Published:Updated:

சிசிடிவி கண்காணிப்பில் திருச்சி - பொதுமக்கள் ஆதரவைக் கோரும் போலீஸ்!

சிசிடிவி கண்காணிப்பில் திருச்சி - பொதுமக்கள் ஆதரவைக் கோரும் போலீஸ்!
சிசிடிவி கண்காணிப்பில் திருச்சி - பொதுமக்கள் ஆதரவைக் கோரும் போலீஸ்!

திருச்சியில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சாலை முகப்புப் பகுதிகளை நோக்கி சிசிடிவி கேமராக்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் முழுமையான ஆதரவு வழங்க திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் மாநகரத்தில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்கவும்,  மாநகர போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்யவும், அதைக் கண்காணிக்கவும் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கேமிராக்களை ஒரே இடத்தில் இருந்து  கண்காணிக்க அதிநவீன கட்டுப்பாட்டு அறை கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

அந்தவகையில் திருச்சி முழுவதும் சுமார் 300 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருச்சி மாநகரத்தில் உள்ள வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை அமைக்கும் முயற்சியில் திருச்சி மாநகர காவல்துறை ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய ஆணையர் அமல்ராஜ், ``நிறுவனங்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் சிசிடிவி கேமராக்களை சாலைகள் நோக்கி அமைக்க வேண்டும். இதன் மூலம் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம். மாநகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க முயற்சிகள் செய்து வருகிறோம். இதற்காக அனைத்துத் தரப்பு மக்களிடமும் பேசி வருகிறோம். அமைக்கப்படும் கேமராக்கள் அனைத்தும் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு அதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளோம். இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு வழங்கிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் எந்த வகையான கேமராக்கள் அமைக்க வேண்டும் என்பதும் குறித்தும் கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனைகளும் பொதுமக்கள் சார்பில் காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.