Published:Updated:

பிரச்னைகளைத் தீர்க்க இது உதவும்! - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory

பிரச்னைகளைத் தீர்க்க இது உதவும்! - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory
பிரச்னைகளைத் தீர்க்க இது உதவும்! - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory

பிரச்னைகளைத் தீர்க்க இது உதவும்! - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory

`ஒரு பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்று பயப்படாதீர்கள். நிச்சயம் ஏதாவது ஒரு வழி இருக்கும்.’ - இது ஒரு சீனப் பழமொழி. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் அப்படித்தான். இதைத் தீர்க்கவே முடியாது என்று நினைக்கும் சிக்கலைத் தீர்ப்பதற்குக்கூட நிச்சயம் ஏதாவது ஒரு வழி இருக்கும். சரி.. அது நமக்குப் புலப்படாமல் போவது ஏன்? மேலோட்டமாகப் பார்ப்பதும் அணுகுவதும்தான் முக்கியமான காரணம். சில நேரங்களில் அபத்தமாகத் தோன்றும் ஒரு விஷயம்கூட சிக்கலைத் தீர்க்க உதவலாம். பொறுமை, நிதானமான அணுகுமுறை, ஈடுபாடு, கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும்... எப்பேர்ப்பட்ட தீர்க்க முடியாத பிரச்னையையும்கூட தீர்த்துவிடலாம். `எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம், சங்கடம்... என்னால இதைச் சரிபண்ணவே முடியலையே...’ என்று சோர்ந்து போய் உட்கார்வதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேட வேண்டும். தேடல்தான் வெற்றிக்கான மந்திரச்சாவி. இந்த உண்மையை உணர்த்தும் கதை ஒன்று... 

அது, அமெரிக்காவின் பிரபல கார் உற்பத்தி நிறுவனம்... வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம். காரில் கோளாறு என்று புகார் வந்தால், அடுத்த கணம் அங்கிருந்து ஆட்கள் கிளம்புவார்கள். அந்த அக்கறை காரணமாகவே, விலை அதிகமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கார்கள் நன்கு விற்பனையாகிக்கொண்டிருந்தன. ஒருநாள் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. உறையில், `டைரக்ட் - பெர்சனல்’ என்று சிவப்பு எழுத்தில் எழுதி, நிர்வாக இயக்குநரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. நிர்வாக இயக்குநர் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். அதில் இப்படி எழுதியிருந்தது. 

`ஐயா, வணக்கம். இந்தக் கடிதத்தை இரண்டாவது முறையாக எழுதி உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். ஏற்கெனவே, 10 நாள்களுக்கு முன்னர் நான் அனுப்பிய கடிதத்துக்கு தங்கள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. நீங்கள் ஏன் பதில் அனுப்பவில்லை என்று உங்களைக் குற்றம்சாட்டுவதற்காக நான் இதைக் குறிப்பிடவில்லை. எனக்குப் பதில் தெரியாவிட்டால், பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது. விஷயத்துக்கு வருகிறேன்... உங்கள் நிறுவனத்தின் காரை நான் வாங்கி மூன்று மாதங்களாகின்றன. எங்கள் குடும்பத்தில் பாரம்பர்யமாக ஒரு பழக்கமுண்டு. இரவு உணவுக்குப் பிறகு குடும்பத்திலிருக்கும் எல்லோரும் ஐஸ் க்ரீம் சாப்பிடுவோம். ஒரு நாளைக்கு ஒரு ஃப்ளேவர் என்கிற கணக்கில் விதவிதமாக வாங்கிச் சாப்பிடுவோம். எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தரமான ஐஸ் க்ரீம்கள் கிடைக்கும். அதனால், நானே காரை எடுத்துக்கொண்டு போய் ஐஸ் க்ரீம் வாங்கி வருவது வழக்கம். அதில்தான் பிரச்னையே..! நான் அந்த சூப்பர் மார்க்கெட்டில் வெனிலா ஐஸ் க்ரீம் வாங்கி வந்தால் மட்டும் கார் ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்கிறது. ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட்...என வேறு எந்த ஐஸ் க்ரீம் வாங்கி வந்தாலும், கார் உடனே கிளம்பிவிடுகிறது. ஒரு முறையல்ல... பல முறை இப்படி நடந்துவிட்டது. இது என்ன அபத்தம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. அருகிலிருக்கும் மெக்கானிக் ஷாப்பில் போய் பிரச்னையைச் சொன்னால், என்னை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். இதற்கு நீங்கள்தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும். தங்கள் உண்மையுள்ள...’’ இப்படி எழுதி அந்த வாடிக்கையாளரின் கையொப்பம் இருந்தது. 

நிர்வாக இயக்குநர், தன் பெர்சனல் செக்ரட்டரியை அழைத்தார். இதற்கு முன் அந்த வாடிக்கையாளர் எழுதிய கடிதம் ஏதாவது வந்திருந்ததா என விசாரிக்கச் சொன்னார். விசாரித்ததில், `கஸ்டமர் கேர்’ பிரிவில் ஓர் ஊழியர் கடிதம் வந்தது உண்மையென்றும், அதில் சொல்லப்பட்டிருந்த தகவல் வேடிக்கையாக இருந்ததால், யாரோ விளையாட்டுக்காக எழுதியிருந்ததாக நினைத்து அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டதையும் சொன்னார். நிர்வாக இயக்குநர் அந்த ஊழியரை அதற்காகக் கடிந்துகொண்டார். உடனே, தன் நிறுவனத்தின் முக்கியமான இன்ஜினீயர்களை அழைத்து ஒரு கூட்டம் போட்டார். அவர்களில் திறமையான ஓர் இளம் இன்ஜினீயரிடம், அந்த வாடிக்கையாளரின் குறையைச் சரிசெய்யும் பொறுப்பைக் கொடுத்தார்.  

அந்த இன்ஜினீயர், கடிதம் எழுதிய வாடிக்கையாளரைப் போய் சந்தித்தார். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தன் கடிதத்துக்கு இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கார் நிறுவனத்திலிருந்து கிடைத்ததே என்று வாடிக்கையாளர் மகிழ்ந்து போனார். ``இன்னிக்கி ராத்திரி டின்னர் முடிஞ்சதும் நானே உங்க வீட்டுக்கு வர்றேன். ரெண்டு பேரும் போய் ஐஸ் க்ரீம் வாங்கிட்டு வரலாம்’’ என்றார் இன்ஜினீயர். சொன்னதுபோலவே வந்தார். இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு காரில் போனார்கள். அன்றைக்கு வெனிலா ஐஸ் க்ரீம் வாங்கினார் அந்த வாடிக்கையாளர். அவர் கடிதத்தில் எழுதியிருந்ததுபோலவே நடந்தது. கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அசந்து போனார் இன்ஜினீயர். ``இன்னும் ரெண்டு, மூணு நாள் பார்ப்போம். எப்படியும் பிரச்னையைச் சரி பண்ணிடலாம்னுதான் நினைக்கிறேன்’’ என்று நம்பிக்கையோடு சொன்னார் இன்ஜினீயர். கார் அங்கேயே நிற்க, தன்னுடைய காரில் அழைத்துப்போய் வாடிக்கையாளரை அவர் வீட்டில் விட்டுவிட்டு வந்தார் இன்ஜினீயர். திரும்ப சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து காரை ஸ்டார்ட் செய்து பார்த்தார். ஸ்டார்ட் ஆகிவிட்டது. 

அடுத்த நாள் இரவு. அதே சூப்பர் மார்க்கெட். அன்றைக்கு சாக்லேட் ஐஸ் க்ரீம் வாங்கிக்கொண்டு வந்தார் வாடிக்கையாளர். ஒரு பிரச்னையும் இல்லை. கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது. மறு நாள் இரவு... அதே சூப்பர் மார்க்கெட். ஸ்ட்ராபெர்ரி ஐஸ் க்ரீம் வாங்கினார். ஒரு பிரச்னையும் இல்லை. கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த நாள்... வெனிலா ஐஸ் க்ரீம் வாங்கினார். அதே பிரச்னை... கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அன்றைக்கும், இன்ஜினீயர்தான் அவரை தன் காரில் கொண்டு போய்விட வேண்டியிருந்தது. மறுபடியும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்தார். தன் காரை நிறுத்திவிட்டு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார். ஒவ்வொரு பிரிவாக ஆராய்ந்து பார்ப்பதுபோல் நிதானமாக நடந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூப்பர் மார்க்கெட்டுக்குள் சுற்றியலைந்துவிட்டு வெளியே வந்தார். 

அன்று இரவு அந்த இன்ஜினீயர் தன் வீட்டில் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தார். `காருக்கு வெனிலா ஐஸ் க்ரீம் அலர்ஜி’ என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆரம்பத்திலிருந்து தான் ஆராய்ந்தவற்றையெல்லாம் ஒரு குறிப்பாக எழுதினார். வாடிக்கையாளர் பயன்படுத்தும் கார் மாடல், அவர் போடும் பெட்ரோல் அளவு, வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட் இருக்கும் தூரம், காரின் வேகம்... இப்படி எழுத எழுத அவருக்கு ஒரு க்ளூ கிடைத்தது. அது, சூப்பர் மார்க்கெட்டின் அமைப்பு. ஐஸ் க்ரீம்களில் வெனிலா ஃப்ளேவர் மிகவும் புகழ்பெற்றது என்பதால் சூப்பர் மார்க்கெட்டின் முன் பகுதியிலேயே அதற்கென தனியாக ஓர் இடம் வைத்திருந்தார்கள். வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைந்ததும், அதை எடுத்துக்கொண்டு வந்துவிடலாம். மற்ற ஐஸ் க்ரீம் ஃப்ளேவர்கள் மிக அதிகமாக விற்கப்படுவதில்லை என்பதால், அவை சூப்பர் மார்க்கெட்டின் பின் பகுதியில் இருந்தன. அங்கே நடந்து போய், தேடிக் கண்டுபிடித்து எடுத்து வர சிறிது நேரம் பிடிக்கும். இப்போது இன்ஜினீயருக்கு கார் கிளம்பாததற்கான காரணம் பிடிபட்டுவிட்டது. காரணம் வெனிலா ஐஸ் க்ரீம் அல்ல. நேர அவகாசம். 

வாசலில் நிறுத்திவிட்டுப் போன கார், சீக்கிரத்தில் வந்து கிளப்பினால் ஸ்டார்ட் ஆவதில்லை. கொஞ்சம் நேரம் கழித்து வந்தால், கிளம்பிவிடுகிறது. இது ஏன் என்று ஆராய்ந்ததும் விடை கிடைத்துவிட்டது. காரின் இன்ஜினில் இருக்கும் வேப்பர் லாக் (Vapor lock) என்ற பாகத்தில் பிரச்னை என்பதைக் கண்டுபிடித்தார் அந்த இளைஞர். அதில் ஏற்படும் பிரச்னையால் கார் சூடாகிவிடுகிறது; கொஞ்சம் நேரம் கழித்துவந்து கிளப்பினால், வெப்பம் தணிந்துவிடும்; கார் கிளம்பிவிடும். உடனே அல்லது சீக்கிரம் வந்தால், கார் இன்ஜின் சூடாக இருப்பதால், கிளம்பாமல் நின்றுவிடுகிறது. 

இன்ஜினீயர் விஷயத்தை நிர்வாக இயக்குநரின் கவனத்துக்குக் கொண்டு போனார். வெகு சில நாள்களிலேயே வேப்பர் லாக் பாகத்தை பிரச்னை ஏற்படாத வகையில் புதுவகையில் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது அந்த நிறுவனம்! தேடல் ஏன் முக்கியம் என்பது இப்போது புரிகிறதா? 

அடுத்த கட்டுரைக்கு