Election bannerElection banner
Published:Updated:

``மகேஷிண்டே பிரதிகாரம்... கதையையே புரியாமல்தான் தமிழில் ரீமேக் செய்தார்கள்!" - `மலையாள கிளாசிக்' பகுதி 16

``மகேஷிண்டே பிரதிகாரம்... கதையையே புரியாமல்தான் தமிழில் ரீமேக் செய்தார்கள்!" - `மலையாள கிளாசிக்' பகுதி 16
``மகேஷிண்டே பிரதிகாரம்... கதையையே புரியாமல்தான் தமிழில் ரீமேக் செய்தார்கள்!" - `மலையாள கிளாசிக்' பகுதி 16

`மலையாள கிளாசிக்' தொடரின் பகுதி - 16 இது. `மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தைப் பற்றிய விரிவான அலசல்.

மகேஷ், ஓர் உள்ளொடுங்கிய கிராமத்தில் தனது அப்பாவுடன் இருக்கிறான். கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குப் புகைப்படம் எடுக்கிறவன். ஜங்ஷனில் ஒரு கடை இருக்கிறது. அப்புறம் பால்ய காலத்து சிநேகிதியுடன் இப்போதும்கூட தொடர்கிற ஒரு காதல் இருக்கிறது. நாள்கள் அப்படியே சென்றுகொண்டிருக்கும்போது, விதிவசமாய் ஜிம்சன் என்கிறவனுடன் அடிதடி உண்டாகிறது. நாலு பேர் பார்த்திருக்க அவமானகரமான ஒரு தோல்வியால் ஜிம்சனை சுளுக்கெடுக்காமல் காலில் செருப்புப் போடுவதில்லை என்று மகேஷ் சூளுரைக்கிறான் என்பதுதான், `மகேஷிண்டே பிரதிகாரம்' அடிப்படைக் கதை.

இத்தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

இதற்கு நடுவில் தவிர்க்க முடியாத குடும்பச் சூழலில் அவனது பால்ய காதலி வீட்டில் காட்டின மாப்பிள்ளையைக் கட்ட ஒப்புக்கொண்டு, மகேஷைக் கைவிட்டிருக்கிறாள். ஜிம்சனை அடிக்கலாம் என்று அவனைத் தேடிப்போனால், அவனோ துபாய் சென்று விட்டிருக்கிறான். மகேஷ் செருப்புப் போடாத தன் கால்களை செய்வதறியாது பார்க்கும்போது படத்தின் இடைவேளை வருகிறது.

எவ்வளவு சுளுவான கதை. ஆனால், அவ்வளவு சுளுவான படம் இல்லை. மிகவும் கைதேர்ந்த கலைஞனால் நெய்யப்பட்டு ஒவ்வோர்  அங்குலமும் பூ வேலைப்பாடுகளால் ஒளிர்கிற திரைக்கதை.

படத்தின் எளிமை வெற்றிக்குக் காரணமாயிற்று என்று எல்லோருக்கும் தெரியும். ஆயினும், படம் எளிமையானது இல்லை. இதை மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் என்பது வேண்டுமென்றேதான். இவ்வளவு முழுமை ஒரு படத்தில் அமைந்து விடுவதில்லை. தமிழில் இதை `நிமிர்' என்ற பெயரில் எடுத்தார்கள். ப்ரியதர்ஷனுக்கு இந்தக் கதையேகூட சரியாகப் புரியவில்லை என்பதை என்னால் உறுதியாய்க் கூறமுடியும்.

முதலில் இந்தக் கதையின் அடிப்படைக் கதாபாத்திரம், இடுக்கி. அது, கேரளாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டம். மலைப் பிரதேசம். குறைந்த மக்களே இருக்கிறார்கள். உயிர்த்துடிப்புடன் பிழைப்பதற்கு ஆகாத அங்கிருந்து வெளியேறிச் செல்கிறவர்கள் அதிகம். அப்படித்தான் மகேஷின் பால்ய சகி சௌமியா குடும்பத்தார் கேட்ட நிமிடமே கொஞ்சம் கண்ணீரை விட்டுவிட்டுத் தப்பிக்க முடிவெடுக்கிறாள். இங்கேயே இப்படியே இருந்தால் ஆயிற்றா என்று அவளது தந்தை கேட்டதற்குப் பதில் அது. மகேஷேகூட ஒரு சடங்கு வாழ்க்கைதான் வாழ்கிறான். நாம் சலிப்புடன் மேற்கொள்கிற அன்றாடங்கள் அவை. அவற்றில் ஒரு சுவாரஸ்யமும் கிடையாது. ஆயினும் மகேஷுக்கு விதிவசமாய், விபத்துபோல அமைகிற அந்தச் சண்டைதான் அவனைக் கொஞ்சமாவது விழிப்படையவைக்கிறது.

குளத்திலோ, ஆற்றிலோ, பாத்ரூமிலோ குளிக்கப்போகிற மலையாளி முதலில் தனது செருப்பைத் தேய்த்துக் கழுவாமல் இருக்கமாட்டான். படத்தின் முதல் காட்சியே இதுதான். அது அவனது கான்ஷியஸில் இருக்கும் ஓர் அயிட்டம். சண்டையில் தவறி சவால் வைக்கிறவனுக்குக் குறைந்த பட்சம் புதிதாய் ஒரு வைராக்கியமேனும் கிடைக்கிறது.

உலகில் அநீதி என்பது சரளமாய்ப் புழங்குகிற ஒன்று. அதில் எவ்வளவோ பலவீனமானவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அந்த அநீதியை எதிர்கொள்ள ஆகாமல் அல்லது முடித்து வைக்கத் தெம்பில்லாமல் அப்படியே அமுங்கிப் போகிறவர்கள்தானே பெரும்பான்மையினரும்?! படத்தின் இரண்டாம் பகுதியின் தொடக்கமே ஒரு ஹோட்டலில் புரோட்டா சாப்பிடுகிற ஒரு குங்பூ மாஸ்டரிடம் சோனியான ஒருத்தன் தனக்கு வித்தை கற்றுக் கொடுக்கமுடியுமா என்று கேட்பதுதான். அவனுக்கு ஒருத்தனை அடிக்க வேண்டும். பீப் சொல்லட்டுமா என்று கேட்கிறான். பின்னர் மாஸ்டரின் கிளாஸில் தப்பும் தவறுமாய் அடவுகள் செய்யும்போது, நாம் அந்த வரிசையில் மகேஷும் இருக்கிறான் என்பதைப் பார்க்கிறோம்.

இந்தப் படத்தின் இடைவேளைக்கு அப்புறம்தான் அசல் கதை விரிகிறது. ஆனால், படத்தின் தொடக்கத்தில் மகேஷின் அப்பா காணாமல்போய், பின்னர் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காட்சி மற்றும் அவரது அப்பா மன நோயாளியா என்று தொடர்கிற காட்சிகளில் பிற்பகுதிக்கான விதைகள் இருக்கின்றன. சௌமியா திருமணமாகி அந்த ஊரை விட்டுச் செல்கிறாள். மகேஷ் தன் கஷ்டங்களை முழுங்கிக்கொண்டு நாள்களை ஓட்டும்போது, துபாயிலிருந்து வேலை இழந்த பலரும் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியைப் பார்க்கிறான் மகேஷ். ஜிம்சன் வந்திருப்பானோ என்று பார்க்க அவனது வீட்டுக்குச் சென்று டீ குடித்துவிட்டு வெட்டியாய் திரும்பிப் போகிறான். அந்த வீட்டைச் சேர்ந்தவள்தான் ஜிம்சி. ஜிம்சனின் தங்கை. அவள் அவனது கடைக்குப் புகைப்படம் எடுத்துக்கொள்ள வருகிறாள்.

அவனால் அவள் கேட்ட புகைப்படத்தை எடுத்துக்கொடுக்க முடியவில்லை. அவன் அப்படியெல்லாம் பல விஷயங்கள் உலகத்தில் இருக்கின்றன என்பதை யோசித்தவனல்ல. ஆனால், தனது டார்க் ரூமில் டெவலப் செய்த பிளாக் அண்டு ஒய்ட் போட்டோவைப் பார்த்துக் கொண்டிருக்கிற அப்பாவைப் பார்க்கிறான் மகேஷ். அது அவர் தொலைந்துபோன அன்று தோட்டத்தில் காத்திருந்து கிளி வந்து கூடடையும்போது எடுத்த படம். தருணங்களைப் படம் பிடிக்கிற அறிவை முதன் முதலாக அறிகிறான் அவன். அப்பா எப்போதும் வேடிக்கைப் பார்ப்பதன் ரகசியத்தை அறிகிறான். அவர் மனிதர்கள் எல்லோரும் அழகானவர்கள் என்று சொன்னதற்கு அவருடைய மனசின் கண்களல்லவா காரணம்? அவருக்கு இடுக்கி போரடிக்காது. அவர் தன் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டார். ஒருமுறை, கடையைத் திறக்கப்போகிறேன் என்ற போது கடை அல்ல ஸ்டுடியோ என்றிருப்பார் ஆணித்தரமாய்.

உங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் எடுக்க வராதில்லையா என்று கேட்டு விட்டுப் போயிருக்கிறாள், ஜிம்சி. எவ்வளவு அவமானம்? உணவை வாயில் வைத்துக் கொடுக்க முடியும். மென்று க்ச் சொல்லி கேட்கக்கூடாது என்கிறார், அவனது அப்பா. போட்டோகிராபியைக் கற்றுக்கொடுக்க முடியாது, கற்றுக்கொள்ள முடியும் என்கிறார்.

மகேஷ் அவர் எடுத்த அக்காலத்தின் புகைப்படங்களை எல்லாம் பார்க்கிறான். அவற்றில் செயற்கைத்தனம் இல்லை. அல்லது அவற்றில் இயற்கை ஒளியே வேண்டிய அளவில் இருக்கிறது. அவ்வொளியில் பொலிகிற மனிதச் சிரிப்புகளில் அவர்களுடைய மனங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் வெறும் ஒரு போட்டோகிராபராக மட்டும் தனது வாழ்வைக் கழித்திருக்கவில்லை. நல்ல ரசிகராக இருந்திருக்கிறார். நல்ல கலைஞனாகத் தொழிற்பட்டிருக்கிறார். மகேஷ் மெதுவாகத் தனது தருணங்களை அடையத் தொடங்குகிறான். அது அவனுக்கு உறுத்தலாய் இருந்துவிட்ட ஜிம்சியைப் புகைப்படம் எடுப்பதில் முடிகிறது.

அது ஒரு தருணம், அப்படிக் கிடைத்துவிட்ட ஒரு புன்னகை, அந்தப் படம் ஒரு வார இதழின் அட்டைப் படத்தில் வெளியாகி அவளை சந்தோஷப்படுத்துகிறது. அவன்மீது ஏற்கெனவே சற்று ஈர்ப்பிலிருந்த அவள், அவன்மீது நிறைவு கொள்கிறாள். இருவரும் நெருங்குகிறார்கள். ஜிம்சி, தான் யாரென்று சொல்லத் தயங்கவில்லை.

ஜிம்சன் ஊரிலிருந்து திரும்புகிறான். பாட்டி இறந்திருக்கிறாள். அந்தச் சாவில் ஜிம்சி ஜிம்சனின் கண்களுக்குத் தட்டுப்படாமல் மகேஷை ஒதுக்கிக்கொண்டு சென்று பேசும்போது, மோதல் வேண்டாம் என்கிறாள். அண்ணனை உன்னால் தாங்க முடியாது என்றும் சொல்கிறாள். மகேஷ் நான் இப்போ குங்பூ எல்லாம் முடித்திருக்கிறேன் என்று லைட்டாகச் சொல்லும்போது, அதெல்லாம் ஒரு காமெடி இல்லையா என்று கேட்கிறாள் அவள். என்ன இருக்கிறது. சமாதானம் செய்துகொள்ள வழிகள் இருக்கின்றன. ஒரு புதிய செருப்பை வாங்கிப் போட்டுக் கொள்.

மொத்த ஊரும் அவனது காலையே வெறித்துப் பார்ப்பது அவனுக்கு மட்டும்தானே தெரியும்?

க்ளைமாக்ஸ் வேறு வந்துவிட்டது. அவன் ஜிம்சனை நொறுக்கப் புறப்படுகிறான். ஜிம்சிக்கும் அவளது அம்மாவுக்கும் இந்த ஆண்களுடைய ஈகோக்கள் புரியவில்லை. என்ன பைத்தியக்காரத்தனம் இது.

வெற்றி பெற்ற கையுடன் காலில் புது செருப்பை மாட்டிக்கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கிற ஜிம்சனிடம் நானும், உனது தங்கையும் காதலிக்கிறோம், நான் இவளைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறேன், என்ன சொல்கிறாய்... என்று கேட்கும்போது ஒரு வித பாடுமில்லாமல் படம் முடிகிறது.

இடுக்கி போதும். இந்த இடுக்கியில் இருந்துகொண்டே வாழ்வை முழுமையாய்க் காணுகிற எல்லாக் கோணங்களையும் அடைகிறான் மகேஷ். இடுக்கியைப் பற்றிய பாடலுடன் தொடங்கிய படம், அதே பாடலுடன் முடிவடைகிறது.

இடுக்கியை விட்டு வெளியேறிச் சென்ற ஒருவராக இந்தப் படத்தில் சிறிய ஒரு வேடம் செய்திருக்கிறார், திலீஷ் போத்தன். தொண்டிமுதலும் திருக்சாஷியும்கூட இவர் இயக்கிய படம்தான். மலையாளத் திரைப்படங்களில் இவருடைய இரண்டு திரைப்படங்களும் முற்றிலுமே வேறு தினுசானவை. திரைக்கதை பற்றி ஏற்கெனவே சொல்லியாயிற்று, எழுதின காட்சியை நமக்குக் கொண்டு சேர்க்கிற கடினமான வேலையில் அற்புதங்களைக் கலக்குகிறார். வெச்சுச் செய்யுறது என்போமில்லையா, அது.

கல்லூரி விட்டு வீட்டின் பின் வழியாக கிச்சனுக்குள் வந்து சோத்துக்கு அலையும் ஒரு பெண், அது படத்தின் நாயகி. தட்டு நிறைய பலாப்பழத்தை வைத்துக்கொண்டு தின்னுகிற அந்தப் பெண்ணிடம் ஒரு கரம் நீளும்போதுதான், அந்த வீட்டில் மூதாட்டி ஒருத்தி இருக்கிறாள் என்பதை அறிகிறோம். குங்பூ வகுப்பில் மகேஷ் இருப்பதும் அப்படியே. எப்போதுமே ஒருமாதிரியான சந்தேகமாகவே காணப்படுகிற சௌமியா, இறுதியாக மணமகனுடன் கை கழுவ வரும் இடத்தில் மகேஷ் நின்றிருக்கிற இடம், அந்த முறை எல்லாமே நம்மைவிட மலையாளிகளுக்குப் பெரிய திடுக்கிடலாக இருந்திருக்கும். அப்புறம் மகேஷான பஹத்தின் அந்தச் சிரிப்பு. மறக்கவே முடியாது.

ஓரிரு சோகையான படங்கள், அவற்றின் தோல்வி இவற்றுக்குப் பின்னர் பஹத்துக்கு மறுஉயிர் கொடுத்த படம் என்பதாக நினைவு. யோசித்துப் பார்த்தால், பஹத் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பாரேயோழிய, நமக்கு முகம் கொடுக்கிற காட்சிகள் குறைவு. சாவு வீட்டில் பசிக்குமோ என்று சௌமியாவுக்குப் பழங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் பரபரக்கிற அந்தத் தோட்டத்துக் காட்சியில் காதல் கொள்கிற சராசரிகளின் வேதனைகள் மொத்தத்தையும் எடுத்து வைத்து விடுகிறார். அனுமோளேகூட கதையின் முகம்தான்.

ஜிம்ஸிகூட ஒருவிதமான வலிமையைக் கொண்டிருந்து, பார்ப்பதற்கு சாதாரணமாக வளைய வருவது போலிருக்கும். அந்தப் பெண்ணுக்குத் தனது கதாபாத்திரம் நன்றாகப் புரிந்திருந்தது. இதெல்லாம் முடிந்து, சிறிதாக வந்து சென்ற அனைவருமே முழுமைக்குக் காரணம். அலேன்சியர் லே லோபசை என்னவும் சொல்லிப் பாராட்டலாம். மற்றும் சௌபின் சாகிர் தனது பிரத்யேக மொழி, பிரத்யேகப் பார்வை போட்டு முதலாளியின் பெண்ணைச் சுருட்டுவதல்லாமல் முதலாளியையே சுருட்டுவதும் வேறு ஒரு ஸ்டைலில் வந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்- shyju khalid

எடிட்டர் – saiju sreedharan

இசை – bijibal.

முறைப்படி இவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள் என்று படம் பார்த்து முடிந்த பிறகுதான் யோசிக்க முற்பட்டேன். ஒரு கதை சினிமாவாக இடறலின்றிச் சென்று கொண்டிருப்பதற்கு இவர்கள்தாம் காரணம். அப்படியே அமிழ்ந்திருந்து தங்களுடைய பணியைச் செவ்வனே நிறைவேற்றியிருந்தார்கள். இதில் யாரும் ஒரு பந்தய ஓட்டம் ஓடி தங்களைக் காட்டிக்கொண்டிருக்கலாம். சொல்லப்போனால் இயக்குநரேகூட சின்னத் தில்லாலங்கடிகள் போட்டு, அதிகப் பிரசங்கித்தனம் காட்டிக்கொண்டிருந்தால் வேறு ஒரு பேரை வாங்கிக் கொண்டிருக்க முடியும். நல்ல வேளையாய், அவர் அதைச் செய்யாமல் அடுத்த படம் எடுக்கிற வேலையைப் பார்த்தார்.

கிரிஸ்பின் மகேஷிடம் நான் நேற்று இரவு கிரீடம் படம் பார்த்தேன் என்பான். காலையில் அதன் இரண்டாம் பகுதியான செங்கோல் படத்தையும் போட்டார்கள் என்பான். லால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டதால் வேலை போயிற்று, காதலி போனாள், ஜெயிலுக்குப் போனார், திரும்பி வந்து மறுபடியும் ரவுடி ஆனார், அப்பா குடிகாரனாகி, அப்புறம் அவர் பிம்பாகவும் ஆனார். தங்கை விபசாரியானாள் என்றெல்லாம் அடுக்கி, அவனை அடித்துவிட்டுத்தான் புது செருப்புப் போடுவாயா என்று கேட்பான். மகேஷ் உறுதியுடன் ஆம் என்று சொல்வான்.

படம் அதுபோல தனது எல்லாப் பகடிகளையும் மீறி உறுதியாய் வாழ்க்கையைப் பற்றி சொல்வதுதான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு