Published:Updated:

ரோவனோக் தீவு... தொலைந்த 117பேர்... 400 ஆண்டுக்கு பின் விலகத் தொடங்கும் மர்மம்!

இங்கிலாந்தின் ராணி முதலாம் எலிஸபத் கடல்கடந்து வணிகம் செய்வதோடு நிற்காமல் தனது ராஜ்ஜியத்தையும் விஸ்தரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

ரோவனோக் தீவு... தொலைந்த 117பேர்... 400 ஆண்டுக்கு பின் விலகத் தொடங்கும் மர்மம்!
ரோவனோக் தீவு... தொலைந்த 117பேர்... 400 ஆண்டுக்கு பின் விலகத் தொடங்கும் மர்மம்!

``எலினோரா...! அநானியாஸ்...! யாராவது இருக்கீங்களா?"

மனித வாடையே இல்லாத அந்தத் தீவுக் காட்டுக்குள், இங்கிலாந்தின் அப்பகுதிக்கான கவர்னர் ஜான் வொயிட் (John White) தனது மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளையைத் தேடிக்கொண்டிருந்தார். அவரோடு வந்த ஆங்கிலேயக் கடற்படை வீரர்களும் ஆளுக்கொருபுறமாகச் சென்று மக்கள் யாரேனும் இருக்கிறார்களாவென்று தேடிக்கொண்டிருந்தார்கள். அங்கு வந்து புதியதாகக் குடியேறக் காலனி அமைத்தது 1587-ல் வொயிட்டோடு வந்த இங்கிலாந்து குடிமக்கள் அல்ல. அவர்களுக்கு முன்னரே வட அமெரிக்காவிலிருக்கும் அந்த ரோவனோக் (Roanoke) தீவில் ஆங்கிலேயர்கள் காலனி அமைப்பதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டனர். சொல்லப்போனால் கடல்தாண்டி காலனி அமைப்பதில் அவர்கள் எடுத்த முதல் முயற்சியும் இதுவே.

Photo Courtesy: Ancient Origins

அப்போதைய இங்கிலாந்தின் ராணி முதலாம் எலிஸபத் கடல்கடந்து வணிகம் செய்வதோடு நிற்காமல் தனது ராஜ்ஜியத்தையும் விஸ்தரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நம்பிக்கையானவரான சர் வால்டர் ராலி (Sir Walter Raleigh) என்பவரை அழைத்துத் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அதற்காக ராலி ஒரு மாலுமிக் குழுவை நியமித்தார். பிலிப் அமாடார் (Philip Amadar) மற்றும் ஆர்தர் பார்லோவ் (Arthur Barlowe) என்பவர்களின் தலைமையில் பயணித்த அந்தக் குழு 1584-ம் வருடம் வட அமெரிக்காவில் தற்போதைய வட காரோலினாவுக்கு (North Carolina) அருகிலிருந்த ரோவனோக் என்ற தீவை அடைந்தனர். ராணி எலிசபெத்தைக் கௌரவப்படுத்தும் விதத்தில் அந்த நிலப் பகுதிக்கு அவரது மற்றொரு பெயரான விர்ஜீனியா (Virginia) என்று பெயரிட்டனர். அது பல்லுயிர்த் தன்மை நிறைந்ததாகவும், விவசாயத்துக்கு ஏற்ற நிலமாகவும், வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் நிறைந்ததாகவும் விளங்கியது. ஆனால், அவர்களுக்கு முதலில் அங்கிருந்து 50 மைல் தூரத்தில் வாழ்ந்துகொண்டிருந்த பூர்வகுடிகளைப் பற்றித் தெரியவில்லை.

அவர்களுக்குப் பிறகு அதே பகுதியில் ஸ்திரமான வாழிடத்தை அமைக்க அந்தத் தீவுக்கு வந்த ரிச்சர்ட் கிரென்வில் என்பவரின் தலைமையில் 1585-ல் வந்த மாலுமிகள் கப்பலிலிருந்து உணவுப்பொருள்களை இறக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பூர்வகுடி இளைஞன் இவர்களை ஆச்சர்யமாகப் பார்த்தான். அச்சமின்றி நோக்கியவன் சிறிதும் தயங்காமல் அவர்களருகே வந்து வித்தியாசமாகத் தெரிந்த உடைகளையும், பொருள்களையும் ஆராயத் தொடங்கினான். முதலில் அவனைத் தாக்கத் தயாரான ஆங்கிலேயர்கள் அவனின் அறியாமையைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்து அவனோடு பண்டமாற்று முறையில் அவர்களது பொருள்கள் சிலவற்றைக் கொடுத்து தானியங்களைப் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு அடிக்கடி அங்கு வரத்தொடங்கிய பூர்வகுடி இளைஞனைப் பழக்கப்படுத்தி அவன் மூலமாக அவர்களின் கிராமத்துக்குச் சென்று அவர்களோடும் நட்புறவைத் திடப்படுத்தினர். அந்தப் பூர்வகுடிகளின் தலைவர் இவர்களிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்ததோடு, அவர்களின் வித்தைகளையும் கற்றுக்கொடுத்தனர். தங்கள் உணவுச் சேமிப்புகளில் பற்றாக்குறை ஏற்பட்டதால், கிரென்வில் மீண்டும் இங்கிலாந்து சென்றுவர முடிவெடுத்தார். இங்கு ஆங்கிலேயர்களுக்கான ஒரு சிறு கோட்டை எழுப்புவதற்கும், விவசாயம் செய்வதற்கும் மக்கள் குடியேறுவதற்கும் தகுந்தவாறாக அந்தப் பகுதியை மாற்றுவதற்கும் லேன் (Lane) என்பவரின் தலைமையில் 100பேரை விட்டுச்செல்ல முடிவுசெய்தார்.

அவர்கள் குளிர்காலத்திற்கான உணவுச் சேமிப்பைச் சரியாகச் செய்துவைக்காததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர். அவர்களுக்குப் பழக்கமாகியிருந்த பூர்வகுடிகளிடம் உதவிகேட்டுச் சென்றார்கள். ஆனால், தங்களுக்கான சேமிப்புகளே குறைவாக இருந்ததாலும் பெண்கள் குழந்தைகளுக்கு உணவு தேவைப்பட்டதாலும் பூர்வகுடிகளின் தலைவர் அவர்களுக்கு உதவ மறுத்துவிட்டார். 1585-ம் வருடத்தின் இறுதியில் தொடங்கிய குளிர்காலம் அடுத்த வருடத்தில் முடியும் வரை லேன் தலைமையிலான ஆங்கிலேயர்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டனர். வசந்த காலம் தொடங்கியபிறகு தங்கள் உணவுத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு, தங்களுக்கு உதவாத பூர்வகுடிகளைப் பழிவாங்கப் புறப்பட்டனர். கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டனர், வெட்டிச் சாய்த்தனர். இது அந்தப் பகுதியில் அவர்களுக்கிருந்த ஒரே நட்பையும் உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகளையும் முற்றிலுமாகத் தடைசெய்தது.

இது நடந்த சில நாள்களில் ஃபிரான்சிஸ் டிரேக் (Sir Francis Drake) என்பவரின் தலைமையில் மற்றுமொரு மாலுமிக் கூட்டம் அங்கு வந்தது. அவர்கள் அந்தப் பகுதியில் இங்கிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கடற்கொள்ளையர்கள். ஸ்பானியக் கப்பல்கள் ஏதேனும் இந்தப் பகுதியில் தென்பட்டால் அதைத் தாக்கிக் கொள்ளையடிக்கவும், அழிக்கவும் முதலாம் எலிசபெத் ராணியால் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவர்கள். லேன் தலைமையில் ரோவனோக் தீவில் கிரென்வில் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்த மாலுமிகள் இனியும் அவருக்காகக் காத்திருக்க முடியாதென்று முடிவுசெய்து ஃபிரான்சிஸ் கப்பலில் இங்கிலாந்து நோக்கிப் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற அடுத்த வாரமே அங்கு வந்துசேர்ந்த கிரென்வில் அனைவரும் கிளம்பிவிட்டதைத் தெரிந்துகொண்டு மேலும் 15 மாலுமிகளை அங்கேயே தங்கவைத்துவிட்டு அவர் நாடு திரும்பினார். அவருக்குத் தெரியவில்லை, லேன் தலைமையிலான சிறுபடையால் தாக்குண்ட பூர்வகுடிகள் இவர்களின் வருகையைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

1584-ல் கிரென்வில் முதன்முறையாக ரோவனோக் தீவுக்கு வந்தபோது ராணி எலிஸபெத்தின் கவர்னரான ஜான் வொயிட் என்பவரும் அவருடன் வந்திருந்தார். அவர் சில நாள்களே அங்குத் தங்கியிருந்தார். ஓவியர், போர் வீரர் மற்றும் அரசியல்வாதியுமான வொயிட், ஆங்கிலேயக் குடிகளை அங்கு அமர்த்த முடிவுசெய்யப்பட்டபோது அப்பகுதிக்கு கவர்னராகப் பொறுபேற்று அவர்களை வழிநடத்த அனுப்பப்பட்டார். 90 ஆண்கள், 17 பெண்கள், 11 குழந்தைகளென்று மொத்தம் வொயிட்டோடு சேர்த்து 119 பொதுமக்களைச் சுமந்துகொண்டு வொயிட்டின் கப்பல் ரோவனோக்கை நோக்கிப் பயணித்தது. 1857-ல் அவர்கள் அந்தத் தீவை அடைந்தபோது கிரென்வில் விட்டுச்சென்ற மாலுமிகள் யாரையும் காணவில்லை. தங்குவதற்கான வீடுகளை அமைக்கத் தொடங்கினார்கள். உணவு தேடுவதிலும், தங்குவதற்கான வீடுகளை அமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள். அந்தப் பகுதியில் வாழும் கிரோவடோவான் (Croatoan) என்ற பூர்வகுடிகளின் தலைவன் மாண்டியோ என்பவர் ஏற்கெனவே இங்கிலாந்து வந்திருந்தபோது வொயிட் அவரோடு நட்புகொண்டிருந்தார். அதனால் கிரோவடோவான் மக்கள் இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர்.

ஆங்கிலேயப் படையால் பாதிக்கப்பட்ட பூர்வகுடிகள் அவர்களைக் கண்காணித்துக் கொண்டேயிருந்தார்கள். அவர்களின் மனதில் வெள்ளையர்கள் அபாயமானவர்கள், நட்புக்கு மதிப்பளிக்காதவர்கள் என்பது போன்ற எண்ணங்களே பதிந்திருந்தன. ஒருமுறை அந்தக் கூட்டத்திலிருந்து ஓர் ஆங்கிலேயர் உணவு சேகரிக்கச் சென்றிருந்தபோது அங்கிருந்த பூர்வகுடிகளால் கொல்லப்பட்டார். உறுதியான வாழிடத்தை அமைக்கும் முயற்சியில் அருகில் வாழும் யாரோடும் பகை ஏற்படுத்திக்கொள்வது அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்பதைப் புரிந்திருந்த வொயிட் மாண்டியோ மூலமாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகளை மேற்கொண்டார். ஆகஸ்ட் 6-ம் தேதி இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாமென்று மாண்டியோ அறிவித்திருந்தார். ஆனால், அந்த நாளில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை. வொயிட் இதைப் போருக்கான அறிவிப்பாக எடுத்துக்கொண்டார்.

அவர்கள் நம்மீது போர் தொடுப்பதற்கு முன்பாகவே நாம் அவர்களைத் தாக்கவேண்டுமென்று முடிவுசெய்தார் வொயிட். அன்றிரவு ஆங்கிலேயர்கள் கண்ணில்பட்ட ஒரு பூர்வகுடி கிராமத்தைத் தாக்கினார்கள். அந்தத் தாக்குதலில் இரண்டு பூர்வகுடியினர் இறந்தனர். ஆனால், அவர்கள் தாக்கியது எதிரிகளையல்ல. நண்பர்களை. ஆம், கிரோவடோவான் இனத்தவரின் ஒரு கிளைக் கிராமத்தை. மாண்டியோவிடம் இது தற்செயலாக நடந்த தாக்குதல் என்பதைப் புரியவைத்துச் சமாதானப்படுத்தவே பல வாரங்கள் ஆகின. அந்தச் சமயத்தில்தான் கவர்னர் வொயிட் தாத்தாவானார். இங்கிலாந்தின் புதிய காலனியில் பிறந்த முதல் குழந்தை. இங்கு வரும்போதே கர்ப்பமாக இருந்த தனது மகள் எலினோரா பெற்றெடுத்த குழந்தையை, இந்தப் பகுதி இங்கிலாந்தின் ஆட்சியிலேயே இருப்பதற்கான ஓர் அடையாளமாக அவர்கள் நினைத்தனர். வொயிட் தனது பேத்திக்கு விர்ஜீனியா என்று ராணியின் பெயரை வைத்தார். சில மாதங்களிலேயே அந்த மக்களின் பிரதிநிதியாக அரசவையில் அவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வொயிட் இங்கிலாந்திற்குத் திருப்பியனுப்பப்பட்டார். செல்ல மனமில்லாமல், மக்களின் வற்புறுத்தலுக்கு இணங்கித்தான் அவரே கிளம்பினார்.

அங்கே சென்று ராணியிடம் அவர் கலந்தாலோசித்துவிட்டு, அவர் வரைந்து வைத்திருந்த அப்பகுதியைப் பற்றிய ஓவியங்களை ஆதாரத்துக்குக் காட்டினார். ஆனால், சென்ற வேகத்தில் அவரால் திரும்ப முடியவில்லை. துருதிர்ஷ்டவசமாக அவர் சென்றிருந்த சமயத்தில் இங்கிலாந்து ஸ்பெயினுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய போருக்குத் தயாராகிக்கொண்டிருந்தது. இங்கிலாந்தின் கப்பல்களில் ஒன்றுவிடாமல் அனைத்துமே இந்தப் போரில் பங்கேற்க வேண்டுமென்பது ராணியின் கட்டளை. வொயிட் எவ்வளவோ முயன்றும் அதிலிருந்து விதிவிலக்கு பெறமுடியவில்லை. போர் முடியும்வரை அவர் காத்திருக்க வேண்டிவந்தது. இறுதியாக மூன்றாண்டுகள் கழித்து ஸ்பெயினை வென்றபிறகு போர் முடிவுக்கு வந்தது. நேரத்தை வீணடிக்காமல் கவர்னர் ஜான் வொயிட் ரோவனோக் தீவுக்குக் கிளம்பினார். ஆங்கிலேயர்கள் அங்கு இருப்பதற்கான அடையாளமே தென்படவில்லை. அப்பகுதியின் மணலில் வெறும் பாதங்களால் நடந்த சில காலடித்தடங்கள் தென்பட்டன. ஆனால், அவர்கள் நிச்சயம் ஆங்கிலேயர்கள் இல்லை. ஆங்கிலேயர்கள் காலில் ஷூ இல்லாமல் எங்கும் செல்வதில்லை. இந்தச் சமயத்தில்தான் வொயிட் தனது மகள், மருமகன் பெயரைக் கூவி அழைத்தவாறு காட்டுக்குள் தேடிக்கொண்டிருந்தார். அவரோடு வந்த மற்ற மாலுமிகளும் பொதுமக்களைத் தேடிக்கொண்டிருந்தனர். அங்குத் தாக்குதல் நடந்ததற்கான சுவடேதும் தென்படவில்லை. மக்கள் ஏதேனும் நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால் அவர்களின் சடலங்கள் கிடைத்திருக்கும், ஆனால் சடலங்கள் எதுவும் அங்கே இல்லை. வீடுகள் முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

ஒருவேளை இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டால் எங்குச் செல்கிறார்கள் என்பதற்கான சுவடுகளை விட்டுச்செல்ல வேண்டுமென்று வொயிட் சொல்லியிருந்தார். அங்கே ஒரு மரத்தில் கிரோவடோவான் என்று எழுதியிருந்தது. வேறு எந்தச் சுவடும் அங்கே தென்படவில்லை. ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் பெயருக்குக் கீழே சிலுவைக் குறியும் பொறித்திருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் அங்கே பொறிக்கப்படவில்லை. அவர்களைத் தேடி தெற்கு நோக்கிச் செல்ல வொயிட் முடிவு செய்தார். ஆனால், அவர் வந்த கப்பலின் தலைவன் அப்பகுதியில் சுற்றிவரும் ஸ்பானிய கப்பல்களைச் சூறையாடவேண்டிய பணி தனக்கு இருப்பதாகக் கூறி அவருக்கு உதவ மறுத்துவிட்டான். சரி பணியை முடித்துவிட்டுத் திரும்பவந்து தேடலாமென்று நினைத்தார். ஆனால், கப்பல் தலைவன் சுவடற்ற தீவுக்கு மீண்டும் செல்ல மறுத்து அவரை இங்கிலாந்துக்கு அழைத்து வந்துவிட்டான்.

ஜான் வொயிட் ரோவனோக் தீவுக்குச் சென்றது அதுவே கடைசிமுறை. தன்னை நம்பிவந்த மக்கள், தனது மகள், மருமகன், பேத்தி என்று அனைவரையும் இழந்து அவர்களைக் கண்டுபிடிக்கவும் முடியாமல் போன வேதனையிலேயே இருந்தார் வொயிட். தன் மக்களைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ளாமலே அடுத்த மூன்று வருடத்தில் அவர் நோய்ப்பட்டு இறந்துவிட்டார்.

இது நடந்து 20 வருடங்கள் கழித்து கரோலினா பகுதியில் ஜேம்ஸ்டௌன் (Jamestown) என்ற மற்றொரு காலனியை ஆங்கிலேயர்கள் அமைத்தபோது தொலைந்துபோன 117 மக்களைத் தேடுவதில் மீண்டும் ஈடுபட்டனர். அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதற்கு அடுத்துவந்த நூற்றாண்டில் பல மாலுமிகள் கரோலினாவின் கடலோரங்களில் தங்க நிறத் தலைமுடியோடும், நீலநிறக் கண்களோடும் சில பழங்குடி மக்கள் வாழ்வதாகப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்கள் காலத்திலேயே வாழ்ந்த ஆய்வாளர்கள் அதை நேரில் பார்க்க முடியாமல் போயுள்ளது. ஒருவேளை அந்த மக்கள் அங்கிருந்த பழங்குடிகளோடு சென்று வாழத்தொடங்கியிருந்தால், 20 ஆண்டுகள் கழித்து உருவான ஜேம்ஸ்டௌன் வந்து தங்களை ஆங்கிலேயர்களென்று அடையாளப்படுத்தியிருப்பார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை.

Photo Courtesy: AJ Reynolds/Brenau University

இது நடந்து 400 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சென்ற நூற்றாண்டில் 1937-ம் வருடம் அப்போதைய அமெரிக்கப் பிரதமர் ரூஸ்வெல்ட், அமெரிக்காவில் பிறந்த முதல் வெள்ளைப் பெண் விர்ஜீனியா என்பதால் இவருக்கு அமெரிக்கக் குடியுரிமை அளிப்பதாக அறிவித்தார். அத்தோடு அவரை ஓர் இளம்பெண்ணாகக் கற்பனைசெய்து அவருக்குச் சிலையும் கரோலினாவில் வைத்துள்ளனர். 

400 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத மர்மம் தற்போது கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. ஜான் வொயிட்டின் மகள் எலினோரா தனது தந்தைக்காக ஒரு தகவலைக் கல்லில் பொரித்துவைத்திருப்பது தெரிகிறது. அதன் ஒருபுறத்தில் 1591-ம் ஆண்டு தனது மகள் விர்ஜீனியா சொர்க்கத்தை அடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். மறுபுறத்தில் காலனி மக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து 50 மைல் அப்பால் பயணம் செய்தபோது திடீரென்று காட்டுமிராண்டிகளால் தாக்கப்பட்டதாகவும், அதில் பாதிக்கும் மேற்பட்டோரைக் கொன்றுவிட்டு மீதிப் பேரைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் போல் மேலும் சில கற்கள் அவர்களுக்கு 1937-ல் ரூஸ்வெல்ட் தலைமையில் சென்ற குழுவுக்குக் கிடைத்திருந்தன. தற்போதைய தொழில்நுட்ப உதவியுடன் அவற்றையும் ஆய்வுசெய்து மேலும் சில தகவல்களைச் சேகரித்துக்கொண்டு ரோவனோக் பகுதியை மீண்டும் ஆராயத் திட்டமிட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 400 ஆண்டுகள் கடந்த பிறகும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தேடி வருபவர்களுக்குக் கிடைக்கும் வகையில் விட்டுச்சென்றிருக்கிறார்கள் அந்த நூறு பேர்.