Published:Updated:

கலை மிளிரும் கல்யாண மேடைகள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கலை மிளிரும் கல்யாண மேடைகள் !
கலை மிளிரும் கல்யாண மேடைகள் !

கலை மிளிரும் கல்யாண மேடைகள் !

பிரீமியம் ஸ்டோரி

ல்யாணங்கள் களைகட்டுவது கொண்டாட்டங்களால் என்றால், கல்யாண மண்டபங்கள் களைகட்டுவது வண்ணமயமான அலங்காரங்களால்!

கலை மிளிரும் கல்யாண மேடைகள் !

ஊரைக்கூப்பிட்டு, வீட்டு வாசலில் வாழைமரம் கட்டி, பந்தக்கால் நட்டு தோரணங்களால் அலங்கரித்து, நம்மைத் தேடிவரும் விருந்தினர்களைக்  கோலாகலமாய் வரவேற்பதே திருமணங்களின் சிறப்பு. திருமணக் கோலாகலங்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாய் நீங்காமல் இருக்கும். அப்படிப்பட்ட கோலாகலத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் மிகப்பெரிய சவாலை அழகாகச் சமாளித்து விருந்தினர்களை அசரவைக்கிறார்கள் வெடிங் டெகரேட்டர்ஸ். சென்னையைச் சேர்ந்த ‘தி வெடிங் டஸ்கர்’ எனும் வெடிங் டெகரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் சுரேகா, வெடிங் டெகரேஷன்ஸ் பற்றிய தன் அனுபவங்களை பகிர்கிறார்..

கலை மிளிரும் கல்யாண மேடைகள் !

“அடிப்படையில் நான் ஒரு  ஃபைன் ஆர்ட்ஸ் ஸ்டூடண்ட். என்னோட அப்பா கார்பென்ட்டரா  இருந்தவர்.  மரக்கதவுகள், ஜன்னல்கள் செய்யறதுதான் அவரோட முக்கியமான வேலை. நேரம்போறதே தெரியாம அவர் பக்கத்துலயே உக்காந்து  அவர் செய்யும் மர வேலைப்பாடுகளைப் பார்த்துட்டே இருப்பேன். ஒரு கட்டத்துல ஒரே மாதிரியான டிசைன்களைப் பார்த்துப் பார்த்து புதுமையா ஏதாச்சும் செய்யக்கூடாதான்னு தோணுச்சு. இந்த எண்ணமும்  டிசைனிங்ல இருந்த ஆர்வமமும்தான் வெடிங் டெகரேஷன் துறைக்கு நான் வந்ததுக்கு க் காரணம்” என தன்னைப்பற்றி ஒரு மினி அறிமுகம் செய்துகொண்டார் சுரேகா.

நீலவானமும் கடலும் இணையும் இடத்தில் திருமணப்பந்தத்தில் அடியெடுத்துவைக்க விரும்பும் மணமக்கள், பூந்தோட்டத்துக்கு நடுவே வாசமுடன் வாழ்க்கையைத் தொடங்கவிரும்பும் மணமக்கள் என திறந்தவெளித் திருமணங்கள்தான் இன்றைய மணமக்களின் விருப்பமாக இருக்கின்றன.

கலை மிளிரும் கல்யாண மேடைகள் !

“க்ரியேட்டிவிட்டிக்கு தீனிபோடுற மாதிரியான ஓபன் வெடிங் கான்செப்ட் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். திருமணத்துக்கான அலங்காரங்களில் இப்போதைய ட்ரெண்டு இதுதான். திறந்தவெளியில் திருமணம் நடத்துவதற்கு கூரை இல்லாத ஓபன் ஆடிட்டோரியம் மாதிரியான இடங்கள், கடற்கரை, தோட்டங்கள், பீச் ரிசார்ட், இதுமாதிரி பல ஆப்ஷன்ஸ் இருக்கு. இதுல ஏதாவது ஒன்றைத்  தேர்ந்தெடுக்கறதோட எங்க வேலை முடிஞ்சுடாது. சரியான வெடிங் டெகரேட்டர்ஸை த் தேர்வு செய்து,  திருமணம் நடக்க இருக்கும் இடத்துக்கு அவங்களையும்  கூட்டிட்டுப்போய் காட்டணும். அப்பதான் அந்த இடத்துக்கு என்ன மாதிரியான கான்செப்ட்ல அலங்காரம் பண்ணலாம்னு  திட்டமிட வசதியா இருக்கும்.

கலை மிளிரும் கல்யாண மேடைகள் !

உதாரணத்துக்கு கடற்கரையில கல்யாணம்னா அதுக்கு பெரும்பாலும் ட்ரான்ஸ்பரன்ட் துணிகள், நெட்டட் துணி வகைகளை வெச்சு அலங்காரம் பண்ணுவோம். பேபி பிங்க், லைட் ப்ளூ, வெள்ளை மாதிரியான மென்மையான நிறங்களில் துணிகள் இருந்தால், கடற்கரையில வீசும் தென்றல் காற்றில் அந்தத் துணிகள் அழகா அசைந்தாடும். பார்ப்பதற்கு அழகா இருக்கிறதோட மட்டும் இல்லாம, அந்தத் திருமண நிகழ்வை விருந்தினர்களை உணர்வு பூர்வமாக அனுபவிக்க வைக்கும்.

கலை மிளிரும் கல்யாண மேடைகள் !

இதுவே தோட்டத்துல திருமணம்னா நிறைய பூ அலங்காரங்கள் செய்வோம். அங்க இருக்கும் பூ வகைகளைவிட இறக்குமதி செய்யப்படும் பூ வகைகளைத்தான் அதிகமாகப் பயன்படுத்துவோம்.  இந்த வகையான பூக்கள் அதிக நேரம் வாடாமல் இருக்கிறதோட அதன் புதுமையான அழகு, விருந்தினர்கள் மனதை சீக்கிரமே கொள்ளையடிக்கும். இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு பார்த்துப் பார்த்து செய்ய ஆரம்பிச்சா தான் திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் பிரமிக்கிற  அளவுக்கு அலங்காரம் நேர்த்தியா இருக்கும்.’’ என்னும் சுரேகா,

கலை மிளிரும் கல்யாண மேடைகள் !

‘‘பொதுவா  மண்டபங்களில் நடக்கும் திருமணங்கள் பாரம்பர்ய முறைப்படி நடக்கும். அதனால் பாரம்பர்யம் குலையாத  அளவுக்கு பூ வேலைப்பாடுகளோட  அலங்காரம் செய்வதில் கவனம் செலுத்துவோம். மண்டபங்களில் தீம் வெடிங் கான்செப்ட் செய்வது இப்ப டிரெண்டாக   இருக்கு. உதாரணத்துக்கு திருமண வீட்டார் பால் சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறார் என்றால் பால் கேன் வடிவம் இடம்பெறும்படி  கான்செப்ட் அலங்காரம் செய்து விருந்தினர் மனதில் இடம் பிடிக்கணும். அதாவது பிங்க் தீம், ரெட் தீம்னு நிறங்கள்ல ஆரம்பிச்சு மயில் தீம், கிளி தீம், மிக்கி அண்ட் மினி தீம்னு இந்த ‘கான்செப்ட் வெடிங்’ கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பெரிய ஏரியா. 

திருமணங்களில் மணமக்கள் வரவேற்பு பெயர்ப்பலகையில ஆரம்பிச்சு நுழைவாயில், மணமேடைனு மட்டும் அலங்காரம் செய்யும் காலம் இப்ப மலையேறிப் போச்சு. மண்டபத்துல இருக்குற எல்லா இடத்தையும் ஒண்ணுவிடாம அலங்காரம் பண்ணி அசத்திடணும்னு அட்வான்ஸ் கொடுக்கும்போதே தெளிவா சொல்லிடறாங்க. அதுக்கேத்தமாதிரி டெகரேட்டர்ஸும், தேவைக்கு ஏத்த மாதிரி் திருமண வீட்டினரின் புகைப்படங்கள், மணமக்களின் சின்ன வயசு புகைப்படங்கள்,  நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் என ரசனைக்கு ஏற்ப காட்சிப்படுத்துறதோட திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் மணமக்களுக்கு வாழ்த்துகளை எழுதிவைக்கவும்,   அலங்கரிக்கப்பட்ட புத்தகத்தை பார்வைக்கு வைப்பாங்க.  கலை நிகழ்ச்சி நடக்கும் இடம், உணவருந்தும் இடம், விருந்தினர் அமரும்   டேபிள்கள்னு எல்லாத்துக்கும்  தனித்தனியாக அலங்காரம் செஞ்சு முடிப்பாங்க” எனும் சுரேகா தொடர்ந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

கலை மிளிரும் கல்யாண மேடைகள் !

“திருமண மண்டபங்கள், ஹோட்டல் ஹால் போன்ற இடங்களுக்கு திறந்தவெளி திருமணம்னா  அதிகபட்சம் ரெண்டு அல்லது மூணு நாள்கள்னு கான்செப்ட் மற்றும் அலங்காரத்துக்கு ஏத்தமாதிரி நேரம் பிடிக்கும். இதுக்கு குறைந்தபட்சம் 40 பேர் முதல், 100 பேர் வரை வேலை ஆட்கள் தேவைப்படுவாங்க. கிராண்டாக அலங்காரம் செய்வதற்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் 25 லட்சம்  ரூபாய் வரை செலவாகும். மொத்தத்தில் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது உண்மையோ இல்லையோ... சொர்க்கத்தில்தான் திருமணமே நடக்குதோன்னு பிரமிப்பு ஏற்படுத்துறமாதிரி வடிவமைப்பதுதான் எங்களோட வேலை.’’ சுரேகாவின் அசத்தல் திறமைக்கு நிச்சயமாக ‘ஓ’ போடலாம்.

கட்டுரை, படங்கள்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு