பிரீமியம் ஸ்டோரி
ஜில்லுனு ஒரு சம்மர்!

கோடைக்காலம் என்றாலே குதூகலம்தான். அது விடுமுறை, வெளியூர்ப்பயணம், சுற்றுலா என மகிழ்ச்சிகரமான சூழலைத் தந்தாலும் வாட்டி வதைக்கும் கோடை வெயில் நம்மைப் பாடாய்ப்படுத்திவிடும்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

குதூகலமும், கொண்டாட்டமும் தேவைதான். ஆனால் வெயிலின் உக்கிரம் நோயை உண்டாக்கி நம்மைப் படுத்தி விடக்கூடாது. எனவேதான்... வெயிலின் உக்கிரம் காரணமாக, வரக்கூடிய நோய்கள் பற்றியும், அவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது பற்றியும் விளக்குகிறார், பொது மருத்துவர் டி.வி.தேவராஜ்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

அதேவேளையில், கோடைக் காலத்தில் சருமப் பிரச்னைகளில் இருந்து காத்துக்கொள்வது பற்றிய தகவல்களை வழங்குகிறார், இயற்கை மருத்துவ ஆலோசகர் அஞ்சலி. கோடைக் காலத்தில் ஏற்படும் உடல் பாதிப்புகளை பிராணாயாமப் பயிற்சிகள் மூலம் சரிசெய்வது எப்படி என்பது பற்றிச் சொல்கிறார், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் குமரேசன்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

பிரிக்லி ஹீட்

பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப நம் உடலின் வெப்பநிலையும் மாறும். இதைச் சமநிலைப்படுத்த உதவுவது, வியர்வை. நம் உடலின் வெப்பத்தை வியர்வையின் மூலம் தணித்து, உடல் குளிர்ச்சியான நிலையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால், அதிகப்படியான வியர்வை, வியர்க்குரு உண்டாக வழிவகுக்கிறது. வியர்க்குரு மற்றும் எரிச்சல் போன்ற சரும பாதிப்புகளே பிரிக்லி ஹீட் (Prickly heat) எனப்படும். அதேநேரத்தில், பொதுவாகவே நம் உடலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான செல்கள் இறப்பதும் வாடிக்கையான ஒன்றே.

மற்றபடி, வியர்வை அதிகமாவதால் தலைவலி, காய்ச்சல் வரக்கூடும். அதிக வியர்வையின்போது, வியர்வை காய்வதற்குமுன் குளிப்பது, தலைக்குக் குளித்தபின்பு சரியாகத் தலையைக் காயவைக்காமல் இருப்பது போன்றவற்றால் தலைவலி, தலைபாரம் ஏற்படும்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

ஹீட் ஸ்ட்ரோக்

தண்ணீர் உடலுக்கு இன்றியமையாதது. நமது உடலில் 60 சதவிகிதத்துக்கும் மேல் திரவம் உள்ளது. நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் திரவத்தால் சூழ்ந்திருக்கும். இவை சீராகச் செயல்படத் தண்ணீர் அவசியம். உடலில் உள்ள நீரின் அளவு குறையும்போது, செல்களில் உள்ள ஈரப்பதம் குறையத் தொடங்குகிறது. இதனால், செல் இழப்பு ஏற்பட்டு உடல் உஷ்ணம் அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து தோல் சிவந்து, வியர்வை வெளியேறுவது தடைப்படும். சிலருக்குக் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உண்டாகும். சில நேரங்களில் மூச்சுவிடக்கூடச் சிரமம் ஏற்படும். இது குழந்தைகளில் தொடங்கி முதியவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

வயிற்றுப் போக்கு

சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலால் வயிற்றுப்போக்கு ஏற்படும். நாம் உண்ணும் உணவால் ஒவ்வாமை ஏற்பட்டாலும், உண்ட உணவு சரியாகச் செரிமானம் ஆகாமல் இருந்தாலும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இவற்றில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் நச்சுப்பொருள்கள் குடல் தொற்றை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, ஃபுட் பாய்சன் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

பருவகால நோய்கள் வரிசையில் சின்னம்மை, மஞ்சள்காமாலை முக்கியமானவையாகும்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

சின்னம்மை

 பருவகால நோய்களில் சின்னம்மை ஒரு தொற்றுநோய். வெரிசெல்லா (varicella) என்னும் வைரஸ் சின்னம்மையை ஏற்படுத்தும். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஓரிரு வாரங்களிலேயே, ரத்தத்தில் கலந்துவிடும். மேலும் தீவிரமான காய்ச்சல், தொண்டை, நுரையீரல் மற்றும் சருமத்தில் புண்களை ஏற்படுத்தும். முதுகு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சின்னம்மைப் புண்கள் பரவலாகக் காணப்படும்.

இது காற்றின் மூலம் பரவக்கூடியது. சளி, இருமல், உமிழ்நீர், தும்மல் வழியாகவும் இதன் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. மேலும், தொடுதல் மூலமாகவும் வைரஸ் தொற்று ஏற்படலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

மஞ்சள் காமாலை

ரத்தத்தில் உள்ள பிளிருபின் அளவு அதிகமாவதால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. நமது  ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் முடிவடைந்ததும், மண்ணீரல் சிதைவடையும். அப்போது ரத்தச் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின், ஹீம் மற்றும் குளோபின் எனத் தனித்தனியாகப் பிரிகிறது. ஹீம் உடலுக்குள்ளே மறுசுழற்சிக்காகச் செல்கிறது. குளோபினானது (பிளிருபின்) கழிவாக வெளியேற்றப்படுகிறது. இப்படியாக வெளியேற்றப்படும் செயல்பாட்டில் தடை ஏற்படும்போது, அவை நம் உடலிலேயே தங்கிவிடுகின்றன. பிளிருபின் ஒரு மஞ்சள் நிறமி என்பதால், மஞ்சள் காமாலை என அழைக்கப்படுகிறது.

ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, இ எனப் பல வகைகள் உள்ளன.  ஹெபடைட்டிஸ் ஏ, சுகாதாரமற்ற உணவை எடுத்துக்கொள்வதால் பரவும். ஹெபடைட்டிஸ் பி,சி சுகாதாரமற்ற ஊசி, ஃபிரஷ், ஷேவிங் பிளேடு போன்றவற்றை மற்றவர் பயன்படுத்துவதால் பரவும்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

உஷ்ணம் குறைக்க

உடல் உஷ்ணத்தைக் குறைக்க தினமும் இளநீர் பருகலாம். ஏதேனும் ஒரு பழச்சாற்றைச் சாப்பிட வேண்டும். தர்பூசணியில் இரும்பு, பொட்டாசியம், பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நீர்வறட்சித் தன்மையைச் சரி செய்யும். மேலும், உடலுக்குத் தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. தினசரி இரண்டுமுறை குளிக்கலாம். இவை உடலுக்கு இதம் தரும். மோர், பதநீர் போன்ற நீர் ஆகாரங்களை அவ்வப்போது இடைவெளிவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

கண்களைப் பாதுகாக்க

வெயிலில் செல்லும்போது சன் கிளாஸ் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க, கண் எரிச்சல் நீங்கும். அதிக நேரம் கண் விழித்து வேலை செய்வது, டி.வி மொபைல் மற்றும் கணினியைப் பார்ப்பதால் கண் எரிச்சல் மற்றும் கண் சிவந்து போகலாம். ஆகையால், 6 - 8 மணி வரை சீரான தூக்கம் அவசியம்.

இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை முகம் கழுவலாம். இது கண்களையும் சருமத்தையும் குளிர்ச்சி அடையச் செய்கிறது. வைட்டமின்-ஏ அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

அதிகப் பயணத்தின் போது

கோடைக்காலத்தில், பயணத்தின்போது வெயில் மற்றும் சூடான பகுதிகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கலாம். குளிர்ச்சியான இடங்களுக்குச் செல்வது நல்லது. இப்படியான பயணங்களின்போது, வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவை உணவு, சூழல், தண்ணீர் போன்றவற்றால் ஏற்படலாம். ஆகையால், கோடைக்காலப் பயணத்தின்போது, உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். உதடு மற்றும் தொண்டையில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க, ஒவ்வோர் அரைமணி நேரத்துக்கும் ஒரு மடக்குத் தண்ணீர் அருந்தலாம். மேலும், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

உடல் பராமரிப்பு

கால் பாதங்களின் அடியில் உள்ள சூட்டை நீக்க, இளஞ்சூடான நீரில் கல் உப்பு, சிறிது எலுமிச்சைச் சாறு, பாதாம் எண்ணெய் போன்றவை கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்துப் பின்பு கழுவலாம். பாசிப்பயறை அரைத்துக் கால்களில் பூச வேண்டும். பின்பு, புளித்த தயிர் வைத்து நன்கு கால்களைத் தேய்த்துக் கழுவ வேண்டும்.

ஜில்லுனு ஒரு சம்மர்!வெளியிடங்களுக்குச் செல்லும்போது முழு உடலையும் மூடும்படியான பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தலாம். இறுக்கமாக ஆடைகள் அணிவதைத் தவிர்க்கலாம். குளிக்கும் தண்ணீரில் முதல்நாள் இரவே, வேப்பிலையை ஊறவைத்து அந்த நீரை காலையில் பயன்படுத்தலாம். அதிக உடல் உஷ்ணத்தால் வயிற்றுவலி ஏற்படும். அதைச் சரி செய்ய, தொப்புள் பகுதியைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவலாம். அதேபோல், கண் இமைகளின் மேல்புறம் மற்றும் பாதங்களின் அடியில் விளக்கெண்ணெய் தேய்த்தால் உடல் சூடு தணியும். வெயிலிலோ அல்லது வெளியிலோ சென்றுவந்த பிறகு, ஈரமான துண்டை வயிற்றில் வைத்திருக்க வேண்டும். இதேநிலையில் 20 நிமிடங்கள் வரை இருந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

கூந்தல் பராமரிப்பு

தர்பூசணி, கிர்ணி, மாதுளை, எலுமிச்சை, முலாம்பழம் போன்ற பழச்சாறுகளில் ஏதேனும் ஒன்றை  தினமும்  பருக வேண்டும். தலைமுடி வறட்சியைக் (dryness) குறைக்க வைட்டமின்-சி அதிகம் உள்ள பழச்சாறுகளைப் பருக வேண்டும்.  இது உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும். வெயில், மாசு கலந்த காற்று போன்றவற்றால் முடி உதிர்வு, வறண்ட கூந்தல், பொடுகுத்தொல்லை போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

நீண்டதூரப் பயணம் செய்பவர்களுக்கு, சூழல் மாசு மற்றும் வியர்வை காரணமாக, மண்டையில் உள்ள துவாரங்கள் அடைபடும். இதைத் தடுக்க வாரம் ஒருமுறை ஆயில் மசாஜ் செய்யலாம்.  அதிக வீர்யம் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தலாம். வாரத்துக்கு இரண்டுமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். 

ஜில்லுனு ஒரு சம்மர்!

சருமப் பராமரிப்பு

கோடைக்காலத்தில் சரும வறட்சி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதைச் சரி செய்ய உணவு மட்டுமல்ல, பழக்க வழக்கங்களும் சரியாக இருக்க வேண்டும். அவகேடோவைத் தொடர்ந்து சாப்பிட்டுவர சருமம் பொலிவு பெறும். தோல் எரிச்சல், தோல் சிவந்து போவது, வறட்சி போன்ற சருமப் பிரச்னைகளைச் சரி செய்யும். அதிகமாக வியர்க்கும்போது அப்படியே விட்டுவிடக் கூடாது. சிறிது வியர்வை குறைந்தபிறகு அல்லது வியர்வையைத் துடைத்த பிறகு குளிப்பது நல்லது.

கற்றாழையில் உள்ள பசையை உடல் முழுவதும் தேய்த்து, சில நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். இது, அதீத வெயிலினால் ஏற்படும் தோல் கருமையை நீக்கி, புறஊதாக் கதிர்களின் தாக்கத்தைக் குறைக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும். தண்ணீர் அதிகம் குடிப்பது, தினசரி மாதுளை, பீட்ரூட், கேரட் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் சரும வறட்சியைத் தடுக்கலாம்.  அவகேடோவை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் கழுவ முகம் பளபளக்கும்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

டிப்ஸ்

செம்பருத்தி இலைகள், துளசி, வெந்தயம் (ஒரு நாள் முன்னரே தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்தவும்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாற்றை ஷாம்புவாகத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும். கருமையான கூந்தல் பெற உதவும். பொடுகுத்தொல்லை நீங்கும்.

வியர்க்குரு உள்ளவர்கள், வேப்பிலை போட்டு ஊறவைத்த தண்ணீரை குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். வெயிலில் செல்லும்போது, கற்றாழையில் உள்ள சோற்றை வெயில் படும் இடங்களில் தேய்த்துக்கொள்ளலாம். இதனால், வெயிலின் தாக்கம் நேரடியாகச் சருமத்துக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ சென்றபின் தேய்த்த இடங்களைக் கழுவிக்கொள்ளலாம். இதனால், சருமம் மங்குவது தடுக்கப்பட்டு, பளபளப்பாக உதவுகிறது.

ஜில்லுனு ஒரு சம்மர்!

வீட்டைக் கூலாக்கலாம்

தினமும் மாலை நேரங்களில் வீட்டைத் துடைத்துவிடலாம்; அல்லது வீட்டில் நீர் தெளித்து விடலாம். இரவு நேரங்களில் படுக்கை அறையின் ஓரத்தில் ஈரமான துணியைப் பிழிந்து தொங்கவிடலாம். படுக்கையில் மெத்தைக்குப் பதிலாக, காட்டன் போர்வைகளைப் பயன்படுத்தலாம். இவை இரவில் நம் உடல் சூட்டை நடுநிலைத்தன்மையுடன் வைத்திருக்க உதவும். இரவு நேரங்களில் நீல நிற பல்புகளைப் பயன்படுத்தலாம். இது வீட்டைக் குளுமையாக வைத்துக்கொள்ள உதவும். வீட்டின் மேற்கூரையில் தெர்மாக்கோல் வைப்பது, வீட்டினுள் செடிகள் வளர்ப்பது, வீட்டுக்கு அடர்நிறம் குறைந்த வண்ணத்தில் பெயின்ட் அடிப்பது போன்றவற்றைக் கையாளலாம்.

கோடைக்காலத்தில் செய்வதற்கென்றே சில பிராணாயாமங்கள் உள்ளன.

ஜில்லுனு ஒரு சம்மர்!

சந்திரநாடி பிராணாயாமம்

செய்முறை: வஜ்ராசன முறையில் அமர வேண்டும். வலது கையை நாசிக்கான முத்ராவில் வைக்க வேண்டும். இப்போது, வலது நாசியில் வலது கையின் பெருவிரலை வைத்து மூட வேண்டும். இடது நாசியால் மூச்சை இழுத்து விட வேண்டும். இதேபோல் 10 - 15 முறை செய்யலாம். இந்தப் பிராணாயாமப் பயிற்சியை மூன்று வேளையும் செய்யலாம்.

பலன்கள்:
சந்திரநாடி பிராணாயாமம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். மனஅழுத்தம், மனச்சோர்வு குறையும். தூக்கமின்மையைச் சரிசெய்து, எளிதில் செரிமானசக்தியைச் சீராக்கும். உடலைக் குளிர்ச்சி அடையச் செய்யும்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

ஷீட்டாலி பிராணாயாமம்

பயிற்சி: பத்மாசன நிலையில் உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின்முத்திரையில் வைக்க வேண்டும். கண்களை மூடிய நிலையில் வைத்து நாக்கை வெளியே நீட்டி, உருளை போன்று உட்புறமாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாக்கின் வழியாக மூச்சை உள் இழுக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுத்ததும், நாக்கை உள்ளே கொண்டு செல்ல வேண்டும். பிறகு, பற்களின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும். இதேபோல் ஐந்து முறை செய்யலாம். இறுதியாக, இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்து, கண்களில் வைக்க வேண்டும். பின்பு கண்களைத் திறக்க வேண்டும். 

பலன்கள்:
இது உடல் குளிர்ச்சி அடைய உதவுகிறது. சுவாசம் சீராக உடலினுள் பரவ உதவுகிறது. நுரையீரல் பிரச்னைகள், சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தக்கூடியது. மன அமைதிக்கு உதவுகிறது.

ஜில்லுனு ஒரு சம்மர்!

ஷீட்கரி பிராணாயாமம்

பயிற்சி: பத்மாசன நிலையிலோ அல்லது சாதாரணமாகவோ உட்கார வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர வேண்டும். கைகள் இரண்டையும் சின்முத்திரையில் வைக்க வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, பற்களின் இடுக்குகள் வழியாக மூச்சை இழுக்க வேண்டும். பின்பு, மூக்கின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும்.

பலன்கள்: உடலைக் குளிர்ச்சி அடையச் செய்யும். கோடைக்காலத்துக்கு ஏற்ற பிராணாயாமப் பயிற்சி இது. மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. சீரான தூக்கத்துக்கு உதவுகிறது.

ஜில்லுனு ஒரு சம்மர்!

கோல்டு பாத் டப் (Cold Bath Tub)

கோல்டு பாத் டப்பில் அமர வேண்டும். வயிற்றுப்பகுதிக்குச் சற்று மேல் வரை அதில் குளிர்ந்த நீர் இருக்கும். குறிப்பிட்ட நேரம் வரை அதில் அமர வேண்டும். இப்படி அமர்ந்திருக்கும்போது, குளிர்ந்த நீரானது, உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும். மேலும், இந்த வகையான குளியல் உடல் மற்றும் மனம் இரண்டும் புத்துணர்வு பெற உதவும்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

பெண்கள் மட்டும்

பெண்கள் காலை 8 மணிக்குள் தலைக்குக் குளிக்க வேண்டும். குளித்ததும் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கலாம். மாதவிலக்குக் காலங்களில் உடல்சூட்டைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மருதாணியை அரைத்து உள்ளங்கை மற்றும் பாதங்களில் வைக்கலாம். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.

லெகின்ஸ், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்கலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

என்ன சாப்பிடலாம்?

வைட்டமின்-சி அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது. அவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவும். தினமும் தேன் சாப்பிடலாம்.

காலையில் நெல்லி, எலுமிச்சை, முலாம்பழம், தர்பூசணி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழச்சாறு அருந்துவது நல்லது.

சீசன் பழங்களான  கொய்யா, மாம்பழம் மற்றும் உணவுப் பொருள்களான நுங்கு, பதநீர் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

பப்பாளி, மாதுளை, மாம்பழம் போன்றவற்றையும் உண்ணலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

நீர் ஆகாரங்கள்

* பெருஞ்சீரகக் குடிநீர் உடல் சூட்டைத் தணிப்பதுடன், சருமத்தைப் பளபளப்பாக்கும். இந்தக் குடிநீரை தினமும் அருந்தி வந்தால் கண் எரிச்சல் மற்றும் கண்ணில் நீர் வடிதல் குறையும்.

* நன்னாரி வேர்க் குடிநீர், உடலுக்கு உடனடி எனர்ஜி தரும். உடல் எடை அதிகரிக்க உதவும். உடல் சூடு தணியும்.

* துளசி குடிநீரை தினசரி குடித்துவர சளி, தலைவலி, உடல்வலி குணமடையும். துளசிக் குடிநீரை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.

* முதல் நாள் இரவிலேயே, நீரில் வெந்தயத்தை ஊற வைத்துக் காலையில் அந்தத் தண்ணீரைக் குடித்தால் உடல் குளிர்ச்சி அடைவதுடன், செரிமானக் கோளாறுகள் சரியாகி வயிறு சுத்தமாகும்.

* வெட்டிவேர் குடிநீர், முகப்பருக்களைச் சரி செய்யக்கூடியது. இது சரும நோய்கள் வராமல் தடுப்பதோடு, உடனடி எனர்ஜியைத் தரக்கூடியது.

ஜில்லுனு ஒரு சம்மர்!

இயற்கை பழச்சாறுகள்

 புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, நூல்கோல், வெள்ளரி, வாழை, மாதுளை, கிர்ணி, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, நுங்கு, கீரைகள் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ளவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றுடன் புதினா, எள், சீரகம், வெந்தயம், எலுமிச்சை, கொத்தமல்லி போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

புதினாவுடன் இஞ்சி சேர்த்த தேநீரைத் தினசரி அருந்தலாம். எலுமிச்சை, புதினா, இஞ்சி, தேன் கலந்த சாற்றைத் தினசரி ஒருவேளை பருகலாம்.

நீர்மோர், இளநீர், பதநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்றவற்றை எடுத்துக்கொண்டால், உடலில் நீர் வறட்சி குறையாமல் இருக்கும். அறுகம்புல் சாறு, நெல்லிச்சாறு, தர்பூசணிச்சாறு, வெள்ளரிச் சாறு மற்றும் சிட்ரஸ் வகைப் பழச்சாறுகள் உடலின் நீர்ச்சத்தைச் சமநிலைப்படுத்த உதவும். உடல்சூட்டை அதிகரிக்கக்கூடிய கோதுமை, மைதா, சிக்கன், ஊறுகாய், பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

இறைச்சி உணவைத் தவிர்க்கலாம்

தக்காளிச் சட்னி போன்ற அசிடிட்டி ஏற்படுத்தக்கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஸ்பைசி (காரம், மசாலா நிறைந்த) உணவு வகைகள், புளிப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் போன்றவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது. இரவில் செரிமானத்துக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் நெய், இறைச்சி போன்ற உணவு வகைகளைத் தவிர்க்கலாம். 

ஜில்லுனு ஒரு சம்மர்!

இயற்கை பானங்கள்

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கப் பலரும் குளிர்பானங்களையே நாடுவார்கள். கார்பனேட்டட் பானங்களைக் குடிப்பதால் நம் உடலுக்குப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோடையில் நீரிழப்பால் (Dehydration) பாதிக்கப்படுபவர்கள்தான் அதிகம். ஆகவே, இந்தப் பிரச்னையைப் போக்க கோடையில் கிடைக்கும் பழங்களை ஜூஸ் செய்து குடிப்பது நல்லது. இளநீர் மிகச் சிறந்தது. பாட்டிலில் அடைக்கப்பட்ட செயற்கைக் குளிர்பானங்களைத் தவிர்த்து வீட்டில் செய்யக்கூடிய கோடைக்கால ஜூஸ் வகைகளைச் செய்து காட்டுகிறார், ஆப்பிள் மில்லட் உணவகத்தின் செஃப் அந்தோணி சகாயராஜ்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

வாட்டர்மெலன் கூலர்

தேவையானவை: தர்பூசணி - 5 துண்டுகள், இஞ்சி - அரை நெல்லிக்காய் அளவு, எலுமிச்சைப் பழம் - அரை, உப்பு - ஒரு சிட்டிகை, தேன் - தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணியைத் தோல் மற்றும் விதை நீக்கி,  சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். அதனுடன் இஞ்சி சேர்த்து எலுமிச்சைச்சாற்றைப் பிழிய வேண்டும். அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் குடிக்கலாம். தேவைப்பட்டால் ஐஸ் சேர்த்துக்கொள்ளலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

மின்ட் கிரஷ்

தேவையானவை: புதினா - 50 கிராம், எலுமிச்சைப் பழம் - கால் பங்கு, தேன் - தேவையான அளவு, மிளகு - கால் டீஸ்பூன்.

செய்முறை: புதினா இலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துத் தேவையான அளவு தேன் மற்றும் மிளகுத்தூள் சேர்க்க வேண்டும். பிறகு மீண்டும், மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்ற வேண்டும். நன்றாக அரைத்து வடிகட்டிப் பருகலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

குக்கும்பர் டிலைட்

தேவையானவை: வெள்ளரிக்காய் - கால் கிலோ, எலுமிச்சைப் பழம் - அரைப் பங்கு, தேன் - 2 டீஸ்பூன், புதினா - 5 இலைகள்.

செய்முறை: வெள்ளரிக்காயை நன்றாகக் கழுவி சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் சுத்தமான தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்ட வேண்டும். அதன்மேல் புதினாவை சிறிதாக நறுக்கித் தூவிவிட்டுப் பருகலாம்.

வெள்ளரிக்காய்க்குப் பதிலாக வெள்ளரிப்பழத்தை இதே செய்முறையில் செய்து குடிக்கலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

டெண்டர் கோகனட் ஸ்மூத்தி

தேவையானவை: இளநீர் - 1, தேங்காய்ப் பால் - 100 மில்லி, தேன் - 2 டீஸ்பூன், வழுக்கை - 1 கப்.

செய்முறை: இளநீருடன் 100 மில்லி தேங்காய்ப் பால், சுத்தமான தேன் மற்றும் வழுக்கையைச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் குடிக்கலாம்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

கோகனட் & ஆரஞ்சு பஞ்ச்

தேவையானவை: இளநீர் - 1, ஆரஞ்சுப் பழம் - 2, தேன் - தேவையான அளவு, வழுக்கை - 1/2 கப்.

செய்முறை: இளநீர் மற்றும் விதை நீக்கிய ஆரஞ்சுப் பழச்சுளைகளைத் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வழுக்கையைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து பரிமாறவும்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

கேரட் & மஸ்க் மெலன் ஸ்மூத்தி

தேவையானவை: கேரட் - 200 கிராம், மஸ்க் மெலன் (முலாம்பழம்) - 200 கிராம், தேன் - 3 டீஸ்பூன், குளிர்ந்த பால் - 200 மில்லி (காய்ச்சிக் குளிரவைத்தது)

செய்முறை:
கேரட்டைத் தோல் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அதனுடன், தோல் மற்றும் விதை நீக்கிய முலாம்பழத் துண்டுகளைச் சேர்க்க வேண்டும். பின்பு வெட்டிய பழத்துண்டுகளுடன் சுத்தமான தேன் மற்றும் குளிர்ந்த பால் ஊற்றி, மிக்ஸியில் நன்கு அரைத்தால் கேரட் - மஸ்க் மெலன் ஸ்மூத்தி ரெடி.

ஜில்லுனு ஒரு சம்மர்!

லெமன் மின்ட் கூலர்

தேவையானவை: புதினா இலை - 1 கப், எலுமிச்சைப் பழச்சாறு - 2, இஞ்சி - 1 சிறு துண்டு, உப்பு - 1/4 டீஸ்பூன், கற்கண்டு - தேவையான அளவு.

செய்முறை: புதினா இலை, எலுமிச்சைப் பழச்சாறு, இஞ்சி, உப்பு, கற்கண்டு சேர்த்து அரைக்க வேண்டும்.  பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். மாலை நேர எனர்ஜி டிரிங்க் ரெடி!

ஜில்லுனு ஒரு சம்மர்!

தேங்காய்ப்பால் கூலர்

தேவையானவை: தேங்காய்த் துருவல் - 1 கப், வெள்ளரிக்காய் - 1/2 கப், பனங்கற்கண்டு - தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய்த்துருவல், நறுக்கிய வெள்ளரிக்காய், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும். பின், அரைத்த சாற்றை வடிகட்டி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குளிர்ச்சியாக இருக்கும்.

பலன்கள்: வெள்ளரிக்காய் முகம் பளபளப்பு பெற்று அழகு பெற உதவுகிறது. தேங்காய்த்துருவல் வாய்ப்புண் மற்றும் வாய்த்துர்நாற்றத்தைச் சரி செய்ய உதவுகிறது. தேங்காயில் அதிக அளவு மாங்கனீசு நிறைந்துள்ளது. இதில் உள்ள காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமத்தை மென்மை அடையச் செய்கிறது. ரத்தச் சோகையை சரி செய்யும். உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும்.

ஜில்லுனு ஒரு சம்மர்!

தண்ணீர் அவசியம்

தண்ணீர் பாட்டிலை எப்போதும் கைவசம் வைத்திருப்பது நல்லது. எப்போதெல்லாம் தண்ணீர் கேன்-ஐ கடந்து போகிறீர்களோ அப்போதெல்லாம், தாகம் இருக்கிறதோ, இல்லையோ.. தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிக்க மறந்துபோகிறவர்கள், செல்போனில் ரிமைண்டர் போட்டு வைத்து, அது சிணுங்கும்போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம்.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வரும்போதும், உங்கள் உடலிலிருந்து நீர் வெளியேறுகிறது. எனவே, அப்போதெல்லாம் கண்டிப்பாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளின்போது ஏராளமான வியர்வை வெளியேறும். வியர்வையின் மூலம் நம் உடம்பிலிருந்து பொட்டாஷியம் மற்றும் உப்புகள் வெளியேறுகின்றன. எனவே, விளையாடிய பின்னும், உடற்பயிற்சி செய்த பின்னும் நீர்ச்சத்துள்ள பழம் அல்லது நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்வதால், வியர்வை மூலம் வெளியேறும் இழப்பை ஈடுகட்டலாம்.

- ச.மோகனப்பிரியா, தி.கௌதீஸ்

உதவி: ஆப்பிள் மில்லட் உணவகம், திருச்சி

படங்கள்: தி.கௌதீஸ்

ஜில்லுனு ஒரு சம்மர்!

உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு