Published:Updated:

``ஒரு லிட்டர் குடிநீர் ₹4135!” - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 1

காவலாளி கார் டிக்கியைத் திறக்கும்போது சிண்டிக்கு பயத்தில் மூச்சு வாங்கத் தொடங்கிவிட்டது. பேச வருபவருக்குக் கண்கள் சரியாகத் தெரியாதவாறு முடிந்தமட்டும் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.

``ஒரு லிட்டர் குடிநீர் ₹4135!” - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 1
``ஒரு லிட்டர் குடிநீர் ₹4135!” - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 1

``இதில் சிறந்த விஷயம் என்ன தெரியுமா? இவையனைத்துமே இலவசம். அதுவும் எங்கள் கனடா டன் கணக்கில் அதை வைத்துள்ளது. இப்போது அதை நான் பயன்படுத்திக்கொள்ளப்போகிறேன்."

ஸ்பிரிட்ஸ் அப், ஸ்பிரைட் போன்ற பாட்டில்களைச் சுத்தமாகக் கழுவி கனடா ஏரிகளிலோடும் நன்னீரை நிரப்புகிறார், சிண்டி மெக்நெய்ல். 1 லிட்டர், 2 லிட்டர், 5 லிட்டர் என்று பாட்டில்களை நிரப்பி தனது காரின் டிக்கியில் ஸ்டெப்னி சக்கரம் வைக்கும் பகுதியில் வைத்து மேலே ரப்பர் ஷீட்டைப் போட்டு மறைத்துவிடுகிறார். கரையோர மணலைப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த நீருக்குள் வாரியிரைத்துவிடக் கிளம்பிய சிண்டியின் கார் அமெரிக்க-கனடா எல்லையிலிருந்த பாதுகாப்புச் சுவரின் வாசலில் வந்து நிற்கிறது. இதயம் படபடக்கிறது. 
``காவலாளி டிக்கியிலிருக்கும் தண்ணீர் பாட்டில்களைப் பார்த்துவிடுவானோ"

காவலாளி கார் டிக்கியைத் திறக்கும்போது சிண்டிக்கு பயத்தில் மூச்சு வாங்கத் தொடங்கிவிட்டது. பேச வருபவருக்குக் கண்கள் சரியாகத் தெரியாதவாறு முடிந்தமட்டும் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். கண்களில் தெரியும் பயத்தைப் பார்த்துவிட்டால் அவர்கள் காரைச் சல்லடைபோட்டு விடுவார்கள். ஒருவழியாக காரை அனுமதித்துவிட்டார்கள். அமெரிக்காவின் சியாட்டில் எல்லையில் கார் நிற்கும்போது இருட்டிவிட்டது. சிண்டிக்காகக் காத்துக்கொண்டிருந்த அந்த மர்ம மனிதனுக்கு யாரும் பார்க்கவில்லையென்பதை உறுதிசெய்துகொண்டு கார் டிக்கியைத் திறந்து தண்ணீரைக் காட்டுகிறார். அவன் தண்ணீர் பாட்டில்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒவ்வோர் அளவுக்குமான விலையைக் குறிப்பிட்டுக்கொண்டே இருக்கிறார் சிண்டி. விலை அந்த மனிதனுக்கு அதிகப்படியாகத் தெரிகிறது. வியாபாரத்தை ரத்துசெய்து பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு அந்த மனிதன் கிளம்புகிறான்.

அவன் அவளுக்குத் தெரியாமல் மறைத்துக்கொண்ட ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலைப் பார்த்துவிட்ட சிண்டி அவனிடமிருந்து அதைப் பிடுங்கப் போராடுகிறாள். ஆறடிக்குக் குறையாமலிருந்தவனிடம் குள்ளமான சிண்டியால் அதைப் போராடிப்பெற முடியவில்லை. கெஞ்சுகிறாள். இறுதியில் அந்த மனிதன் அனைத்து பாட்டில்களையும் 1000 டாலர்களுக்கு வாங்க ஒப்புக்கொண்டான். இப்போது சிண்டியின் கையில் 1000 டாலர்கள்.

சிண்டியிடம் வாங்கிய கனடிய நன்னீரை அந்த மனிதன் வேகாஸ், பெலாஜியோ, ஃபீனிக்ஸ், கலிபோர்னியா போன்ற பகுதிகளுக்கும் அதையும் தாண்டி மெக்ஸிகோ வரையிலுமே கொண்டுபோய் விற்பான். சிண்டியிடம் லிட்டருக்கு 60 டாலர்கள் கொடுத்து வாங்கிய நீரை மேலும் அதிக விலைக்கு அங்கே நீர்த் தட்டுப்பாட்டில் வாடும் மக்களுக்குக் கொடுப்பான். அமெரிக்காவில் ஒரு லிட்டர் தண்ணீர் 1.75 டாலர்கள். ஆனால், நீருக்கான தடயமே இல்லாமல் போகும் சூழலில் வாழும் மேற்கு அமெரிக்க மக்களுக்கு அவை கிடைத்திருந்தால் இப்படியாக அநியாய விலைக்குக் கடத்தல் தண்ணீரை அவர்கள் வாங்கவேண்டிய சூழல் வந்திருக்காது. தண்ணீர்ப் பஞ்சத்தால் கஷ்டப்படும் மக்களும், தண்ணீருக்கான விநியோகம் சரியான முறையில் இல்லாத பகுதியில் வாழும் மக்களும் இப்படியாகத் தங்கள் வருவாயில் பெரும்பகுதியைத் தண்ணீர் கடத்தல் கும்பல்களுக்கே செலவழிக்கிறார்கள்.

இது அமெரிக்காவின் சி.பி.சி என்ற தொலைக்காட்சி நிறுவனம் தண்ணீர்க் கடத்தல் குறித்து ஒளிபரப்பிய ஒரு மாதிரி ஆவணப்படம். சிண்டியைப் போல் அனைவருமே தனித்தனியாகச் செய்வதில்லை. அவள் வெறும் சில்லறை வியாபாரிதான். அதற்கெனத் தனிக்குழுக்கள் இருக்கின்றன. அவர்களின் பெயர் தண்ணீர் மாஃபியாக்கள்.

தண்ணீர் மாஃபியா! நீரை அரசாங்க அனுமதியின்றியும், அரசின் சட்டத் திட்டங்களுக்கு உட்படாமலும் எடுத்துப் பயன்படுத்துவதைத் தண்ணீர்த் திருட்டு என்று கூறுகிறார்கள். அதைச் செய்துவரும் குழுக்களுக்கு வைக்கப்பட்டப் பெயர்தான் தண்ணீர் மாஃபியாக்கள். நீர் என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே! அதை எடுத்துப் பயன்படுத்துவதைத் திருட்டென்றும், அதைச் செய்பவர்களைத் திருடர்களென்றும் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? நீர் அனைவருக்கும் பொதுவானது. அதற்கெனத் தனிச் சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் ஓர் அரசாங்கத்தால் எப்படி விதிக்கமுடியும்? இந்தக் கேள்விகளைக் கடக்காமல் தண்ணீர் மாஃபியாக்கள் யார்? என்ன செய்கிறார்கள்? போன்ற கேள்விகள் விடையற்ற வினாக்களே.

நீர் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். எனவே, அது அனைவருக்கும் கிடைக்கவேண்டும். இருப்பினும் அதை யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருவதற்குமுன் உலகில் தண்ணீருக்கான தட்டுப்பாடு பற்றிச் சிறிது அலசுவோம். 2018-ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வறிக்கைப் படி உலகின் மொத்த மக்கள் தொகையில் 200 கோடி பேர் சரியான முறையில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அதாவது, இந்த உலகில் வாழும் 760 கோடி பேரில் மூன்றிலொரு பங்கு மக்களுக்குச் சுகாதாரமான குடிநீர் சரியான முறையில் கிடைப்பதில்லை. இருக்கின்ற தேவைக்கும் மிகக் குறைவாகவே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. புவியின் மேற்பரப்பிலிருந்த நீர் எந்த அளவுக்குக் குறைந்துள்ளது என்பதற்குக் கிணறுகளின் எண்ணிக்கையைவிடச் சிறந்த ஆதாரம் எதுவுமிருக்கமுடியாது.

தனிநபரின் குறைந்தபட்ச தண்ணீர்ப் பயன்பாடு = 50லிட்டர்/நாள். இதைவிடப் பல மடங்கு அதிகமாகப்பயன்படுத்தும் நாடுகளும் இருக்கின்றன. 

இந்தக் குறைந்தபட்ச தண்ணீர்கூடக் கிடைக்காத நாடுகளும் இருக்கின்றன. நாட்டின் மக்கள்தொகைக்குத் தேவையான நீர் சீனாவில் இல்லை. மத்தியக் கிழக்கிலுள்ள 13 நாடுகளில் 8 நாடுகள் தற்போது அளவுக்கதிகமான தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் தண்ணீர் இருப்பு தற்போதிருப்பதே பற்றாக்குறையாகத்தான் உள்ளது. அதுவும் 2050-ல் 50%-ஆகக் குறைந்துவிடும் என்று கூறுகிறது நமது நிதி ஆயோக் ஆய்வறிக்கை. ஆப்பிரிக்கக் கண்டத்தில் 64 சதவிகிதம் பேருக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. 72% ஆப்பிரிக்கப் பெண்கள் தண்ணீரைத் தேடுவதிலும் கொண்டுவருவதிலுமே தங்கள் வாழ்க்கையில் பாதிக்கும் அதிகமான காலத்தைச் செலவழிப்பதாகக் கூறுகிறது ஐ.நா.வின் மற்றுமோர் ஆய்வறிக்கை. தண்ணீருக்கான சவுதி அரேபியா என்றழைக்கப்படுவது பிரேசில். அதிகமான நீர் இருப்பைத் தன்னகத்தே கொண்டுள்ள அதுவும் கூட கடந்த ஆண்டில் பஞ்சத்தையும், நீர் பற்றாக்குறையையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருவரின் முழுமையான குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. மனித மேம்பாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இன்றியமையாத தேவையாக விளங்குகிறது நீர். ஆகவே, குறைந்துகொண்டிருக்கும் நீர்வளம் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும், எதிர்காலத் தேவையையும் கருதிப் பயன்படுத்தப்பட வேண்டும். அதற்குச் சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. விநியோகத்தை ஒழுங்குமுறைப் படுத்துவதன் மூலமும், பயன்பாடுகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதுமே தண்ணீர் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதற்குச் சரியான தீர்வாக அமையும்.


பற்றாக்குறை அதிகமாக இருக்கும் பகுதிகளில் மக்கள் அவதிப்படுகிறார்கள். அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்து தேவைகளைப் பூர்த்திசெய்யத் தவறுகிறது. அப்படிச் சரியான முறையில் தண்ணீர் விநியோகம் நடைபெறாத பகுதிகளில் உள்ளே நுழைகிறது தண்ணீர் மாஃபியா. அவர்களின் அவதியை இவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சராசரி விலையைவிட எட்டு மடங்கு அதிக விலைக்கு விற்கும் இவர்கள், குடிநீர்த் தட்டுப்பாட்டை மட்டும் சாதகமாகப் பயன்படுத்துவதல்ல. அது இவர்களுக்கு அடிப்படை வியாபாரம் மட்டுமே. அரசாங்கம் விதித்த தண்ணீர் அளவைவிட அதிகமாகப் பயன்படுத்த, தொழிற்சாலைகள் இந்தத் தண்ணீர் மாஃபியாக்களை நாடுகிறார்கள். அவர்கள் கறுப்புச் சந்தையில் தண்ணீரைத் தொழிற்சாலைகளுக்கு விற்கிறார்கள். ஒரு பொருள் திருடப்படுவதாகச் சொல்லவேண்டுமென்றால் அதற்கொரு மதிப்பிருக்க வேண்டும். அனைவருக்குமான பொதுச்சொத்தாகக் கருதப்படும் தண்ணீருக்கு என்ன மதிப்பு இருக்கமுடியும்? அதை எடுப்பதைத் திருடப்படுவதாக எப்படிச் சொல்லமுடியும்? எந்தச் சூழ்நிலையில் தண்ணீர் அடிப்படை மனித உரிமையாக இருக்கிறது? எந்தச் சூழ்நிலையில் அது ஒரு வியாபாரச் சரக்காகக் கருதப்படுகிறது?

- தொடரும்