Published:Updated:

A magnificent strike into the crowd... லவ் யூ தோனி! #HappyBirthdayMSDhoni

A magnificent strike into the crowd... லவ் யூ தோனி! #HappyBirthdayMSDhoni
A magnificent strike into the crowd... லவ் யூ தோனி! #HappyBirthdayMSDhoni

மொத்த இந்தியாவுக்கும் தேவையாக இருந்தது ஒரு பிரமாண்ட வெற்றி! 'In the air...sreeshanth takes it!' - இந்தக் கமென்ட்ரியின் முடிவில் மொத்த இந்தியாவும் குதித்தெழுந்தது! கிரிக்கெட் வரலாற்றின் முதல் டி20 சாம்பியன் இந்தியா! முக்கியக் காரணம் கேப்டன் தோனி!

ஜுலை 6 - ஆண்டுதோறும் இந்தத் தேதியில்... அதுநாள் வரை பார்த்த கிரிக்கெட் போட்டிகள் எல்லாம் கொசுவர்த்திச் சுருள் போல நினைவுக்கு வரும். கூடவே அப்போட்டிகளைப் பார்த்த இடங்களும், உடனிருந்த மனிதர்களும்! (காதலும் காதலிகளும் கூட). சிலசமயம் ஏதோவொன்றை தொலைத்துவிட்ட எண்ணம் உள்ளே துருத்தியபடி நிற்கும். திரும்பிக் கிடைக்காதே என்ற ஏக்கப் பெருமூச்சும் வெளியாகும்! நாஸ்டால்ஜியா எண்ணங்களின் பலன் அது. இவை அத்தனைக்கும் காரணம் தோனி. ஜூலை 7 அவரின் பிறந்தநாள்! அதற்கு முன்தினம் அவரைப் பற்றி குறைந்தபட்சம் சின்ன ஸ்டேட்டஸ் போடவாவது கடந்தகாலத்துக்கு நடைபயில்வோம்தானே! அப்போது உங்களையும் மண்வாசம்போல இந்த எண்ணங்கள் கிளர்ந்தெழுந்து சூழும்தானே! வெல், நீங்கள் நம் கட்சி!

என்ன எழுதுவது? தெளிவாக கேட்கவேண்டுமெனில் தோனியைப் பற்றி எழுதாமல் விடப்பட்டது என்ன? பக்கம் பக்கமாக அவரின் வளர்ச்சியைப் பற்றி எழுதித் தள்ளியாயிற்று! டேட்டாக்களும் நம்பர் கேம்களும் அவரின் ரசிகர்கள், விமர்சகர்கள் இருவரிடமும் மலைபோல கொட்டிக் கிடக்கின்றன. பாலிவுட்டில் படமெடுத்து பணமும் பண்ணியாயிற்று! அவர் வாங்கிய கோப்பைகள் பற்றி இன்று மட்டும் ஆயிரக்கணக்கில் பதிவுகள் வெளியாகத்தான் போகின்றன. இன்னும் எழுத என்னதான் இருக்கிறது? 'சரி புதுசா எதுவுமில்லல' என சேவ் செய்த 'Dhoni's Birthday' என்ற வேர்ட் டாக்குமென்ட்டை சட்டென டெலீட் செய்யவும் மனம் வராது! முன்னெழுந்த நாஸ்டாலஜியா எண்ணங்களில் மட்டுமல்ல, இந்தச் சின்ன தயக்கத்திலும்கூட தோனிதான் நிற்கிறார்.

ஒவ்வொரு பத்தாண்டுகளும் ஒருதலைமுறை என்பதுதான் இங்கே பொதுவிதி. அப்படித் தோன்றும் ஒவ்வொரு தலைமுறைக்கும் சில ஹீரோக்கள் இருப்பார்கள்.  ஆதர்ஷங்கள் அவர்கள். நாம் வளர வளர அந்த ஹீரோவும் வளர்வார் உடன் நடைபோடும் நண்பனைப் போல. 90களில் பிறந்தவர்களுக்கு ரஹ்மான், விஜய், அஜித், நா.முத்துக்குமார், செல்வராகவன் போன்றவர்கள் ஆதர்ஷங்களாக இருப்பதற்கு இந்த நடைபோடுதல்தான் முக்கியக் காரணம். அப்படி 90களில் பிறந்தவர்களும் மில்லேனியல்களும் ஆதர்ஷமாக கொண்டாடும் இமேஜ் தோனிக்கு மட்டுமே உண்டு. காரணம், நாம் வளர வளர தோனியும் வளர்ந்தார். அவர் கோப்பை மேல் கோப்பை வாங்குவதைப் பார்த்துதான் நாமும் வளர்ந்தோம்.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு இரண்டு மீட்பர்கள் இருக்கிறார்கள். திக்குத்தெரியாத ஆட்டுக்குட்டியாக இந்திய கிரிக்கெட் இருவேறு தருணங்களில் தள்ளாடியபோது அதை மீட்டெடுத்த மீட்பர்கள் கங்குலியும் தோனியும்! சூதாட்டப் புகார்கள், முன்னணி வீரர்கள் மேல் குற்றச்சாட்டுகள், கேப்டனுக்கு வாழ்நாள் தடை என மொத்த இந்தியாவும் துவண்டு நின்றது. தேசத்துக்குத் தேவையாய் இருந்தது ஒரே ஒரு பிரமாண்ட வெற்றி. கிரிக்கெட்டின் மெக்கா லார்ட்ஸ் மைதானத்தில் 2002 நாட்வெஸ்ட் பைனலில் சட்டையைக் கழற்றி கெத்தாகச் சுற்றி அறிவித்தார் அன்றைய கேப்டன் கங்குலி - 'We were thrown down but not destroyed! Here we come!'. பின்தொடர்ந்தது உலகக்கோப்பை வெற்றிநடை! 

2007 - இந்திய கிரிக்கெட்டில் மற்றுமொரு இறுக்கமான சூழல். உலகக்கோப்பையின் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது இந்தியா. கோப்பைகள் கண்ட வீரர்களின் வீடுகள் கல்லடிபட்டன. கிரேக் சேப்பலால் நிகழ்ந்த குழப்பங்களில் சீனியர் வீரர்கள் கோஷ்டிகளாக பிரிந்தார்கள். ராகுல் டிராவிட் பதில் சொல்லி சொல்லிக் களைத்துப்போனார். Chaos Everywhere! இப்போதும் மொத்த இந்தியாவுக்கும் தேவையாக இருந்தது ஒரு பிரமாண்ட வெற்றி! 'In the air...sreeshanth takes it!' - இந்தக் கமென்ட்ரியின் முடிவில் மொத்த இந்தியாவும் குதித்தெழுந்தது! கிரிக்கெட் வரலாற்றின் முதல் டி20 சாம்பியன் இந்தியா! முக்கியக் காரணம் கேப்டன் தோனி!

சிவராமகிருஷ்ணன், ஶ்ரீகாந்த் என தமிழக வீரர்கள் இந்திய அணியில் விளையாடியிருந்தாலும் அவர்கள் கொண்டாடப்படுவதற்கான வெளி குறைவாகவே இருந்தது. ஊடகங்கள் பெருகியபின் வந்த ராபின் சிங், ஹேமங் பதானி, பாலாஜி போன்றவர்களும் நிலையாக நிற்கவில்லை. அந்த வெற்றிடத்தை ஐ.பி.எல் போக்கியது. மஞ்சள் தமிழகத்தின் மதமானது. வெற்றிகளைக் குவிக்க குவிக்க தோனி தமிழகத்தின் செல்லப்பிள்ளையானார். 'தல' ஆனார். இன்று ஜார்க்கண்ட்டைவிட தோனியை அதிகம் உரிமைகொண்டாடும் மாநிலம் தமிழ்நாடுதான். சேப்பாக்கத்தின் மூடிய க்ரில் கதவுகளின் இடுக்குவழி எக்கிப் பார்த்து 'தோனீஈஈஈஈஈஈஈஈ' எனக் கத்தும் ஆறுவயது சிறுவனே அதற்கு சாட்சி!  

நம் ஆதர்ஷ நாயகர்கள் வெற்றி பெறும்போது உற்சாகம் பற்றிக்கொள்வதைப்போல தோற்று வீழும்போது சோகமும் தொற்றிக்கொள்ளும். தோனி தோல்வியடையும் ஒவ்வொரு முறையும் 'All is well... All is well' என்பது பொது மந்திரமாகிறது. அதற்கேற்றார்போல 'வந்துட்டேன்னு சொல்லு' என எழுந்து நிற்கிறார் தோனி. அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றபோதும், கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதும், சென்னை அணி தடைசெய்யப்பட்டபோதும், இந்த ஐ.பி.எல்லின் ஆரம்பத்தில் சொதப்பியபோதும் சொல்லப்பட்டவை ஒன்றுதான் - 'தோனி கதை முடிந்தது'! ஆனால், ஒவ்வொரு தடவையும் இது முடிவல்ல என புதிய தொடக்கத்துக்கு வித்திடுகிறார் இந்த கம்பேக் ஹீரோ!

இரண்டு தலைமுறைகள் கொண்டாடுவதைப் போல இரண்டு தலைமுறைகளால் அதிகம் விமர்சிக்கப்படுபவராகவும் தோனியே இருக்கிறார். மீம்ஸ், ட்ரோல் என அவரை சர்வதேச ஐகானாக முன்னிறுத்த உதவிய சமூகவலைதளங்களே அவரை விமர்சிக்கும் தளங்களாகவும் இருக்கின்றன. கழுகுக் கண் மீடியாக்கள், முன்னாள் வீரர்கள், அவர்களின் அப்பாக்கள் என வகைதோறும் வறுத்தெடுத்தாலும் சின்னப் புன்னகையோடு கடந்துவிடுகிறார் தோனி! அதுவே அவரை இன்னும் சிலபேருக்குப் பிடித்தவராக்குகிறது.

 ''You will win some, you'll lose some but the job of the finisher is to finish the job and help others, sharing the experience with others, all those things really matter because I may not be batting tomorrow.'' - இது இந்த ஐ.பி.எல்லில் தோனி உதிர்த்த வார்த்தைகள். ஆம்! திடீரென ஒருநாள் தோனியும் விடைபெற்றுக்கொள்வார். அவரின் வெற்றியைக் கொண்டாடித் தீர்த்தபோது நம் உடனிருந்தவர்கள் இப்போது கால ஓட்டத்தில் வெகுதூரம் விலகிச் சென்றிருப்பார்கள். அவர் ஆட்டத்தைப் பார்த்து நாம் குதித்து விழுந்த இடங்கள் இப்போது அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கும்.  ஆனால், அந்த அத்தனை நினைவுகளும் 'Dhoniiiiiiiiiii………. finishes off in style, it’s a magnificent strike into the crowd, and it’s an Indian captain, who has been absolutely magnificent! என்ற அந்தக் குரலும் காலத்துக்கும் உடன் நிற்கும்!

அடுத்த கட்டுரைக்கு