Published:Updated:

``வாழ்க்கைல காம்ப்ரமைஸும் கூடாது, கம்பேரிஸனும் கூடாது!’’ - இயக்குநர் கரு.பழனியப்பன் #LetsRelieveStress

``வாழ்க்கைல காம்ப்ரமைஸும் கூடாது, கம்பேரிஸனும் கூடாது!’’ - இயக்குநர் கரு.பழனியப்பன் #LetsRelieveStress

நம்ம வாழ்க்கையை நாம வாழணும். அதுல காம்ப்ரமைஸும் கூடாது; கம்பேரிஸனும் கூடாது. எந்த முன் முடிவுகளும் இல்லாம ஒரு விஷயத்தை அணுகுறது ரொம்ப முக்கியம். யாரையும் அண்டர் எஸ்டிமேட் பண்ணவே கூடாது. 

``வாழ்க்கைல காம்ப்ரமைஸும் கூடாது, கம்பேரிஸனும் கூடாது!’’ - இயக்குநர் கரு.பழனியப்பன் #LetsRelieveStress

நம்ம வாழ்க்கையை நாம வாழணும். அதுல காம்ப்ரமைஸும் கூடாது; கம்பேரிஸனும் கூடாது. எந்த முன் முடிவுகளும் இல்லாம ஒரு விஷயத்தை அணுகுறது ரொம்ப முக்கியம். யாரையும் அண்டர் எஸ்டிமேட் பண்ணவே கூடாது. 

Published:Updated:
``வாழ்க்கைல காம்ப்ரமைஸும் கூடாது, கம்பேரிஸனும் கூடாது!’’ - இயக்குநர் கரு.பழனியப்பன் #LetsRelieveStress

கரு.பழனியப்பன், பத்திரிகையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, திரைப்படத்துறையில் தடம்பதித்தவர். `பார்த்திபன் கனவு', `சதுரங்கம்', `பிரிவோம் சந்திப்போம்', 'மந்திரப் புன்னகை', `சிவப்பதிகாரம்'... உட்பட பல படங்களை இயக்கியவர். இப்போது `புகழேந்தி எனும் நான்' எனும் படத்தை இயக்கிவருகிறார். தமிழ் ஆர்வலரான இவர், தீவிர வாசிப்புப் பழக்கமுள்ளவர். தனது வெளிப்படையான பேச்சால் பலரையும் கட்டிப்போடும் ஆற்றல்மிக்கவர். அவரிடம் மன அழுத்தம், மன இறுக்கம் தந்த தருணங்களிலிருந்து மீண்டவிதம் குறித்துக் கேட்டோம்.

``எனக்கு மன அழுத்தம், மன இறுக்கம் தரும் சூழ்நிலைகள் பெரும்பாலும் அமைஞ்சதில்லை. காரணம், இழப்பதற்கு எதுவுமில்லைங்கிறதுதான். நான் பெருசா பணம், காசு, சொத்து இதெல்லாம் சேர்த்துவைக்கணும்னு நினைக்க மாட்டேன். அதைத் தேடி ஓடவும் மாட்டேன். ஓடினாதான் நமக்கு டென்ஷனாகும். நமக்குக் கிடைக்கும்னு நினைச்சது, கிடைக்காமப் போகும்போதுதான் நமக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படும்.

எனக்கு வாழ்க்கை குறித்து பெரிய ஆவேசங்கள் கிடையாது. இயல்பானநிலையில நம்மால என்ன முடியுமோ, அதை நாம செய்வோம். வெற்றி, தோல்வினு எது வந்தாலும், அதை ஏத்துக்குவோம். அதாவது வெற்றின்னா அடுத்து என்ன வேலைனு பார்ப்போம், தோல்வின்னா அடுத்து எப்படி வெற்றியடையறதுனு பார்ப்போம்... அவ்வளவுதான். பணம் தவிர வேற விஷயங்கள்ல மன அழுத்தம் ஏற்பட்டுதுன்னா அதை நாம ஓரளவுக்குப் பேசித் தீர்த்துடலாம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான், மதுரை அமெரிக்கன் காலேஜ்ல படிச்சேன். `ஆனந்த விகடனின்' மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் மூலம் மாணவப் பத்திரிகையாளரா தேர்வாகி வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு சினிமாதான் வாழ்க்கைனு முடிவு பண்ணி சென்னைக்கு வந்துட்டேன். 
சென்னைக்கு வந்து டைரக்டர் ஆர்.பார்த்திபன், எழில், தரணினு மூன்று டைரக்டர்கள்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை பார்த்தேன். அப்ப, சென்னைக்கு வந்து கிட்டத்தட்ட ஆறரை வருஷம் ஆகியிருந்துச்சு. ஆனாலும், அலைஞ்சுக்கிட்டு இருந்தேன். 

அப்பாவுக்கு மதுரையில பாத்திரக்கடை வியாபாரம். நான் என் கதாபாத்திரங்களோடு, எனக்கான தயாரிப்பாளரைப் பிடிச்சு, தனியா படம் பண்ணணும். அதுக்காக அலைஞ்சுக்கிட்டு இருந்தேன்.

அந்த நேரத்துல என் அப்பாவுக்கு வியாபாரத்துல ஒரு பிரச்னை. சமாளிக்க ரொம்ப சிரமமா இருந்திருக்கு. அதனால, `கிளம்பி வந்துடுய்யா... நீ வந்தாதான் சரியா இருக்கும்'னு சொல்லிட்டார். 

அந்த நேரம்... எனக்கும் கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஃபுல்லா இருந்துச்சு. `சரிப்பா... நான் கிளம்பி வந்துடுறேன். நான் பார்த்துக்கிறேன். ஒண்ணும் பிரச்னையில்லை’னு சொல்லிட்டேன். என்னோட இந்த முடிவு அவரை ரொம்ப யோசிக்கவெச்சிடுச்சு. அவர் மாற்றுவழிகளை யோசிக்க ஆரம்பிச்சார். 

`இவ்வளவு நாளா மகன் படம் டைரக்ட் பண்ணணும்னு போராடுறான். நம்மால அது கெட வேண்டாம்'னு முடிவு பண்ணி, என்னை இங்கேயே இருக்கச் சொல்லிட்டார். அவரும் சில முக்கியமான முடிவுகளை அந்த நேரத்துல எடுத்து, பிசினஸை சரிசெஞ்சுட்டார்.
ரொம்பவும் ஸ்ட்ரெஸ்ஸா இருக்குற நேரத்துல, அதுலயே கிடந்து உழல்வதைவிட, `டக்'குனு ஒரு முடிவெடுத்துடணும், அது ரொம்ப முக்கியம். நாம எடுக்குற முடிவு சரியா இருக்கணும். அப்படி அது சரியா இல்லைன்னா, அதைச் சரியாக்க என்ன பண்ணணும்னு பார்க்கணும். இது ரெண்டுதான் நமக்கு முன்னால இருக்குற ஆப்ஷன்.

பெரும்பாலும், முடிவெடுக்கறதுக்குக் குழம்புறப்போதான் நமக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகும். சரியோ, தவறோ முடிவுகளை உடனுக்குடன் எடுத்துடணும். தள்ளிப்போட்டோம்னா, பல நேரங்கள்ல அது நீர்த்துப் போனதாகிடும். அப்புறம் காலம், அது கொடுக்கிற முடிவை நம்மை ஏத்துக்கவெச்சுடும். பிறகு அது நம்மை குற்றவுணர்வுக்கு உட்படுத்திக்கிட்டே இருக்கும்.

இன்னொண்ணு, `நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?' ங்கிற மனநிலை நமக்கு வரக் கூடாது. வெற்றி தோல்வி, இன்பம் துன்பம்... இதெல்லாம் மாறி மாறி வந்துகிட்டுத்தான் இருக்கும். அது நமக்கு மட்டுமே நடக்கிறது கிடையாது. இந்த உலகத்துல இருக்குற எல்லாருக்கும் இப்படி மாறி மாறி நிகழ்ந்துகிட்டுதான் இருக்கும். 

சுயபச்சாதாபம், கழிவிரக்கம் இதெல்லாம்தான் ஸ்ட்ரெஸ்ல கொண்டு போய் விடுது. நம்மைவெச்சு எல்லாரையும் எடைபோடக் கூடாது. வாழ்க்கைங்கிறது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாக இருக்குற கேள்வித்தாள். ஒவ்வொருவருடைய வாழ்க்கைக் கேள்விக்கும் உள்ள பதில் வேறானதுங்கிறதை நாம புரிஞ்சுக்கணும். அதனால, இன்னொருத்தரோட என்னை நான் கம்பேர் பண்ணிக்கவே மாட்டேன். 
ஒருத்தன் எவ்வளவோ படிச்சிருப்பான், பெரிய விஷய ஞானம் உள்ளவனா இருப்பான். அவனால ஆயிரம் ரூபாய்கூட சம்பாதிக்க முடியாது. இன்னொருத்தன் கோடிக்கணக்குல சம்பாதிப்பான். இத்தனைக்கும் அவனுக்குத் தெரிஞ்ச விஷயங்கள்ல கால்வாசிகூட இவனுக்குத் தெரியாது. இவன் உழைப்புல பத்துல ஒரு பங்குகூட அவன் உழைக்க மாட்டான். எப்படினு மண்டையப் போட்டு உடைச்சிக்குவான். 

உண்மை என்னனு பார்த்தா இவனுக்குத் தெரியாத ஏதோ ஒரு தொழில்நுட்பம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். அதனால நம்ம வாழ்க்கையை நாம வாழணும். அதுல காம்ப்ரமைஸும் கூடாது; கம்பேரிஸனும் கூடாது. எந்த முன் முடிவுகளும் இல்லாம ஒரு விஷயத்தை அணுகுறது ரொம்ப முக்கியம். யாரையும் அண்டர் எஸ்டிமேட் பண்ணவே கூடாது. 

பொதுவாகவே எனக்குப் படிக்கிற பழக்கம் அதிகம். தினமும் மூணு நியூஸ் பேப்பர், வாரப் பத்திரிகைகள் எல்லாம் படிச்சிடுவேன். இது தவிர காமிக்ஸ்லருந்து காரல் மார்க்ஸ் வரைக்கும் எல்லாவிதமான புத்தகங்களும் படிப்பேன். அறிவியல் தவிர. ஏன்னா, அது பற்றி எனக்குத் தெரியாது. மத்ததெல்லாம் படிப்பேன். படிக்கிறதே நமக்கு மன அழுத்தத்தைப் போக்கிடும். படிக்கப் படிக்க மனம் விசாலமாகும்.   
நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ளச் செய்யும். எல்லாத்துலயும் இருந்து வெளியே வந்து ஒரு விஷயத்தைப் பார்க்குற மனநிலை வந்துடும்.

முதல் படத்தை இயக்கும்போதே எனக்குப் பெருசா ஸ்ட்ரெஸ் எதுவும் இல்லை. ரொம்பவும் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா நான் பாட்டுக்கு என் காரைத் துடைக்க ஆரம்பிச்சிடுவேன். இல்லைன்னா அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பிச்சிடுவேன். எதையாவது செய்ய ஆரம்பிச்சிட்டோம்னா ஸ்ட்ரெஸ் தானாகப் போயிடும்’’ என்கிறார் ரொம்பவும் கூலாக தன் சிரிப்பு மாறாமல்!