Published:Updated:

பிரபஞ்ச அழகிப் போட்டிக்குத் தேர்வான முதல் திருநங்கை! - ஏஞ்சலா போன்ஸ் என்னும் ஏஞ்சல்

தங்களுக்கான உரிமைகளைப் பெறும் போராட்டத்தில், பிரபஞ்ச அளவில் வென்றிருக்கிறார்கள் திருநங்கைகள். வரலாற்றில் முதன்முறையாக `மிஸ் யுனிவெர்ஸ்' பட்டத்துக்காக ஒரு திருநங்கை தேர்வாகியிருப்பது, அவர்களின் ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபஞ்ச அழகிப் போட்டிக்குத் தேர்வான முதல் திருநங்கை! - ஏஞ்சலா போன்ஸ் என்னும் ஏஞ்சல்
பிரபஞ்ச அழகிப் போட்டிக்குத் தேர்வான முதல் திருநங்கை! - ஏஞ்சலா போன்ஸ் என்னும் ஏஞ்சல்

தங்களுக்கான உரிமைகளைப் பெறும் போராட்டத்தில், பிரபஞ்ச அளவில் வென்றிருக்கிறார்கள் திருநங்கைகள். வரலாற்றில் முதன்முறையாக `மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்துக்காக ஒரு திருநங்கை தேர்வாகியிருப்பது, அவர்களின் ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாடெங்கிலும் `உலக அழகி', `பிரபஞ்ச அழகி' போட்டிக்கான தகுதிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில், ஜூன் 29-ம் தேதி ஸ்பெயினில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்துகொண்ட 26 வயதான ஏஞ்சலா போன்ஸ், `மிஸ் யுனிவர்ஸ் ஸ்பெயின்' பட்டத்தை வென்று, `பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்குபெறும் முதல் திருநங்கை' என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

22 போட்டியாளர்களை வீழ்த்தி மிகப்பெரிய பொறுப்பை தலையில் சுமந்திருக்கும் ஸ்பெயின் நாட்டு அழகி, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிலிப்பைன்ஸில் நடைபெறவிருக்கும் `மிஸ் யுனிவர்ஸ்' போட்டியில், ஸ்பெயின் சார்பில் பங்கேற்பார்.

இதைத் தொடர்ந்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `ஸ்பெயின் நாட்டின் பெயரையும் வண்ணங்களையும் மீட்டெடுப்பதுதான் என் மிகப்பெரிய கனவு. என்னுடைய இலக்கு, சிறந்த பேச்சாளராக வேண்டும் என்பதே. அதன்மூலம் எங்கள் சமுதாயத்தைப் பற்றி மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த உலகத்துக்கும் தனிமைப்படுத்துதலின் விளைவு, மரியாதையின் முக்கியத்துவம், பன்முகத்தன்மையின் ஆபத்து போன்றவற்றைப் பற்றி எடுத்துக்கூறி, விழிப்புஉணர்வு ஏற்படுத்துவேன்' எனப் பதிவுசெய்துள்ளார்.

2012-ம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட ஜென்னா டலாகோவா, `திருநங்கை' என்ற காரணத்துக்காகப் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். அப்போது `மிஸ் யுனிவர்ஸ்' அமைப்பின் தலைமை அதிகாரியாக இருந்த தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து வழக்கு பதிவுசெய்யப்பட்டது. கடும் போராட்டங்களுக்குப் பிறகு திருநங்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை உடைக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகிப் போட்டிக்குத் தேர்வாகியிருப்பது ஸ்பெயின் அழகி ஏஞ்சலாதான். இவருக்கு இது முதல் முயற்சியல்ல. ஏற்கெனவே 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகித் தேர்வுப் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். தன் விடாமுயற்சியால் இன்று பிரபஞ்ச அழகித் தேடலில் வென்றுள்ளார்.

``என் நாட்டு கிரீடம், என் தலையில் இருக்கிறது. எங்களை மற்றவர்களைப்போல் பார்க்கவைப்பதற்கு நிச்சயம் போராடுவேன். என் நடவடிக்கையின் மூலம், நான் ஏற்கெனவே மகுடம் சூட்டப்பட்ட ராணிதான் என்பதை உலகறிய செய்வேன். நான் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றால், நிச்சயம் 60-க்கும் மேலான பிரபஞ்ச அழகிகளின் பாதத் தடங்களைப் பின்பற்றுவேன். அதில் முதல் பெண்மணி 1952-ம் ஆண்டு வெற்றிபெற்ற ஆர்மி குசேலா. தன் அழகாலும் செயலாலும் என்னை மிகவும் கவர்ந்த அழகி அவர்" என்று அந்நாட்டு பத்திரிகையாளர் பேட்டியில் கூறியுள்ளார்.

ஏஞ்சலா, தனது 11-வது வயதில்தான் தன் பாலினப் பிரச்னையைக் கண்டறிந்ததாகவும், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழுமையாகப் பெண் தோற்றத்தைப் பெற்றதாகவும் கூறியுள்ளார். பல தடைகளை உடைத்து அனைத்துத் தொழில்களிலும் சாதனை படைத்துவரும் திருநங்கைகளின் முயற்சி, நிச்சயம் பாராட்டுக்குரியது.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற `மிஸ் இந்தியா' போட்டியின் வெற்றியாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியா சார்பில் `உலக அழகி 2018' போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார். `Beauty with a Purpose' பட்டத்தைப் பெற்றிருக்கும் அனுவின் நோக்கமும் திருநங்கைகளுக்கு உதவுவதுதான்.