Published:Updated:

சி.வி.சி.யாக தாமஸை நியமித்தது செல்லாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

புதுடெல்லி, மார்ச்.3,2011

சி.வி.சி.யாக தாமஸை நியமித்தது செல்லாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பில் பி.ஜே. தாமஸை நியமனம் செய்தது செல்லாதுஎன உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ##~~##

இது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கேரளாவில் முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ள பி.ஜே.தாமஸ் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவி ஏற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

1991-92 ஆம் ஆண்டில் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டதில் ரூ 2.32 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்போது கேரள காங்கிரஸ் தலைவர் கருணாகரன் முதல்வராக இருந்தார். தாமஸ் உணவுத் துறைச் செயலராக இருந்தார். இந்த வழக்கில் ஊழல் கண்காணிப்புத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தாமஸ் 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமஸின் நியமனத்துக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.  ஆனால், இந்த எதிர்ப்பையும் மீறி, பணி நியமனக் குழுவில் உள்ள மற்ற இரு உறுப்பினர்களுமான பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவரை பணி நியமனம் செய்வதில் உறுதியாக இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, அவரது பதவி ஏற்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சுவாதாங்கர் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. இதில், தாமஸ் தனது பணி நியமனம் குறித்து விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில், தாமஸின் நியமனம் செல்லாது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பில் இருந்து பி.ஜே. தாமஸ் நீக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.

பி.ஜே. தாமஸின் நியமனம் சட்டத்துக்குப் புறம்பானது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சாடியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக, பி.ஜே.தாமஸ் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். 

தொடர்புடையச் செய்திகள்:

அடுத்த கட்டுரைக்கு