Published:Updated:

"இனியும் பொறுக்க முடியாது!” 'அம்மா'விலிருந்து விலகிய ரம்யா நம்பீசன் பேட்டி

கடந்த ஒராண்டாகவே, மலையாள சினிமாவுள்ள பெண் கலைஞர்கள், அங்குள்ள பாலின ஏற்றத்தாழ்வுகளை விமர்சித்து, கலையுலகில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன. 

"இனியும்  பொறுக்க முடியாது!”  'அம்மா'விலிருந்து விலகிய ரம்யா நம்பீசன் பேட்டி
"இனியும் பொறுக்க முடியாது!” 'அம்மா'விலிருந்து விலகிய ரம்யா நம்பீசன் பேட்டி

லையாள திரை உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது என்று கூறலாம். கடந்த ஒராண்டாகவே, மலையாள சினிமாவிலுள்ள பெண் கலைஞர்கள், அங்குள்ள பாலின ஏற்றத்தாழ்வுகளை விமர்சித்து, கலையுலகில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன. 

கடந்த 2017ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், பிரபல நடிகை ஒருவரைக் கடத்தி, பாலியல் வன்முறை செய்ய ஒரு கும்பல் முயன்றதையடுத்து, 'வுமன் இன் சினிமா கலெக்டிவ்' (Women in Cinema Collective (WCC)) என்ற அமைப்பை, மஞ்சு வாரியர், பார்வதி, ரிமா கலிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நடிகைகள் சேர்ந்து ஆரம்பித்து நடத்திவருகின்றனர். இந்நிலையில், சினிமா நடிகை கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்குப் பின்னால் இருப்பது நடிகர் திலீப் என்று சந்தேகித்து, அவரைக்  கைது செய்தனர் கேரளக் காவல்துறையினர். இரண்டு முறை ஜாமீன் மறுக்கப்பட்ட பின்னர், மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி, சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகர் திலீப். இந்த வழக்கில் விசாரணையும் நடந்துகொண்டிருக்கிறது. திலீப் மீது தொடரப்பட்ட இந்த வழக்கின் காரணமாக, கடந்த ஆண்டு 'அம்மா' சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் . 

மலையாள சினிமா ஊழியர்களுக்கு என இயங்கிவரும் அமைப்புதான் ‘அம்மா’ (AMMA - Association of Malayalam Movie Artists). இந்த அமைப்பின் தலைவராக இருந்த இன்னசென்ட் விலகிக்கொள்ள தற்போது நடிகர் மோகன்லால் அதன் தலைவராகியிருக்கிறார். அவர் தலைவரானவுடன் அம்மா சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தின் உறுப்பினராக்கியிருக்கிறார் நடிகர் மோகன்லால்.

இது அச்சங்கத்திலுள்ள நடிகைகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மா சங்கத்திலிருந்து பாதிக்கப்பட்ட அந்த நடிகை, நடிகை ரிமா கலிங்கல், இயக்குநர் கீது மோகன் தாஸ், நடிகை ரம்யா  நம்பீசன் ஆகியோர் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியிருக்கின்றனர்  . 

இதுகுறித்து நடிகை ரம்யா நம்பீசனுடன் பேசினோம், ”அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டது மிகவும் பொறுப்பற்றத்தனம். நாங்கள் நால்வரும் அந்தச் சங்கத்திலிருந்து விலகியவுடன்,  அவங்க எங்களுக்கு ஏதாவது பதில் சொல்லுவாங்கனு எதிர்பார்த்தோம். ஆனா, இதுவரைக்கும் எந்தப் பதிலும் எங்களுக்கு வரலை. இந்தச் சங்கத்துல இருக்கிற மத்த பெண்கள்கிட்டையும் நாங்க பேசிட்டு இருக்கிறோம். இனியும் இதையெல்லாம் பொறுத்துகிட்டு இருக்க முடியாதுங்க. அதுதான்  விலகிட்டோம் .

நாங்க டபுள்யூ.சி .சி ஆரம்பிக்கும்போதே, அதுக்குக்கான ‘ஸ்பேஸ்’னு ஒண்ணு இல்லவே இல்லை. ஆனா, நாங்க எல்லாரும் பெண்களுக்கென உருவாக்கின ஒரு இடம் அது. சினிமாவுல பெண்களுக்கு எப்படிப்பட்ட இடம் இருக்கணும்னு ஒரு தெளிவா ப்ளான் பண்ணிட்டு வர்றோம். ரேவதி மேம் மாதிரியான சீனியர்ஸ் எல்லாம் எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்காங்க.

இந்த இஷ்யூ நடக்கிறவரைக்கும், அம்மா சங்கத்துக்கும், ட்புள்யூ.சி .சிக்கும் நல்ல உறவுதான் இருந்தது. இப்போ, அவங்க எப்படி பதில்  சொல்றாங்க என்பதைப்  பொறுத்துத்தான்  நாங்க அடுத்து முடிவெடுக்கணும்", என்றார் உறுதியுடன்.

இதற்கிடையில், நடிகைகள் பார்வதி , பத்மபிரியா மற்றும் ரேவதி  ஆகியோர், அம்மா சங்கத்தில் அவசரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு, அதன் பொது செயலர் (Edavela Babu) இடவெலா பாபுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்தக் கூட்டத்தில், நான்கு முக்கிய விஷயங்களை விவாதிக்கவேண்டும் என்பதையும் எழுதியுள்ளனர்.

1. வெளியேற்றப்பட்ட உறுப்பினர் மீண்டும் சேர்க்கப்பட்டது மற்றும் அம்மாவின் இந்த முடிவிலான ஏற்பட்ட விளைவுகள்...
2. பாதிக்கப்பட்டவரின் நலன் கருதி ’அம்மா’ எத்தகைய நடவடிக்கைகள் எடுத்தது என்பது குறித்து...
3. சங்கத்திலிருக்கும்  அனைத்து  உறுப்பினர்களின் நலன்களுக்கு ’அம்மா’ எத்தகைய துணை சட்டங்கள்  உருவாக்கியிருக்கின்றன என்பதைக் குறித்தும்...
4. பெண்கள் பாதுகாப்பாகவும் சங்கத்தின் ஓர் அங்கமாக தங்களை கருதிக்கொள்ளவும் 'அம்மா', என்ன செய்ய முடியும் என்பதைக் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

மலையாள சினிமாவில் பணியாற்றும் பெண்கள், தற்போது மற்ற மாநில பெண் கலைஞர்களுக்கு ஓர்  எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். மேலும், இந்தச் சந்திப்பின் மூலம், இவர்களுக்கு நியாயமான பதில் கிடைத்தால், அது கலையுலகில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய முக்கிய நிகழ்வாக வரலாற்றில் பதியும் என்பது நிச்சயம்!