Published:Updated:

குறையொன்றுமில்லை! - இரண்டு பெண்களின் தன்னம்பிக்கை கதை

குறையொன்றுமில்லை! - இரண்டு பெண்களின் தன்னம்பிக்கை கதை
பிரீமியம் ஸ்டோரி
குறையொன்றுமில்லை! - இரண்டு பெண்களின் தன்னம்பிக்கை கதை

சாதனைபா.விஜயலட்சுமி, படங்கள்: தி.குமரகுருபரன்

குறையொன்றுமில்லை! - இரண்டு பெண்களின் தன்னம்பிக்கை கதை

சாதனைபா.விஜயலட்சுமி, படங்கள்: தி.குமரகுருபரன்

Published:Updated:
குறையொன்றுமில்லை! - இரண்டு பெண்களின் தன்னம்பிக்கை கதை
பிரீமியம் ஸ்டோரி
குறையொன்றுமில்லை! - இரண்டு பெண்களின் தன்னம்பிக்கை கதை
குறையொன்றுமில்லை! - இரண்டு பெண்களின் தன்னம்பிக்கை கதை

வெயில் மறைந்த மாலைவேளையில் அந்த அரங்கில் கூடியிருந்த அனைவரும்  கண்ணீரும் சந்தோஷமும் கலந்த கலவையாக மாறியிருந்தனர். சிலருக்குப் பிரமிப்பு...சிலருக்கு நெகிழ்ச்சி... இன்னும் சிலருக்கோ `இனி நம்மாலும் முடியும்' எனும் உத்வேகம். அத்தகைய கலவையான உணர்வுகளை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியிருந்த அந்த நிகழ்ச்சி, கெவின்கேர் நிறுவனம் வழங்கிய ’எபிலிட்டி அவார்ட்ஸ்’.

இதில் விருது பெற்ற ஆறு பேருமே மாற்றுத் திறனாளிகள் என்பது சிறப்பு. அவர்களில் இருவர் பெண்கள்; குறையை நிறைகளாக மாற்றி தங்கள் வாழ்க்கையையே மாற்றிக்கொண்ட சாதனையாளர்கள். அவர்கள் கடந்து வந்த பாதை, கற்களும் முட்களும் நிறைந்தது. கே.சுகுணா, பூஜா குப்தா ஆகியோர்தான் அந்த லட்சியப் பெண்மணிகள்!

நம்பிக்கை ஒளி!

சுகுணா, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி. சிறுவயதில் இருந்தே படிப்பில் திறமைசாலியான சுகுணாவுக்கு இரு விழிகளிலும் பார்வைத்திறன் இல்லை. ஆனால், அவர் இன்று பல நூறு மாணவர்களுக்கு அறிவு வெளிச்சம் ஊட்டும் ஒரு தமிழாசிரியை. இந்தச் சாதனை எப்படிச் சாத்தியமானது? அவரே சொல்கிறார்...

“நான் ஒரு வயசு குழந்தையா இருக்கறப்பவே, எனக்குப் பார்வையில்லைங்கற விஷயம் அப்பா, அம்மாவுக்குத் தெரிய வந்துடுச்சு. அதனால என்னைப் பாண்டிச்சேரியில் இருக்கிற பார்வை யற்றோர் பள்ளியில் சேர்த்துப் படிக்க வெச்சாங்க. ஆனால், பள்ளிப்படிப்பு முடிச்ச பிறகு, வீட்டோட பொருளாதாரச் சூழ்நிலையால என்னால கல்லூரிப் படிப்புக்குப் போக முடியலை” என்று சுகுணா சொல்லும்போது பார்வையற்ற அவரது கண்கள், வலி கலந்த துடிப்பை வெளியிடுகின்றன.

குறையொன்றுமில்லை! - இரண்டு பெண்களின் தன்னம்பிக்கை கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுகுணாவுக்கு, அவருடன் பள்ளியில் படித்த ஏழுமலையுடன் திருமணம் நடந்தது. ஏழுமலையும் விழித்திறன் குறைபாடு கொண்டவர். பள்ளிக் காலத்திலேயே சுகுணாவின் கல்வித் திறமையைக் கண்டுகொண்டவர் ஏழுமலை. இந்நிலையில் வயிற்றுப்பாட்டுக்காக ரயிலில் சுகுணா வேர்க்கடலை பர்ஃபியும், ஏழுமலை காலண்டர்களும் விற்றுச் சம்பாதித்து வந்தனர்.

கணவர் ஏழுமலைக்கு சுகுணாவின் கல்வி ஆர்வத்துக்குத் தடைபோட விருப்பமில்லை. அதனால் கடலை விற்ற காசில் சுகுணாவுக்குக் கல்வியைக் காதல் பரிசாகக் கொடுத்தார்.

``கல்யாணத்துக்குப் பிறகு என்னோட கணவர் ‘நான் குடும்பத்தைப் பார்த்துக் கறேன்... நீ படி’னு உற்சாகப்படுத்தினார். என்னை முதலில் பி.ஏ., தமிழ் இலக்கியம் படிக்க வெச்சார். கூடவே `பி.எட்'டும் படிக்க வெச்சார். அவரோட கனவை வீணாக்காம நானும் படிச்சு முடிச்சேன். ஆனாலும், என்னுடைய விழித்திறன் பிரச்னையால் எந்தப் பள்ளியிலும் வேலை கிடைக்கலை. மீண்டும் ரயில்.... மீண்டும் வேர்க்கடலை பர்ஃபி!” சோகத்தைக்கூட சிரித்த முகத்துடன் பகிர்ந்துகொள்கிறார் சுகுணா.

அந்த நிலையில்தான் சுகுணா வின் வாழ்வில் வெளிச்சமாக வந்தது பள்ளியொன்றின் அழைப்பு. ஒவ்வொரு பள்ளியின் படியாக ஏறி இறங்கிய சுகுணாவுக்கு, வாசல் திறந்தது செங்கல்பட்டு மஹிந்திரா வேர்ல்டு ஸ்கூல்.

“முதலில் எனக்கு வேலை கொடுக்கத் தயங்கினவங்க, என்னோட தமிழ்த் திறமையைப் பார்த்ததும் தமிழாசிரியையா பணியில் சேர்த்துக்கிட்டாங்க. மாணவர்களும் என்னை ஆசிரியையா முழுமையா ஏத்துக் கிட்டாங்க. இங்க இரண்டாவது, மூணாவது, நாலாவது படிக்கும் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பாடம் எடுத்துட்டு இருக்கேன். இப்போ என்னோட குழந்தைகளும் இதே பள்ளியில் நல்லபடியா படிக்கறாங்க” என்று பூரிக்கிறார் சுகுணா.

இந்த வேலையால் வாழ்க்கையே வண்ணமயமாக மாறிப்போனது சுகுணாவுக்கு. பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டே, எம்.ஏ தமிழையும் வெற்றிகரமாக முடித்து விட்டார் சுகுணா. இப்போது, இவரது அடுத்த இலக்கு, டாக்ட ரேட். அந்தக் கனவையும் நன வாக்கிக் கொடுக்க, சத்யபாமா பல்கலைக்கழகம் இவரை பி.ஹெச்டி படிப்பில் இலவசமாக சேர்த்துக்கொள்வதாக உறுதியளித் துள்ளது. இன்னும் இன்னும் சுகுணாவின் வாழ்க்கை ஒளி பெறட்டும்!

குறையொன்றுமில்லை! - இரண்டு பெண்களின் தன்னம்பிக்கை கதை

உழைப்பின் உறுதி!

பார்ப்பதற்குப் பள்ளி படிக்கும் குட்டிப்பெண் போல கண்களுக்குத் தெரியும் பூஜா குப்தா, இன்று ஒரு வங்கி அதிகாரி. ஆறு வயதாக இருக்கும்போது, பூஜாவின் பெற்றோருக்கு அவரால் மற்றவர் களைப் போல நடப்பதென்பது முடியாத விஷயம் என்பது தெரிய வந்தது. எனினும், அவர்கள் கலங்கிப் போகவில்லை; பூஜாவையும் கலங்க விடவில்லை.

“பல வருட மருத்துவப் பரிசோதனை களுக்குப் பிறகுதான் எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்குப் பெயர் `அட்டாக்ஸியா' என்பது தெரிய வந்தது. அதனால் என்னால் நடக்க முடியாது. கைகளிலும் சரியான இயக்கம் இல்லை. குரல், விழித்திறன் மாறுபாடுகளும் ஏற்பட்டன. இதற்கு மருத்துவமும் இல்லை”- மிகச்சாதாரணமான குரலில் தன் உடல்நிலையை எடுத்துரைக்கிறார் பூஜா.

ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், வளர வளர பூஜாவின் எடையும் அதிகரித்திருக்கிறது. எனினும், அவருடைய தந்தை அஜய் குப்தா சற்றும் மனம்தளராமல் பூஜாவைப் பள்ளிக்கும் கல்லூரிக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். பூஜாவை ஒருவர் தூக்கி உட்கார வைத்தால் மட்டுமே உட்கார முடியும் என்கிற நிலை. எனினும், அவர் மனம் தளரவில்லை.

தந்தையின் அத்தனை கஷ்டங் களுக்கும் மருந்தாக, பூஜா வெற்றி கரமாக தன்னுடைய எம்.காம் டிகிரியை முடித்திருக்கிறார். கல் லூரிப் படிப்பின்போதே அரசு சார்ந்த பல்வேறு வேலைகளுக்கான தேர்வுகளில் ஒன்றைக்கூட விடாமல் எழுதியிருக்கிறார்.  அதன் பலன், பூஜா இன்று பஞ்சாப் நேஷனல் பேங்க்கில் வங்கி அதிகாரி.

“வேலைக்குத் தகுதிபெற்ற நேரத்தில் எனக்கு டெல்லி, மும்பை என்று பல இடங்களில் பயிற்சி இருந்தது. நிறைய கடின சூழ்நிலைகள் இருந்தாலும் கூட, அதையெல்லாம் நண்பர்கள், சக ஊழியர்களுடன் உதவியுடன் வெற்றிகரமாக முறியடித்தேன். இன்று என்னால், என்னுடைய குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிற பூஜாவின் எதிர்கால ஆசை, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதுதான்.

உழைப்பு என்றுமே தோற்றதில்லை...ஆகவே, சாதிப்பீர்கள் பூஜா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism