Published:Updated:

யுனெஸ்கோ பாரம்பர்ய தலத்தையும் விடாத எண்ணெய் நிறுவனங்கள்... பலியாகும் காங்கோ தேசியப் பூங்கா!

``எண்ணெய் இருக்கானு ஆய்வு பண்ணிட்டா, எடுக்காம விடமாட்டோம்" - இது காங்கோ நாட்டின் சோகம்!

யுனெஸ்கோ பாரம்பர்ய தலத்தையும் விடாத எண்ணெய் நிறுவனங்கள்... பலியாகும் காங்கோ தேசியப் பூங்கா!
யுனெஸ்கோ பாரம்பர்ய தலத்தையும் விடாத எண்ணெய் நிறுவனங்கள்... பலியாகும் காங்கோ தேசியப் பூங்கா!

ரு வனத்தில் இருக்கும் மான்கள் கூட்டமாக உலாவிக்கொண்டிருக்கின்றன. அங்கு வலுவான தன்மை கொண்ட சிங்கங்கள் வருகின்றன. அப்போது சிங்கம் வருவதைப் பார்க்கும் மான்கள் விலகி ஓடுகின்றன. மான்கள் மேய்ந்துகொண்டிருந்த இடத்தில் சிங்கம் ஓய்வெடுக்க ஆரம்பிக்கிறது. ஓய்வெடுத்த சிங்கம் புறப்பட்ட பின்னரே மீண்டும் மான்கள் அந்த இடத்துக்கு வருகை தருகின்றன. அந்த இடத்தை அப்படியே பூமியாக கற்பனை செய்துகொள்ளுங்கள். சிங்கங்கள் என்ற மனிதர்கள், மான்கள் என்ற விலங்குகளுக்குத் தொடர்ந்து தீமைகளையே செய்து வருகிறோம். நாட்டின் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் காடுகளையும், பாதுகாக்கப்பட்ட வனங்களிலும், மலைகளிலும் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பது, சாலைப் போடுவது என்ற பெயரில் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். இது உலக அளவில் அதிகமாக நடைபெறத் தொடங்கியுள்ளது. 

ஆப்பிரிக்கா நாட்டின் பழைமை வாய்ந்த பூங்காக்களில் விருங்கா தேசியப் பூங்காவும், சலோங்கா தேசியப் பூங்காவும் முக்கியமானவை. இவை இரண்டும் யுனெஸ்கோவால் பாரம்பர்யத் தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பூங்காக்களிலும், மலை கொரில்லாக்கள், ஆப்பிரிக்க காட்டு யானைகள், சிம்பன்சி குரங்குகள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. விருங்கா தேசியப் பூங்கா 7,800 ச.கி.மீ பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இதன் அருகில் உள்ள எட்வர்ட் ஏரிப்பகுதியின் நீர் வளத்தையும், அது சார்ந்த தொழில் வளர்ச்சியையும் நம்பி சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. உள்ளே ஏராளமான காடுகள், சதுப்பு நிலங்கள், எரிமலை வெடிப்புகள் செயலற்ற எரிமலைகள், பனிப்பாறைகள் என அனைத்தும் ஒரு சேர அமைந்திருக்கிறது. எனவே, இது அரிய  சுற்றுச்சூழல் பகுதியாக இருந்து வருகிறது. 

சலோங்கா தேசியப் பூங்கா உலகின் இரண்டாவது வெப்ப மண்டல மலைக்காடாக உள்ளது. இரண்டு பூங்காக்களுமே ஏறக்குறைய அரிய உயிரினங்கள் வாழும் இடங்களாக உள்ளன. சுற்றுச்சூழல் அம்சங்கள் நிறைந்த பகுதியாகவும் மூர்க்கமான முதலைகள் மற்றும் பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. 

காங்கோவில் எண்ணெய் நிறுவனங்கள், போராளிகள், வேட்டையாடுபவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோருக்கு இடையே நாளுக்கு நாள் அதிகமான மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் காங்கோ அரசு இப்பகுதியில் தீவிரமான கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஒரு வடத்துக்குள் 12 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் விருங்கா தேசியப் பூங்காவில் கொல்லப்பட்டுள்ளனர். அதனால் 2019-ம் ஆண்டுவரை, இப்பூங்காவுக்குள் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட யாரையும் அனுமதிப்பதில்லை என முடிவு செய்தது. 

கடந்த முறை எண்ணெய் எடுக்கும் நிறுவனங்கள் விருங்கா பூங்காவை அச்சுறுத்தியது. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்பினால் அத்திட்டம் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சோகோ நிறுவனம், விருங்கா தேசியப் பூங்காவில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்தது. இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. இதன் இறுதியில் விருங்கா பூங்காவின் தலைவராகப் பணியாற்றிய எம்மானுவல் சி மெரொடே ஆயுதமேந்திய போராளிக் குழுவால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் எண்ணெய் ஆய்வுப் பிரச்னையாக இருக்கக் கூடுமா என்பதை விசாரிக்குமாறு சர்வதேச உரிமைகள் குழுமம் காங்கோ அரசை வலியுறுத்தியது. மேலும், உலக வனவிலங்குகள் நிதியம், சோகோ நிறுவன ஆய்வினை நிறுத்துமாறு வழக்கை  பதிவு செய்தது. அதனால் தங்கள் ஆய்வைக் கைவிடுகிறோம் என அந்நிறுவனம் அறிவித்து வெளியேறியது. அப்போது காங்கோ அரசும் உலகப் பாரம்பர்ய அந்தஸ்து பெற்ற பூங்காவைப் பாதுகாப்போம் என அறிவித்தது. 

சோகோ நிறுவனத்தின் தரப்பில், `காங்கோ அரசும், உலக வனவிலங்கு நிதியமும் உறுதி சொல்லாத வரையில் எண்ணெய் வள ஆய்வை மேற்கொள்ள மாட்டோம்' எனத் தெரிவித்தது. 

ஆனால், இன்று காங்கோ ஜனநாயகக் குடியரசு அரசாங்கமானது, யுனெஸ்கோ உலகப் பாரம்பர்ய தலங்களான விருங்கா மற்றும் சலோங்கா தேசியப் பூங்காவின் பகுதிகளில் எண்ணெய் ஆய்வுகளுக்கும், துளையிடுவதற்கும் அனுமதி அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளது. இதனால் எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தார் மகிழ்ச்சியிலும், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வருத்தத்திலும் இருக்கிறார்கள். இந்த அறிவிப்பானது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எண்ணெய் எடுப்பதற்காக ஆய்வை ஆரம்பித்தவர்கள்... இருக்கிறது என்றால் சும்மா விடுவார்களா... நிறுத்துவது போல நடவடிக்கைகள் இருந்தாலும், எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. எண்ணெய் எடுப்பது என்று வந்துவிட்டால் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கை ஒன்றாகத்தான் இருக்கும்.

நெடுவாசல்கள் உலகெங்கும் இருக்கின்றன. சோகோவும்தான்.