Published:Updated:

``சரணாகதித் தத்துவத்தை ரமணரிடம் கற்றுக்கொண்டேன்!’’ - அனுராதா ஸ்ரீராம் #WhatSpiritualityMeansToMe

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``சரணாகதித் தத்துவத்தை ரமணரிடம் கற்றுக்கொண்டேன்!’’ - அனுராதா ஸ்ரீராம்  #WhatSpiritualityMeansToMe
``சரணாகதித் தத்துவத்தை ரமணரிடம் கற்றுக்கொண்டேன்!’’ - அனுராதா ஸ்ரீராம் #WhatSpiritualityMeansToMe

ரமணர் மகரிஷிதான் சரணாகதி தத்துவத்தை எனக்குக் கற்று தந்தார். நாம ஒண்ணுமே கிடையாது. இறைவன்தான் எல்லாம்கிறதைச் சொல்லித் தந்தார், என்கிறார் அனுராதா ஶ்ரீராம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அனுராதா ஸ்ரீராம் சினிமாவில் ஐந்தாயிரம் பாடல்கள் வரை பாடியிருக்கிறார். இவை தவிர பக்தி பாடல்களும் ஆயிரக்கணக்கில் பாடியிருக்கிறார். இசையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இசையில் டாக்டர் பட்டம் பெற்ற பரசுராமை வாழ்க்கைத் துணையாகப் பெற்றவர். `கலைமாமணி விருது’ உள்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். அவரை, `எனது ஆன்மிகம்’ பகுதிக்காகச் சந்தித்தோம்.  

``சின்ன வயசுலேருந்தே என்னோட இஷ்ட தெய்வம் முருகன். அதற்குக் காரணம் அப்பா மோகன். அவர் ஒரு முருக பக்தர். அதனால நானும் முருக பக்தை ஆகிட்டேன். அப்பா முன்னணி ஆங்கிலப் பத்திரிகை ஒண்ணுல வொர்க் பண்னிக்கிட்டிருந்தார். 
அப்போ நாங்க கே.கே நகர்ல இருந்தோம். அதனால பக்கத்துலயே இருக்கும் வடபழனி முருகன் கோயிலுக்கு வாரா வாரம் அப்பா எங்க எல்லாரையும் அழைச்சுக்கிட்டுப்போவார். அப்படியே வடபழனி கோயிலுக்குப் பக்கத்துல இருக்குற சித்தரையும் வழிபட்டுட்டு வருவோம். தம்பிக்குக்கூட அப்பா, `முருகன்’னுதான் பேர்வெச்சார். 

`அபிராமிதாசர்'ங்கிற பேர்ல `அபிராமி அந்தாதி'யில இருக்குற 100 பாடலையும் `லலித சகஸ்ரநாம'த்தையும் ஒப்பிட்டு ஒரு புத்தகம் எழுதினார். அது மூணு நாலு பதிப்புகள் விற்பனையாச்சு. வீட்டுல `சூலமங்கலம் சகோதரிகள்' பாடின கந்த சஷ்டிக் கவசத்தைச் சின்ன வயசுலேருந்தே கேட்டு வளர்ந்தேன். `இதுதாம்மா உங்க எல்லாருக்கும் மிகப் பெரிய காப்பு’னு எங்க எல்லாரையும் கந்தசஷ்டிக் கவசம் சொல்லச் சொல்லுவார் அப்பா. 

`பம்பாய்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல ஒரு குரூப் சாங் வரும்...
`மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும்போது.
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ... 
மதம் என்னும் மதம் ஓயட்டும்.

தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்...’ அந்தப் பாடல்தான் நான் முதன்முதலாக சினிமாவுல பாடின பாடல். இந்த 25 ஆண்டுகளில் ஐயாயிரம் பாடல்கள் வரை பாடிட்டேன். எல்லாம் முருகன் அருள்தான், வேறொன்றுமில்லை. எல்லாக் கோயிலுக்கும் போய் சாமி கும்பிட்டாலும், முருகன்தான் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். 'முருகப்பெருமானுடைய வேல் எப்பவும் உனக்குத் துணை இருக்கும்’னு அப்பா சொல்லுவார். 

`என்னோட குரல் ரொம்ப நல்லா இருக்கு'னு ரசிகர்கள், ரசிகைகள்லாம் பாராட்டுவாங்க. அதை நான் அப்பாகிட்ட சொல்லுவேன். `அது வேற ஒண்ணும் இல்லைடா கண்ணு... முருகனுக்கு தேனாபிஷேகம்தான் அதிகம் பண்ணுவேன். அதுதான் காரணம்’னு சொல்லுவார்.
என்னோட இசைப் பயணம், வாழ்க்கைப் பயணம் ரெண்டிலும் 'யாமிருக்க பயமேன்'னு சொல்லி துணையாக இருப்பவர் முருகக் கடவுள்தான்.

என்னோட மானசீக குருன்னா, ரமண மகரிஷியைத்தான் சொல்லுவேன். அவரையே முருகனுடைய இன்னொரு வடிவமாகத்தான் அவருடைய சீடர்கள் பார்ப்பார்கள். முருகனும் மலை மேல் இருந்தார். ரமண மகரிஷியும் அப்படித்தான். ரெண்டு பேருமே லௌகீக வாழ்க்கையைத் துறந்து கோவணம் அணிந்திருப்பார்கள். ரமணாஸ்ரமத்துக்கு மாதத்துக்கு ஒரு முறை போயிடுவேன். அவர்தான் எனக்குச் சரணாகதியைக் கற்றுத் தந்தார். நாம ஒண்ணுமே கிடையாது. இறைவன்தான் எல்லாம்கிறதைச் சொல்லித் தந்தார். 

`நாம் எதையும் செய்வதில்லை. இறைவன்தான் எல்லாவற்றையும் செய்கிறார்'னு நெனைச்சோம்னா, வாழ்க்கையில் பெருசா கோபதாபங்கள், வருத்தங்கள், பயம்... எதுவுமே இருக்காது. கிருஷ்ணர், பார்த்தசாரதியாக இருக்கும் தத்துவமே அதுதான். ரதத்தில் பூட்டப்பட்ட ஐந்து குதிரைகள் நம் ஐம்புலன்கள். அவற்றை அடக்கி ஆளும் பொறுப்பை பகவானிடம் விட்டுவிட வேண்டும். 
ரமணர் சொன்ன '`தேர் ஈஸ் நோ அதர்ஸ்'... `எல்லாவற்றிலும் இறைவன் காண்’ங்கிற சித்தாந்தம்தான் என்னுடைய வாழ்க்கை.'' - நெக்குருகப் பேசுகிறார் அனுராதா ஶ்ரீராம். 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு