Published:Updated:

திருப்பதி பெருமாள் ஆராதனை மணியின் அவதாரமாகப் பிறந்த வேதாந்த தேசிகர்! #Tirupati

தன் வாழ்நாளில், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை சம்ஸ்கிருதம், தமிழ், ப்ராக்ருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் அருளிச் செய்துள்ளார் வேதாந்த தேசிகர். காஞ்சி வரதராஜப் பெருமாள் மீது பற்பல சம்ஸ்கிருத ஸ்தோத்திரங்களையும், தமிழ் பிரபந்தங்களையும் அருளியுள்ளார். 

திருப்பதி பெருமாள் ஆராதனை மணியின் அவதாரமாகப் பிறந்த வேதாந்த தேசிகர்! #Tirupati
திருப்பதி பெருமாள் ஆராதனை மணியின் அவதாரமாகப் பிறந்த வேதாந்த தேசிகர்! #Tirupati

திருப்பதி ஏழுமலையானின் 'ஆராதனை மணி'யாக அருள்பாலிக்கும் வேதாந்த தேசிகரின் கதை. முன்னொரு காலத்தில் காஞ்சிபுரத்தை அடுத்த, ஸ்ரீதூப்புல் என்னும் அழகிய கிராமத்தில், அனந்தாசார்யார் என்ற வைணவர் சகல வேத சாஸ்திரங்களையும் ஐயம் திரிபற கற்றுணர்ந்திருந்தார். இவர் ஸ்ரீரங்கராஜ அப்புள்ளாருடைய சகோதரியான தோதாரம்பை என்னும் பெண்ணை மணந்துகொண்டு வேத விதி தவறாமல் இல்லறம் நடத்தி வந்தார். 

இப்படியாக இடையூறில்லாமல் இல்லறம் நடத்தினாலும், இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அப்போது, அவர்கள் கனவில் திருமலையில் குடிகொண்டிருக்கும் திருவேங்கடமுடையான் தோன்றி தன்னிடம் வரும்படி கட்டளையிட்டார். 

அவர்களும் திருமலைக்குச் சென்று திருவேங்கடமுடையானைத் தரிசித்து வழிபட்டனர். அன்றிரவு தோதாரம்பா கனவில் பெருமாள் தோன்றி, ``உங்களுக்கு நம்மைப் போல் ஒரு புத்திரனைத் தந்தோம், இந்தத் திருமணியை (நைவேத்தியத்தின்போது ஒலிக்கும் ஆராதனை மணி) பெற்றுக்கொள்ளும்" என்று தனது ஆராதனை மணியைக் கொடுத்தார். தோதாரம்பையும் ஸ்வாமியின் கட்டளைப்படி அந்த மணியை விழுங்கினார். கனவில் திடுக்கிட்டு எழுந்தவர், சிறிது தாக சாந்தி செய்துவிட்டு உறங்கிப் போனார்.   

மறுநாள், திருவேங்கடமுடையான் சந்நிதியில், திருமணியைக் காணாமல் எல்லோரும் திகைத்து நின்றபோது, அதே கனவைக் கண்ட பெரிய ஜீயர், பெருமாளின் கட்டளையை அனைவருக்கும் அறிவித்தார். அந்த நேரத்தில்  ஸ்ரீநிவாஸனை சேவிக்க அங்கு வந்த அனந்தாச்சார்யார் தம்பதியை அனைவரும் கொண்டாடினர். தோதாரம்பையும் திருமணியை விழுங்கிய நாளன்று கருத்தரித்தார்.

திருமணியின் அம்சமாக அதி தேஜஸ்வியான ஒரு குமாரர் பிறந்தார். ஸ்ரீநிவாஸனுடைய திருமணியின் அம்சமாகப் பிறந்த குழந்தைக்கு 'திருவேங்கடமுடையான்' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். பின்னர் தூப்புல் திருவேங்கடமுடையான் என்றும் அழைக்கப்பட்டார்.

குழந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. இவரே பின்னாளில் வேதாந்த தேசிகன் என்ற புகழுடன் ராமாநுஜ சம்பிரதாயத்தின் தூணாக விளங்கினார்.  

அனந்தசார்யார், தன் பிள்ளையான வேங்கடநாதனுக்கு, ஏழாம் வயதில் உபநயனம் செய்து வைத்தார்.  தன் தகப்பனாரிடம் வேத பாடங்களைக் கற்ற வேங்கடநாதன், பின்னர், நடாதூர் அம்மாள் கட்டளைப்படி, அப்புள்ளாரிடம் வேதாந்த கிரந்தங்களையும், மந்திரார்த்தங்களையும், சாமான்ய சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். இருபது வயதுக்குள் அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். தக்க பருவத்தில், தெய்வத்தன்மை வாய்ந்த திருமங்கை எனும் பெண்ணை விவாகம் செய்துகொண்டார்.

கருட, ஹயக்ரீவ அனுக்ரஹம்

தன் மருமகனுக்கு மேலும் மேன்மை பெருக, அப்புள்ளார் கருட மந்த்ரத்தை உபதேசம் செய்தார்.  தனக்கு, தனது பாட்டனார் வழியாக வந்த ராமாநுஜரின் பாதுகைகளையும் தேசிகனுக்குக் கொடுத்தார். அப்புள்ளார் பரமபதித்த பிறகு திருவஹீந்திபுரம் சென்று கருட நதியில் நீராடி, செங்கமல நாச்சியார் சமேத தேவநாதனை சேவித்து, ஓர் அரச மரத்தினடியில் அமர்ந்து கருட மந்திரத்தை ஜபித்து வந்தார். கருடன் பிரத்யட்சமாகி, தேசிகருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து, ஹயக்ரீவ மூர்த்தியையும் தந்தருளினார். அன்று முதல் ஹயக்ரீவரை ஆராதனை செய்து மந்த்ரத்தையும் ஜபித்து வந்தார். இதன் பலனாக அனைத்து வித்யைகளும் அவருக்குத் தொண்டு செய்யக் காத்திருந்தன.

சில காலம் அவ்வூரிலேயே தேவநாதனை மங்களாசாஸனம் செய்தபடி எழுந்தருளியிருந்து, பற்பல ஸ்தோத்ரங்களை அருளிச் செய்தார். முதலில் ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தையும், அதன் பின், கருட பஞ்சாசத், தேவநாயக பஞ்சாசத், அச்யுத சதகம், கோபால விம்சதி, ரகுவீரகத்யம் முதலியவற்றையும் அருளினார்.  செந்தமிழில், மும்மணிக்கோவை, கந்துப்பா, கழற்பா, அம்மானைபா, ஊசற்பா, ஏசற்பா, நவரத்னமாலை ஆகிய  ஸ்தோத்திரங்களை அருளிச் செய்தார். அத்துடன் பரமதபங்கம் எனும் நூலையும் அருளிச்செய்தார். 

தன் வாழ்நாளில், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை சம்ஸ்கிருதம், தமிழ், ப்ராக்ருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் அருளிச் செய்துள்ளார். காஞ்சி வரதராஜப் பெருமாள் மீது பற்பல சம்ஸ்கிருத ஸ்தோத்திரங்களையும், தமிழ் பிரபந்தங்களையும் அருளினார்.  

இமயம் முதல் குமரி வரை, திவ்ய தேச யாத்திரை செய்து, நதிகள், ஊர்கள் குறித்த விவரங்களையும் அழகான நூல்களாக இயற்றினார். திருமலையில், திருவேங்கடவனின் கருணையையே முக்கிய விஷயமாகக் கொண்டு, 'தயா சதகம்' எனும் அற்புதமான ஸ்தோத்ரத்தை இயற்றினார். இவ்விதம் ஸ்வாமி மிக்க வைராக்யத்துடன் எழுந்தருளியிருப்பது உலக ப்ரஸித்தமாயிற்று. 

தன் கல்யாணத்துக்காக உதவி கேட்டு ஸ்வாமியிடம் வந்தான் ஓர்  இளைஞன். ஸ்வாமி, பெருந்தேவித் தாயாரை ஸ்தோத்ரம் பண்ணி "ஸ்ரீஸ்துதி" எனும் ஸ்லோகம் இயற்றியவுடன், மழைபோல் தங்கக் காசுகள் பொழிந்தது. அது முழுவதையும் அவனிடமே கொடுத்து உதவினார்.  அவருடைய வைராக்கியத்தைக் கண்டு உலகமே வியந்தது. தனது 101-வது வயதில், ஸௌம்ய வருஷம், கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று பரமபதநாதன் திருவடியை அடைந்தார்.

நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம்வாழ
மாநகரின் மாறன் மறைவாழ - ஞானியர்கள்
சென்னியணிசேர் தூப்புல் வேதாந்த தேசிகனே !
இன்னுமொரு நூற்றாண்டிரும். 
   

சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்