள் சுயசார்பு இல்லாமல்தான் உள்ளனர். குறிப்பாக, கிராமப்புற பெண்கள் பொருளாதரா சுரண்டலுக்கும், பல்வேறு வன்முறைகளுக்கும் ஆளாகி வருவது இன்னும் வேதனையான விஷயம். அதிலும் தலித் மற்றும் பழங்குடியினப் பெண்களின் நிலையோ மிகவும் கொடுமையானது.

மற்ற பெண்கள் ஒடுக்கப்படுவதற்கும், தலித் பெண்கள் ஒடுக்கப்படுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தலித் பெண்களை வன்முறைகளிலிருந்து பாதுகாக்க, பொருளாதாரரீதியாக அவர்களை முன்னேற்ற, கட்சிப்பதவிகள், உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுக்குப் பங்களிக்க, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க என்னவெல்லாம் செய்யலாம்? அதற்குத் தடையாக இருப்பது எது என்பது பற்றி  மதுரையில் நடந்த 'தலித் பெண்கள் கூடுகையில்' விவாதிக்கப்பட்டது.

சமூக செயற்பாட்டாளர்கள் வழக்கறிஞர் எழில் கரோலின், செம்மலர், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய், ஹேமலதா, கௌசல்யா, ஷாலின், முத்தமிழ், வழக்கறிஞர் மனோஜ், பழனித்துரை ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். எவிடென்ஸ் அமைப்பு இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது. இந்தக் கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுபற்றி நம்மிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், ''இந்திய அளவிலான பெண்களை எடுத்துக் கொண்டோமானால் தலித் பெண்கள்தான் மிக அதிகளவில் ஒடுக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் பெரும்பாலானோரிடம் உள்ள ஆதிக்க சிந்தனைதான் எனலாம். அதுபோன்ற பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முன்னெடுப்பை எவிடன்ஸ் அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தலித் பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்படும்போது, அவை தொடர்பான புகார்களில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாகவே எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுகின்றன. 'இதுபோன்ற கொடுமைகளிலிருந்து தலித் பெண்களைப் பாதுகாக்க என்னசெய்ய வேண்டும்?' என்பது பற்றி இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

சாதி, ஆணாதிக்கம், பணபலம், அரசியல் பலம் போன்ற பல காரணங்களால் தலித் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. அப்படியே துணிந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், ஆதிக்க சக்திகளும், காவல்துறையினரும் மிரட்டி வழக்கை திரும்பப்பெற வலியுறுத்துகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால், தலித் பெண்கள் அளிக்கும் வன்முறை தொடர்பான புகார்களைப் பதிவு செய்யாத காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு வழக்குப் பதிவு மையங்களை ஏற்படுத்த வேண்டும். இந்த மையத்தில் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்பு வகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, தலித் பெண்கள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்த மூன்று மாதத்திற்குள் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இத்தகைய புகார்களை விசாரிக்கும் அதிகாரிகள் குறைந்தபட்சம் எஸ்.பி. அந்தஸ்தில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை தலித் பெண்களுக்கு அரசு நிலம் வழங்குவதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

மேலும் கிராமப் பஞ்சாயத்து குத்தகைகளில் 20 சதவிகிதம் தலித் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். அனைத்து தனியார் துறைகளிலும் 20 சதவிகிதம் தலித் பெண்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க அரசு உத்தரவிடவேண்டும். இவற்றை நடைமுறைபடுத்தாத நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். அயல்நாட்டு நிறுவனங்களின் பணியாளர் தேர்வில் 20 சதவிகிதம் தலித் இளம்பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட மத்திய அரசு சிறப்புத் திட்டத்தினை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. என்னதான் சட்டங்கள் போட்டலும், திட்டங்கள் திட்டினாலும் தலித் பெண்களின் முன்னேற்றம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது'' என்றார்.