Published:Updated:

தொடர்கதையாகும் ரேஷன் அரிசி கடத்தல்... என்ன செய்யப்போகிறது அரசு?

தொடர்கதையாகும் ரேஷன் அரிசி கடத்தல்... என்ன செய்யப்போகிறது அரசு?
தொடர்கதையாகும் ரேஷன் அரிசி கடத்தல்... என்ன செய்யப்போகிறது அரசு?

தமிழக அரசின் விலையில்லா அரிசி, பல மாநிலங்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.

மிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் விலையில்லா அரிசிதான், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. மற்றொருபுறம் இந்த ரேஷன் அரிசியானது இடைத்தரகர்கள், உள்ளூர் அரசியல் பிரபலங்கள் உதவியுடன் மூட்டை, மூட்டையாக வெளிமாவட்டங்களுக்குக் கடத்தப்பட்டு விற்கப்படும் அவலமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்திலிருந்து, ரயில்கள் மூலம் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு விலையில்லா அரிசி பயணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் மேற்கொள்ளும் ரெய்டின்போது, கைது மற்றும் கடத்தல் பொருள்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. 

அந்த வகையில் கடந்த 10-ம் தேதியன்று, அரிசிக் கடத்தலில் ஈடுபட்டதாக சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிமேகலை, பேசின்பாலத்தைச் சேர்ந்த இந்திரா ஆகியோரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 900 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்தனர். கைதான மணிமேகலையும், இந்திராவும், ``பெரம்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், ஓட்டேரி போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகளை வாங்குவோம். பெரம்பூரில் ரயில் பிடித்து ஆந்திராவுக்குப் போய், அங்குள்ள ஏஜென்டுகளிடம் கொடுப்போம். சில நேரங்களில் ரயிலில் ஏற்றி அனுப்புவதோடு, எங்கள் வேலை முடிந்துவிடும்" என்று விசாரணையின்போது தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல் திருவொற்றியூரில் நடத்தப்பட்ட ரெய்டில் 600 கிலோ அரிசி மூட்டைகள் பிடிபட்டுள்ளன. அரிசிக் கடத்தலில் ஈடுபட்ட மேலும் ஆறு பெண்கள், போலீஸில் பிடிபடாமல் தப்பியுள்ளனர். இப்படி, தமிழக அரசின் விலையில்லா அரிசி, பல மாநிலங்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளுக்கு அருகில் உள்ள ஹோட்டல்கள், மளிகைக் கடைகளும் குறிப்பிட்ட அளவிலான அரிசியை வாங்கிக் கொள்வது சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ரேஷன் அட்டைகளை வைத்திருக்கும் பயனாளிகளான பொதுமக்களோ, தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்டப் பொருள்களை வாங்கமுடியாமல் மாதந்தோறும் திணறுகின்றனர். அயனாவரத்தைச் சேர்ந்த சகுந்தலா என்ற வயதான பெண், ``இப்போது ரேஷன் கார்டு கையில் இல்லை. ஸ்மார்ட் கார்டு கொடுத்துள்ளனர். கார்டில் என் பிள்ளை, மருமகள், பேரன், பேத்திகளுடன் என் பெயரும் இருக்கிறது. `ஸ்மார்ட் கார்டில் பெயர் இருக்கிற குடும்ப உறுப்பினர் யாராவது வந்தால் மட்டுமே பொருள் தருவேன்' என்று, ரேஷன் கடையில் சொல்கிறார்கள். ஆனால், பொருள் வாங்க நான் போனால், `உன் பிள்ளையையோ, மருமகளையோ அனுப்பு' என்கிறார்கள். `பேரனைக் கூட்டி வருகிறேன்' என்று சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.  அதேபோல் மாதத்தின் முதல் வாரத்தில் போனால், `பத்து தேதிக்கு மேல் வாங்க' என்பார்கள். ஏதாவது வேலை இருந்து இரண்டு நாள்கள் கழித்து, 12-ம் தேதிக்குச் சென்றால் `எல்லாம் முடிந்து விட்டது. மாதக்கடைசியில் வாங்க பார்க்கலாம்' என்று அனுப்பி விடுவார்கள். மாதக் கடைசியில் போனால், எந்தப் பொருளும் இல்லை' என்பார்கள். இப்படித்தான் ரேஷன் பொருள்களை வாங்க முடியாமல், ஒவ்வொரு முறையும் ஏமாந்துகொண்டிருக்கிறோம்" என்றார்.

ரேஷன் அரிசி மூட்டைகளின் தயவால் தயாரிக்கப்படும் ரெடிமேட் மாவுப் பொட்டலங்கள் இல்லாத கடைகள் சென்னையில் குறைவு. ஹோட்டல்களும் அதைத்தான் நம்பிக்கொண்டிருக்கின்றன. இந்த விற்பனையையும் கடந்து, ரேஷன் அரிசி மூட்டைகள் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹாத்திம்பெய்க், ``ரேஷன் கடைகளில் நாம் பொருள் வாங்கினாலும், வாங்காவிட்டாலும், ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட பொருள்களை வாங்கி விட்டதாக செல்போனில் மெசேஜ் வருகிறது. நான், கடந்த ஓராண்டாகவே இப்படிப்பட்ட குறுந்தகவல்களை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ரேஷன் கடைக்குப் போய், `எந்தப் பொருளும் இல்லை; எல்லாம் தீர்ந்து விட்டது' என்று மாதாமாதம் ஏமாற்றத்துடன் திரும்பும் பல குடும்பங்களில் என்னுடைய குடும்பமும் ஒன்று. எனக்குத் தெரியாமல், ரேஷன் கடையில் என்னுடைய குடும்ப அட்டைக்கு ரேஷன் பொருள்கள் போட்டு விட்டதாகச் சொல்வதுதான் கொடுமை. சில ரேஷன் கடைகளில் இதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பேசினால், `முதல்ல இங்கிருந்து கிளம்புய்யா' என்று பக்குவமாக மிரட்டி அனுப்புகின்றனர்" என்றார்.

2016-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு அமைச்சர் காமராஜ், ``நியாயவிலைக் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றிக் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவிநியோகத் திட்டத்தில் கடத்தல் சம்பந்தமாக, இதுவரை 913 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டார். 

இந்த குண்டாஸ் எண்ணிக்கை இப்போது கூடியிருக்கலாம், குறைந்தும் இருக்கலாம். ஆனால், இவ்வளவு பேரை `குண்டாஸ்' சட்டத்தின் கீழ் கைது செய்யும் அளவுக்கு, அரிசிக் கடத்தல் நெட்வொர்க் வளர்ந்து நிற்கிறது என்பதோடு, இன்னும் அது தொடர்கிறது என்பதையும், இங்கே கவனிக்க வேண்டும். ரேஷன் பொருள்களைக் கடைகளில் தடையின்றி வாங்குவதில் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர். `ஏழைகளின் தேவைகளுக்காகவே ரேஷன் கடைகள் என்பது வெறும் வார்த்தையாக மட்டுமே இருக்கிறது...' என்ற மக்கள் குரலை, அதிகாரத்தில் உள்ளோர் கவனத்துடன் கேட்க வேண்டும் 

அடுத்த கட்டுரைக்கு