Published:Updated:

ப்ரித்விராஜ், துல்கர், நிவின் பாலி... நம் ஹீரோக்களும் இதைப் பின்பற்றலாமே!

ப்ரித்விராஜ், துல்கர், நிவின் பாலி... நம் ஹீரோக்களும் இதைப் பின்பற்றலாமே!
ப்ரித்விராஜ், துல்கர், நிவின் பாலி... நம் ஹீரோக்களும் இதைப் பின்பற்றலாமே!

எந்த நாட்டுச் சினிமாவும் ஆண், பெண் என்ற பேதம் பார்ப்பது கிடையாது. ஒரு நல்ல இயக்குநர் ஆக வேண்டுமென்றால் அதற்குத் தேவை நல்ல ஸ்கிரிப்ட் மட்டுமே.

‘சினிமா பெண்களுக்கு ஏற்றத் துறையல்ல!’ - இது, சமுகத்தின் பல அடுக்குகளிலும் பரவலாக வைக்கப்படும் வாதம். ‘அவர்களை முடக்குவதற்காக வைக்கப்படும் விதண்டாவாதம்’ என்பதைக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தின் மூலமும் நிறுபித்திருக்கிறார்கள் நம் பெண்கள். அதற்குப் பல கதாநாயகிகளை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் ஒரு பெண் இயக்குநரை நம்பி எந்த ஒரு பெரிய ஹீரோவும் கால்ஷீட் தருவது இல்லை என்ற உண்மையை யாரும் இங்கே மறுக்கமுடியாது.

எந்த நாட்டுச் சினிமாவும் ஆண், பெண் என்ற பேதம் பார்ப்பது கிடையாது. ஒரு நல்ல இயக்குநர் ஆக வேண்டுமென்றால் அதற்குத் தேவை நல்ல ஸ்கிரிப்ட் மட்டுமே. ஆனால் நல்ல ஸ்கிரிப்ட் வைத்திருந்தும் அவ்வளவு எளிதாகப் பெண்களால் இயக்குநராக முடிவதில்லை. சுதா கொங்காராவுக்கு மாதவன் ‘இறுதிச்சுற்று’ நடித்ததும் மாதவனுக்குச் சுதா கொடுத்த ஹிட் போன்றதுமான பரஸ்பர வெற்றி இதுவரை தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது இல்லை. மீண்டும் நிகழுமா என்பதும் சந்தேகமே.

இப்படி சுஹாசினி, ரேவதி, ரோஹினி, கிருத்திகா உதயநிதி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ப்ரியா.வி, மதுமிதா, ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த், ஹலிதா சமீம், உஷா கிருஷ்ணன் எனத் தமிழ் சினிமாவிலும் பெண் இயக்குநர்கள் இருக்கிறார்கள். சிலர் அவ்வப்போது நல்ல திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த வெற்றியைத் தக்கவைத்திருப்பவர்கள் ஓரிருவரே. 

இந்தி சினிமாவில் மேக்னா குல்சார் இயக்கத்தில் ஆலியா பட் நடித்த 'ராஸி' வசூலில் சாதனை புரிந்தது. ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘டியர் ஜிந்தகி’... ஆகிய படங்களை இயக்கிய கௌரி ஷிண்டே... இப்படி இந்தியிலும் பெண் இயக்குநர் உதாரணங்கள் உண்டு. ஆனால் சமீபத்தில் மலையாள சினிமாவில் பெண் இயக்குநர்களின் வருகை சற்று வேறு மாதிரியாக நிகழ்கிறது.  அவர்களின் வெற்றி சதவிகிதம் மற்ற இந்திய மொழி பெண் இயக்குநர்களைவிட அதிகம். அங்கு இந்த வருடம் வெளியாக உள்ளமிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்கள் பட்டியலில் ஆறு பெண் இயக்குநர்களின் படங்கள் இருக்கின்றன. 

அந்த ஆறு பெண் இயக்குநர்களைப் பற்றியும் அவர்கள் இயக்கும் படங்களைப் பற்றியும் பார்ப்போம்:

ஹசீனா சுனீர்:  

குறும்படங்கள் இயக்கி வந்த ஹசீனா சுனீருக்கு திரைப்படத்துறையில் எளிதில் வாய்ப்பு கிடைத்துவிட்டாலும் தீவிர இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றும் குடும்பத்தில் இருந்து வந்ததால் ஆரம்பத்தில் நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. அதை குடும்பத்துக்குப் புரியவைத்து தற்போது 'பிரகாஷன்டே மெட்ரோ' என்ற படத்தை இயக்குகிறார். இது, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு தயாராகும் திரைப்படம். வழக்கமாக இயக்குநர்கள் எடுக்கத் தயங்கும் ரோடு மூவி ஜானர் படம். இவரது ‘சென்ஸ்’ குறும்படம் பலரையும் கவர்ந்ததால் 'பிரகாஷன்டே மெட்ரோ'வுக்கு அங்குப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சௌ சதானந்தன்: 

பல முழு நீளத் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியவர் சௌ சதானந்தன். இவரது முந்தைய படமான 'C/O சாயிரா பானு' படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து குன்சாகோ கோபன், நிமிஷா சஜயன் ஆகியோரது நடிப்பில் இவர் இயக்கியுள்ள 'மாங்கல்யம் தந்துநானேனா' விரைவில் வெளிவர இருக்கிறது.

லீலா சந்தோஷ்:  

வயநாடு மலையைக் கண்டுபிடித்தவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்கவுள்ளார் லீலா சந்தோஷ். இவர் ஆதிவாசி குடியினத்தை சேர்ந்த முதல் பெண் திரைப்பட இயக்குநர் என்பதால் இந்தப் படத்துக்கு அங்குப் பெரிய எதிர்பார்ப்பு.

அஞ்சலி மேனன்: 

2014-ம் ஆண்டு அஞ்சலி மேனன் இயக்கத்தில் நஸ்ரியா, நிவின் பாலி, துல்கர் சல்மான், ஃபஹத் பாஸில், பார்வதி நடிப்பில் வெளிவந்த 'பெங்களூர் டேஸ்' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதன்பிறகு சொந்த காரணங்களால் சினிமாவிலிருந்து விலகியிருந்த அஞ்சலி மேனன் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ப்ரித்திவ்ராஜ், பார்வதி, நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் 'கூடே' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது, அண்ணன்-தங்கை இடையேயான பாசப்பிணைப்பை பற்றிக் கூறும் கதை. இதில் அஞ்சலி மேனன் மட்டுமல்ல, நஸ்ரியாவின் ரீ-என்ட்ரியும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   

ரோஷினி தினகர்:  

ப்ரித்திவிராஜ், பார்வதி, கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் 'மை ஸ்டோரி' திரைப்படத்தைத் தயாரித்து, இயக்கி முடித்து ரிலீஸுக்காக காத்திருக்கிறார் ரோஷினி தினகர். காஸ்டியூம் டிசைனரான இவர் இயக்கும் முதல் படம் இது. இரு துருவங்களாக இருக்கும் இருவரின் கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான பந்தத்தைப் பற்றியக் கதை. இது, 2015ம் ஆண்டு வெளிவந்த 'என்னு நின்டே மொய்தீன்' திரைப்படத்துக்குப் பிறகு ப்ரித்திவிராஜ்-பார்வதி சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் இதற்கு அங்குப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

கீது மோகன்தாஸ்: 

நிவின் பாலி நடிப்பில் 'மூத்தோன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் கீது. லட்சத்தீவை சேர்ந்த மூல்லக்கோயா தன் அண்ணன் அக்பரைத்தேடி செல்லும் பயணத்தை திரைக்கதையாக எழுதி இயக்குகிறார். இந்தப் படம் இந்தி, மலையாளம் என இரு மொழிகளிலும் தயாராகிறது. தமிழில் கமல் தயாரிப்பில் வெளிவந்த 'நள தமயந்தி' படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் இந்த கீது மோகன்தாஸ். இவர் மலையாளத்தில் பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் ரவியைத் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களின் திரைப்படங்கள் எந்தளவுக்கு வரவேற்பைப் பெறுகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

அடுத்த கட்டுரைக்கு