Published:Updated:

நாதம் என் ஜீவனே... - வீணை காயத்ரி

நாதம் என் ஜீவனே... - வீணை காயத்ரி

நாதம் என் ஜீவனே... - வீணை காயத்ரி
நாதம் என் ஜீவனே... - வீணை காயத்ரி

''இதயத்தை வசமாக்கும் இசைக்குத்தான் எத்தனை வலிமை. அப்படிப்பட்ட இசையென்னும் இன்ப சாகரத்தில் திளைப்பவர்களுக்கு எள்ளளவும் மனக் கவலை என்பதே இல்லை'' - இனிமையாய் பேசுகிறார் வீணை காயத்ரி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''என் அப்பா அஸ்வத்தாமா ஒரு இசையமைப்பாளர். அம்மா கமலா, வீணை வித்வான். இசையுடன் பக்தியும் கலந்து மணம் பரப்பும் சூழலிலேயே நான் வளர்க்கப்பட்டேன். பாவாடை சட்டையுடன் துள்ளித் திரிந்த காலத்தில் வீணைதான் எனக்கு விளையாட்டுப் பொருள். என் ஐந்து வயதில் அம்மாவிடம் வீணை கற்று, ஒன்பதாவது வயதில் கச்சேரி நிகழ்த்தினேன்.

தினமும் காலையில் எழுந்ததும், கடவுளை மனதார வேண்டிக்கொண்டு, நெற்றியில் குங்குமம், திருநீறு பூசி, ஒரு மணி நேரம் வீணை வாசிப்பேன். அமைதியான அந்தக் காலை நேரத்தில், வீணையின் நாதம் ஒருவிதப் பரவச அதிர்வை ஏற்படுத்தி, உடலுக்குப் புத்துணர்ச்சி தரும். வீணையின் இனிய ஓசை மனதை ஒருநிலைப்படுத்தும். அந்த நாள் முழுவதும் சந்தோஷம் அருவியாய் பொங்கும். யோகா, தியானப் பயிற்சி செய்த பலன் நமக்கு கிடைத்துவிடும்.

என் அப்பா தேவி உபாசகர் என்பதால், வீட்டில் தினமும் காலையில் பூஜை நடக்கும். வீட்டின் உள்ளேயும் வாசலிலும், நானும் அம்மாவும் பெரிய கோலம் போடுவோம். கோலத்துக்காக ஒதுக்கும் அந்த 15 நிமிடங்கள் கை, கால், இடுப்பு என உடலுக்கு நல்ல பயிற்சி கிடைத்துவிடும். ஆனால், இன்று, கோலம் போடும் அளவுக்கு விஸ்தாரமான வாயில் எங்கு இருக்கிறது? அப்பாவிடம் இருந்து  நிறைய ஸ்லோகங்கள், பூஜை முறைகளைக் கற்றுக் கொண்டேன். எனக்கும் அம்பாளின் மீது அளவிடமுடியாத பக்தி உண்டு. இப்போதும், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் சொல்லிவிட்டுத்தான் மற்ற வேலைகளில் ஈடுபடுவேன். இதனால் மனதில் சஞ்சலம் என்பதே இருக்காது'' சிலிர்ப்புடன் விவரிக்கும் காயத்ரி, மகா பெரியவரை சந்தித்த அனுபவத்தையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

நாதம் என் ஜீவனே... - வீணை காயத்ரி
##~##
''என்னுடைய 11-வது வயதில், காஞ்சி பெரியவர் முன்னிலையில் வீணை வாசிக்க அழைப்பு வந்தது. காஞ்சிப் பெரியவர், 'சந்திரமௌலீஸ்வரர்’ பூஜை பண்ணும்போது நான் வாசிக்க வேண்டும். யாருக்குமே கிடைக்காத அரிய பாக்கியம் அது. கச்சேரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்து படுத்த படுக்கையானேன். என்னால் நிமிர்ந்துகூட உட்கார முடியவில்லை. இருந்தும், மடத்தில் உள்ளவர்கள், 'ஒரு பாட்டையாவது வாசிக்கச் சொல்லுங்கள்!’ என்றனர். என் பெற்றோருக்கும் எனக்கும் மறுப்பு சொல்ல மனம் இல்லை. அன்று, என்னையும் அறியாமல், அரை மணி நேரம் தொடர்ந்து வாசித்தேன். கிளம்பும் நேரத்தில், மகா பெரியவர் ஓரிக்கைக்கும் வந்து வாசிக்கக் கூப்பிட்டு அனுப்பினார். அன்று சுவாமிகள் மௌன விரதம். இரண்டு கால்களையும் மடித்துவைத்தபடி என் வாசிப்பை அவர் கண் மூடி ரசித்துக் கேட்டது இன்றும் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது. திடீரென என்னைப் பார்த்து வாசிப்பை நிறுத்தச் சொல்லி கையால் சைகை செய்தார். 15 நிமிடங்கள் கழித்து ஏலக்காய், லவங்கம் பதித்த சந்தனத்தால் ஆன ஓம்காரக் கிரீடத்தைக் கொடுத்து, அதை என் தலையில் அணியச்செய்து வாசிக்கச் சொன்னார். நானும் வாசித்தேன். 'இது போல பல கிரீடங்கள் உனக்கு வரும்’ என்று எழுதிக் காட்டினார். அன்று பெரியவாளின் அருள்வாக்குதான் இன்று என் புகழ், பதவிக்கும் மகுடம் சூட்டிஇருக்கிறது. அந்த நொடியிலேயே, என் உடல்நிலை தேறி, உற்சாகமாக இருப்பதைப் போன்று உணர்ந்தேன். 35 வருடங்களாக சுவாமிகள் தந்த கிரீடத்தைப் பத்திரமாகப் பராமரித்து வருகிறேன். கிரீடத்தைப் பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் என்னைப் பரவசப்படுத்தும். 'ஆண்டவனின் அருளும் ஆன்மிகப் பெரியவர்களின் ஆசிர்வாதங்களும் நம்மை நீண்ட ஆயுள் - ஆரோக்கியத்துடன் இருக்கவைப்பதுடன், வாழ்வை மேலும் செம்மைப்படுத்தும்’ என்பதற்கு நான் ஓர் உதாரணம்.

பாடுபவர்களின் குரலை வைத்தே, இன்னார் பாடுகிறார் என்று தெரிந்துகொள்ளலாம். அதேபோல், கண்களை மூடிக்கொண்டு கேட்டாலும், வீணை வாசிப்பவரின் அடையாளத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். வீணையை வாசிக்கும்போது, நமக்குள் இருக்கும் பிராண சக்தியானது வீணையின் குடத்துக்குள் சென்று, அதன் நாதம் நம் மூச்சுடன் கலந்துவிடுவதால்தான் வாசிப்பவர்களுக்கு ஏற்ப வீணையின் நாதமும் ஒலிக்கிறது. பொதுவாகவே பாட்டு, வாத்தியங்களை தம் கட்டி இசைப்பவர்களுக்கு சுவாசப் பிரச்னை என்பதே இருக்காது. விரல்களுக்கும் நல்ல பயிற்சி. மன அமைதிக்கும் மருந்து. நன்றாக முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வாசிப்பதால், முதுகுத் தண்டுவடம் வளையாமல் நிமிர்ந்து இருக்கும். முதுகு வலியும் வராது.

நாதம் என் ஜீவனே... - வீணை காயத்ரி

ஒருமுறை கச்சேரிக்கு முந்தைய நாள் என் இடது கையின் இரண்டாவது விரலில் வெட்டுக் காயம் ஏற்பட்டுவிட்டது. வீணை வாசிப்பதற்கே அந்த விரல்தான் ஆதாரம். பாண்டேஜ் போட்டபடி வாசித்தேன். வலியே தெரியவில்லை. கவலைகளை மறக்கச் செய்வதுடன்காயங்களையும் ஆற்றக்கூடிய வல்லமை படைத்தது இசை.

நாதம் என் ஜீவனே... - வீணை காயத்ரி

நான் ஓரளவுக்கு பிரபலமாகி வந்த காலகட்டத்தில், நிறையப்பேர் வீணை கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். என்னை நானே மெருகேற்றிக்கொண்டு இருந்தேனே தவிர, யாருக்குமே கற்றுக்கொடுக்கவில்லை. யாரையும் நாம் உருவாக்கவில்லையே என்கிற ஆழமான வருத்தம் என் ஆழ் மனதில் இருந்துகொண்டேஇருந்தது. அதற்கும் விடை கிடைப்பதுபோல், இப்போது, முதலமைச்சர் அம்மாவே நிறைய இசை மேதைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். கடவுளை நம்புங்கள்... கவலை எல்லாம் தீரும்.

மழலையைப் போல், வீணையை மடியில் கிடத்தி, நான் 40 வருடங்களாக என் இசைப் பயணத்தைத் தொடர்கிறேன். நான் போகாத ஊர் இல்லை. ஏறாத மேடைஇல்லை. வெளியூர்களில் அதிகமாகக் கச்சேரிகள் செய்ததால், வீட்டுச் சாப்பாட்டை எதிர்பார்க்க முடியாது. அதனால், முடிந்தவரை நல்ல காய்கறி, பழ வகைகளைத் தேடிப் பிடித்துச் சாப்பிடுவேன். தற்போது கச்சேரிகளில் வாசிப்பதை தவிர்த்து, வீட்டில் வாசிப்பதை அதிகம் விரும்புகிறேன்.

அதிகாலையில் விழித்தெழுவது எந்த அளவுக்கு மன அமைதிக்கு வழிவகுக்கிறதோ... அதேபோல்,  இரவு உறங்கச் செல்வதற்கு முன் அன்றைய தினம் நடந்த நல்லவை, கெட்டவையை மனக்கண் முன் நிறுத்திக் கொள்ளவேண்டும். இதனால், மனம் தூய்மையடைந்து ஆழ்ந்த உறக்கம் நம்மை அரவணைத்துக்கொள்ளும். நினைப்பதெல்லாம் நடந்துவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்... நிறைவேறாவிட்டால், துவண்டு போவதும் தவறு. எல்லாமே தற்காலிகம்தான் என்பதைப் புரிந்துகொண்டால், நிரந்தர அமைதியும் சந்தோஷமும் வாழ்நாள் நெடுக நீடிக்கும்!''

- ரேவதி
படங்கள்: பொன்.காசிராஜன்