Published:Updated:

``ஆறு நாள் ஒரே துணி... காய்கறியே சாப்பாடு!'' - கைலாஷ் யாத்திரை பக்தர்களின் அனுபவம்

`ஒரு சுடிதார் மட்டும்தான் போட்டிருந்தேன். நாள் ஆக ஆக குளிரைச் சமாளிக்க முடியலை. சாப்பிடுறதுக்குக் காய்கறிகள் கிடைச்சாக்கூட போதும்னு தோணுச்சு. ஆரம்பத்துல இருந்த விரத முறைதான் அங்கு உணவில்லாமல் இருந்தப்போ அதைச் சமாளிக்குறதுக்கான தைரியத்தைக் கொடுத்துச்சு"

``ஆறு நாள் ஒரே துணி...  காய்கறியே சாப்பாடு!'' - கைலாஷ் யாத்திரை பக்தர்களின் அனுபவம்
``ஆறு நாள் ஒரே துணி... காய்கறியே சாப்பாடு!'' - கைலாஷ் யாத்திரை பக்தர்களின் அனுபவம்

கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்ற பக்தர்கள் சென்ற வாரம் முழுக்க மழையிலும் குளிரிலும் சிக்கி உயிர் பயத்தில் தவித்தது அனைவரும் அறிந்ததே, இதில், சென்னையிலிருந்து சென்று திரும்பிய பக்தர்கள், தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். 

அனிதா, தீனதயாளன் தம்பதியர் 
வில்லிவாக்கம்

``ஜூன் 20-ம் தேதி சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரைக்குக் கிளம்பினோம். 7 நாள் நல்ல தரிசனம் கிடைச்சது. 28-ம் தேதி சிமிகோட்டிலிருந்து நேபாளுக்கு ஃபிளைட்டில் கிளம்பணும். அங்கிருந்து இந்தியாவுக்கு வர்றதா திட்டம். நாங்க புக் பண்ணின ஃபிளைட்,  துரதிர்ஷ்டவசமாக பைலட்கள் ஸ்ட்ரைக்கால் எடுக்கலை. அடுத்த ஃபிளைட்டில் கிளம்பறதுக்காக 19 பேரும் சிமிகோட்டில் தங்கினோம். எங்க கெட்ட நேரம்,  மழையால் கிளைமேட் மோசமாகிடுச்சு. வயசானவங்களால் குளிர் தாங்கமுடியலை. முக்கியமான பிரச்னை, யார்கிட்டயும் மாற்றுத் துணி இல்லை. லக்கேஜ் எல்லாம் வேற இடத்துல மாட்டிக்கிச்சு. 9 நாள் ஒரே டிரெஸ்ல, இன்னர்வேர் மாத்தவும் முடியாமல் தவிச்சோம். சிமிகோட்டின் 10 ஹோட்டல்களில் ஒரு ஹோட்டல்லதான் சோலார் வாட்டர் ஹீட்டர் இருக்கு. சூரிய ஒளி இல்லாததால் வொர்க் பண்ணலை. ஐஸ்கட்டி மாதிரியான தண்ணியில் பல் தேய்ச்சு, முகம் கழுவிட்டு உட்கார்ந்திருப்போம். ரொட்டி, ஆலு, டால்னு ஒரே மாதிரி உணவைச் சாப்பிட முடியலை. அதனால், உடம்பும் ரொம்ப வீக்காக ஆயிடுச்சு. குளிரால் மூச்சுத்திணறல் ஆரம்பிச்சுடுச்சு. எங்க கண் முன்னாடியே ஒருத்தர் இறந்துட்டார். ரொம்ப பயந்துட்டோம். உடனே சொந்தக்காரங்களுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லி, மீடியாவுக்குச் சொல்லச் சொன்னேன். பிழைச்சு வந்து உங்ககிட்ட பேசிட்டிருக்கிறது கடவுள் கருணைதான்!'' என்று கரங்களைக் குவிக்கிறார்கள்.

விஜயலெட்சுமி,
ஜார்ஜ் டவுண்

``அனைத்துமாகிய அந்த ஆதிப் பரம்பொருளின் இருப்பிடத்துக்குச் சென்றார் காரைக்கால் அம்மையார். பகவான் உமையாளோடு வாசம் செய்யும் புண்ணிய மலை என்பதால், தன் பாதங்கள் படாதவாறு தலைகீழாகவே நடந்துசென்றார் எனப் பாட்டி சொல்லுவா. அப்படிப்பட்ட கைலாயத்துக்குச் செல்ல முடிவுசெய்ததும், என் வயசையும் மறந்து, சிவனே கதி என விரதம் இருந்தேன். யாத்திரைக்குக் கிளம்புறதுக்கு முன்னாடியே அங்குள்ள சாதக பாதகச் சூழல்களை எங்களை அழைச்சுட்டுப் போகும் பாலசுப்பிரமணியம் சார் தெளிவாச் சொன்னார். வருஷா வருஷம் நாமும் செய்திகளில் பார்க்கத்தானே செய்யறோம். நல்லதே நடக்கும்னு, 93 வயசாகும் என் அம்மாவைச் சகோதரியிடம் விட்டுட்டுக் கிளம்பினேன். பகவானின் நான்கு முகத்தையும் தெளிவா தரிசிக்கும் பாக்கியமும் பரிபூரணமா கிடைச்சது. நல்லபடியா திரும்பிடுவோம் என்கிற நம்பிக்கையும் மனசு முழுக்க இருந்துச்சு. ஆனாலும் பாருங்க, பகவான் கொஞ்சம் சோதிச்சுட்டார். எனக்கு 69 வயசு. வீட்டுல என் அம்மாவை விட்டுட்டுப் போனேன். இந்தச் சூழல்ல கூடுதலா ஆறு நாள்கள் அங்கே இருக்கணும்னு வந்தப்போ தவிச்சுப் போனேன். சிமிகோட்டில் மிகப்பெரிய சவால், சாப்பாடுதான். ஆறு நாளும் ஒரே இடத்துல இருந்தோம். அங்க வாழ்றவங்களுக்கே நேபாளிலிருந்துதான் ஹெலிகாப்டர் மூலம் உணவு கொண்டுவந்து கொடுக்கிறாங்க. இதுல யாத்திரை வந்தவங்களையும் கொண்டுவந்து விட்டுட்டாங்க. ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க ஒரே இடத்தில். உடனே திரும்பிடுவோம்னு நினைச்சு ஒரு சுடிதார் மட்டுமே போட்டிருந்தேன். நாள் ஆக ஆக குளிர் சமாளிக்க முடியலை. சாப்பிட பச்சைக் காய்கறி கிடைச்சாலே போதும்னு தோணுச்சு. ஆரம்பத்தில் இருந்த விரத முறைகளால் சமாளிக்கும் தைரியம் கிடைச்சது. அந்த பகவானின் இடத்துல இருக்கோம். இனி என்ன ஆனாலும் பரவாயில்லைனு நினைச்சேன். ஆறாவது நாள் ஒரே ஒரு பைலட், துணிஞ்சு சிறிய ரக விமானத்தை எடுத்துட்டு வந்தார். 18 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி. அதில் கிளம்பினோம். உண்மையாச் சொல்லணும்னா, அன்னைக்கு இருந்த கிளைமேட்டுக்கு நிச்சயமா விமானம் எங்கேயாவது மோதிடும்னு நினைச்சேன். பைலட் திறமையா ஓட்டி, எங்களைப் பத்திரமா கொண்டுவந்து சேர்த்துட்டார். அந்த பைலட் என் கண்ணுக்கு சிவபெருமானாகவே தெரிஞ்சார்” என்றபடியே பரவசமாகக் கண்களை மூடி வணங்குகிறார் விஜயலெட்சுமி.

விஜயலெட்சுமி பாலசுப்பிரமணியன்,
மேற்கு மாம்பலம்

``எங்க வீட்டுக்காரங்க 8 வருஷமா கைலாஷ் யாத்திரைக்குப் பக்தர்களை அழைச்சுட்டுப் போறார். இதுவரை இப்படி ஆனதில்லை. ஒருமுறை கிளைமேட் சேஞ்ச் ஆனதால் ரெண்டு நாள் தாமதமா வந்திருக்கார் அவ்வளவுதான். ஆறு நாள்கள் தாமதமானது இதுவே முதல்முறை. யாத்திரைக்குக் கிளம்புறதுக்கு முன்னாடியே ரெண்டு முறை மீட்டிங் போட்டு பயணம் கொஞ்சம் சிக்கலானது, எல்லாத்துக்கும் தயாரா வரணும்னு சொல்லிடுவார். தீவிரமான ஆன்மிகத் தேடலும், இறைவன் மீதுள்ள பற்றும்தான் கைலாயம் சென்று வருவதற்கான நம்பிக்கையைக் கொடுக்குது. 20 வயசிலிருந்து 70 வயசு வரையில் யார் வேணும்னாலும் இந்த யாத்திரையில் கலந்துக்கலாம். நானும் ரெண்டு முறை போயிட்டு வந்திருக்கேன். இத்தனை நாள்களுக்குள்ள திரும்பிடுவாங்கன்னு ஒரு கணக்கு இருக்கும். அந்தக் கணக்கு தாண்டும்போது, இயல்பாவே ஒரு பதைபதைப்பு வந்துடும். பக்தர்களின் உறவினர்கள் நியூஸ் பாத்துட்டுப் பதறியடிச்சு எனக்கு போன் பண்ணுவாங்க. நான் தைரியமா இருந்தாதான் அவங்களை சமாதானப்படுத்த முடியும். மத்திய அரசும் மாநில அரசும் தாமதிக்காமல் உடனடியா அவங்களை மீட்கும் நடவடிக்கையை எடுத்தாங்க. யாத்திரைக்குப் போனவங்களைவிட இங்கே இருக்கும் நமக்குத்தான் நம்பிக்கை அதிகமாத் தேவை. யாத்திரையில் இருக்கிறவங்களை கான்டாக்ட் பண்ற வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நம்பிக்கையைக் கொடுக்கணும். அதை நான் செய்தேன். யாத்திரைக்குப் போனவங்க திரும்பி வந்தது அவங்களின் பரிபூரண நம்பிக்கை மற்றும் தமிழக மக்களின் பிரார்த்தனையால்தான்” என முகமலர்ச்சியோடு பேசுகிறார், பக்தர்களை யாத்திரைக்கு அழைத்துச்சென்ற பாலசுப்பிரமணின் மனைவி, விஜயலெட்சுமி.