Election bannerElection banner
Published:Updated:

''அப்பாவுக்கு நான் கேப்டன்ங்கிறது பெருமை, அப்பா விவசாயிங்றது எனக்குப் பெருமை!'' - இந்திய வாலிபால் கேப்டன் ஷாலினி

''அப்பாவுக்கு நான் கேப்டன்ங்கிறது பெருமை, அப்பா விவசாயிங்றது எனக்குப் பெருமை!'' -  இந்திய வாலிபால் கேப்டன் ஷாலினி
''அப்பாவுக்கு நான் கேப்டன்ங்கிறது பெருமை, அப்பா விவசாயிங்றது எனக்குப் பெருமை!'' - இந்திய வாலிபால் கேப்டன் ஷாலினி

``என் அப்பாவுக்கு இந்திய வாலிபால் டீம் கேப்டன் ஷாலினியோட அப்பா நான்னு சொல்லுறதுல பெருமை. எனக்கு நான்  விவசாயி சரவணனோட பொண்ணுன்னு சொல்றதுல பெருமை”.

``என் அப்பா சரவணனுக்குப் படிப்புன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, குடும்பச் சூழ்நிலை அவரை பள்ளிப்படிப்பைத் தொடரவிடாம விவசாயத்துக்குள்ள ஈடுபடுத்துச்சு. நாமதான் படிக்கலை, பள்ளிக்கூடம் போகலை. நம்ம பிள்ளைகளாவது நல்லா படிக்கணும் ஸ்போர்ட்ஸ்ல கலந்துக்கணும்னு அப்பா விரும்பினாங்க. நான் ஆறாவது படிக்கும்போது பிடிவாதமா என்னை வாலிபால் விளையாட வற்புறுத்தினாங்க. அப்பாவோட பிடிவாதம் எனக்குக் கசப்பா இருந்துச்சு.

ஆனா, இன்னிக்கு அதுதான் என் வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் கொடுத்திருக்கு. இந்திய வாலிபால் டீமின் கேப்டனாக என்னை உயர்த்தி அழகு பார்த்திருக்கு. தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கும் என்னை நகர்த்திட்டுருக்கு” உள்ளத்தில் பொங்கும் உற்சாகத்தைக் குரலிலும் வெளிப்படுத்துகிறார் ஷாலினி. 

கோபிசெட்டிப்பாளையம் பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் ஷாலினி இந்திய வாலிபால் அணியின் கேப்டனாகியிருக்கிறார். பள்ளிப்பருவத்திலிருந்தே மாநில மற்றும் தேசிய அளவிலான வாலிபால் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்றவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தமிழக வாலிபால் அணியை வழிநடத்திச் சென்றிருக்கிறார். 

``எனக்குச் சொந்த ஊரு சேலம் மாவட்டம் வாழப்பாடிக்குப் பக்கத்துல உள்ள கோலாத்துக் கோம்பைப் புதூர்தான். கிராமம்ங்கிறதுனால அங்கெல்லாம் பொம்பளைப் பிள்ளைகளைப் படிக்க அனுப்புறதோட சரி. மத்தபடி விளையாட்டுல எல்லாம் அவ்வளவு லேசுல அனுப்பிட மாட்டாங்க. பொண்ணுங்களை படிக்க அனுப்பினா படிக்கறதை மட்டும்தான் செய்யணும். ஆம்பளைப் பசங்க மாதிரி தெருவுல நின்னு விளையாடுறதெல்லாம் நல்லாவா இருக்குதுன்னு உறவுக்காரங்க மத்தியில நல்லா வசவு விழும். ஆனா, என் வீட்டைப் பொறுத்தவரை அப்படியில்ல. அம்மா டிகிரி முடிச்சவங்க. ஊருல யார் என்ன சொன்னாலும் அதை கேட்டுட்டு வந்து என்கிட்ட அவங்க அப்படிப் பேசுறாங்க, இவங்க அதைச் சொல்லுறாங்கன்னு எதுவுமே சொன்னதில்ல. ஏன்னா, அப்பாதான் என்னைப் பிடிவாதமா ஸ்போர்ட்ஸ்க்குள்ள அனுப்பினாரு. அம்மாவுக்கு அப்பா மேல அவ்வளவு பிரியம். நம்ம வீட்டுக்காரரு எது செஞ்சாலும் அது நம்ம குடும்பத்தோட நல்லதுக்காகத்தான் இருக்கும்னு அவங்க நம்புவாங்க. என் தம்பிக்கு வீட்டுல எந்த அளவுக்குச் செல்லமும் முன்னுரிமையும் கொடுக்குறாங்களோ அதே அளவுக்கு எனக்கும் முன்னுரிமை உண்டு. 

டிகிரி படிச்சிருந்தாலும் வேறு வேலைக்குப் போகாம அம்மாவும் அப்பாவுக்குத் துணையா விவசாயம்தான் பாக்குறாங்க. வானம் பாத்த பூமியில விவசாயம் பண்ணித்தான் நம்ம பிள்ளைகளை படிக்க வெக்குறோம். நிச்சயம் ஒருநாள் இந்த வானம் முட்டுற அளவுக்கு நீ பேரையும் புகழையும் சம்பாதிப்பம்மான்னு அப்பா அடிக்கடி என்கிட்ட சொல்லிட்டே இருப்பாரு. ஸ்போர்ட்ஸ்ல இருந்தா அடிக்கடி போட்டிகளுக்காக வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் போக வேண்டியிருக்கும். அப்போவெல்லாம் நான் கொஞ்சம் சோர்ந்து போனாக்கூட அப்பாவும் அம்மாவும் என் முதுகெலும்பா இருந்து என்னைத் தட்டிக் கொடுப்பாங்க. எவ்ளோ கஷ்டப்பட்டாலும் அதை நீ உன் தலைக்கு ஏத்திக்காத. இப்போ நாம படுற கஷ்டம் எல்லாம் எங்களோட போகட்டும். நீ உன் இலக்கை மட்டும் கவனத்துல வெச்சிக்கோ. தைரியமா நீ போய் போட்டியில கலந்துக்கோன்னு சொல்லி என்னை உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க. அவங்களோட மோட்டிவேஷன்தான் இந்தியாவோட வாலிபால் டீமையே வழிநடத்துறதுக்கான தலைமைப் பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்குன்னு நம்புறேன்” என்றவர் கேப்டன் பதவிக்குத் தேர்வானது குறித்துப் பகிர்கிறார். 

``நிச்சயமா நான் இந்திய வாலிபால் டீமோட கேப்டன் ஆவேன்னு நம்பவே இல்ல. கோழிக்கோடுல வெச்சுதான் கேப்டனுக்கான செலக்ஷன் நடந்துச்சு. இந்தியா முழுவதிலுமிருந்து எத்தனையோ பேர் அதுல கலந்துக்கிட்டாங்க. முதல் கட்டமா கோழிக்கோடுல செலக்ஷன் முடிஞ்சு, அடுத்தகட்டத்துக்குப் புனே அனுப்பினாங்க. அங்க ஒரு மாதம் கேம்ப் நடந்துச்சு. அங்கேயும்கூட நான் கேப்டனாக முன்னோக்கி வருவேன்னு நிஜமாவே நம்பல. ஆனா, என் அப்பா, அம்மா, கோச் ஆனந்தன் சார்னு என்னைச் சுத்தி இருந்தவங்கதான் என்மேல முழு நம்பிக்கை வெச்சிருந்தாங்க. அந்த நம்பிக்கை வீண் போகல. கனவு மாதிரி இருக்கு. அதுக்குள்ள போன எட்டாம் தேதி வியட்நாம் போயிட்டு வந்துட்டோம். அடுத்த ரெண்டு மாசத்துல இந்தோனேஷியா போகப்போறோம். என்னைச் சுத்தி என்ன நடக்குன்னு என்னால உணரவே முடியல. ஆனாலும், என் மேல நம்பிக்கை வெச்சு இப்போ வரை என்னை இயங்க வெச்சிக்கிட்டு இருக்குறது என் அப்பாதான். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் என் அப்பாவைப் பத்தி பெருமையாகச் சொல்லும்போது கண்டிப்பா அவர் ஒரு விவசாயிங்கிறதையும் சொல்லிடுவேன். அப்பாவைப் பொறுத்தவரை, இந்திய வாலிபால் டீம் கேப்டன் ஷாலினியோட அப்பா நான்னு சொல்லுறதுல அவருக்கு அத்தனை பெருமை. எனக்கோ, நான்  விவசாயி சரவணனோட பொண்ணுன்னு சொல்றதுலதான் அவ்வளவு சந்தோஷம்'' என்கிறார் மலர்ச்சியோடு. 

வாழ்த்துகள் ஷாலினி. இன்னும் பல தலைமைப்பண்புகள் உங்களை அலங்கரிக்கட்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு