Published:Updated:

``உலகத்துலயே ஸ்ட்ரெஸ்ஸான ரெண்டு வேலைகள் எது தெரியுமா?’’ - இயக்குநர் கே.வி.ஆனந்த்

``உலகத்துலயே ஸ்ட்ரெஸ்ஸான ரெண்டு வேலைகள் எது தெரியுமா?’’ - இயக்குநர் கே.வி.ஆனந்த்

``உலகத்துலயே ஸ்ட்ரெஸ்ஸான ரெண்டு வேலைகள் எது தெரியுமா?’’ - இயக்குநர் கே.வி.ஆனந்த்

``உலகத்துலயே ஸ்ட்ரெஸ்ஸான ரெண்டு வேலைகள் எது தெரியுமா?’’ - இயக்குநர் கே.வி.ஆனந்த்

``உலகத்துலயே ஸ்ட்ரெஸ்ஸான ரெண்டு வேலைகள் எது தெரியுமா?’’ - இயக்குநர் கே.வி.ஆனந்த்

Published:Updated:
``உலகத்துலயே ஸ்ட்ரெஸ்ஸான ரெண்டு வேலைகள் எது தெரியுமா?’’ - இயக்குநர் கே.வி.ஆனந்த்

இயக்குநர் கே.வி ஆனந்த்.... `கனா கண்டேன்', `கோ', `அயன்', `அநேகன்', `மாற்றான்', `கவண்' என ஆறு வித்தியாசமான படங்களை இயக்கியவர். இவரது ஐந்தாயிரம் புகைப்படங்கள் தமிழகத்தின் முன்னணி இதழ்கள் பலவற்றில் இடம்பெற்றிருக்கின்றன. 200 முறை அட்டைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், `தேன்மாவின் கொம்பத்து' மலையாளப் படத்தில் ஆரம்பித்து தமிழ், தெலுங்கு இந்திப் படங்கள் என `சிவாஜி' வரை 15 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அவரிடம் அவருக்கு மன அழுத்தம் மன இறுக்கம் தந்த தருணங்கள், அதிலிருந்து மீண்டவிதங்கள் பற்றிக் கேட்டோம். 

``தோல்விகள்... தோல்விகள்...  தோல்விகள்தாம் என்னை வழிநடத்துச்சு. மேல மேல வரணும்ங்கிற தாக்கத்தை எனக்குள்ள ஏற்படுத்தி என்னை மேலே தூக்கி நிறுத்திச்சு. நான் பத்திரிகையில போட்டோகிராபராக வேலை பார்க்கணும்னுதான் நினைச்சேன். விகடன் மாணவப் பத்திரிகையாளர் தேர்வுல நான் ரிஜெக்ட் ஆகிட்டேன். அதுக்குப் பிறகு `இந்தியா டுடே' பத்திரிகையில் சேரணும்னு முயற்சி பண்ணினேன். 
கடைசியில அதுவும் எனக்குக் கிடைக்கலை. அப்புறம் பத்திரிகையே வேண்டாம்னு முடிவு பண்ணி, கேமராமேன் பி.சி.ஶ்ரீராம்கிட்டப் போய்ச் சேர்ந்தேன்.

எங்க மாமா பையன் ஒரு போட்டோகிராபர். அவனைப் பார்த்துப் பார்த்து எனக்கும் அவனை மாதிரி ஆகணும்கிற வெறி. அப்படி ஆக முடியாமல் ஓர் ஏமாற்றம் வந்தது. அந்த ஏமாற்றம்தான் என்னை அடுத்தகட்டத்துக்கு எடுத்துக்கிட்டுப் போச்சு.
1994-ம் வருஷத்துல `தேன்மாவின் கொம்பத்து'ங்கிற படத்துக்கு கேமராமேனா வொர்க் பண்ணினேன். தேசிய அளவுல சிறந்த கேமராமேனுக்கான விருது கிடைச்சுது. தொடர்ந்து `காதல் தேசம்', `நேருக்கு நேர்', `முதல்வன்'னு  தமிழ்ப் படங்கள், `நாயக்', `காக்கி'னு இந்திப் படங்கள்னு நிறைய வொர்க் பண்ணினேன். `காக்கி' படம் பண்ணும்போது நான் இந்தியாவின் நம்பர் ஒன் கேமராமேனுக்கான சம்பளத்தை வாங்கினேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் பெருமைக்குச் சொல்லலை. ஷாரூக் கான் அவரோட `சுதேசி' படத்துக்குக் கூப்பிடுறார். ஷங்கர் `அந்நியன்' படத்துக்குக் கூப்பிடுறார். கேமராமேனா வரச் சொல்லிக் கேட்கிறாங்க. அமீர் கான் அவரோட படத்துக்குக் கேட்டார். ஆனாலும் என் மனசுல டைரக்‌ஷன் பண்ணணும்னு ஒரு தேடல்...  ஒரு வெறி இருந்துக்கிட்டே இருந்துச்சு. அதனால இந்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் விட்டுட்டு தனியாப் படம் பண்ணணும்னு ஸ்கிரிப்ட் வொர்க்ல இறங்கிட்டேன். 

2004-ம் வருஷத்துல கதையை ரெடி பண்ணிட்டு சூர்யா, மாதவன்னு பல பேர்கிட்ட கதையைச் சொன்னேன். ஆனா, கேட்டவங்க எல்லாருமே `நாவல் மாதிரி இருக்கு சார்’ங்கிறாங்க. சினிமாவுல ஒரு கதை நாவல் மாதிரி இருக்குன்னா படத்துக்குச் சரியா வராது. போரா இருக்குதுனு அர்த்தம். அதே மாதிரி படம் கிளாஸா வந்திருக்குன்னா `பி அண்டு சி'யில இது ஓடாதுனு அர்த்தம். நான் பார்த்த சில புரொடியூஸர்ஸும் இதையே சொன்னாங்க. இப்படித் தோல்விகள் தொடர்ந்துகிட்டே இருக்குது. அப்புறம் சரினு ஒரு புரொடியூஸர் கிடைச்சு, நாலு மாசம் டிஸ்கஷன் போய், லோகேஷன்லாம் பார்த்துட்டு வந்துட்டோம். 

அன்னிக்கு என்னோட பிறந்தநாள் (அக்டோபர் 30-ம் தேதி) வீட்டுல என் வொய்ஃப் ஒரு டின்னருக்கு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. சாயங்காலம் நான் கேக் வெட்டப் போகணும். குழந்தைங்க, அப்பா, அம்மா எல்லாரும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. 
`கனா கண்டேன்’ படத்தோட கதை டிஸ்கஷன் போய்க்கிட்டு இருந்துச்சு. ஆபீஸ்ல என் ரூம்ல இருந்து வெளியே வந்தேன். என் அசிஸ்டன்ட்ஸ் எல்லாம் ஒரு மாதிரியா முகத்தைத் தொங்கப் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க. 

எனக்கு ஏன்னு புரியலை? `இந்த லோகேஷனுக்குப் பத்து நாள்ல போறோம்'னு சொல்லிக்கிட்டு இருக்கேன். அவங்க முகம் மாறவே இல்லை. `ஏம்ப்பா... ஏன் இப்படி இருக்கீங்க?’னு கேக்குறேன். படம் டிராப்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருந்திருக்கு. அதை எப்படி என்கிட்டே சொல்றதுனு யோசிச்சிக்கிட்டு இருந்திருக்காங்க. 

நான் கிடுகிடுனு கீழே இறங்கிப் போய் புரொடியூஸரைப் பார்த்தேன். `சார், பட வேலைகளை இன்னும் நாலு மாசம் கழிச்சு வெச்சிக்கலாம்’னு சொன்னார். சினிமாவுல, `நாலு மாசம் கழிச்சு பார்க்கலாம்’னா, `ஆபீஸைவிட்டு வெளியில போ’னு அர்த்தம். 
`என்ன இன்னும் கிளம்பலையா? எல்லாரும் வெயிட் பண்றாங்க... வாங்க'னு  வீட்டுல இருந்து போன். வளசரவாக்கத்துல இருந்து அடையாறுக்குப் போகணும். டிராஃபிக் ஜாம்ல வீட்டுக்குப் போக ஒண்ணரை மணி நேரம் ஆச்சு. வழியெல்லாம் என்னென்னவோ சிந்தனை. வீட்டுக்கு வந்தா, எல்லாரும் `இந்தப் பிறந்தநாள்ல சார் டைரக்டர் ஆயிட்டார்'ங்கிறாங்க. அவங்ககிட்ட எதுவும் சொல்லாம பொய்யாகச் சிரிச்சேன். 

`இந்தியாவிலேயே நம்பர் ஒன் கேமராமேனா சம்பளம் வாங்கின நாம ரெண்டு வருஷமா யார்கிட்டயும் வொர்க் பண்ணாம, எந்த வருமானமும் இல்லாம டைரக்‌ஷன் பண்றோம்னு எவ்வளவு விஷயங்களை இழந்திட்டோம்’னு ஒரு பக்கம் கவலை. இன்னொரு பக்கம் ஏதோ ஒரு தைரியம். 
`உலகத்துலயே ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸான வேலைனு ரெண்டு இருக்கு. முதலாவது, ஏர்ஃபோர்ஸ் விமானம் ஓட்டுற பைலட் வேலை. இரண்டாவது, திரைப்பட இயக்குநராக இருக்குறது. இது ரெண்டுலயுமே ஒவ்வொரு நிமிஷமும் நிச்சயத் தன்மையில்லாதது. இது... யாரோ ஒரு மேல்நாட்டு அறிஞர் சொன்னதுதான்.    
சினிமாவைப் பொறுத்தவரை மியூசிக் டைரக்டர் மியூசிக் போடுறார்; ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டன்ட் பண்ணுறாரு;  ஆர்ட்டிஸ்ட் நடிக்கப் போறாங்க; டைரக்டருக்கு `ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்... கட்...’ சொல்ற வேலைதான். ஆனா, இதைத் தாண்டி ஏகப்பட்ட பிரச்னைகள். `கோ' படத்துல முதல்ல சிம்புதான் நடிக்கிறதா இருந்துச்சு. `மாற்றான்’ல சூர்யாவோட அப்பாவா பிரகாஷ்ராஜ்தான் நடிக்கிறதா இருந்துச்சு. அப்புறம் வேற ஒருத்தர் பண்ணினார். இதைத் தவிர ஷூட்டிங் ஸ்பாட்டுல ஏகப்பட்ட பிரச்னைகள் முளைக்கும். திடீர்னு லைட்டிங் போயிடும். ஆர்டிஸ்ட் வராமப் போயிடுவார். 

`கோ' படத்துல வர்ற `வெண்பனியே முன்பனியே...' பாடல், சீனாவில மைனஸ் டிகிரியில ஷூட்டிங். யூனிட் கிளம்பிப் போயிடுச்சு. எல்லாருக்கும் விசா கிடைச்சிருச்சு. ஹீரோ ஜீவாவுக்கு மட்டும் கிடைக்கலை. ஹீரோ இல்லாம என்ன பண்ண முடியும்? ஆனா, பாடல் காட்சியைப் படமாக்கிட்டு, அப்புறம் இந்தியாவுக்கு வந்து சி.ஜி.லதான் சரி பண்ணினோம். கடைசி நேர முடிவுகள்...  அதை டைரக்டர்தான் எடுத்தாகணும். 

இப்படிப் பல வெற்றி, தோல்விகளை மாறி மாறிப் பார்க்கும்போது நான் வீடியோ கேம் ஆடுற மாதிரிதான் சினிமா தொழிலை நினைச்சுக்கிறேன். கேம்ல விழுந்துட்டியா? திரும்ப எழுந்து போய் விளையாடு. மறுபடியும் விழுந்துட்டியா? திரும்பவும் எழுந்துபோய் விளையாடு. தோல்விகள்தாம் நமக்கான படிகளை அமைச்சுத் தருது. ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு வீடியோ கேம்தான். அதை நாம எப்படி விளையாடுறோம்கிறதுலதான் நம்ம சக்சஸ் இருக்கு. பிரச்னைகள் வரும். பிரச்னைகள்லயே சிக்கி யோசிக்கிறதைவிட அடுத்த ஆப்ஷனுக்குப் போயிடணும். ஏன்னா, அதை யோசிக்கிறதைவிட அடுத்து அடுத்து செயல்பட ஆரம்பிச்சிட்டோம்னா போதும்'' என்றவரிடம் வேறு என்னென்ன விதங்களில் உங்கள் மன இறுக்கத்தைப் போக்கிக்கொள்வீர்கள் எனக் கேட்டோம். 

``தியானம், கோயிலுக்குப்போய் சாமி கும்பிடுறதெல்லாம் பெருசா கிடையாது. தெய்வ நம்பிக்கையைப் பொறுத்தவரை கடவுள் நம்மை தூக்கிவிடவும் மாட்டார்; இறக்கிவிடவும் மாட்டார். நம்ம கையாலதான் நம்ம தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது இருக்க்கிறது என்று நம்புறவன் நான். 
நிறைய ஊர் சுத்துவேன்.விதவிதமான உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவேன். புதிய புதிய இடங்கள், புதிய மனிதர்கள்னு பார்க்கும்போது மனசு ரொம்ப லேசாகிடும். தனிமை ரொம்பப் பிடிக்கும். 

ஹில் ஸ்டேஷனுக்கு ட்ரெக்கிங் போகப் பிடிக்கும். ஆனா, உலகத்துலயே ட்ரெக்கிங்குக்குத் தடைபோட்டிருப்பது நம்ம தமிழ்நாட்டுலதான். இந்த உலகம் எவ்வளவோ பரந்து விரிஞ்சு கிடக்குது. அதுல நாம ஒரு துளிதான்னு தோணும்.
அப்பா ஸ்டேட் பாங்க்ல இருந்ததால எல்லா பேப்பர்களும் வார பத்திரிகைகளும் வாங்குவார். அதனால சின்ன வயசுலருந்தே நிறையப் படிப்பேன்.  
தினமும் காலையில ஆறு கிலோமீட்டர் நடப்பேன். வேக வேகமாக நடக்கும்போது இதயத் துடிப்பிலிருந்து உடம்போட உள்ளுறுப்புகள் எல்லாமே நல்லவிதமா செயல்பட ஆரம்பிச்சிடும். அது எனக்குப் பெரிய அளவுல எனர்ஜி லெவலைக் கூட்டுது'' என்கிறார் கே.வி. ஆனந்த்.     

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism