Published:Updated:

ராமாயணத் தலங்களுக்கு ஒரு ரயில் சுற்றுலா..! ஐ.ஆர்.சி.டி.சி. ஸ்பெஷல்

ராமாயணத் தலங்களுக்கு ஒரு ரயில் சுற்றுலா..! ஐ.ஆர்.சி.டி.சி. ஸ்பெஷல்
ராமாயணத் தலங்களுக்கு ஒரு ரயில் சுற்றுலா..! ஐ.ஆர்.சி.டி.சி. ஸ்பெஷல்

அயோத்தியில் ஆரம்பித்து அசோகவனத்தில் முடியும் ராமாயணக் கதை நாம் எல்லோரும் அறிந்ததே. அதை அப்படியே 'சுற்றுலா பேக்கேஜ்' ஆக்கியுள்ளது ஐ.ஆர்.சி.டி.சி. இந்த நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ஆன்மிகச் சுற்றுலாக்கள்

மீபகாலமாக உணவகங்களில் ஒரு கலாசாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 'தீம் ரெஸ்டாரன்ட்கள்' என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தீமில் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளனர். சூப்பர் ஹீரோக்கள் தொடங்கி ஸாம்பிக்கள்வரை எல்லா தீம்களிலும் உணவகங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதே விஷயத்தை ரயில் பயணங்களில் புகுத்தியுள்ளது இந்திய ரயில்வே, உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC). அயோத்தியில் ஆரம்பித்து அசோகவனத்தில் முடியும் ராமாயணக் கதை நாம் எல்லோரும் அறிந்ததே. அதை அப்படியே 'சுற்றுலா பேக்கேஜ்' ஆக்கியுள்ளது ஐ.ஆர்.சி.டி.சி. இந்த நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ஆன்மிகச் சுற்றுலாக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டின் புதுவரவு 'ராமாயணா எக்ஸ்பிரஸ்'.

ராமாயணத்தில் பிரசித்திபெற்ற இடங்களைத் தரிசிக்கும் புண்ணிய யாத்திரையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, இதே நோக்கில் 'ராமாயணச் சாராம்சம்' என்ற பேக்கேஜில் கொச்சுவேலி - திருநெல்வேலி - மதுரை - திருச்சி - சென்னை - நாசிக் - பஞ்சவடி - சித்திரக்கூடம் - ராம்காட் - ஸ்ரீங்கவேற்புரம் - அலகாபாத் - வாரணாசி - துளசி மானஸ் மந்திர் - தர்பங்கா - சீதா மர்ஹி - அயோத்தி ஆகிய இடங்களை உள்ளடக்கி 10 இரவு - 11 பகல் பயணத்துக்கு அழைத்துச் சென்றது ஐ.ஆர்.சி.டி.சி. இதற்காக ரூ. 37,700 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை சற்றே விரிவுபடுத்தி, எல்லா மக்களும் பயன்பெறும் வகையில் ரூ 15,120 என்ற கட்டணத்தில் 15 இரவு மற்றும் 16 பகல் பேக்கேஜை அறிமுகம் செய்யவிருக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி. நவம்பர் 14 அன்று இந்தத் திட்டத்தின் முதல் பயணம் 800 இருக்கைகளுடன் டெல்லியில் தொடங்கி ராமேஸ்வரம்வரை பயணித்து, 29.11.2018 அன்று மீண்டும் டெல்லியில் முடிவடையும். விருப்பம் உள்ளவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி-யின் விமானவழி மூலம் இலங்கை வரை செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது. விமானவழிப் பயணம் சென்னையில் இருந்து தனியாகச் செயல்படும். அதற்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்திட்டம் பற்றிய விவரம்:

* டெல்லி சப்தார்ஜங் ரயில் நிலையத்தில் நவம்பர் 14 அன்று மாலை 4:30-க்கு பயணம் தொடங்கும். 

* ராமர் பிறந்த அயோத்தியில் பஜனை, கீர்த்தனைகளோடு இரண்டாம் நாள். 

* அயோத்தியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள, ராமனின் வனவாச காலத்தில் பரதன் வாழ்ந்த இடமான நந்திக்கிராமத்தில் மூன்றாம் நாள்.

* சீதை பிறந்த இடமாகக் கருதப்படும் சீதாமதியில் உள்ள ஜானகி கோவில், பினாரா, ராமன் - சீதை மணமுடித்த இடமான ஜானக்பூர் கோவில் ஆகிய இடங்களில் நான்காம் நாள். 

* வாரணாசியில் துளசி மந்திர், சங்கட் மூச்சன் அனுமான் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் ஆகியன ஐந்தாம் நாள் பயணத்தில் இடம்பெறும்.

* ஆறாம் நாளில் சீதையை பூமி மாதா தன்னுள் கொண்ட இடமாகச் சொல்லப்படும் சீதா சமகிஸ்தலம், சீதை கோவில், ராமன், சீதை, லக்ஷ்மணன் கங்கையைக் கடந்த ஸ்ரீரங்கவேற்புரம் கோவில்கள், கங்கா - யமுனா- சரஸ்வதி சங்கமமாகும் அலகாபாத் பரத்வாஜ் ஆசிரமம் அடக்கம்.

* ஏழாம் நாள் சித்திரக்கூடத்தில் சங்கமம் ஹனுமான் கோவில் தரிசனம்.

* எட்டாம் நாள் சீதையை ராவணன் கவர்ந்து சென்ற இடமான தண்டகாரண்யம் என்றழைக்கப்பட்ட நாசிக் தன்மசாலையில் ஓய்வு.

அங்குள்ள திரயம்பகேஸ்வரர் கோவில், அதை அடுத்து கோதாவரிக் கரையோர பஞ்சவடி ராமர் கோவில், லக்ஷ்மணனுக்கு உள்ள ஒரே கோவில் போன்றவை ஒன்பதாம் நாள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.

* அனுமன், ராமனையும் லக்ஷ்மணனையும் சந்தித்த கிஷ்கிந்தையாம் ஹம்பி போய்ச்சேர்வது பத்தாம் நாள்.

* எழில் கொஞ்சும் கோவில்கள் 11-ம் நாள் காட்சி விருந்து.

* 12-ம் நாள் ராமேஸ்வரம் சென்றடைதல்.

* 13-ம் நாள் ராமேஸ்வரம் கோவில் தரிசனம், தனுஷ்கோடி பயணம். அன்றே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம்.

* 14-ம் நாள் சென்னை வரும் அந்த ரயிலின் பயணிகள் இரு குழுவாக பிரிவர். சென்னையில் இருந்து விமானம் மூலம் ஒரு குழு இலங்கை செல்வார்கள். மற்றவர்கள் டெல்லிக்கு ரயில் மூலம் புறப்படுவர். 

* 15-ம் நாள் முழுக்க ரயிலில் பயணித்து, 16-ம் நாள் டெல்லி சென்று சேருவார்கள். 

விமானம் மூலம் கொழும்பு அழைத்துச் செல்லப்படும் பயணிகள், ராவணன் இறந்த பிறகு  விபீஷணன் முடிசூடிய கெளனியா, சீதையை தேடிவந்த அனுமன் ராவணனுடன் போர் செய்த ரம்பொட கோவில், மேகநாதன் சிவனிடம் வரம் வாங்கிய நுவரெலியா காயத்ரி பீடம், சீதை கோவில், அசோகவனம் உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவார்கள்.

தவிர, திவ்கும்போலா கோவில், ராவணனைக் கொன்ற பின் பிரம்மமகஸ்தி தோஷம் கழிய ராமன், சிவனை கற்சிலையாய் வழிபட்ட முன்னேஸ்வரம் கோவில், மானாவாரி கோவில் ஆகிய கோயில்களும் இதில் அடங்கும். பின்னர் அவர்கள் கொழும்புவிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றடைவர். சைவ உணவு, தங்குமிடம், சுற்றிக் காண்பித்து வரலாறு சொல்ல கைடு எல்லாம் இதில் அடங்கும் என்று ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.

'ராம ராஜ்ஜியம் நடக்கிறது' என்று பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா மேடைகளில் பேசி வருகிறார். அந்தக் கட்சி மத்தியில் ஆட்சியில் உள்ள நிலையில், ரயில்வேத் துறையும்  இதுபோன்ற ராமாயணச் சுற்றுலா போன்ற ஆன்மிகச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்கிறது. ஆனால், இது குறிப்பிட்ட மதத்தினருக்கான சுற்றுலாவாக மட்டுமே எடுத்து கொள்ளப்படும். இதோடு நிற்காமல், எல்லாத் தரப்பினருக்கும் சேவை அளிக்கும் ஐ.ஆர்.சி.டி.சி இதே போல மற்ற மதத்தினருக்கும் ஏற்ற பல்வேறு ரயில் பயண சுற்றுலாக்களை நடத்தினால் அனைவரின் பாராட்டுகளையும் பெறும் என எதிர்பார்க்கலாம். 

அடுத்த கட்டுரைக்கு