Published:Updated:

மனதால், உடலால் சோர்கிறவர்களுக்கு ஹெலன் கெல்லரின் தன்னம்பிக்கைப் பாடம்! #HBDHelenKeller

பிசிக்கல் சேலன்ஜ் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஹெலன் விட்டுச் சென்ற பாடம், அவருடைய தன்னம்பிக்கை தான்!

மனதால், உடலால் சோர்கிறவர்களுக்கு ஹெலன் கெல்லரின் தன்னம்பிக்கைப் பாடம்!  #HBDHelenKeller
மனதால், உடலால் சோர்கிறவர்களுக்கு ஹெலன் கெல்லரின் தன்னம்பிக்கைப் பாடம்! #HBDHelenKeller

வாழ்க்கையில் வருகிற சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மனம் சோர்ந்து போகிறவர்கள். ஹெலன் கெல்லரைப் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். கேட்க முடியாது; பேச முடியாது; பார்க்கவும் முடியாது என்று ஐம்புலன்களில் மூன்று இயலாமைகளைக் கொண்டிருந்த ஒரு பெண் குழந்தை, பின்னாளில் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் ஆர்வலர் என்று பன்முகத் திறமையாளராய் வலம் வந்தது தன்னம்பிக்கையின் உச்சம். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்?

pic courtesy: biography.com

அது அமெரிக்காவின் டஸ்கும்பியா நகர். 1880 - ம் வருடம் ஜூன் 27 - ம் தேதி. ஆர்த்தர் கெல்லர் மற்றும் கேட் ஆடம்ஸ் தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. மகளின் அழகைப் பார்த்து அவளுக்கு, ஹெலன் என்று பெயர் வைத்தனர் பெற்றோர். `ஹெலன்' என்றால் ஒளிரும் விளக்கு என்று பொருள். குழந்தை ஹெலன் பிறந்த ஒன்றரை வருடங்கள் வரை மற்றக் குழந்தைகளைப் போல ஆரோக்கியமாகத்தான் இருந்தாள். அதன் பிறகு வந்த மூளைக்காய்ச்சல் அந்தப் பச்சை மண்ணின் பார்வை, பேச்சு, கேட்கும் திறன் மூன்றையும் பறித்துச் சென்றுவிட்டது. பிஞ்சு மகளின் நிலைமையைப் பார்த்து நெஞ்சம் உடைந்து போனார்கள் பெற்றோர். ஹெலனின் ஏழாவது வயது வரை இதுதான் நிலைமை. அதன் பிறகுதான் அந்தப் பேரதிசயம் மெள்ள மெள்ள ஹெலன் வாழ்க்கையில் நடக்க ஆரம்பித்தது.

தன் உணர்வுகளை எந்த வகையிலும் வெளிப்படுத்த இயலாமல் தவித்துக்கொண்டிருந்த ஹெலனை, அவருடைய பெற்றோர் அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்லிடம் அழைத்துச் சென்றனர். தங்கள் மகளின் எதிர்காலத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அவர் காட்டிய வழிதான் ஹெலனின் வாழ்க்கையை இன்று மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல எல்லோரும் ஆதர்சமாக எடுத்துக்கொள்ள காரணமாக இருக்கிறது. யெஸ், அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் சொன்னபடி, பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியான `பெர்கின்ஸ்'க்கு ஹெலனின் பெற்றோர் கடிதம் எழுத, அங்கிருந்து ஹெலனுக்கு ஆசிரியையாக அனுப்பப்பட்டார் ஆன் சல்லிவன்.

பிறர் பேசும்போது, அவர்களுடைய உதடுகளின் அசைவுகளை கைகளால் தொட்டு, அதன் மூலம் அடுத்தவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ள சொல்லிக் கொடுத்ததன் மூலம், ஹெலனுக்குப் புத்தம் புது காதுகளை முளைக்க வைத்தார் ஆசிரியை ஆன். அடுத்ததாக, ஹெலனின் உள்ளங்கைகளில் ஆங்கிலத்தின் ஒவ்வொரு எழுத்துகளையும் எழுதி, மொழியை அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு பார்வையற்றோருக்கான பிரெய்லி எழுத்துகளையும் கற்றுத் தந்தார். ஹெலனுடைய கல்விக் கண்களும் திறந்தன.

பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஹெலனின் ஆர்வம் மற்றும் மொழிகளை வேகமாக உள்வாங்கும் அவருடைய திறமை காரணமாக பத்து வயதுக்குள் பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றுக் கொண்டார். வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றது போதும், இனி வெளியுலகிலும் தங்கள் மகள் தைரியமாகத் தன் சிறகுகளை விரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஹெலனின் பெற்றோர், தங்கள் மகளைப் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். இங்குதான் பேசுவதற்கான பயிற்சி சிறுமி ஹெலனுக்குக் கொடுக்கப்பட்டது.

உதடுகளின் அசைவுகளைத் தொடுவதன் மூலம் கேட்க முடிந்தது; மொழிகளைக் கற்றதன் மூலம் கல்விக் கண் திறந்தது; ஆனால், சரியாகப் பேசுவதற்கு மட்டும் ஹெலனால் முடியவே இல்லை. இதற்கெல்லாம் சோர்ந்து போகிறவரா ஹெலன் கெல்லர்? இதுவரை சிறப்பு மாணவியாகக் கல்வி கற்றது போதும் என முடிவெடுத்தவர், பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கக் கிளம்புகிறார். ரேட்க்ளிஃப் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பிய அவருக்குப் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் அங்குப் படிக்க இடம் கிடைத்தது. வெற்றிகரமாகத் தன் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பார்ப்பது, கேட்பது, பேசுவது என மூன்று திறனிலும் சவால் உள்ள ஒரு பெண் இளங்கலை பட்டம் பெறுவது அதுவே முதல்முறை. பிறகு அதே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார் இளம்பெண் ஹெலன் கெல்லர்.

படிக்கும்போதே `தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்' என்ற புத்தகத்தை எழுதினார். இதைத் தொடர்ந்து பெண்ணுரிமை, தன்னைப் போல பார்ப்பது, கேட்பது, பேசுவது போன்ற சவால்கள் இருப்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, சமூகவியல் போன்றவற்றைப் பற்றி பல பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதினார். கூடவே உழைப்பாளர் உரிமைகளையும், சோஷியலிசத் தத்துவத்தையும் தன் எழுத்தில் ஆதரித்திருக்கிறார் ஹெலன். தன் ஆசிரியை ஆன் சல்லிவனுடன் சேர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் சென்று தன் பெயரிலேயே (ஹெலன் கெல்லர் நிதி) நிதி திரட்டி அதை, தன்னைப் போல சவாலுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் குழந்தைகள் படிக்கிற பள்ளிக்கூடங்களுக்கு வழங்கினார். பார்வையற்றவர்களுக்கான நூலகம் ஒன்றைத் தொடங்கினார்.

pic courtesy: biography.com

தன் குறைவுகளை எல்லாம் நிறைவாக்கிக் கொண்டு ஓடி ஓடி உழைத்த ஹெலனை, காலன் பக்கவாதத்தால் வீட்டுக்குள் முடக்கிப் போட, 1968 - ல் தன் 87 - வது வயதில் இம்மண்ணுலகை விட்டுக் கிளம்பியது அந்தத் தன்னம்பிக்கை.

பிசிக்கல் சேலன்ஜ் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஹெலன் விட்டுச் சென்ற பாடம், அவருடைய தன்னம்பிக்கை தான்!