Published:Updated:

இந்த மேதையைக் கொண்டாட ஒருநாள் போதுமா? - பாலமுரளிகிருஷ்ணா பிறந்தநாள் பதிவு!

விகடன் விமர்சனக்குழு
இந்த மேதையைக் கொண்டாட ஒருநாள் போதுமா? - பாலமுரளிகிருஷ்ணா பிறந்தநாள் பதிவு!
இந்த மேதையைக் கொண்டாட ஒருநாள் போதுமா? - பாலமுரளிகிருஷ்ணா பிறந்தநாள் பதிவு!

``இது புது ராகம். என்னிடம் எந்தப் புத்தகமும் இல்லை. ஸ்வரக் குறிப்புகளும் இல்லை. திடீரெனத் தோன்றிய இந்த ராகத்துக்கு `துரை' (DORE) எனப் பெயரிட்டிருக்கிறேன்'' என்று குழந்தைச் சிரிப்புடன் அறிவிக்கிறார் பாலமுரளி.

ருடம் 1982... நவம்பர் மாதத்தில் காலை நேரம். பெங்களூரில் பாலமுரளிகிருஷ்ணாவின் கச்சேரி. வழக்கம்போல் அலைமோதும் கூட்டம். முதல் வரிசையில் வீணை துரைசாமி ஐயங்கார் உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருக்கும் வேளை. திடீரென யாரும் அதுவரை கேட்டிராத புத்தம் புது ராகத்தைப் பாட ஆரம்பிக்கிறார் பாலமுரளி. கூட்டத்தினரின் புருவம் உயருகிறது. துரைசாமி ஐயங்காரின் உதடுகளில் லேசான புன்னகை. ஆலாபனை, நிறைவுபெறுகிறது.

``இது புது ராகம். என்னிடம் எந்தப் புத்தகமும் இல்லை. ஸ்வரக் குறிப்புகளும் இல்லை. திடீரெனத் தோன்றிய இந்த ராகத்துக்கு `டோரே' (DORE) எனப் பெயரிட்டிருக்கிறேன்'' என்று குழந்தைச் சிரிப்புடன் அறிவிக்கிறார் பாலமுரளி.

1978-ம் ஆண்டில் பாலமுரளிக்கு `சங்கீத கலாநிதி' விருது வழங்கி மகிழ்ந்தது மியூசிக் அகாடமி. அப்போது வெளியிடப்பட்ட மலரில் `பலப்பல புது ராகங்களைக் கண்டுபிடித்தவர் பாலமுரளி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் படித்த வீணை எஸ்.பாலசந்தர் முகம் சிவந்தார். `பாலமுரளி கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் ராகங்கள், ஏற்கெனவே பாடப்பட்டுவருபவைதாம்' என்று கோபம் கொப்புளிக்க அகாடமிக்கு பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதினார். இந்தக் கடிதப் போரில் பாலமுரளியும் களத்தில் குதிக்க, வாதப் பிரதிவாதங்களால் அனல் பறந்தது. பத்திரிகைகளில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. ஆக, சர்ச்சையும் சங்கீதமும் இணைந்த தன் இசைப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டார் மேதை பாலமுரளிகிருஷ்ணா.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சங்கரகுப்தம் என்கிற சிற்றூரில் 1930-ம் வருடம் ஜூலை மாதம் 6-ம் தேதி பிறந்தவர் முரளிகிருஷ்ணா. குழந்தைப் பருவத்திலேயே தாய் சூர்யகாந்தம்மாவை இழந்தவர். அப்பா பட்டபிராமையாவால் வளர்க்கப்பட்டவர். தியாகராஜரின் சிஷ்யப் பரம்பரையைச் சேர்ந்த குரு பருபள்ளி ராமகிருஷ்ணய்ய பந்துலுவிடம் சங்கீதம் பயின்றவர். எட்டாவது வயதில் விஜயவாடாவில் முரளிகிருஷ்ணாவின் முதல் கச்சேரி.

``மேடையில் இத்தனை அற்புதமாகப் பாடுற இந்தச் சின்னப்பையன் யாரு?'' என்று கேட்டிருக்கிறார் ஹரிகதை விற்பன்னர் எம்.சூரியநாராயணமூர்த்தி.

``முரளிகிருஷ்ணா...''

``இந்த பாலகன், இனி பால முரளிகிருஷ்ணா'' என்று அந்தப் பெரியவர் மாற்றிவைத்த பெயர் காலகாலத்துக்கும் இசை உலகில்  மறக்க முடியாத பெயராகிவிட்டது.

குழந்தைப் பருவத்தில் சரளி வரிசையைச் சற்று சரளமாகப் பாடினாலே `மழலை மேதை' முத்திரை குத்திக் கொண்டாடுவதுதான் இன்றைய வழக்கம். ஆனால், 86 வயது வரை நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்த பாலமுரளி, மழலைப் பருவம் முதலே மேதையாக வளர்ந்து, உயர்ந்து, உச்சம் தொட்டவர்.

3 முதல் 7 வயதுக்குள் சுமார் 300 கீர்த்தனைகளை பாடம் செய்தவர் பாலமுரளி. 13-வது வயதில் இவருக்குக் குரலில் பாதிப்பு ஏற்பட்டது. வயலின், வயோலோ, மிருதங்கம், கஞ்சிரா உள்ளிட்ட ஒரு டஜன் இசைக் கருவிகளை வாசிக்க தேர்ச்சிபெற்றார். பாதிக்கப்பட்ட குரலை, விடாமுயற்சியால் மீட்டெடுத்தார். புகழ் வந்தது; பிரபலம் அதிகமானது. வடஇந்தியக் கலைஞர்களுடன் ஜுகல்பந்தி கச்சேரிகளில் கலந்துகொண்டார். 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல்கள் இயற்றினார். புதுப்புது ராகங்களைக் கண்டெடுத்தார். மொத்தமாக, 450 பாடல்கள் வரை எழுதினார்.  80 வருடத்தில் சுமார் 18,000 கச்சேரிகள் செய்து சரித்திரம் படைத்தார்.

`சீடர் சென்னையில் காலூன்றினால்தான் எதிர்காலம் வளமாகும்' என நினைத்த குரு, பாலமுரளியை அடிக்கடி விஜயவாடாவுக்கும் சென்னைக்கும் பயணப்படவைத்தார். இந்த இரு ஜங்ஷன்களுக்கும் இடையே உள்ள அத்தனை ஸ்டேஷன்களும் பாலமுரளிக்கு மனப்பாடம். நண்பர்களுடன் அரட்டையடிக்கும்போது ரயில்நிலையங்களின் பெயர்களை வைத்து ஜாலியாகப் பாடிக்காட்டுவார்.

திரைத்துறையிலும் சாதித்தவர் பாலமுரளி. 28 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். இவரது கணக்கில் 300 சினிமா பாடல்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம். அதைப் பட்டியலிட ஒரு நாள் போதுமா?!

ஜ்ஜி மற்றும் ஐஸ்க்ரீம் ப்ரியர் பாலமுரளி! 2012-ம் ஆண்டில் இவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, தங்கியிருந்த வீட்டில் சூடாக பஜ்ஜி போட்டுக்கொடுத்திருக்கிறார்கள். ஒரு டிஷ்யூ பேப்பர் கேட்டு வாங்கி எண்ணெய்யை அதில் உறிஞ்சி எடுத்துவிட்டு பஜ்ஜியைச் சாப்பிட்டுவிட்டு, `ஐஸ்க்ரீம் இருக்கா?' என்று குழந்தை மாதிரி கேட்டார்.

காஸினோவுக்குப் போய் விளையாடுவதும் பாலமுரளிக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. மேலே சொன்ன அமெரிக்கப் பயணத்தின்போது இவர் கண்களிலிருந்து காஸினோவை மறைக்க எவ்வளவோ முயன்றுள்ளார் உடன் சென்றிருந்த நண்பர். அப்படியும் ஏர்போர்ட்டின் ரெஸ்ட் ரூம் போகும் வழியில் காஸினோவைப் பார்த்துவிட்டு, நைஸாக நுழைந்துவிட்டாராம்!

ரு கச்சேரிக்கோ அல்லது விழாவுக்கோ பாலமுரளி வருவதைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். வயதுக்கு மீறிய மிடுக்குடன் காணப்படுவார். பளிச்சென்று இருக்கும், வேட்டியும் ஜிப்பாவும். தங்கச்சங்கிலி, ஜிப்பாவுக்கு மேல் பளபளக்கும். சென்ட் மணக்கும். கால் தொட்டு வணங்குபவர்களை, தலை தொட்டு ஆசீர்வதிப்பார் இந்தப் புன்னகை மன்னன்!

னோதர்ம சங்கீதம் பாலமுரளியுடையது. கற்பனைகள் பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடும். மேல் ஸ்தாயியில் இடியென முழங்கிவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் சர்ரென மந்த ஸ்தாயியிக்கு இறங்கி வந்து கிறங்கடிப்பார். ஆங்காங்கே வயலினும் மிருதங்கமும் திக்குமுக்காடிப்போகும் அளவுக்கு இவர் பாடும் ஸ்வரங்கள் அமையும். ஒரு ராகம் இவர் பாட ஆரம்பித்தால், அதை அடையாளம் காண்பதற்கே ஓரிரு நிமிடமாகிவிடும். அதாவது, அந்த ராகத்துக்கு இலக்கணப்படி இருக்கும் ஸ்வரங்களுக்குப் புது வண்ணம் கொடுத்து பளபளக்கவைப்பதில் கில்லாடி இவர்!

``நான் வெறும் கருவிதான். எனக்கு இசை தெரியாது. ஆனா, இசைக்கு என்னைத் தெரியும்'' என்று டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா அடிக்கடி சொல்வதுண்டு.

இசைக்கு மட்டுமா... ஆயிரமாயிரம் இசை ரசிகர்களுக்கும் உங்களைத் தெரியுமே பாலமுரளிகாரு!

அடுத்த கட்டுரைக்கு