Published:Updated:

கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்

கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்

கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்

கட்டற்ற ‘கலாய்’க் களஞ்சியமான  கொக்கிபீடியாவில் இருந்து...

கொக்கிபீடியா - மு.க.ஸ்டாலின்

பெயர்: மு.க.ஸ்டாலின்

பிறப்பு: மார்ச் 1, 1953.

பொறுப்பு: செயல் தலைவர் @ தி.மு.க.

வகித்த பதவிகள்:
அடிப்படை உறுப்பினர் முதல் துணை முதல்வர் வரை.

பட்டங்கள்: தளபதி, இளைஞர்களின் இலட்சியம், இளஞ்சூரியன், இன்னும் பல.

இவரைப் பற்றி: மு.க.ஸ்டாலின் தி.மு.க-வின் செயல் தலைவராக சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த விழாவில், துரைமுருகன், ‘தம்பி வா... தலைமையேற்க வா...’ எனக் கலங்கியதைப் பார்த்து ஸ்டாலினும் உடன்பிறப்புகளும் குடம்குடமாய்க் கண்ணீர் விட்டதுதான் லேட்டஸ்ட் புல்லரிப்பு. இரண்டு திரைப்படங்களிலும், சீரியலிலும் நடித்திருப்பது வரலாற்று ஆவணம்.

சாதனைகள்: ஆளும் அரசுக்கு எதிராக அநீதிகளைச் சுட்டிக் காட்டிப் பேசுவதில் மட்டும் அல்ல; பாட்டுப் பாடி ஓட்டுக் கேட்பதிலும் அண்ணன் வல்லவர். ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...’ பாட்டைப் புகழ்பெற வைத்தது இவர்தான் என்றால் மிகையாகாது (எஸ்.எம்.சுப்பையா நாயுடு காப்பிரைட் கேட்க எழுந்து வரமாட்டார் என நம்புவோமாக!), சட்டசபைக்குப் போய்ச் சட்டை கிழிபட, கிழிந்த சட்டையோடே போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, அப்படியே ஆளுநர் வீட்டுக்குப் போய் ஒரு மனுவைக் கொடுத்துவிட்டு, வண்டியை நேராக மெரினாவுக்கு விட்டு ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பதென செயல் தலைவர் இப்போதும் பக்கா ஆக்டிவ்.

60 வயதுவரை இளைஞர் அணித் தலைவர் பதவியில் இருந்த பெருமையும் உண்டு. இப்போது எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பதற்கான இத்தனை தைரியத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் காரணம், அன்று வைகோவை கட்சியிலிருந்து வெளியேற்றியது, அடுத்து அஞ்சாநெஞ்சனைப் பஞ்சர் ஆக்கி அரசியல் போட்டியில் குறுக்கே வராமல் தடுத்ததெல்லாம் இவரது இராசதந்திரம்தான் என இன்றளவும் போற்றப்படுகிறது.

பன்னீர்செல்வத்தைப் பார்த்து லேசாகச் சிரித்ததற்கும் சசிகலா சந்தேகப் பார்வை பார்த்ததை நினைத்து, வீட்டில் விழுந்து விழுந்து சிரித்தாராம். அந்தச் சிரிப்புக்குப் பிறகு கட்சி இரண்டாக உடைந்து, சசிகலா சிறைக்குப் போய், இப்போது இடைத்தேர்தல் என இத்தனை களேபரங்களும் நடந்ததைப் பார்த்து ஆர்.கே. நகர் மக்கள் ‘தெய்வீகச் சிரிப்பய்யா உமக்கு!’ என வாயாற வாழ்த்துகிறார்களாம். ‘தப்பித் தவறியும் எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்த்துச் சிரித்திட வேண்டாம்’ என அறிக்கைவிட்டது, சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமாரை வம்பிழுத்து ‘அப்படின்னா பெட்டிக்குள்ளே ஒண்ணுமில்லை?’ என டைமிங் காமெடி செய்தது என நகைச்சுவையில் அப்பாவைப் போல பிள்ளை.

வேதனைகள்:
பல ஆண்டுகளாக ஸ்டாலின் சொல்லமுடியாத வேதனையில் இருப்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதை அவர் மறந்தாலும் இந்த நெட்டிஸன்கள் அவ்வப்போது கிளறிவிட்டுக் கண்ணீர்விட வைக்கிறார்களாம். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்ஸும் இவரைக் க்ராஸ் பண்ணும்போது அவர்கள் கமுக்கமாகச் சிரிப்பதாக மனபிராந்தி ஏற்படுகிறதாம். ‘நமக்கு நாமே’ என ஸ்கூட்டர், ஷேர் ஆட்டோ, சைக்கிள் எனச் சுற்றித் திரிந்தவரைக் கலாய்த்துத் தள்ளி ‘சிரிப்பு போலீஸ்’ ஆக்கியதை நினைத்து இன்னமும் குமுறிக் கொண்டிருக்கிறாராம்.

குடும்ப ஆட்சி என எதிர்த்தரப்புகள் குற்றம்சாட்டிக் கொண்டிருக்க, ‘நாங்க பார்க்காத பஞ்சாயத்தா? சும்மா போவியா...’ என மனைவி துர்கா, மகன் உதயநிதி என குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கட்சி மேடையேற்றி வருவதைப் பார்த்தால் பேரன், பேத்திகளையும் கட்சி உறுப்பினர்களாக்கிவிட்டுத்தான் ஓய்வார் என அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

சோதனைகள்: அ.தி.மு.க-வை எதிர்த்து ‘குற்றவாளிகளால் நடத்தப்படும் அரசு’ என மூணே மூணு வார்த்தைகள் சொன்னதற்கே, தினகரன், ‘பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து லஞ்ச லாவண்யங்களில் தங்க மெடல் வாங்கிய குடும்பம் யாருடைய குடும்பம் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்’னு போகிறபோக்கில் அடுக்குமொழியாய் அறிக்கை வெடியைக் கொளுத்தி ஸ்டாலினின் சட்டைக்குள் போட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு, `என்னைத் தொடர்புகொள்ளும் உதவி எண்ணுக்கு போன் செய்கிறேன். இப்போ பாருங்க...’ என மேடையில் இருந்தபடியே வீராப்பாக நம்பரைத் தட்ட, `ப்ளீஸ் செக் தி நம்பர் யு ஹேவ் டயல்டு’னு வாய்ஸ் கொடுத்துப் பதறவிட்டுச்சு செல்போன். யாரோ ஒரு முத்தமிழ்த் தொண்டன் ‘ஈனப்பெருஞ்சுவரே!’ என இவரை வாழ்த்தி பேனர் வைக்க, அதற்கும் ஸ்டாலினை வெச்சு செஞ்சதைப் பார்த்து, ‘நான் வேணாம் வேணாம்னு ஓரமா போனாலும் கோத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறீங்களேய்யா’ எனப் புலம்பியதாக சோர்ஸ் தெரிவிக்கிறது.

வைரல் வார்த்தைகள்: ஆக, தலைவர், கழகக் கண்மணிகள்.

மேலும் பார்க்க:

ஒரே ரத்தம் - திரைப்படம்

திருப்பூர் பனியன்கள்

நெஞ்சு கிழிஞ்சிடுச்சே... எங்க முறையிடலாம்..?

‘காத்திருந்து காத்திருந்து... காலங்கள் போனதடி...’

மேலும் படிக்க:

கோபப்படுங்கள்..!

“இளவரசே... எங்கள் உயிர்மூச்சே..!” - ஸ்டாலின் சரித்திரம்

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை! - சுயசரிதை

- விக்னேஷ் சி செல்வராஜ்

ஓவியம்:
கார்த்திகேயன் மேடி