தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நம்பிக்கை விருதுகளும் நம்பிக்கை மனுஷிகளும்!

நம்பிக்கை விருதுகளும் நம்பிக்கை மனுஷிகளும்!
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பிக்கை விருதுகளும் நம்பிக்கை மனுஷிகளும்!

நிகழ்வுஐஷ்வர்யா

லகின் அத்தனை இயக்கமும் நம்பிக்கை என்னும் அச்சாணியின் மீதுதான் சுழல்கிறது. மண்ணை முட்டி மோதி முளைத்து எழும் விதை தொடங்கி, விதைக்கு ஒளியாகும் சூரியனின் உதயம் வரை எல்லாவற்றுக்கும் நம்பிக்கை மட்டுமே இயக்குவிசை. இப்படியான நம்பிக்கைச் சூரியன்கள் வானத்தில் மட்டுமல்லாமல், சமூகத்திலும் சக நட்புகளாகத் தொடர்ந்து பிரகாசித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அந்தச் சூரியன்களை, பத்தாண்டுகளாகத் தொடர்ந்து இனம்கண்டு அடையாளப்படுத்தி வரும் விகடன், இந்த ஆண்டு முதன்முறையாக பிரமாண்ட மேடை அமைத்து `விகடன் நம்பிக்கை விருதுகள் 2016' விழாவாகக் கொண்டாடி கௌரவித்துள்ளது.

நம்பிக்கை விருதுகளும் நம்பிக்கை மனுஷிகளும்!

தொகுப்பாளர்கள் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், டி.வி பிரபலங்கள் நட்சத்திரா, ராஜ்மோகன் ஆகியோரின் மொழியாளுமையாலும், குறும்பு, வேடிக்கைப் பேச்சுகளாலும் விழா அரங்கம் வண்ணக் கவிதையாக ஜொலித்தது.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சிறுவர் இலக்கிய விருதை, `இடி தெய்வத்தின் பரிசு' நூலுக்காக, ஜெயந்தி சங்கருக்கு வழங்கினார் வேலு சரவணன். ``கண்டம், நாடு, நிலம் என அத்தனைக்கும் அப்பாற்பட்டவன் மனிதன் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பவள் நான். முக்கியமாக, குழந்தைகள் மொழிக்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற நம்பிக்கை உண்டு” என்றார் ஜெயந்தி சங்கர்.

நம்பிக்கை விருதுகளும் நம்பிக்கை மனுஷிகளும்!

தனது தோற்றம் போலவே எளிய மனிதர்களின் மேம்பாட்டுக்காகக் களப்பணியாற்றி வருகிறார் மல்லிகா. இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நடிகை பூஜா தேவரையாவின் கரங்களால் விருதைப் பெற்றுக்கொண்ட இவர், தன் தந்தையின் நிலத்தை ஆதிக்கச் சக்திகளிடமிருந்து மீட்பதிலிருந்து தொடங்கினார் தனது போராட்ட வாழ்க்கையை. இன்று வனப்பகுதி மக்களுக்கு ரேஷன் கார்டு வாங்கித் தருவது முதல் வீடு கட்டித் தருவது வரை பல்வேறு பணிகளுக்கும் துணை நிற்கிறார். தேனி மாவட்டத் தோட்டக்காடுகளில் கொத்தடிமைகளாக இருந்த மக்களை மீட்ட மல்லிகாவின் போராட்டக் குணம் அளப்பரியது. தன் கையில் இருந்த விருதை ஒரு கணம் பார்த்தவர், “நான் படிக்கவில்லை... ஆனால், போராடுகிறேன்!” என ஒற்றை வரியில் `நறுக்’கென்று பேசிவிட்டு நகர்ந்தார்.

நம்பிக்கை விருதுகளும் நம்பிக்கை மனுஷிகளும்!

நடிகைகளில் எப்போதுமே யுனீக்காக மிளிரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு `டாப் 10 இளைஞர்' விருதை இயக்குநர் பாண்டிராஜ் வழங்கினார். ``காக்கா முட்டை, தர்மதுரை படங்களை ஊரே மெச்சியபோது எனக்கு அவார்ட்ஸ் கிடைக்கவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து, தமிழகம் எனக்குக் கொடுத்திருக்கிற அவார்ட் இது. இந்த நம்பிக்கையைத் தக்கவைப்பேன்” என்று விருதை நெஞ்சோடு சேர்த்து நெருக்கமாக அணைத்துக்கொண்டார்.

தடகள வீரர் மாரியப்பன் சார்பாக அவர் அம்மா சரோஜாவும், தடகள வீராங்கனை சூர்யாவுக்காக அவர் தந்தையும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். தங்கத்தமிழன் மாரியப்பனின் வெற்றிக்குப் பின்னணியில் இருக்கும் அவரின் அம்மா பேசியபோது... ``சாருங்களுக்கு வணக்கம்! மாரிக்கு சின்ன வயசாக இருக்கையிலேயே அவங்க அப்பா விட்டுட்டுப் போயிட்டாரு. காய்கறி வித்துதான் எங்க வாழ்க்கையை நகர்த்தினோம். எப்படி வாழறதுன்னு தெரியாம இருந்தப்போ அவன்தான், `நான் இருக்கே'னு கையப் பிடிச்சுட்டு வந்தான்” என்றார் நெகிழ்வுடன்.

நம்பிக்கை விருதுகளும் நம்பிக்கை மனுஷிகளும்!

நியூஸ் 18 தலைமைச் செய்தி ஆசிரியர் குணசேகரனிடம், சிறந்த ஆர்.ஜே-வுக்கான விருதைப் பெற்றுக்கொண்டார் மிருதுளா. `கொஞ்சம் சாங் கொஞ்சம் சயின்ஸ்’ என்னும் இவரது வெரைட்டியான தொகுப்பு பாணிக்குத்தான் இந்த விருது.

சிறந்த `வி.ஜே' விருது ஜாக்குலினுக்கு. படித்தது லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன். `கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்; அதே நிகழ்ச்சியில் அவ்வப்போது பெர்ஃபாமன்ஸ் கொடுத்தும் கலக்குவார்.

நம்பிக்கை விருதுகளும் நம்பிக்கை மனுஷிகளும்!

‘டாப் 10 மனிதர்’ விருது பெறுவதற்காக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சார்பாக அவர் அம்மா சித்ராவும், அஸ்வினின் மகளும் இணைந்து மேடையேறினர். அவரைத் தொடர்ந்து ‘டாப் 10 இளைஞர்’ விருதை பூபால னுடன் இணைந்துப் பெற்றார் சமூக ஆர்வலர் சரண்யா.

நம்பிக்கை விருதுகளும் நம்பிக்கை மனுஷிகளும்!விருது பெற்றுக் கொண்ட வர்களில் ரெஜி ஜார்ஜ் - லலிதா தம்பதி அசாத்தியமான பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அழிந்துவரும் தமிழக விவசாய நிலங்களை மீட்டெடுக்கப் பயணப்பட்ட இவர்கள் உருவாக்கியதுதான் சேலம் சிட்லிங்கி பள்ளத் தாக்கு இயற்கை விவசாயக் கூட்டமைப்பு. இவர்களின் ஒருங்கிணைந்த இயற்கை பண்ணைய முறையால் இன்று அந்த சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 21 கிராமங்கள் விவசாயத்தில் செழித்துள்ளன.
 
இந்தப் பெண்கள் நாளை தமிழகத்தைத் தாங்கி நிற்கப் போகும் விடியல்களுக்கான முன்மாதிரிகள். ராயல் சல்யூட் எம் பெண்களே!