Published:Updated:

``இயற்கைக்கு நன்றி செலுத்தணும்ல!’’ - இயற்கைக்குக் கோயில் கட்டிய எளிய மனிதர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``இயற்கைக்கு நன்றி செலுத்தணும்ல!’’ - இயற்கைக்குக் கோயில் கட்டிய எளிய மனிதர்
``இயற்கைக்கு நன்றி செலுத்தணும்ல!’’ - இயற்கைக்குக் கோயில் கட்டிய எளிய மனிதர்

இயற்கைக்கு ஒரு கோயில்... ஒரு தனிமனித முயற்சி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நிலம், நீர், காற்று என இயற்கையின் முக்கிய உயிர்நாடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் மாசுபடுத்தியும் அழித்தும் வருகிறது மனித இனம். இயற்கையோடு இயைந்து வாழாமல், அதன்மீது கொஞ்சமும் அக்கறையில்லாததாக மாறிவிட்டது மனித சமுதாயம். அப்படிப்பட்ட சமூகத்திலும் ‘இயற்கை இல்லாமல் இந்த வாழ்க்கை இல்லை’ என வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் விஜயன் ராம்சே. இயற்கைக்குக் கோயில் ஒன்றைக் கட்டி வணங்கியும் வருகிறார் இந்த வித்தியாசமான மனிதர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா கே.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயன் ராம்சே. இவர் கடம்பூர் மலைக்குச் செல்லும் வழியில், கே.எம்.பாளையம் செக்போஸ்ட் அருகில் இயற்கைக்காகக் கோயில் ஒன்றைக் கட்டியிருக்கிறார். இதையறிந்த நாம் விஜயன் ராம்சேவை சந்தித்தோம். ``வாங்க மகாராசா...’’ என்று வரவேற்று, நம்மிடம் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ``இந்த மண்ணில் பிறந்த எல்லா மனிதர்களும் மகாராசர்கள்தாம். அதனால, நான் யாரைப் பார்த்தாலும் ‘மகாராசரே’னுதான் கூப்பிடுவேன்’ என்று அன்பு குழந்தை குரலோடு சொல்கிறார் விஜயன் ராம்சே.

``எனக்கு ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்க. எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. டஜனுக்கு ஒண்ணு குறைவா, 11 பேரன், பேத்திகள்...  எந்தக் குறையுமில்லாத சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கேன். அது 1954-ம் வருஷம்... ஒரு நாள் என் அப்பாகிட்ட, ‘எனக்கு படிக்கணும்னு ஆசை. நான் பள்ளிக்கூடத்துக்குப் போறேன். சேத்து விடுங்கன்’னு சொன்னேன். அதுக்கு அவர், ‘என்னது படிக்கப்போறியா... அதெல்லாம் நம்ம சக்திக்கு முடியாது. ஒழுங்கா என்கூட வந்து பண்ணையில மாடு மேயிடா’ன்னு சொல்லிட்டாரு. அதனால பள்ளிக்கூடம் போய்ப் படிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைக்காமப் போச்சு. ஆனா, வாழ்க்கை எனக்கு பள்ளிக்கூடத்தை விஞ்சின பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கு. படிச்சிருந்தா இந்த நேரம் நான் நிச்சயமா கலெக்டரா ஆகியிருப்பேன் மகாராசரே...’’ எனத் தன்னுடைய 68 ஆண்டுக்கால அனுபவங்களைப் பேச ஆரம்பித்தார்.

``நான் என்னோட பசங்களோடதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். ஆனா, இன்னைக்கு உலகத்துல உள்ள பல புள்ளைங்க, பெத்தவங்களை ஏறெடுத்துகூட பார்க்க மாட்டேங்குறாங்க. அரசாங்கம் இன்னைக்கு முதியோருக்குக் கொடுக்குற 1,000 ரூபா பணத்துலதான், வயசானவங்க பாதிபேர் உடம்புல உசுரு ஒட்டிக்கிட்டு இருக்குது. மனுச இனம் என்னைக்கா இருந்தாலும் அழியத்தான் போகுது மகாராசரே... காசு காசுனு இந்த உலகம் தறிகெட்டு போயிடுச்சி. செத்தாக்கூட ஜோப்புல காசு இருக்கான்னு பார்ப்பாங்க. அப்படிப்பட்ட உலகம் இது. ஆசைதான் மனுசனை அழிக்குது. சந்தோஷத்தை நாமதான் ஏற்படுத்திக்கணும். ஆசையைச் குறைச்சாலே சந்தோஷம் அதிகமாகிடும். மனுசன் நன்றி மறக்கக் கூடாது. என்னோட அம்மா, அப்பா இல்லைன்னா இன்னைக்கு நான் இந்தப் பூமியில இருக்க முடியுமா, அந்த நன்றியை மறக்கக் கூடாதுனு, என்னைப் பெத்தவங்களுக்கு சிலை செஞ்சு தினமும் வணங்கிக்கிட்டு வர்றேன்.   

அதேமாதிரி, நீர், காற்று, நெருப்பு இல்லாம இந்த உலகத்துல நம்மால வாழ முடியுமா, நாம உசுரோட இருக்கக் காரணமான இந்த இயற்கைக்கு நாம என்றைக்கும் நன்றியுள்ளவனா இருக்கணும்னு, சூரிய தேவன், சந்திர தேவன், பூமா தேவி, கங்கா தேவி, மின்னல் தேவி, வர்ண தேவன், அக்னி தேவன், வாயு தேவன்-னு இயற்கைக்குச் சிலை அமைச்சு தினமும் பூ போட்டு, கும்பிட்டுக்கிட்டு வர்றேன். ஆனா, முதல்ல என்னைப் பெத்தவங்களுக்கு பூ போட்டு கும்பிட்டுட்டுதான் இயற்கைக் கடவுளைக் கும்பிடுவேன். என் உயிர் இருக்குற  வரைக்கும் இயற்கைக்குப் பூப்போட்டு வணங்குவேன். அதேமாதிரி, எல்லா மக்களும் இயற்கையை மதிச்சு வணங்கணும்னுதான் இங்கே அதுக்காகவே கோயில் கட்டியிருக்கேன். என்னோட கோயில் வழியாப் போறவங்க, ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்தி, கும்பிட்டுட்டு போறாங்க. அதைப் பார்க்குறப்ப மனசுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு. 

இயற்கையின் பேரழகை ரசிச்சுப் பார்க்க இங்கே மக்களுக்கு நேரம் இல்லை. எனக்கு இயற்கையின் மேல இருக்குற காதலாலதான், மலைக்குப் பக்கத்துல இடத்தை வாங்கி கோயில் கட்டியிருக்கேன். இந்தப் பகுதியில ஆள் நடமாட்டம் அதிகமா இருக்காது. பேச்சுத் துணைக்குகூட பக்கத்துல யாரும் இல்லை. சாயங்காலமானா, யானைங்க இந்த வழியா போகும். வீட்டைச் சுத்தி மயில், பாம்புங்கனு அலையும். சில்லுனு சுத்தமான காத்து வீசும். இயற்கை எனக்கு எந்தத் தொந்தரவையும் கொடுக்காம, சந்தோஷமா வாழவெச்சிக்கிட்டு இருக்கு. கரும்பு வெட்டுறதுலயிருந்து, கைரேகை ஜோசியம் பார்க்குறதுனு கிட்டத்தட்ட ஒரு டஜனுக்கு மேல வேலை பார்த்திருக்கேன். 

கிட்டத்தட்ட 25 சினிமா படங்கள்ல நடிச்சிருக்கேன். நமக்கு என்ன கதாநாயகன் வேஷமா கொடுப்பாங்க. ‘உங்க வீடு தீப்புடிச்சிடுச்சினு கத்திக்கிட்டே திடுதிடுனு ஓடுங்க’னு டைரக்டர் சொல்லுவார். அப்படி ஓடுற 100 பேர்ல ஓர் ஆளாத்தான் நான் நடிச்சிருக்கேன். அதேமாதிரி `நாட்டாமை’ படத்துல, காமெடி நடிகர் செந்தில் முதியோர் பள்ளிக்கூடத்துல படிக்குற சீன் வரும்ல, அந்த சீன்ல அவரோட நானும் அந்தக் கூட்டத்துல உட்கார்ந்திருப்பேன். இப்படி 25 படங்கள்ல நான் கூட்டத்துல ஏதோ ஒரு மூலையில நடிச்சிருக்கேன். அதேமாதிரி `நாட்டாமை’ படம் சமயத்துல நான் சரத்குமாருக்கு கைரேகை ஜோசியம் பார்த்து, ‘நீங்க அரசியல்வாதியா ஆவீங்க’ன்னு சொன்னேன். அதேமாதிரி அவர் அரசியல்வாதி ஆகிட்டார். கே.எஸ்.ரவிகுமாருக்கும் ஜோசியம் பார்த்திருக்கேன்.   

இப்போ சொத்து, சம்பாத்தியம்னு பெருசா எதுவும் இல்லை. நான் சம்பாரிச்ச காசுல ஏழரை லட்ச ரூபாயை இந்தக் கோயில்லதான் போட்டிருக்கேன். இப்போ, வர்றவங்க போறவங்களுக்கு கைரேகை ஜோசியம் பார்க்குறேன். தினமும் 100, 200 கிடைக்கும். ஆனா, சந்தோஷத்துக்கு குறைச்சல் இல்லாத வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். எல்லாம் இயற்கை கொடுத்த வாழ்க்கை. நிச்சயமா நான் 100 வருஷம் வாழ்வேன்’’ என்கிறார் விஜயன்.
  
நிச்சயமா நீங்க 100 வருஷத்துக்கு மேலயே வாழ்வீங்க மகாராசரே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு