Published:Updated:

ருதுவான பெண் என்ன கைதியா? எண்பது வருடங்களுக்கு முன் கேள்வியெழுப்பிய குஞ்சிதம் குருசாமி

ருதுவான பெண் என்ன கைதியா? எண்பது வருடங்களுக்கு முன் கேள்வியெழுப்பிய குஞ்சிதம் குருசாமி
ருதுவான பெண் என்ன கைதியா? எண்பது வருடங்களுக்கு முன் கேள்வியெழுப்பிய குஞ்சிதம் குருசாமி

படித்த பெண்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக இருந்த சூழலில், திருமணத்துக்குப் பிறகும் குஞ்சிதம் அம்மையார் படித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

ந்தை பெரியார் தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்பில் குறிப்பிடத்தக்கது, பெண் விடுதலை சார்ந்த கருத்துகள் மற்றும் போராட்டங்கள். 1938 நவம்பர் 13-ம் தேதி, காஞ்சிபுரத்தில் நடந்த பெண்கள் மாநாட்டில்தான், `பெரியார்' பட்டத்தைப் பெண்கள் அளித்தனர். பெரியாரின் கருத்துகள், மூட பழக்கவழக்கங்களில் சிக்கியிருந்த சமூகத்தில் தீயாய் பரவின. இதனால், திராவிட இயக்கத்தில் பல பெண் தலைவர்கள் உருவாகினர். மூவலூர் ராமமிர்தம், மீனாம்பாள் சிவராஜ், எஸ்.நீலாவதி, சிவகாமி என இந்தப் பட்டியல் மிக நீளமானது. அதில், குஞ்சிதம் குருசாமி மிக முக்கியமானவர். இந்தியாவின் முதல் பெண் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். 89 ஆண்டுகளுக்கு முன்பே, சீர்திருத்த திருமணம் செய்துகொண்டவர்கள், குஞ்சிதம் - குருசாமி. இவர்களில் குஞ்சிதம் அம்மையாரின் பிறந்த தினம் (ஜூலை 12) இன்று. 

1909-ம் ஆண்டு, டி.சுப்பிரமணியம் - தங்கம்மா ஆகியோருக்குப் பிறந்தார். கல்வியின் மீது அளவற்ற ஆர்வம்கொண்ட குஞ்சிதம், பள்ளி இறுதித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றார். திராவிட இயக்கச் செயல்பாட்டாளரும், பத்திரிகையாளருமான (`ரிவோல்ட்' பத்திரிகையின் உதவி ஆசிரியர்) குருசாமியை 1929 டிசம்பர் 8-ம் தேதி, சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார் குஞ்சிதம். இவர்களின் திருமணம், பெரியாரின் மனைவி நாகம்மையார் தலைமையில் நடந்தது இன்னுமொரு சிறப்பு. இந்தத் திருமண அழைப்பை, திராவிடன் இதழில் வெளியிட்டார் நாகம்மையார். 

திருமணம் என்றதும், இந்து முறைப்படியான மந்திரம் ஓதுதல் உள்ளிட்ட சடங்குகள் மட்டுமே இருந்த காலம் அது. அனைத்துத் திருமணங்களும் உறவுக்குள் அல்லது ஒரே சாதிக்குள் நடைபெறுவதாகவும் இருந்தது. திருமண மேடையில் தலைகுனிந்தவாறே மணப்பெண் வீற்றிருக்கும் காலம். ஆனால், மந்திரங்கள், சடங்குகளைத் தவிர்த்து நடந்த குஞ்சிதம் - குருசாமி சுயமரியாதை திருமணத்தில், மணமகள் தெளிந்த ஆங்கிலத்தில் பேசினார். `இந்தியப் பெண்கள் விலங்குகளாகவே இதுவரை கருதப்பட்டு வந்தார்கள். இதற்குப் பெண் மக்கட்குக் கல்வியின்மையே காரணமாகும்' எனத் தொடங்கி, `அறிவிலும் பலத்திலும் ஆண்களோடு பெண்கள் போட்டிபோட முடியாது என நம்பிய காலம் மலையேறிப் போய்விட்டது' எனக் கம்பீர உரை நிகழ்த்தினார். அவரின் பேச்சை ஆச்சர்யத்தோடு கேட்ட கூட்டம், அரங்கம் அதிர கைதட்டியது. இவரின் உரையை ஜே.எஸ்.கண்ணப்பர் தமிழில் மொழியாக்கம் செய்தார். அந்த உரை, குஞ்சிதம் அம்மையாரின் பயணம், பகுத்தறிவைப் பரப்பும் என இவ்வுலகுக்கு அறிவித்தது. 

திருமணம் நடந்தபோது இருவரும் பட்டப் படிப்பை முடித்திருக்கவில்லை. அடுத்த வருடமே இருவருமே பி.ஏ படிப்பை முடித்தனர். படித்த பெண்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக இருந்த சூழலில், திருமணத்துக்குப் பிறகும் குஞ்சிதம் அம்மையார் படித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இந்த விஷயத்தைப் பெரியார், 26.10.1930 குடியசு நாளிதழில் பெட்டிச் செய்தியாக வெளியிட்டார். அந்தச் செய்தி இதோ...

`திருச்செல்வர்கள் எஸ்.குருசாமி, எஸ்.குஞ்சிதம் ஆகிய இருவரும், இவ்வருஷம் கடைசியாக நடந்த செப்டம்பர் மாத பரீட்சையில் பி.ஏ. வகுப்பில் தேறியிருக்கிறார்கள். திருமணம் நடந்தபோது, திரு.குருசாமி பி.ஏ. வகுப்பில் ஒரு பாடம் மாத்திரம் தேறியிருந்தார். திரு.குஞ்சிதம் மாணவியாக இருந்தார். திருமணம் நடந்து சதிபதிகளாக வாழ்ந்துகொண்டே, இருவரும் படித்து பரீட்சையில் தேறியிருப்பதற்கு நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு, அவர்களது முயற்சியைப் பாராட்டுகிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

தாலி கட்டி திருமணம் செய்திருந்தாலும், தாலி பெண்ணின் அடிமைச் சின்னம் எனும் முடிவுக்கு வந்து ஒரு சில ஆண்டுகளில் அகற்றிவிட்டார். பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதிலும், மாநாடுகளை ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டார். `கோயிலில் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும்' என்று பேசினார். பெண்களுக்கு எதிராகச் சமூகத்தில் பின்பற்றப்படும் மூடநம்பிக்கையை எதிர்ப்பதை முழு மூச்சாகக் கருதினார். சிறந்த எழுத்தாற்றல்கொண்ட குஞ்சிதம், பெண் உரிமைகளைப் பற்றித் தொடர்ந்து எழுதினார். `புதுவை முரசு' சிறப்பு மலரில், `ருதுவான பெண்கள் கைதியிலும் கேடா?' என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரை மிகவும் முக்கியமானது.

`ஆண் மகன் பக்குவமடைந்தவுடன் அடைத்துவைக்கப்படுகிறானா? அப்படியிருக்க, பெண் மக்களை மாத்திரம் இப்படி அவமானப்படுத்துவதன் கருத்தென்ன? அற்பத்தனமான சந்தேகம்தானே காரணம்?' எனச் சாட்டையடி கேள்விகளைக் கேட்டிருந்தார். `பெண்களே... உங்கள் அருமைக் கண்கள் நல்ல காட்சிகளைப் பார்க்கவேண்டிய காலத்தில், உங்கள் வீட்டு அடுப்பங்கரைச் சாமான்களையே சதா காலம் பார்த்து ஒளி மங்குகின்றனவே. உங்கள் ஆண் கொடுமையினின்றும் என்று மீட்பேனோ! என்னோடு வந்து நீங்களும் உல்லாசமாய், ஓடியாடித் திரிவீர்களோ! பயப்படாதீர்கள்! காற்று என்றுமே ஒரே முகமாய் அடிப்பதில்லை!' என்று நம்பிக்கையோடு முடித்திருந்தார். இந்தக் கட்டுரையை எழுதிய வருடம் 1931 எனும்போது, வியப்பு மேலோங்குகிறது அல்லவா! 

திராவிட இயக்கம் மீதான கருத்தியல் தாக்குதல்களுக்கு உடனுக்குடன் பதில் அளிப்பவராக இருந்தார் குஞ்சிதம். பாரதிதாசனின் கவிதைகளை விரும்பிப் படிக்கும் குஞ்சிதம், அவற்றைத் தொகுக்கும் பணியையும் செய்தார். பாரதிதாசனின் கவிதைகளை முதன்முதலாகப் பதிப்பித்த பெருமையும் இவரையே சாரும். 

தன் வாழ்வின் இறுதி நாள் வரை பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்பியவர், 1961 ஜூலை 30-ம் தேதி மரணமடைந்தார். பெரியாரியம் உருவாக்கிய பெண் ஆளுமைகள் மறைந்தபோதும், அவர்கள் பரப்பிய கருத்துகளின் வழியே வாரிசுகளை உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். 

நன்றி: 'சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்' நூல், (முனைவர். வளர்மதி), கருப்புப் பிரதிகள், சென்னை

அடுத்த கட்டுரைக்கு