Published:Updated:

"பெருங்கடல் வேட்டத்து..." - கடல் கொண்ட மரண ஓலங்களின் சாட்சியம்!

ஆம்...கடல்தான் அவர்களுடைய தோட்டம். அந்தக் கடல்தான் நிர்மலாவின் 23 வயது மகனை எங்கோ இன்னும் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது.

"பெருங்கடல் வேட்டத்து..." - கடல் கொண்ட மரண ஓலங்களின் சாட்சியம்!
"பெருங்கடல் வேட்டத்து..." - கடல் கொண்ட மரண ஓலங்களின் சாட்சியம்!

``என் பெயர் நிர்மலா..." என்று சொல்லும் அவரிடமிருந்து மெள்ள நகரும் கேமரா, அந்த வீட்டின் குறுகிய கொல்லைப்புற வாசல் நோக்கிச் செல்கிறது. `கொல்லைப்புறம் என்றாலே அங்கே செடி, கொடி, மரங்களும்தாமே இருக்கும்' என்கிற நம் எண்ணம் பொய்க்கும் வகையில் அங்கே ஆர்ப்பரித்துக்கொண்டு எழுகின்றன கடல் அலைகள். ஆம்...கடல்தான் அவர்களுடைய தோட்டம். அந்தக் கடல்தான் நிர்மலாவின் 23 வயது மகனை எங்கோ இன்னும் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. கடந்த 2017- ம் ஆண்டு இறுதியில் இலங்கைக்கு அருகே உருவான `ஒகி' புயலின் தாக்கத்தையும், அந்த இயற்கைச் சீற்றத்திலிருந்து மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய மத்திய - மாநில அரசுகளின் அலட்சியப்போக்கையும், அதன் விளைவாக நேர்ந்த உயிர்ப்பலிகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறது பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் அருள் எழிலனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `பெருங்கடல் வேட்டத்து...’.

நிர்மலா, ராஜீ, மேரி மற்றும் இந்த ஆவணப்படத்தில் வரும் அத்தனை பெண்களுமே கடல் உள்வாங்கிக் கொண்ட தங்கள் வீட்டு ஆண்களின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்கள்தாம். பொறியியல் படிப்பு படித்த தன் மகனுக்குத் திருமணம் செய்துவைக்கும் ஆசையில் இருந்தவர் நிர்மலா. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அவரின் மகன் திரும்பி வந்திருந்தால் தன்னுடைய தாய், மனைவி என இப்போது அவன் மகிழ்வுடன் வாழ்ந்திருப்பான். தன் கணவர், அவருடைய பெரியப்பா மகன் எனக் குடும்பத்தில் இருவரை ஒகி புயலின் கோரத்தாண்டவத்தில் இழந்துவிட்டிருக்கிறார் ராஜீ. அவருடைய கணவர் கடலுக்குச் சென்றபோது ராஜீ கருவுற்றிருந்தார். 

``நிச்சயம் ஆண் குழந்தைதான் பிறக்கும்னு எங்க மாமா சொன்னாரு. ஆனா, நான் பெண் குழந்தைதான் பிறக்கும்னு சொன்னேன். ஏன்னு கேட்டாரு. பெண் குழந்தை பிறந்தா குடிக்கிறதை நிறுத்திடுவாருல்ல; அதனால்தான் அப்படிச் சொன்னேன். வயித்துல பிள்ளை

இருந்தப்போதான் கடலுக்குப் போனாரு. புயல் வந்ததுல, அவங்களோட பெரியப்பா மகன் அந்தமான் தீவுக்கு அருகில இறந்து கரை ஒதுங்கினதாச் சொன்னாங்க. அப்பவே இவரு கிடைப்பாருங்கற நம்பிக்கை போயிடுச்சு" என்று சொல்லும் ராஜீக்கு இப்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. கணவரின் காதலையும் அவருடனான வாழ்வையும் இழந்த வலியை தன்னுடைய குழந்தை மூலம் மீட்டெடுக்க அவர் போராடுவது, அந்தக் குழந்தையை ஏந்திக்கொண்டிருக்கும்போது அவர் முகத்தில் தோன்றும் சிரிப்பிலிருந்து தெரிகிறது. ``பெண் குழந்தைதான் நம்மைக் காப்பாற்றும். ஆண் குழந்தைகள் வேண்டாம். ஆண்கள் எங்காவது விட்டுச் சென்றுவிடுவார்கள்" என்கிறார் ராஜீ. பிரிவின் வலி அவரைச் சமத்துவம் பேச வைக்கிறது. ஒகி புயலுக்குத் தங்கள் வீட்டு ஆண்களைப் பறிகொடுத்துவிட்ட காரணத்தால் காதல், கடன், கடமை என இப்படி ஏதோ ஒன்றில் அடுத்த அடியை எப்படி வைப்பது எனப் புரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த மீனவப் பெண்கள்.

`புயல் அடித்து ஓய்ந்து சில நாள்கள் கழித்துதான், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போன்றோர் எங்களை வந்து பார்த்தனர். இத்தனைக்கும் நாகர்கோவிலில்தான், அவர்கள் முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் ஏன் உடனே வந்து எங்களைப் பார்க்கவில்லை எனத் தெரியவில்லை?’

`புயல் சீற்றம் தணிந்த பிறகு கடந்த ஆண்டு டிசம்பம் 4- ம் தேதி அன்றே, கடலின் ஐம்பது நாட்டிக்கல் மைலுக்கு அந்தப் பக்கம் கப்பல் மூலம் தேடியிருந்தால் இன்றைய தேதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், கப்பல் கேப்டன்கள் மறுத்துவிட்டனர்’.

`எங்கள் பிள்ளைகள் அனைவரும் காப்பாற்றப்பட்டு விடுவார்கள்' என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் நம்பிக்கை கொடுத்தார்களே. எங்கே எங்கள் பிள்ளைகள்?’

`நாங்கள் தமிழக மக்கள் இல்லையா? எங்கள்மீது ஏன் இத்தனை வெறுப்பு?’

`இந்தியப் பொருளாதாரத்துக்காக ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய்வரை வருவாய் ஈட்டித் தரும் மீனவர்களாகிய எங்களுக்கே இந்தப் பாதுகாப்புதான் என்றால், மற்ற மக்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது’.

`கடலுக்குப் போவது பஸ் ஏறுவது மாதிரி கிடையாது. சாலையில் விபத்து நடந்தால் இந்தத் தெருவில் குறிப்பிட்ட இடத்தில்தான் நடந்தது என்று யாரும் சொல்லிவிடலாம். ஆனால், கடலில் விபத்துகள் நடக்கும்போது மீனவர்களைத் தவிர வேறு யாராலும் விபத்துப் பகுதியை அடையாளம் கண்டுவிட முடியுமா?'

`இழந்த அத்தனை உயிர்களுக்கும் அரசு இழப்பீடாக அறிவித்த 20 லட்ச ரூபாய்தான் விலை மதிப்பா?'

அழுகை ஓலங்களுக்கு நடுவே அந்த மக்களின் இப்படியான கேள்விகள், படம் முழுக்கத் தொடர்ந்து அரசை நோக்கி எழுகின்றன. இனிமேல் அரசை நம்பி எவ்வித உபயோகமும் இல்லை என்று தாங்களாகவே படகுகளை எடுத்துக்கொண்டு உடலைத் தேடிச் செல்லும் மக்கள், கடலில் தாங்கள் கண்ட காட்சிகளை விவரிக்கும்போது குரலில் ஓர் அடர் சோகம் தெரிவதை பார்வையாளர்களாலும் உணர முடிந்தது. 

ஆவணப்படத் திரையிடலில் பேசிய ஊடகவியலாளர் குணசேகரன் , ``ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான சமயத்தில்தான், ஒகி புயலின் தாக்கமும் ஏற்பட்டது. அப்போது ஒகி தொடர்பான செய்திகளை முன்னிலைப்படுத்திப் பேசுவதில் செய்தி ஊடகங்களிடையே எவ்வளவு இடைவெளி இருந்தது என்பது எனக்கு நன்கு தெரியும். தேசிய ஊடகங்கள் இந்தப் புயலை `பேரிடர் இல்லை' என்று அசட்டை செய்தன. புயல் பாதிப்புகளை களத்திலிருந்து செய்தியாகத் தர, அங்கு சென்று நாங்கள் தங்கியிருந்த அத்தனை நாள்களும் மீனவர்களின் மனிதத் தன்மையை என்னால் உணரமுடிந்தது. தமிழக அரசு அறிவித்த 20 லட்ச ரூபாய் இழப்பீடுகூட, கேரள அரசு 20 லட்ச ரூபாய் இழப்பீடு என்று அறிவித்ததால் ஏற்பட்ட நிர்பந்தத்தினால்தான். அதுவா நிவாரணமாக இருக்கமுடியும்?. இலங்கை போன்ற சிறிய நாடுகள் தங்களின் மீனவர்களுக்காக சேட்டிலைட் வசதி செய்துகொடுத்திருக்கிறது. இந்த அரசு, மனிதர்களைத்தான் மீட்டுத் தரவில்லை. இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டியவற்றையும் இன்றுவரை செயல்படுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றார்.

ஊடகவியலாளர் ப.திருமாவேலன் பேசுகையில், ``மத்திய - மாநில அரசுகளும், அரசு நிர்வாகமும் தோற்றுப்போனதாலேயே இந்த 194 பேரும் கொல்லப்பட்டனர். கடலுக்குள் சென்ற மீனவனைப் பிணமாகக்கூட கண்டுபிடித்துக் கொண்டுவர முடியவில்லை. `நாங்கள் மனிதர்கள் இல்லையா, இந்தியர் இல்லையா, தமிழர்கள் இல்லையா?' என்று மீனவ மக்கள் கேட்கும் கேள்விக்கு ஆட்சியாளர்கள் பதில்தர வேண்டும்" என்றார்.

பெருங்கடல் வேட்டத்து ட்ரைலர்

மீன் வேட்டைக்குச் சென்றவர்களை பெருங்கடலா வேட்டையாடியது? பொறுப்பற்ற அரசா வேட்டையாடியது?. 194 மரணங்களுக்கு(?) இன்றும் கிடைக்கப்பெறாத நீதிக்காக மக்களிடையே விவாதத்தை இன்னும் வலுவாக்கட்டும் இந்தப் ``பெருங்கடல் வேட்டத்து...”