Published:Updated:

விவசாயி வீட்டின் 'தடகள சாம்பியன்' ஹீமா... கடைசி 80 மீட்டரில் நிகழ்த்திய மாயாஜாலம்! #HimaDas

ஒரு நாள் ஹீமாவை அழைத்தார் நிப்பான். `எல்லோருக்கும் உன்னைப் போல திறமையை, கடவுள் அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை. விளையாட்டுப் பிள்ளையாய் இருந்து திறமையை வீணடித்து விடாதே ''என்றார் சற்று கண்டிப்புடன். 

விவசாயி வீட்டின் 'தடகள சாம்பியன்' ஹீமா... கடைசி 80 மீட்டரில் நிகழ்த்திய மாயாஜாலம்! #HimaDas
விவசாயி வீட்டின் 'தடகள சாம்பியன்' ஹீமா... கடைசி 80 மீட்டரில் நிகழ்த்திய மாயாஜாலம்! #HimaDas

அசாமில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஹீமாவுக்குத் தடகள வீராங்கனைக்கு ஏற்ற நல்ல உடல் வாகு. தந்தையுடன் சேர்ந்து நிலத்தில் மாடு பூட்டி உழுவார். நாத்து நடுவார், களை பறிப்பார், அறுவடை செய்வார். வேலை நேரம் போக அக்கம்பக்கத்துச் சிறுவர்களுடன் சேர்ந்து காலியாகக் கிடக்கும் வயல்வெளியில் கால்பந்து விளையாடுவாள். ஒருநாள்... ஹீமா கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்த வழியாகச் சென்ற தடகளப் பயிற்சியாளர் ஒருவர் அவளின் ஓட்டத்திறனைக் கண்டு அசந்தார். ஓட்டப்பந்தயத்துக்கு ஏற்ற உடல்வாகு உன்னிடம் உள்ளது. ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டாள் ஜொலிப்பாய்' என்று போகிற  போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார். ஹீமாவின் மனதுக்குள் மின்னல் வெட்டியது. ஹீமாவைத் தடகளம் பக்கம் திரும்ப வைத்தது அந்த வார்த்தைகள்தாம். 

ஹீமாவின் தந்தை பெயர் ரோஞ்சித் தாஸ் தாயார் ஜோமாலி. வீட்டுக்கு இவர்தான் கடைக்குட்டி. அதனால், பெற்றோருக்கு அவர் மீது பாசம் அதிகம். வளர்ந்து விட்ட ஹீமா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கத் தொடங்கியிருந்தார். ஹீமாவின் வேகம்  நிப்பான் என்ற பயிற்சியாளரைக் கவர்ந்தது. `இந்தப் பெண்ணிடம் ஏதோ தனித்திறமை இருக்கிறது என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார். நேராக ஹீமா வீட்டுக்குச் சென்று தந்தை ரோஞ்சித் தாஸை சந்தித்தார், `உங்கள் பெண்ணை கெளஹாத்திக்கு அனுப்பி வைத்தால் என்னால் அவளை மிகச்சிறந்த தடகள வீராங்கனையாக்கிக் காட்ட முடியும்' என்றார். ஹீமாவின் கிராமத்திலிருந்து கௌஹாத்தி நகரம் 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 6 பிள்ளைகளில் கடைக்குட்டியான ஹீமா மீது பெற்றோருக்கு அலாதி பிரியம். `நிச்சயம் என் மகளை அனுப்ப முடியாது' என்ற பதிலே நிப்பானுக்கு முதலில் கிடைத்தது. 
 

நிப்பானோ ஹீமாவின் பெற்றோரிடத்திலிருந்து `நோ ' என்ற வார்த்தையைக் கேட்க விரும்பவில்லை. தன் முயற்சியை நிப்பான் விட்டு விடவும் தயாராக இல்லை. பல முறை ரோஞ்சித் தாஸை அணுகினார். நிப்பானின் முயற்சி ஒருநாள் வெற்றி பெற்றது. ஹீமாவை கௌஹாத்தி நகருக்குக் கொண்டு வந்து சேர்த்தார் நிப்பான். அப்போது ஹீமாவுக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. விளையாட்டுத்தனம் இன்னும் மாறவில்லை. கௌஹாத்தி நகரில் ஹீமாவுக்குப் புதிய வாழ்க்கை. பெற்றோரைப் பிரிந்த தனிமை அவரை வாட்டியது. வீட்டுக்கு ஓடி விடலாமா? என்று கூடத் தோன்றியது. ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்று இளம் மனசுக்குப் புரியவில்லை. பயிற்சியாளர் நிப்பான் கண்கொத்திப் பாம்பாய் மாறியிருந்தார். ஒரு நாள் ஹீமாவை அழைத்த நிப்பான், `எல்லோருக்கும் உன்னைப் போல திறமையைக் கடவுள் அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை. விளையாட்டுப் பிள்ளையாய் இருந்து திறமையை வீணடித்து விடாதே ''என்றார் சற்று கண்டிப்புடன். 

அஸாமிலிருந்து பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்குத் தடகள வீராங்கனைகள் நாட்டுக்குக் கிடைத்ததில்லை. எனவே, ஹீமாவை இன்னொரு பி.டி ஊஷாவாக மாற்றி விடும் முனைப்பில் இருந்தார் நிப்பான். கௌஹாத்தி நகரில் உள்ள ஷாருஜாய் விளையாட்டுக் கழகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஹீமாவை சும்மா ஒரு ட்ரையல்ஸ் மட்டும் ஓடிக் காட்டச் சொன்னார். ஹீமா காற்றுடன் கலந்ததைக் கண்ட அதிகாரிகள் பிரமித்தனர். திறமையைக் கொண்டாடும் பயிற்சியாளரிடமும் நேர்மையான அதிகாரிகளிடமும் ஹீமா பயிற்சிபெற்றதுதான் அவரின் அதிர்ஷ்டம். ஷாருஜாய் விளையாட்டுக் கழகத்தில் பாக்ஸிங், கால்பந்து விளையாட்டுகளுக்கு மட்டும்தான் பயிற்சி பெறுவதற்கான வசதி இருந்தது. தடகளத்துக்கு என்று தனியாகப் பயிற்சி மையம் இல்லை. ஹீமாவுக்கு என்றே பிரத்யேகமாக அனைத்து வசதிகளையும் பயிற்சியாளரும் அதிகாரிகளும் உருவாக்கிக் கொடுத்தனர். 

சரியாகச் சொல்ல வேண்டுமானால் இரு ஆண்டுகளுக்கு முன்தான் ஹீமா முறையாகத் தடகளப் பயிற்சி பெறத் தொடங்கினார். இன்று 18 வயதை எட்டியுள்ள நிலையில் பின்லாந்தில் உலகத் தடகளத்தில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசாத்திய சாதனை படைத்திருக்கிறார். இந்த ஓட்டத்தில் கூட தொடக்கத்தில் அவருக்கு நல்ல `ஸ்டார்ட்டிங்' கிடைக்கவில்லை. எனினும் கடைசி 80 மீட்டரில் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் மாறி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளியதோடு. 51.46 விநாடிகளில் இலக்கை எட்டினார்.  20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் தடகளத்தில் வட்டு எறிதலில் சீமா பூனியா, நவ்ஜித் கவுர் தில்லான் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற பிற இந்தியர்கள். இந்த வரிசையில் ஹீமாவும் தற்போது இணைந்துள்ளார். 

பயிற்சியாளர் நிப்பானை இப்போது கையில் பிடிக்க முடியவில்லை. `நான் அவளை பார்க்கும் போது கிழிந்த ஸ்பைக்ஸ் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தாள். ஜகார்த்தா ஆசியப் போட்டியில் இந்தியத் தொடர் ஓட்டக் குழுவில் ஹீமாவை இடம் பெற வைக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியமாக இருந்தது. ஆனால், அவளோ உலகத் தடகளத்திலேயே தங்கம் வென்று அசத்தியிருக்கிறாள் '' என்கிறார் சர்ப்ரைஸ் சற்றும் குறையாமல்!