Published:Updated:

மணல் மீது வீடு கட்டிய அறிவிலி யார்? - பைபிள் கதைகள்! #BibleStories

மணல் மீது வீடு கட்டிய அறிவிலி யார்? - பைபிள் கதைகள்! #BibleStories
மணல் மீது வீடு கட்டிய அறிவிலி யார்? - பைபிள் கதைகள்! #BibleStories

னந்தன் என்ற இளைஞனுக்கு ஆன்மிகத்தின் மீது அதிக நாட்டம். எனவே, தனக்கென ஒரு குருவைத் தேடி அலைந்தான். இதற்காக ஒவ்வோர் ஆசிரமமாகச் சென்று, அங்கு தங்கி குருவைத் தேடினான். ஆனால், ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கும் அவனுக்கும் ஒத்துவரவில்லை. எனவே, அவனால் எந்த ஆசிரமத்திலும் தொடர்ந்து தங்க முடியவில்லை. அதனால் தனக்கான குரு கிடைப்பார் என்ற நம்பிக்கையை ஒரு கட்டத்தில் இழந்துவிட்டான் ஆனந்தன். 

சோர்ந்துபோன ஆனந்தனுக்கு நம்பிக்கையூட்டும்விதமாக அவனது நண்பன் ஒருவன், முனிவர் ஒருவரைப் பற்றி எடுத்துச் சொன்னான். கடைசியாக முயன்று பார்ப்போமே என்ற நம்பிக்கையில் நண்பன் சொன்ன அந்த முனிவரைத் தேடிப் போனான் ஆனந்தன். முனிவர் என்றால், அவர் சாந்தமாக தியானத்தில் இருப்பார் என்று நினைத்திருந்தான். அவரோ தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். ஆனாலும் முனிவர் கிடைத்த சந்தோஷத்தில் அவர் முன் ஆனந்தன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். அவரிடம், தனக்கான குருவைத் தேடி அலைந்தது பற்றியும் எங்கேயும் குரு கிடைக்கவில்லை என்பதையும் சொல்லி வருந்தினான்.

ஆனந்தன் சொன்னதைக் கேட்டபடி தோட்டத்தில் களை பறித்துக்கொண்டிருந்தார் முனிவர். திடீரென ஆனந்தனை அழைத்தார். ஒரு வாளியைக் கையில் கொடுத்து, தண்ணீர் இறைக்கும்படி சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார். ஆனந்தன் பலமுறை வாளியைக் கொண்டு நீர் இறைத்தும், அங்கிருக்கும் தொட்டியில் நீர் நிரம்பவில்லை. `ஏன்... என்னவானது?’ என்று அறிவதற்காக ஆனந்தன் வாளியை கிணற்றிலிருந்து வெளியே எடுத்துப் பார்த்தான். அப்போதுதான் வாளியின் கீழ்ப்பகுதியில் பெரிய ஓட்டை இருப்பதைக் கண்டான். அதிர்ச்சியடைந்தான். முனிவரிடம் சென்றான். '``குருவே, ஓட்டை வாளியைக் கொடுத்தால், என்னால் எப்படி நீர் இரைக்க முடியும்?’’ என்று கேட்டான். இதைக் கேட்டு புன்னகைத்த முனிவர், வாளியை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டார். 


ஆனந்தனின் முகத்தை உற்று நோக்கினார். ``ஆனந்தா... இங்கல்ல... எங்கே தேடினாலும் உனக்கு குரு கிடைக்க மாட்டார். குருவைத் தேடி பல இடங்களிலும் அலைந்த உன்னால் உனக்கென ஒரு குருவைக் கண்டுபிடிக்க முடியாதது ஏன் தெரியுமா? குறை, குருவிடம் இல்லை, உன்னிடம்தான் இருக்கிறது. குரு வேண்டுமென்றால், முதலில் கீழ்ப்படியும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் கொடுத்த வாளியில் ஓட்டை இருக்கிறது என்பதைக் கண்டதும், உனது புத்திசாலித்தனம் வேலை செய்ததைப் பாராட்டுகிறேன். ஆனால், அந்த வாளியை குரு ஏன் கொடுத்தார்,  அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமோ என்று நீ சிந்திக்கவில்லை. குருவின் செயலில் ஏதாவது ஓர் அர்த்தம் இருக்கும் என்று நினைத்து நீ செயல்பட்டிருந்தால், எப்போதோ உனக்கு குரு கிடைத்திருப்பார். உனக்கான குருவை மீண்டும் போய்த் தேடு, உனக்கு என் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு’’ என்று வாழ்த்தியனுப்பினார்.

குருவின் வார்த்தைகளைக் கேட்டு நடப்பவர் அல்லது குருவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்தான் உண்மையான சீடர். இந்த உண்மையை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று.

விவிலியத்தில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, யாரெல்லாம் விண்ணரசுக்குள் நுழைவார்கள் என்று கேட்டுவிட்டு, ``என்னை நோக்கி, `ஆண்டவரே ஆண்டவரே' என்று சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்லப் போவதில்லை. மாறாக, விண்ணுலகில் உள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்'' என்கிறார். இதே வேறுவிதமாகச் சொல்வதென்றால், யாரெல்லாம் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அதன்படி நடக்கிறார்களோ, அவர்கள் விண்ணரசுக்குள் செல்வது உறுதி. ஆண்டவர் இயேசு இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போர் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை உருவகத்தின் வழியாக விளக்குகிறார். ``இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போரே கற்பாறையின்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்’’ என்கிறார். மழை வந்தாலும், ஆறு பெருக்கெடுத்து ஓடினாலும் அது அந்த வீட்டை ஒன்றும் செய்யாது. அதுபோல இறை வார்த்தையைக் கேட்டு நடப்போரின் வாழ்வில் துன்பங்கள், சவால்கள், பிரச்னைகள் வந்தாலும் அவையெல்லாம் அவரை எதுவும் செய்யாது என்பதே உண்மை.

அதே நேரத்தில் இறை வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்காதவரின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டத் தவறவில்லை. இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்காதவரின் நிலையை, மணல் மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார் என்கிறார். ஏனென்றால், மணல் மீது கட்டப்படும் வீடு உறுதியில்லாமல் இருக்கும். அது சாதாரண மழைக்கே ஒன்றுமில்லாமல் போய்விடும். இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்காதவரும் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு கஷ்டங்களுக்கே சுக்குநூறாக உடைந்து போவார்கள். எனவே, நாம் இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பதால் கிடைக்கக்கூடிய பேறுபலன்களை உணர்ந்து, அவ்வாறு நடப்பதே மிகவும் சாலச் சிறந்தது.

இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போம். அதன் மூலம் விண்ணகத்துக்குள் நுழைவதற்கான தகுதி பெறுவோம். இறையருளை நிறைவாகப் பெறுவோம்!