Published:Updated:

`தேவை மருத்துவ சேவை!’ என வாழ்ந்த பி.சி.ராய்! -தேசிய மருத்துவர்கள் தினப் பகிர்வு!

`தேவை மருத்துவ சேவை!’ என வாழ்ந்த பி.சி.ராய்! -தேசிய மருத்துவர்கள் தினப் பகிர்வு!
`தேவை மருத்துவ சேவை!’ என வாழ்ந்த பி.சி.ராய்! -தேசிய மருத்துவர்கள் தினப் பகிர்வு!

மருத்துவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்த பி.சி.ராய்

ருத்துவர்களுக்கு பரந்த அன்பும் சேவை மனப்பான்மையும் மிகவும் அவசியம். உயிர் வாதையில் துடித்துக்கொண்டிருக்கும் ஓர் உயிரைக் காணும்போதெல்லாம் மருத்துவரின் மனதில், அந்த உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடுவோம் என்கிற நம்பிக்கை மனதில் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், மருத்துவர்களின் சேவையை வேறு எதனோடும் அளவிடவே முடியாது. ‘இந்த உலகில் தெய்வமே இல்லை’ என்று வாதிடுபவர்கள்கூட, மருத்துவரின் அளப்பரிய சேவையைக் கண்டு, அவர் வடிவில் தெய்வத்தைக் கண்டதாகக் கூறுவது உண்டு. 

தெய்வங்கள் நேரிடையாக பூமிக்கு வருவதில்லை. அன்பும் சேவையும் கருணையும் எந்த உள்ளத்தில் இருக்கிறதோ, அந்த மனிதனிடம் இறைவன் வந்து குடிகொள்கிறார். எனவேதான், இவையெல்லாம் கொண்ட நடமாடும் தெய்வங்களாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மருத்துவர்கள்.. அவர்களே, ‘மறுபிறவி’ தரும் கடவுள்கள். இன்று தேசிய மருத்துவர்கள் தினம். இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி,  டாக்டர் பி.சி.ராய் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
பீஹார் மாநிலம், பாட்னா நகருக்கு அருகேயுள்ள பாங்கிபோர் எனுமிடத்தில் 1882-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி பிறந்தார் பி.சி.ராய்.  முழுப்பெயர் பிதான் சந்திர ராய் (Bidhan Chandra Roy). இளம் வயதிலிருந்தே கணிதத்தின் மீது ஆர்வம்கொண்டிருந்தார் ராய். பாட்னா கல்லுாரியில் சேர்ந்து, கணிதத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர், கொல்கத்தாவில் மருத்துவம் படித்து, மேற்படிப்பை பிரிட்டனில் பயின்றார்.  மருத்துவத்தில் நிபுணராக மாறிய பி.சி.ராய், இந்தியாவில் பல மருத்துவக் கல்லுாரிகளில் பேராசிரியராகப் பணியாற்றி, பல சிறந்த மருத்துவர்களை உருவாக்கினார். 

மருத்துவத்துறையில் கால்பதித்து, சிறப்பாக பணியாற்றிய பி.சி.ராய், 1925-ம் ஆண்டு பாரக்பூர் தொகுதியில் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, வெற்றிவாகை சூடினார். ‘மக்களின் டாக்டர்’ என்று புகழ்பெற்றிருந்த பி.சி.ராயின் புகழ் எட்டித்திக்கிலும் பரவியது. சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் நெருக்கமாக இருந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் உடலையும் மனதையும் வலிமையாக வைத்திருக்க வேண்டும் எனப் போராட்டங்களின்போது முழங்கினார். பின்னர், இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயல்பட்டார்.  1948-ம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார். 

கிழக்கு பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால், கொல்கத்தாவிலும் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப்போனது.  அடுத்த முன்று ஆண்டுகளில், மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தினார். சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்தினார். பி.சி.ராயின் துணிச்சலும் சேவை மனப்பான்மையையும் இன்றைய இளையதலைமுறையினர் கற்றுக்கொள்ளவேண்டிய பாலபாடம்.

 ஏழை, எளிய மக்களுக்காகச் சிறப்பாக மருத்துவம் பார்த்து, மருத்துவ உலகுக்கு பெருமை சேர்த்த பி.சி.ராய், நோயாளிகளின் கண்ணீரைத் துடைப்பதற்காக தினமும் தன் வீட்டிலிருந்து மருத்துவம் பார்த்தவர். அந்த வீட்டைப் பின்னர் மருத்துவமனையாக மாற்றி, ஏழை மக்கள்

பயனடைய வழி செய்தார். 1961-ம் ஆண்டில் அவரது சேவையைப் பாராட்டும்விதமாக ‘பாரத ரத்னா’ விருதை வழங்கி, சிறப்பித்தது இந்திய அரசு. மக்களுக்காகவே வாழ்ந்த மருத்துவ உலகின் அபூர்வ நட்சத்திரமான பி.சி.ராய், எந்த நாளில் பிறந்தாரோ அதேநாளில் இவ்வுலகில் இருந்து மறைந்தார். 

பி.சி.ராய் மருத்துவ சேவையை அனைவரும் அறியும் வண்ணம், அவரது பெயரில் 1976-ம் ஆண்டிலிருந்து மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ‘டாக்டர் ராய் விருது’  வழங்கி, கெளரவிக்கப்படுகிறது. டாக்டர்கள் தினத்தை அமெரிக்கா மார்ச் 30-ம் தேதியும், கியூபா டிசம்பர் 3-ம் தேதியும் கொண்டாடி, மகிழ்கின்றன. 

பெருகிவரும் மக்கள்தொகை, சுற்றுச்சூழல் பாதிப்பு, மாறுபட்ட  உணவு பழக்கங்கள், போதைப்பொருட்கள், நெருக்கடி மிகுந்த வாழ்க்கைமுறையால் மனிதர்களுக்கு முன் எப்போதையும் விட அதிகமான நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் உடலையும் உள்ளத்தையும் காத்து நிற்கும் மருத்துவர்களின் சேவையை போற்றுவோம்.

அடுத்த கட்டுரைக்கு