Published:Updated:

டி.வி பார்த்தால் கூட மைக் மூலம் உளவு பார்க்குமா ஃபேஸ்புக்? - புதிய சர்ச்சை

மொபைல் மைக்ரோபோன் மூலம் ஃபேஸ்புக் பயனாளர்களைக் கண்காணிக்குமா என்ற சந்தேகம் மீண்டும் வலுத்துள்ளது. என்ன காரணம்?

டி.வி பார்த்தால் கூட மைக் மூலம் உளவு பார்க்குமா ஃபேஸ்புக்? - புதிய சர்ச்சை
டி.வி பார்த்தால் கூட மைக் மூலம் உளவு பார்க்குமா ஃபேஸ்புக்? - புதிய சர்ச்சை

``என்னுடைய நண்பர்கள் அடிக்கடி ஒரு விஷயத்தை என்னிடம் கூறுகிறார்கள். ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி நண்பர்களுடன் விவாதித்தாலோ, அல்லது அதுகுறித்து ஏதாவது பேசினாலோ அடுத்த சில நிமிடங்களிலேயே அதுதொடர்பான விளம்பரங்கள் ஃபேஸ்புக்கில் காட்டப்படுகின்றன. இத்தனைக்கும் அவர்கள் போனில் கூட பேசவில்லை. சாதாரணமாக அருகில் இருக்கும் நபர்களுடன்தான் உரையாடுகிறார்கள். நிறையபேர் என்னிடம் இதனைக் கூறியிருக்கின்றனர். சரி.. இதையெல்லாம் விடுங்கள்.

ஆமாவா இல்லையா என மட்டும் சொல்லுங்கள் மார்க்... பயனாளர்களின் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஃபேஸ்புக் அவர்களின் மொபைல்களிலிருந்து ஆடியோக்களை பயன்படுத்துகிறதா?"

இப்படிக் கேட்பது அமெரிக்காவின் செனட் உறுப்பினர் ஒருவர். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா பிரச்னை தொடர்பாக விளக்கமளிக்க அமெரிக்க செனட்டர்கள் முன்பு ஆஜாரான போது, இந்தக் கேள்வியை எதிர்கொள்கிறார் மார்க் சக்கர்பெர்க். அடுத்த சில மைக்ரோவிநாடிகளுக்குள் மார்க்கிடமிருந்து பதில் வந்து விழுகிறது.

``நோ...."

``இல்லை". அந்தக் கேள்விக்கு இந்த ஒற்றைச் சொல், பதிலாகப் போதாது என அவருக்குத் தெரியும். தொடர்கிறார்.

``இதுகுறித்து தெளிவாக விளக்கிவிடுகிறேன் செனட்டர். ஃபேஸ்புக் பயனாளர்களின் மைக்ரோபோன்களை ஒட்டுக்கேட்டு அதன்மூலம் அவர்களுக்கு விளம்பரங்கள் காட்டப்படுமா எனக் கேட்கிறீர்கள். ஃபேஸ்புக் பயனாளர்கள் வீடியோ ரெக்கார்டு செய்யும்போது, அதற்கான ஆடியோவை ரெக்கார்டு செய்ய மட்டுமே ஃபேஸ்புக் ஆப் மைக்ரோபோனை பயன்படுத்தும். வீடியோ வசதிக்காக நாங்கள் செய்திருக்கும் ஏற்பாடு இது. விளம்பரங்களுக்காக மைக்ரோபோனை பதிவு செய்வதில்லை"

கிட்டத்தட்ட ஃபேஸ்புக் இரண்டாண்டுகளுக்கும் மேலாக சொல்லிக்கொண்டிருக்கும் அதே பதிலையே மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறார் மார்க். ஆனாலும், அந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்துவிடவில்லை. ``அது எப்படி நான் பேசிட்டிருக்க விஷயம் பத்தின விளம்பரம் உடனே ஃபேஸ்புக் டைம்லைன்ல வருது? எனக்கு மட்டும்தான் இப்படியா? இல்ல, எல்லாருக்கும் இப்படி நடக்குதா?" இந்தக் கேள்விகளை உலகின் சுமார் 2 பில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களும், வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு விதங்களில் கேட்டுவிட்டனர். இன்னும் சிலர் `இதெல்லாம் உண்மையா பொய்யா' எனத் தெரியாமலேயே விழித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் அத்தனை பேருக்கும் ஃபேஸ்புக் சொல்லும் ஒரே பதில்... மேலே மார்க் சொன்ன அதே பதில்தான். 

``நாங்கள் உங்கள் மைக்ரோபோனை வைத்து விளம்பரம் செய்யவில்லை. அது சுத்தப்பொய்"

இந்த சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாகவே டெக் உலகைச் சுற்றிவருகிறது. பூமியைத் தாண்டி வேறுகிரகங்களில் ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது எந்தளவு மர்மமாக இருக்கிறதோ, அதேபோல ஃபேஸ்புக் நம் மொபைலை ஒட்டுக்கேட்கிறதா இல்லையா என்பதும் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இரண்டுக்குமே நம்மிடம் ஆதாரமில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் ஃபேஸ்புக்கை சுற்றிவருகிறது ஒட்டுகேட்பு சர்ச்சை. காரணம், ஃபேஸ்புக் காப்புரிமை கேட்டு விண்ணப்பித்திருக்கும் ஒரு புதிய தொழில்நுட்பம்.

என்ன பிரச்னை அதில்?

டிவியில் ஓடும் விளம்பரங்களைக் கண்காணிக்க உதவும் புதிய தொழில்நுட்பம் ஒன்றிற்காகக் கடந்த 2016-ம் ஆண்டு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்திருந்தது ஃபேஸ்புக். அதுகுறித்த முழுமையான விவரங்கள் ஜூன் மாதம்தான் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள விஷயங்கள்தாம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதில் என்ன பிரச்னை எனத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, அந்தத் தொழில்நுட்பம் எப்படி இயங்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம்.

ஒரு வீட்டில் டிவியில் ஓடும் விளம்பரங்களை, அந்த வீட்டில் இருப்பவர்களின் மொபைல் போன் மூலமாகக் கண்காணிப்பதுதான் இதன் பணி. இப்படிப் பயனாளர்களைக் கண்காணிப்பதற்காக ஃபேஸ்புக்கானது, அந்த விளம்பரங்களில் சில சங்கேதக் குறியீடுகளை மறைத்து வைத்திருக்கும். அதன் உதவியுடன் நம்மைக் கண்காணிக்கும். உதாரணத்துடன் பார்த்துவிடுவோம்.

உங்களின் பெட்ரூமில் ஒரு எல்.இ.டி., டிவி இருக்கிறது வைத்துக்கொள்வோம். அதில் வழக்கம்போல விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. திடீரென ஃபேஸ்புக் கண்காணிக்க நினைக்கும் விளம்பரமும் டிவியில் ஓடுகிறது. அந்த விளம்பரத்தில் வழக்கமான காட்சிகள், ஒலிகள் தவிர்த்து வேறுசில சங்கேதக் குறியீடுகள் அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதனை நம்முடைய மனிதக் காதுகளால் இனம் கண்டுகொள்ள முடியாது. ஆனால், ஃபேஸ்புக் ஆப் இருக்கும் மொபைல்போன் இனம் கண்டுகொள்ளும். உடனே அந்த மொபைலின் மைக்ரோபோன் ஆன் ஆகி, அந்த அறையின் சுற்றுப்புற ஒலிகள் அதில் பதிவாகத் தொடங்கும். இப்படிப் பதிவு செய்ததோடு மட்டுமன்றி அதனை ஃபேஸ்புக்கிற்கும் அனுப்பும். இப்படி உங்கள் மொபைல் மூலமாக நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமா என்பதும் தெரியாது.  இவையனைத்தும் தெரியாமலே கூட நடக்கலாம். இதுதான் ஃபேஸ்புக் காப்புரிமை பெறவிருக்கும் புதிய தொழில்நுட்பம். 

இதன்மூலம் என்ன செய்யும் ஃபேஸ்புக்?

இப்போதைக்கு, இந்தத் தொழில்நுட்பம் எப்படிச் செயல்படும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் போன்றவை குறித்து மட்டும்தான் தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஃபேஸ்புக் என்ன செய்யவிருக்கிறது, விளம்பரங்களைக் கண்காணிக்கும் பணியை ஃபேஸ்புக் ஆப்பே செய்யுமா அல்லது வேறு ஏதேனும் நுட்பங்கள் கையாளப்படுமா போன்ற எந்த விவரங்களும் இல்லை. ஆனால், இதன்மூலம் என்னவெல்லாம் செய்யமுடியும் என இப்போதே கற்பனை கணக்குபோடத் தொடங்கிவிட்டனர் டெக்கீஸ்.

இப்படி மொபைல் மூலமாக நம்மைக் கண்காணிக்கும் ஃபேஸ்புக் அதுகுறித்த தகவல்களை அந்த விளம்பரதாரர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். அதற்கேற்ற விளம்பரங்களை ஃபேஸ்புக்கிலேயே உங்களுக்குக் காட்டலாம். நாம் எதுமாதிரியான விளம்பரங்களைப் பார்க்கிறோம், எந்த மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம் போன்ற தகவல்களைச் சேகரிக்கலாம். இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம்; தொழில்நுட்ப உலகில் எல்லாமே சாத்தியம்தான்.

பொதுவாக ஒரு நிறுவனம் காப்புரிமை பெறும் தொழில்நுட்பங்களை வைத்துமட்டுமே, அதனை மதிப்பிடவோ, குறைசொல்லிடவோ கூடாது. காரணம், காப்புரிமை பெறும் எல்லாத் தொழில்நுட்பங்களும் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்பதில்லை. 

ஊடகங்களில் இந்த விளம்பரக் கண்காணிப்பு விஷயம் திடீரென சீரியஸாகவே, உடனே இதுகுறித்து விளக்கமளித்தார் ஃபேஸ்புக்கின் துணைத்தலைவர் ஆலன் லோ. ``மற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாகத் புதிய தொழில்நுட்பங்களுக்குக் காப்புரிமை கேட்டு விண்ணப்பிப்பது வழக்கமான விஷயம்தான். காப்புரிமை பெறப்படும் தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தைச் சேர்ந்தவை என்பதால் அவை நிச்சயம் விவாதங்களை கிளப்பும். மற்றபடி இந்தத் தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் தன்னுடைய எந்தவொரு சேவையிலும் பயன்படுத்தவில்லை. வருங்காலத்திலும் பயன்படுத்தாது" என்கிறார் அவர். சில மாதங்களுக்கு முன்னர்தான் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா பிரச்னைக்காகவும், பயனர்களின் பிரைவசி பிரச்னைக்காகவும் பலத்த அடி வாங்கியது ஃபேஸ்புக். தற்போது மீண்டும் பிரைவசி தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. 

பொதுவாக நிறுவனங்கள், காப்புரிமை பெறும் எல்லாத் தொழில்நுட்பங்களும் சர்ச்சையாவதில்லை. ஆனால், ஃபேஸ்புக் மட்டும் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாவதற்கு காரணம், அதன் தொழில்நுட்பங்கள் அத்தனையுமே மக்களின் பிரைவசியைச் சீண்டுபவையாக இருக்கின்றன. ஃபேஸ்புக் இதற்கு முன்பே பலமுறை பிரைவசி சிக்கல்கள் கொண்ட தொழில்நுட்பங்களுக்குக் காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளது. அவைகுறித்த சந்தேகங்களும், சமீபத்தில் வெளியான கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா பிரச்னையும்தான் ஃபேஸ்புக்கின் சர்ச்சைக்குக் காரணம். 

தனிநபர் ஒருவரின் சின்ன சின்ன தருணங்களிலிருந்து வாழ்வின் முக்கியமான சம்பவங்கள் வரை அனைத்தையும் பதிவுசெய்யும் முக்கியமான இடம் ஃபேஸ்புக். ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களின் தங்கச்சுரங்கமும் இதுதான். இந்தளவுக்கு முக்கியமான தகவல்களை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு நிறுவனம், இப்படிப் புதுத்தொழில்நுட்பம் என அடிக்கடி பிரைவசிக்கு எதிரான குண்டை தூக்கிப்போட்டால் யாருக்குத்தான் அச்சம் வராது? அதனால்தான் ஒவ்வொருமுறையும் ஃபேஸ்புக் 'பிரைவசி' என்ற கோட்டைத்தாண்டும் போதெல்லாம் உலகெங்குமிருந்து எதிர்ப்புக் குரல்களை சந்திக்கிறது. ஆனால், வெறும் சமாளிப்பான பதில்களைத் தாண்டியும், அந்தக் குரல்களுக்கு மதிப்பளிக்கிறதா ஃபேஸ்புக் என்பது மார்க்கிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.