Published:Updated:

'மாறாதது உம் கலையும் கவியும்!' - வைரமுத்து என்னும் பெருங்காதலன் #HBDVairamuthu

'மாறாதது உம் கலையும் கவியும்!' - வைரமுத்து என்னும் பெருங்காதலன் #HBDVairamuthu
News
'மாறாதது உம் கலையும் கவியும்!' - வைரமுத்து என்னும் பெருங்காதலன் #HBDVairamuthu

கவிஞர், எழுத்தாளர், வசனகர்த்தா எனப் பன்முகங்கள் தாண்டி வைரமுத்து ஓர் ஆகச்சிறந்த ரசனைக்காரராக அறியப்பட்டார். தமிழ் சொல்லிக்கொடுத்த வைரமுத்து ரசிக்கவும் சொல்லிக்கொடுத்தார்.

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் யாரோ ஒருவர் மீது ஓர் ஈர்ப்பு அவர்களைக் கேட்காமலே வந்துவிடும். உலகத்தில் கேட்காமல் வரும் பசியைப்போல காதலைப்போல இப்படிப்பட்ட ஈர்ப்பும் ஒரு அழகிய அவஸ்தை. முகை முகிழ் மொட்டென மலர்விடும் நேரம் சிறு ஓசை பிறக்குமாம். பூ பூக்கும் ஓசை அது. சகலமாக யாரேனும் ஒருவரை அழைத்து அந்த ஓசையைக் கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் புன்னகை செய்து விலகுவார்கள். அந்தப் புன்னகையின் காரணம் இல்லையென்ற பதில் அல்ல. அது ஓர் ஆச்சர்யத்தின் வெளிப்பாடு. அப்படிப்பட்ட ஆச்சர்யம் கலந்த `இல்லை' தான் கவிஞர் வைரமுத்து மீதான ஈர்ப்பு எப்பொழுது தொடங்கியது என்ற கேள்விக்கு பதில். 

தொண்ணூறுகளில் இசையார்வம் கிடைக்கப்பெற்ற சந்ததியினருக்கு இசையை AR.ரஹ்மான் சொல்லிக்கொடுக்க வைரமுத்து தமிழைச் சொல்லிக் கொடுத்தார். ஏனென்றால் `தமிழில் குயில் பாடவேண்டும்" என்று குயில் கூட தமிழ் பாடவேண்டுமென்று கேட்டவர் அவர். 

கவிஞர், எழுத்தாளர், வசனகர்த்தா என்ற பன்முகங்கள் தாண்டி வைரமுத்து ஒரு ஆகச்சிறந்த ரசனைக்காரராக அறியப்பட்டார். தமிழ் சொல்லிக்கொடுத்த வைரமுத்து ரசிக்கவும் சொல்லிக்கொடுத்தார். விவரம் தெரியாத பால்யத்தில் அதிகம் முணுமுணுத்தது `ரிதம்' படத்தின் ``தனியே தன்னந்தனியே" பாடலாக இருக்கக்கூடும். ஷங்கர் மகாதேவனின் நடன அசைவுகளும், ரஹ்மானும்தான் காரணிகளாக அன்றைய காலங்களில் இருந்திருக்க வேண்டும். பின்னர் வயதின் ஆக்கிரமிப்பில் அதிலிருந்த ``ரசனையெனும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக்கண்டோம்" வரி ஆட்கொண்டது. ஆக, அவரை இணைத்ததும், ஈர்த்ததும் ரசனையென்னும் ஒரு புள்ளிதான். ஒரு நடிகனின் உடல்மொழியை தலைமுடி, நடை என்று ரசித்திருக்கும் வேளையில் வெள்ளுடையும், வகுடெடுத்த தலைமுடியும், அடர்மிகு கருமீசையும் கவிஞரின் மொழிகளாகத் தெரிந்தன.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வைரமுத்துவின் வேறு எந்தவோர் எழுத்தையும் படிக்காமல் போனாலும் அவரது திரைப்பாடல்கள் பலருக்கு எழுதும் ஆர்வத்துக்கும், ரசனைக்கும் மடை திறக்கும். இருள், காதல், முத்தம், மழை, கடல், பகல், வெயில், துக்கம், தனிமை, பசி, விரக்தி, ஏக்கம் என்று ஒட்டுமொத்தமாக வாழ்க்கை மீதான ரசனையும் வைரமுத்து எனும் ஒற்றைப்புள்ளியில் கிடைத்தது. ரசனையை ஓர் அடையாளமாக மாற்றவைத்தது வைரமுத்துவின் தாக்கம். வரிகள் மீறாத இசைதான் உண்மையான இசை. அந்த இசைக்கு உண்மையான வரிகளாக வைரமுத்துவின் விரல்கள் இருக்கின்றன. 
வைரமுத்துவின் முதல் கவிதை எதுவென்று தெரியாது. ஆனால், அவரின் முதல் பாடலின் பல்லவி ரசனையின் உச்சம். 

``வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்.."
ஒரு பகல் இரவாக மாறுவதை இப்படிச் சொல்ல முடியுமா என்ன? இரவு என்பது இருள். இருள் என்பது கருமை. கருமை என்பது நிறங்களின் கூட்டுத்தொகை. ஆனால், பகல் என்பது வெறும் வெளிச்சம். ஏதுமற்ற நிர்வாணம். அந்தப் பகல்நேர வானம் உடை உடுத்தி இரவாகிறாள் என்று சொல்வது ரசனையில்லாமல் வேறு என்ன. 

இரவு பகலை போல மழை பெய்வது ஓர் இயற்கை சுகந்தம். மழைக்கென காலங்கள் இருந்தாலும்  எப்பொழுது வேண்டுமானாலும் மழை பெய்யலாம். ஆனால், மழை பெய்வதை எப்படி எழுத முடியும். 
``முகிலினங்கள் அலைகிறதே,
முகவரிகள் தொலைந்தனவோ? 
முகவரிகள் தொலைந்ததனால்
அழுதிடுமோ, அது மழையோ?"
முகவரியற்றவனின் புது முகவரி ஆனந்த கண்ணீரின் அற்புத ஊற்று. அந்த ஊற்றுக்கு கவிஞரின் சாயலில் மழையென்று பெயர். 
காலங்களற்ற மழைக்கு `அந்திமழை பொழிகிறது', `புது வெள்ளை மழை பொழிகின்றது' என்றெல்லாம் எழுதினார். இப்படி மழையும், இரவுமாய் சகலத்தையும் ரசிக்கக் கொடுத்தவர் மலர், நிலா, முத்தம் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. 
விரல்நகத்தைக்கூடவா ரசித்து எழுத முடியும் ?  `பனிவிழும் மலர்வனம்' பாடலில் `இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்' என்று இருபது விரல்களையும் நிலவொளியில் இணைத்திருப்பார்.  

எதைச்சொல்வது எதைக்கொள்வது என்று எத்தனை எத்தனையோ வரிகள் இன்னும் உருக்கிக்கொண்டிருக்கின்றன. கவிதை போலில்லாமல் உரைநடையை பாட்டில் வைத்து அதையும் கவிதையாக்கினார். 'ரிதம்' படத்தில் 'கலகலவெனப் பொழியும்' பாடலின் தொடக்கத்தில் ஒரு வரி எழுதியிருப்பார். 

``யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக
என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்து போக"
பெண்ணின் செல்லக்கோபம் ரசனைப்பட்டியலில் மேலடுக்கில் இருக்கிறது. ``எல்லா சிவப்பும் உந்தன் கோபம்" என்று எழுதிய கைகள் தானே இவை. 
சொல்லாமல் போகும் இதயத்தைக் கூட செல்லமாய் கோபிக்கும் வரிகளை நயத்தோடு எழுதினார் இந்த மனிதர். இதே இதயத்தை பொல்லாத இதயமென்று சில ஆண்டுகளுக்கு முன்னர் ``பொல்லாத என் இதயம் ஏதோ சொல்லுதே... நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்" என்று தாரா பாடுவது போல எழுதினார். 

நிறத்தைக்கொண்டு அழகைச்சொல்ல ``அடி உம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல" என்று எழுதிவிட்டு ``கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே கடல் வானம் காணும் போதும் உனைக் கண்டேன் நானே!" என்றும் எழுதினார். 
ஒரு பெண்ணின் கூந்தலை எப்படி ரசித்துவிட முடியும்? மேகம், காற்று என்று எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம். வைரமுத்துவின் கூந்தல் பார்வை நிறத்தின் மீதும் இயற்கையின் மீதும் செழுமை பெறுகிறது. 

``இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே"
இந்த இரவின் நிறத்தை வேறுவிதமாகவும் எழுதி வைத்தார் இந்த ரசனைக்காரன். 

``விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது ?
பூ வாசம் வீசும்
உந்தன் கூந்தலடி…"
``கார்குழலில் உலகை...கட்டிவிட ஆசை..." என்று ரோஜா பாடுவதாகப் பாட்டு செய்தார். "ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்" என்றும் எழுதினார்.

இரவின் நிறம் கூந்தல் என்றவர் விடியாத இரவே கூந்தல் என்று முடித்து விட்டார். 
இரவைச் சொல்லிவிட்டு பகலை விட்டுவிட முடியாது. அப்படியென்றால் பகல் பெண்ணின் நிலையில் எப்படியாக இருக்கிறதென்று கேட்டால் கண்களைச் சொல்கிறார். 

``இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது ?
கதிர் வந்து பாயும்
உந்தன் கண்களடி…"
`காதலின் திமிருக்குப் பிறந்தவளே' என்றும் `தான் கொண்ட காதல் மொழிவதற்கு தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை' என்றும் எழுதினார். பின்னர், ``சைவ முத்தம் கொடுத்தா ஒத்துப் போக மாட்டேன்" என்று சண்டை செய்தார். `நீ முத்தப்பார்வை பார்க்கும் போது என் முதுகுத்தண்டில் மின்னல் வெட்டும்' என்று பார்வையைக் கூட முத்தத்தில் எழுதும் கவிஞனை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும். சைவ முத்தம் போல உதடுகள் இணையும் தமிழ் முத்தம்தான் தகறாரு இல்லையென்று முடிவு சொன்னார். 

இப்படி எத்தனை எத்தனை ஆதூரங்கள். அற்புத கணங்களின் ஒற்றைச்சொல்லாக இருக்கிறார் இவர்.
அவர் பாஷையிலேயே சொல்ல வேண்டுமானால் ``ஐயோ இது தெய்வப்பதமே" 

தெய்வப்பதத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...
உங்கள் வானம் பலரது ரசனைக்கான போதி மரம் வைரமுத்து அவர்களே. 
உங்களுக்கான எனது வார்த்தையை உங்கள் மொழிக்குள்ளேயே அறுவடை செய்துகொள்கிறேன். 

``திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்"