Published:Updated:

”சிவப்பு நிற நிலத்தடி நீர்...!” - தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விட்டுச் சென்ற விஷம்

”சிவப்பு நிற நிலத்தடி நீர்...!” - தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விட்டுச் சென்ற விஷம்
”சிவப்பு நிற நிலத்தடி நீர்...!” - தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விட்டுச் சென்ற விஷம்

``மழை மேகமா ஆகிட்டாலே மஞ்சள் கலருல ஒரு புகைய தொறந்து விடுவாங்க, அது வெளியான உடனே கருத்த மேகமெல்லாம் ஓடிப்போய்டும்"

ழுத்துவரைக்கும் களிமண்ணால் மூடப்பட்டிருந்தது அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உடல். கண்மணிகள் அழகாகச் சிரித்துக்கொண்டிருக்க வேண்டிய அந்த இரண்டு கருவிழிகளும் அசைவற்றும் உயிரற்றும் வானம் பார்த்துக் கொண்டிருந்தன. குழந்தையின் முகத்தைச் சுற்றியிருந்த மண் துகள்களை தள்ளிவிட்டு, தெளிவான அதன் சருமத்தை இறுதியாக ஒருமுறை தடவிப் பார்த்தார். அந்தக் குழந்தையின் தந்தையாக இருக்கக்கூடும். மண்ணில் புதைந்து கிடந்த அந்தக் குழந்தையின் முகம்தான் 1984 ல் 2000 பேரை பலிகொண்ட போபால் கொடூரச் சம்பவத்துக்கான புகைப்படச் சாட்சியமானது.

நிற்க! போபால் பற்றிய நினைவுப்படுத்தல் தற்போது எதற்கு?. 1996ல் தூத்துக்குடியில் வேதாந்தா இயங்குவதற்கான உரிமத்தைத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியது. ஆலை இயங்கத்தொடங்கிய சில மாதங்களிலேயே உடல் உபாதைகள் குறித்தான தொடர் புகார்கள் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்த மக்களிடமிருந்து வந்தன. அன்று தொடங்கி ஆலை முழுவதுமாக இழுத்து மூடப்படும் வரை எங்கே தங்களது சூழலும் மற்றொரு போபால் பயங்கரம் போல ஆகிவிடுமோ என்கிற அச்சத்திலேயே வாழ்ந்து வந்ததாகச் சொல்கிறார்கள் அந்த மக்கள். சுவாசிக்கும் காற்றையும் குடிக்கும் நீரையும் இந்த 22 ஆண்டு காலத்தில் முற்றிலுமாக நாசப்படுத்தியிருந்தது ஸ்டெர்லைட் ஆலை. பெய்யும் மழை கூட அமிலமாகவே சில நேரம் பெய்ததாகக் கூறுகிறார் தூத்துகுடி அ.குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள்.

 ``மழை மேகமா ஆகிட்டாலே மஞ்சள் கலருல ஒரு புகைய தொறந்து விடுவாங்க, அது வெளியான உடனே கருத்த மேகமெல்லாம் ஓடிப்போய்டும், அப்படியே மீறி கொஞ்சம் மழை தூறினாலும் மண் ஒரு மாதிரி நாத்தம் அடிக்கும். நல்லா மழை பேஞ்சுதுன்னாக் கூடத் தெரியாது. ஆனா லேசாத் தூரிட்டு விட்டுட்டா, மண்வாசனை வராது அதுக்கு பதிலா கெமிக்கல் நாத்தம் அடிக்கும். அதைச் சுவாசிக்குற குழந்தைங்க வாந்தி, மயக்கம்னு ரொம்பக் கஷ்டப்படும். நான் சின்ன வயசா இருக்கிறப்ப நல்ல மழையைக் கண்ணால பாத்தது. 3 வருஷம் முன்னாடி மழை கொஞ்சம் வந்துச்சு. அப்பறம் அதுக்கு அஞ்சு வருசம் முன்னால மழை வந்துச்சு. இந்த மாதிரி எங்க ஊருல மழை எப்போ பெய்யும்னே தெரியாது. மழை பேஞ்சு கம்மாய், குளம், எல்லாம் நிறைஞ்சிருக்குன்னு அதுல குளிக்க போனாலும், தோல் அரிப்பெடுக்கும், தோல் அலெர்ஜி வந்தது போல ஆயிடும். முடியெல்லாம் உதிர்ந்திடும், மனுசங்கன்னு இல்ல, ஆடு மாடுகளுக்கும் இதே நிலைமைதான். ஒரு ஏழெட்டு வருசமா எங்கவூருக்குக் கட்டிக்கொடுக்குற பொண்ணுங்களுக்கு ஏழு குடத்தைக் கட்டி இழுத்துட்டுப் போகுற  தள்ளுவண்டியைத்தான் சீதனமாக் கொடுக்குறாங்க. இங்கிருந்து 1 கிலோமீட்டர் போயிதான் தண்ணீரை எடுத்துட்டு வரணும். அதுவும் நல்லா இருக்காது வேற வழி இல்ல அதைத்தான் பயன்படுத்தியாகணும் " என்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை அடுத்து காற்று மஞ்சளாகும் பாதிப்பெல்லாம் தற்போது ஏற்படுவதில்லை. ஆனால்...

மஞ்சளாகி, எண்ணெய்ப் போன்ற கழிவுகள் தேங்கி மாசுபட்ட நிலத்தடி நீர் தீர்வும் பெறமுடியாமல் அப்படியே இருக்கிறது. அதே பகுதியை அமீர் என்பவர் கூறுகையில்,``ஆலைகளோட கழிவு மண்ணுல தேங்கத் தொடங்கின கொஞ்சகாலத்துலேயே நிலத்தடி நீரை உபயோகிக்கறதை முழுசுமா எங்க சனங்க நிறுத்திட்டாங்க. வீடு துடைக்க மட்டும் அந்த நீர் பயன்பட்டுச்சு. அதற்கப்புறம் அரசாங்கமே எங்கப் பகுதியில் தொட்டி கட்டிக் கொடுத்தாங்க. நிலத்தடி நீரைச் சாகடிச்சதுக்குப் பரிகாரமா வேதாந்தா நிறுவனமே தூத்துக்குடியில் வேற சில கிராமங்களிலிருந்து ஆழ்துளைக் கிணறுலேர்ந்து தண்ணி எடுத்துக்கொண்டு வந்து அந்தத் தொட்டியில் நிரப்பினாங்க. நிலத்தடி நீரை உபயோகிச்சு பாதிப்பு ஏற்பட்டுச்சுனு தெரிய வந்தபிறகு ஸ்டெர்லைட் நிறுவனமே வாரத்தில் ஒருநாள் மருத்துவர்களை வீடுதேடி அனுப்பி எங்களுக்கு வைத்தியம் பார்த்தாங்க. அரிப்பு, எரிச்சல், வயிற்று வலி, இருமல், காய்ச்சல் மாதிரியான பிரச்னைகளுக்கு மட்டும் அவங்க மருந்து தருவாங்க. கேன்சர் மாதிரியான பெரிய பிரச்னைக்கான அறிகுறியாக இருந்தா பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைப்பாங்க.

பல வருஷங்களுக்கு முன்னாடி போபால்ல இருந்த நிலைமைதான் எங்களுக்கும். தாமிரபரணி தண்ணீரையும் சிப்காட் தேவைக்காக அரசாங்கமே தாரைவார்த்துக் கொடுத்ததால எங்களால அந்த நீரையும் சுதந்திரமாப் பயன்படுத்த முடியலை. நல்ல நீர் அவங்களுக்கு. கலங்கி கழிவு படிஞ்ச நிலத்தடி நீர் எங்களுக்கு. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வீரியமானதும் வேதாந்தாவுடைய தண்ணீர் வண்டி எங்கள் பகுதிக்குள் வருவதை எங்கள் மக்கள் தடுத்து நிறுத்தினாங்க. தண்ணீர் மாசு பற்றிய விவரம் வெளியுலகத்துக்குத் தெரியத் தொடங்கினதும் எங்கள் பகுதியில் இருக்கற ஆழ்துளைக் கிணறுகளைப் பார்வையிட வந்த அரசாங்க அதிகாரிகள் அதில் நிலத்தடி நீரைச் சுத்தம் செய்யுற ரசாயனத்தைக் கலக்க முயற்சி செய்தாங்க. வேதாந்தாவோட தவறை வெளியுலகத்திடமிருந்து மறைக்க முயற்சி செய்தாங்க. ஆனால் நாங்கள் தடுத்து நிறுத்தினோம். மேலும், நீரை யாரும் எடுத்து ஆய்வு செய்துடக் கூடாது என்று ஆழ்துளைக் கிணறுகளையெல்லாம் அந்த அதிகாரிகள் உடனடியாக மூட நடவடிக்கை எடுத்தாங்க. பல மரணத்துடைய வீரியம் காரணமா அந்த ஆலை இப்போ இழுத்து மூடப்பட்டிருக்கு. ஆனா எங்க குடிதண்ணீ?...” 

மீண்டும் ஒரு நல்ல மாரிக்காகவும் நல்ல நீருக்காகவும் வழிபார்த்துக் காத்திருக்கிறது ஸ்டெர்லைட் ஒழிந்த நிலம். 

அடுத்த கட்டுரைக்கு