Published:Updated:

படிப்பு மட்டுமே வாழ்க்கையை மாற்றும்! - இதோ ஓர் உதாரண மனுஷி

படிப்பு மட்டுமே வாழ்க்கையை மாற்றும்! - இதோ ஓர் உதாரண மனுஷி
பிரீமியம் ஸ்டோரி
படிப்பு மட்டுமே வாழ்க்கையை மாற்றும்! - இதோ ஓர் உதாரண மனுஷி

முகங்கள்வெ.நீலகண்டன், படங்கள்: சு.குமரேசன்

படிப்பு மட்டுமே வாழ்க்கையை மாற்றும்! - இதோ ஓர் உதாரண மனுஷி

முகங்கள்வெ.நீலகண்டன், படங்கள்: சு.குமரேசன்

Published:Updated:
படிப்பு மட்டுமே வாழ்க்கையை மாற்றும்! - இதோ ஓர் உதாரண மனுஷி
பிரீமியம் ஸ்டோரி
படிப்பு மட்டுமே வாழ்க்கையை மாற்றும்! - இதோ ஓர் உதாரண மனுஷி

“அப்பா ரயில்வேயில் வெல்டரா இருந்தார். நானும் ரயில்வேயிலேயே வேலை செய்யணும்னு அவருக்கு ஆசை. தொடக்கத்துல எனக்கும்கூட அதுதான் லட்சியமா இருந்துச்சு. சின்ன வயசுலயே ரயில்வேயில் இருந்த சாரணர் இயக்கத்துல சேர்ந்தேன். 2005-ல் சிறந்த சேவைக்காக ஜனாதிபதி விருதும் வாங்கினேன். அந்த அடிப்படையில ரயில்வேயில வேலையும் கிடைச்சுச்சு. என்ன வேலை தெரியுமா? கேன்டீன்ல பாத்திரம் கழுவுற வேலை. ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். கொஞ்ச நாள்லயே தோட்டத்தைப் பராமரிக்கிற வேலைக்கு அனுப்பினாங்க. இந்த வேலைகளை நான் குறைச்சு மதிப்பிடலை. ஆனா, ஒரு தலித் பெண் எவ்வளவுதான் திறமைசாலியா இருந்தாலும் அவ, கூட்டிப்பெருக்கவும், பாத்திரம் கழுவவும்தான் சரிப்படுவாங்கிற சாதிய மனோபாவம்... இதிலேருந்து எப்படியாவது விடுபடணும்னு நினைச்சேன். படிப்பைத் தவிர வேறெதுவும் வாழ்க்கையை மாத்தாதுங்கிற உண்மையைப் புரிஞ்சுக்கிட்டேன். அதுக்குப்பிறகு, ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கலே... அந்த உழைப்புக்குக் கிடைச்ச பரிசுதான், அடுத்த அஞ்சு வருஷத்தில ஆஸ்திரேலியாவுல ஐந்து லட்ச ரூபாய் சம்பளத்துல வேலை!”  - உணர்வுபூர்வமாகத் தொடங்குகிறார் முத்தமிழ் கலைவிழி.

சென்னை அயனாவரம் தாகூர் நகரைச் சேர்ந்தவர் முத்தமிழ் கலைவிழி. பெண்கள், குழந்தைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செயல்படும் `நீலம்’ அமைப்பின் நிறுவனர். அரசியல் தெளிவும் சமூகப் புரிதலும் மிக்க முத்தமிழின் வாழ்க்கை ஆச்சர்யங்களால் நிறைந்தது. நம்பிக்கையும் உழைப்பும் தைரியமும் ஒருவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றும் என்பதற்கு முத்தமிழின் கதையை உதாரணமாகச் சொல்லலாம். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ரயில்வேயில் கடைநிலை தொழிலாளியாகப் பணியில் சேர்ந்த முத்தமிழ், சர்வதேச நிறுவனம் ஒன்றில் மிகப்பெரிய பொறுப்பில் அமர்ந்ததோடு, ஐ.நா சபை வரை  சென்று வந்திருக்கிறார்.

படிப்பு மட்டுமே வாழ்க்கையை மாற்றும்! - இதோ ஓர் உதாரண மனுஷி

எளிய குடும்பம். அப்பா, சாமிதுரை தீவிரமான தமிழார்வலர்.

“பள்ளி தொடங்கி, சமூகத்தோட எல்லா நிலைகள்லயும் சாதி அடிப்படையில பார்வையும் புறக்கணிப்பும் இருக்கு. அதை அனுபவிச்சு வளர்ந்தவ நான். அந்தப் புறக்கணிப்புதான் எனக்கு உத்வேகத்தைக் கொடுத்துச்சு. எனக்கு ரயில்வேயில் ஒதுக்கப்பட்ட வேலை, காலங்காலமா நானும் என் தலைமுறையும் அனுபவிச்சுக்கிட்டிருக்கிற வேதனையை வெளிப்படுத்துற விதமாத்தான் இருந்துச்சு. வெளியில எல்லாரும் ரயில்வே வேலைன்னு பெருமையா நினைச்சுக் கிட்டிருப்பாங்க. ஆனா, கூடப்படிச்ச நண்பர்கள் வந்தாங்கன்னா ஓடி ஒளிஞ்சுக்குவேன்.

வேலையை விட்டுடலாம்னா, அப்போ குடும்பச்சூழல் சரியில்லை. அப்பா ரிடையர் ஆகிட்டார். அண்ணாவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. தம்பி, படிச்சுக்கிட்டிருந்தான். என்னோட வருமானம் அவசியமா இருந்துச்சு. படிச்சா மட்டும்தான் வாழ்க்கை மாறும்கிற உண்மையை நல்லாவே உணர்ந்திருந்தேன். வேலை செஞ்சுக்கிட்டே தொலைதூரக் கல்வி மூலமா பி.எஸ்ஸி சைக்காலஜி படிச்சேன். மாலைநேரக் கல்லூரியில ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிச்சேன். நண்பர் ஒருவர் மும்பையில இருக்கிற டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் ஒர்க் பத்தி சொன்னார். அந்த இன்ஸ்டிடியூட்ல சேர, தேசிய அளவுல நடக்குற நுழைவுத்தேர்வை எழுதணும். தமிழ் மீடியத்துல படிச்ச நம்மால ஆங்கிலத்தில  எழுத முடியுமான்னு எனக்குச் சந்தேகம். இருந்தாலும் முயற்சி செய்வோம்னு நினைச்சு, படிக்க ஆரம்பிச்சேன். இருபதாயிரம் பேர் எழுதின அந்தத் தேர்வுல நான் தேர்வாயிட்டேன். மும்பையில நடந்த நேர்முகத்தேர்வுலயும் தேர்வானேன். அப்பா, உறவுக்காரங்க, அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்கள்லாம், `ரயில்வே வேலைன்னா சும்மாவா? நீ சாதாரணமா வேலையை விடுறேன்னு சொல்றியே'ன்னு திட்டினாங்க. `இது என் வாழ்க்கையில கிடைச்ச பெரிய வாய்ப்பு... இதை நான் இழக்கமாட்டேன்'னு உறுதியா இருந்தேன். `தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான சமூக நீதி மற்றும் நிர்வாகம்’ என்கிற பிரிவைத் தேர்வு செஞ்சு, எம்.எஸ்.டபிள்யூ சேர்ந்தேன்.

தொடக்கத்துல கண்ணைக்கட்டி காட்டுல விட்டமாதிரிதான் இருந்துச்சு. எனக்குப் பழக்கமில்லாத இடம். எல்லாமே ஆங்கிலம்தான். நூலகத்திலேயே கிடந்தேன். நிறைய படிச்சேன். `ஜெயிச்சா பல பேருக்கு முன்மாதிரியா இருப்பேன். இங்கே தோத்துட்டு திரும்பவும் ஊருக்குப் போனா, வாழ்க்கை வீணாகிடும். இனி யாரும் இந்த மாதிரி முடிவை எடுக்க முடியாது' - இந்தச் சிந்தனை தான் என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போச்சு.

ரெண்டாவது வருஷத்துல ஸ்டூடன்ட்ஸ் எலெக்‌ஷன்... `நீ நில்லு’ன்னு நண்பர்கள் சொன்னாங்க. தைரியமா நின்னேன். என்னை எதிர்த்து இன்னொரு பெண்ணை நிறுத்தினாங்க. அங்கேயும் சாதி, பெரிய வன்மமா என் முன்னால நின்னுச்சு. இருந்தாலும், அந்தத் தேர்தல்ல நான்தான் ஜெயிச்சேன். ரயில்வே கேன்டீன்ல பாத்திரம் கழுவிக்கிட்டிருந்தவ நான். இந்தியாவோட பெரிய குடும்பத்துப் பிள்ளைகள் படிக்கிற, பலருக்கும் கனவா இருக்கிற ஒரு பெரிய கல்வி நிறுவனத்தின் மாணவர் தலைவியா தேர்வானேன். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தோட 75 வருட சரித்திரத்துல நான்தான் முதல் பெண் மாணவர் தலைவர். அங்கேயும் பிரச்னைகள் உருவாச்சு. எல்லாத்தையும் நம்பிக்கையோட எதிர்கொண்டு, நல்ல விஷயங்களைச் செஞ்சேன்.

மாணவர் பரிமாற்றத் திட்டத்துல தேர்வாகி அமெரிக்காவில் உள்ள துலேன் யுனிவர்சிட்டி ஆஃப் சோஷியல் ஒர்க் நிறுவனத்துக்குப் போய் ஆறு மாதங்கள் படிச்சேன். அப்போ,  ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மேல நிகழ்த்தப்படுகிற ஒடுக்குமுறைகள் குறித்து ஆராய்ச்சி செஞ்சேன். படிப்பை நிறைவு செய்வதற்கு முன்னால, வளாகத் தேர்வுல ஓர் ஆஸ்திரேலிய நிறுவனம் என்னைத் தேர்வு செஞ்சுச்சு. அது, நிலக்கரிச் சுரங்க நிறுவனம். சுரங்கம் அமைக்கப்பட்ட பகுதியில குடியிருந்த பூர்வகுடிகளைத் தனியா தங்க வெச்சிருந்தாங்க. அந்த மக்கள் மத்தியில வேலை செய்யணும். அவங்களுக்கு மருத்துவ உதவியும், அவங்க  பிள்ளைகளுக்குக் கல்வியும் கொடுக்கணும். மாதம் அஞ்சு லட்சம் ரூபாய் சம்பளம்.
இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, வீட்டுக்குப் போனேன். `ரயில்வே வேலையை விட்டுட்டு என்ன சாதிச்சுக் கிழிச்சே'ன்னு திட்டினாங்க. அவங்கக்கிட்ட வேலைக்கான ஆர்டரைக் காண்பிச்சேன். பட்டமளிப்பு விழாவுக்கு அப்பாவையும் அம்மாவையும் அழைச்சுக்கிட்டுப் போனேன். ஊழியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் வரை என்கிட்ட பழகின விதம், பாராட்டினதை எல்லாம் பார்த்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்பவே சந்தோஷம். அதுக்குப் பிறகுதான் அவங்களுக்கு எம்மேல இருந்த கோபம் போச்சு.

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள்கூட வேலை செஞ்சது மிகப்பெரிய அனுபவம். முதல்ல அவங்க என்னை, அவங்க வசிக்கும் இடத்துக்குள்ளேயே விடலை. நானும் உங்களை மாதிரிதான்னு அவங்களுக்குப் புரிய வெச்சேன். அவங்ககூடவே தங்கினேன். ஒரு கட்டத்துல ஒவ்வொரு பூர்வகுடி தாயும் என்னை மகள் மாதிரி நடத்த ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட அந்த அஞ்சு வருஷங்களும் ஒரு பழங்குடி வாழ்க்கைதான் வாழ்ந்தேன்.

உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கான பிரச்னைகள் ஒன்றுபோலவே  இருக்கு. கனிமங்களைச் சுரண்டுவதற்காக பூர்வகுடிகளைப் பாரம்பர்ய இருப்பிடங்கள்ல இருந்து அப்புறப்படுத்தி, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒடுக்குறாங்க. வாய்ப்புகளை மறுத்து விளிம்புக்குத் துரத்தப்பட்ட அந்த மக்களுக்கும் இந்தியாவுல வாழ்கிற தலித், பழங்குடி மக்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. விஞ்ஞானமெல்லாம் விண்ணைத்தாண்டி சாத்தியமாகிட்ட காலத்துல, பெரிய சீர்திருத்தத் தலைவர்கள் எல்லாம் பிறந்து வாழ்ந்து போன பிறகும்கூட, தலித் மக்களுக்குன்னு ஊருக்குள்ளயே ஒரு பகுதியை, தனியா ஒதுக்கி ரெண்டாம்தரமா நடத்துகிற நிலை மாறலை. தலைமுறை தலைமுறையா குடியிருந்த நிலப்பரப்புல இருந்து விரட்டப்பட்டு, தங்களோட பாரம்பர்ய வாழ்க்கை முறையையும் இழந்து, சமவெளியோடவும் இணையமுடியாம நிர்கதியா நிற்கற பழங்குடி மக்கள் இங்கேயும் இருக்காங்க. இவங்களுக்குன்னு தனியா எந்தக் குரலும் இல்லை. அரசியல்கட்சிகளுக்கும் அவங்க ஒரு பொருட்டே இல்லே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படிப்பு மட்டுமே வாழ்க்கையை மாற்றும்! - இதோ ஓர் உதாரண மனுஷி

ஆஸ்திரேலியால அஞ்சு வருஷம் நிறைவா வேலை செஞ்சுட்டு, திட்டமிட்ட மாதிரியே இங்கே வந்தேன். அப்பா அம்மாவுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருந்துச்சு. சேமிச்ச பணத்தை வெச்சு ஒரு வீடு கட்டிக் கொடுத்தேன். மும்பை டாடா இன்ஸ்டிடியூட்ல கூடப் படிச்ச பிரணவ், நபியா, எத்திராஜ், சரண்யா, கலைவாணி எல்லோரும் சேர்ந்து `மாற்றம் தேடி’ அமைப்பை ஆரம்பிச்சோம்.மக்கள் மத்தியில இருந்தே இளைஞர்கள், பெண்களைத் தேர்வு செய்து, விழிப்பு உணர்வு உருவாக்கும் அவங்களுக்குத் தேவையான விஷயங்களை அவங்களையே கேட்க  வைப்பது இதன் பணி.

எங்கள் எல்லோருக்கும் நிறைய கனவுகள்.

ஆனா, நினைச்ச மாத்திரத்துல இந்தச் சமூகத்தை மாத்திட முடியாது. முதல்ல எங்கள் இலக்கு, பெண்களும் குழந்தைகளும். குடிசைப் பகுதிகள்ல வாழ்கிற குழந்தைகளுக்குப் பாதுகாப்பே இல்லை. பெண்களுக்குச் சுகாதாரப் பிரச்னைகள். அவங்க மத்தியில வேலையை ஆரம்பிச்சோம். குடிசைப்பகுதிகள்ல பிள்ளை களுக்குச் சிறப்புப்பள்ளிகளை ஆரம்பிச்சோம்.

படிப்படியா இந்த வேலைகள் நடந்துக்கிட்டிருந்த நேரத்துலதான், இயக்குநர் ரஞ்சித் முகநூல் நண்பரானார். ரெண்டு பேரோட சிந்தனையும் ஒரே மாதிரி இருந்துச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து `நீலம்’ அமைப்பைத் தொடங்கினோம். ரஞ்சித்தோட நட்பும் அனுபவமும் எனக்கு இன்னும் பெரிய தெளிவுகளைக் கொடுத்திருக்கு. முழுக்க முழுக்கக் கல்வியை இலக்கு வெச்சு நகரத் தொடங்கியிருக்கோம். நிறைய நண்பர்கள் எங்களுடன் கைகோத்திருக்காங்க. பள்ளி இடைநிற்றலைத் தடுத்து, ஆக்கபூர்வமான, சமூகக் கல்வியையும், வாழ்க்கைத்திறன் கல்வியையும் குழந்தைகளுக்குக் கொடுக்கணும்; ஒடுக்கப்பட்ட, அடித்தட்டுப் பிள்ளைகளோட தாழ்வு மனப்பான்மையை அகற்றி அவங்களையும் சமூக நீரோட்டத்தில் இணைச்சு, நம்பிக்கை கொடுத்து, அடுத்த படிக்கு நகர்த்துற வேலையைத்தான் செஞ்சுக்கிட்டிருக்கோம்...” - புன்னகை ததும்பப் பேசுகிறார் முத்தமிழ்.

வியாசர்பாடி, அயனாவரம், கரலப்பாக்கம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நீலம் அமைப்பு, சிறப்புப் பயிற்சிப் பள்ளிகளை நடத்துகிறது. படிப்போடு, கலை, நாடகப் பயிற்சி போன்ற தனித்திறன்களையும் கற்பிக்கிறார்கள். மாணவர்களின் தனித்திறன் அறிந்து, அந்தந்தத் துறைகளில் அவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள்.  சமூக ஒடுக்குமுறைகள், பெண்கள் மீதான வன்முறைகள், பாலினச் சிக்கலோடு, சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் திருநங்கைகளின் பிரச்னைகள் என ஐந்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும் நீலம் அமைப்பு தயாரித்து வெளியிட்டுள்ளது. 

இவை எல்லாவற்றையும்விட, முத்தமிழ் செய்த இன்னொரு செயல், அவரின் இயல்புக்குச் சான்றாக இருக்கிறது. இந்த  இளம் வயதிலேயே ஆதரவற்ற ஒரு குழந்தையை எடுத்து வளர்த்து, தாயாகவும் ஆகியிருக்கிறார்.

“இந்தக் குழந்தைக்குப் பின்னால மிகப்பெரிய சோகம் இருக்கு. என்னை `அம்மா'ன்னு கூப்பிட்டா. அதுக்கு மேல என்கிட்ட எந்தக் குழப்பமும் இல்லை. இங்கே ஆதரவில்லாதவங்கன்னு யாரும் இல்லை. எல்லோருமே ஏதோ ஒரு வகையில கைகோத்துதான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். இந்தக் குழந்தைக்கு நானும், எனக்கு இந்தக் குழந்தையும் ஆதரவா இருக்கோம். திடீர்னு முடிவெடுத்து, இவளைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போனேன். அம்மாவுக்கு அதிர்ச்சி. எனக்குத் திருமணம் செய்யணுமேங்கிற கவலை அவங்களுக்கு. ஆனா, அந்தக் கவலையை இவ போக்கிட்டா. இந்தக் குழந்தையோட இயல்புல, அம்மா சீக்கிரமே ஒட்டிக்கிட்டாங்க. இப்போ இவ தாத்தா, பாட்டின்னு எல்லா உறவுகளோடவும் ஒன்றிட்டா...” என்றபடி குழந்தையின் தலையை வருடுகிறார் முத்தமிழ்.

கனிவும் தாய்மையும் தளும்புகிறது அந்த வருடலில்.