Published:Updated:

கொக்கிபீடியா - ஆர்.கே.நகர்

கொக்கிபீடியா - ஆர்.கே.நகர்
பிரீமியம் ஸ்டோரி
News
கொக்கிபீடியா - ஆர்.கே.நகர்

கொக்கிபீடியா - ஆர்.கே.நகர்

கொக்கிபீடியா - ஆர்.கே.நகர்

பெயர்: ஆர்.கே. நகர்

உருவாக்கம்:
1977

இருப்பிடம்: வட சென்னையின் இதயப் பகுதி.  (ஆனால், சீரான ரத்த ஓட்டம் இல்லை!)

தொகுதியைப் பற்றி: பதினொன்றில் ஏழு முறை அ.தி.மு.க வென்றிருக்கும் ஆர்.கே. நகர், ‘ஏன் எதுக்குனு தெரியாது... ஆனா, பல வருஷமா ரெட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போடுறேன்’ எனச் சொல்லும் எம்.ஜி.ஆர் விசுவாசிகள் நிறைந்திருக்கும் தொகுதி.

தொகுதியின் சிறப்புகள்:
‘தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகத் தேர்தலைச் சந்திக்கும் தொகுதி’ எனும் அபார சாதனையைச் சொந்தமாக்கியுள்ளது ஆர்.கே. நகர். இம்முறை பல கட்சிகள் தனித்துக் களமிறங்கி இருப்பதால் கலகல கொண்டாட்டங்களுக்குக் கொஞ்சமும் குறைவிருக்காது. தேர்தல் நடக்கப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் கண்டுகொள்ளப்படாத தொகுதிக்கு, இப்போதுதான் குறைகளைக் கேட்டறிய அமைச்சர்கள் குவிகிறார்களாம். கால்மேல் கால்போட்டுக்கொண்டு ‘வர்லாம் வர்லாம் வா...’ என வரவேற்கிறார்கள் வாக்காளர்கள்.

தேசியக் கட்சி, மாநிலக் கட்சி, உப்புமா கட்சிகள் என எந்தக் கட்சிக்கும் முழுக்க ஆதரவில்லாத சூழல்தான் நிலவுகிறது. ஓட்டுக்கு 5000 ரூபாய் தரப்படுவதாக ஹெச்.ராஜா குற்றம்சாட்டினால், ‘அண்ணே... நீங்க அக்கவுன்ட்ல போடுறதா சொன்ன அந்தப் பதினைஞ்சு லட்சம்...’ எனக் கேட்டுத் தலையைச் சொறிய வைக்கிறார் களாம். ஓட்டுக் கேட்டு யார் வந்தாலும் ‘ரிசார்ட்டுக்கு டூர் போகமாட்டேன்’ என்பதையும் தேர்தல் அறிக்கையாக வாசிக்க ஐடியா கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

வேதனையான சென்டிமென்ட்கள்: ஆர்.கே. நகர் தொகுதியின் முதல் சட்டமன்றத் தேர்தலில் வென்ற ஐசரி வேலன், விபத்து ஒன்றில் கால்களை இழந்து தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினார். 1991-ல் வென்ற மதுசூதனன் அமைச்சரானாலும், ஊழல் வழக்கில் சிக்கிக் கைதானார். (இப்போது அவரும் வேட்பாளர் கூட்டத்தில் ஒருவர்.) அ.தி.மு.க சார்பில் இரண்டு முறை வென்ற சேகர்பாபு அதற்குப் பின் கட்சி மாறி தி.மு.க-வில் தஞ்சம் புகுந்தார். ஜெயலலிதா முதல்வராகி மறைந்ததும் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வாகத்தான். இந்தத் தொகுதியில் சசிகலாவைக் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் பல குழப்பங்கள் நிகழ்ந்து அவர் சிறைக்கும் சென்றுவிட்டார். ‘இன்னும் இந்தச் சுவர் எத்தனை பேரைக் காவு வாங்கப் போகுதோ’ என மீம்ஸ் போடும் அளவுக்கு சென்டிமென்ட் பேச்சு இருக்கிறது.

சீர்கேடுகள்:
நல்ல சாலைகள் இல்லை... மக்களுக்கு நல்ல குடிநீர் இல்லை... நூலகம் திறப்பதே இல்லை... தண்டையார்பேட்டைக்கு அந்தப் பக்கம் இடுகாடு இல்லை... என இத்தனை இல்லைகளும்தான் ‘இலை’க்கட்சிக்குத் தொல்லை. இருப்பதெல்லாம் கொசுத் தொல்லையும், மூட்டை மூட்டையான பிரச்னைகளும்தான்.

தேர்தல் நேரங்களில் மட்டும் சில இடங்களை பெயின்ட் அடித்துப் புதுப்பிப்பதும், சாலைகள் போடுவதைப் போல ‘பாவ்லா’ காட்டுவதும், அதற்கப்புறம் அவை பல்லிளிப்பதும் ஆட்சிகள் மாறினாலும் தொடரும் காட்சிகள்.

குழப்பங்கள்: இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சிக்குச் சாதகமாக வரும் எனும் வரலாற்றுப் பருப்பு இந்த முறை வேகாது. இரட்டை இலைச் சின்னம் சின்னாபின்னமாகி இருக்கிறது. இன்னொரு பக்கம், குறுக்கே புகுந்து
தி.மு.க-வின் லோக்கல் கையான மருது கணேஷ் ஸ்கோர் செய்வது தினகரனுக்கு இரட்டைத் தலைவலி.

இந்த முறை அ.தி.மு.க சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன், MAD பேரவை சார்பில் தீபா, தி.மு.க சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன் என பலரும் களத்தில் குதித்திருக்கிறார்கள். இந்தப் பெருங்கூட்டத்துக்கு மத்தியில் வைகோ தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது, ஆர்.கே.நகரைத் தாண்டி உலக மக்களையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். 

இந்த முறை வேட்பாளர்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என ஹைடெக் பிரசார உத்திகளையும், திருமங்கலம் தேற்றத்தையும் கையிலெடுத்துக் கம்பு சுத்தக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘இவை எல்லாம் கெத்து காட்டுமா, வெத்து அம்புகளாகப் போகுமா’ என்பது ஏப்ரல் 15-ல் தெரியவரும். அதுவரைக்கும் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...’ பாடலை லவுட் ஸ்பீக்கரில் போட்டுக் கேட்கப் போகிறது தமிழகம்.

மேலும் பார்க்க:


சகுனி - திரைப்படம்

மன்னார்குடி டு ஆர்.கே. நகர். வழி- தேனி

இலை யாருக்கு... சுளை யாருக்கு..? - மியூசிக்கல் சேர் விளையாட்டு

மேலும் படிக்க:

ஆர்.கே. நகரும் ஆறேழு கட்சிகளும்!

‘ஆளுக்கொரு வார்டு - அம்மாதான் கார்டு’ (guard)

‘நான் எம்.எல்.ஏ ஆனால்...’ - கங்கை அமரன் சுயசரிதை

- விக்னேஷ் சி.செல்வராஜ்