Published:Updated:

``ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு மற்றுமொரு ஜாலியன் வாலாபாக் படுகொலை!’’ - பத்திரிகையாளர் தீஸ்தா செடல்வாட்

``ஜாலியன் வாலாபாக் பயங்கரத்தின் 100 வது ஆண்டு நினைவுதினம் வரும் ஏப்ரல் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது அதைத்தான் நினைவுபடுத்துகிறது."

``ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு மற்றுமொரு ஜாலியன் வாலாபாக் படுகொலை!’’ - பத்திரிகையாளர் தீஸ்தா செடல்வாட்
``ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு மற்றுமொரு ஜாலியன் வாலாபாக் படுகொலை!’’ - பத்திரிகையாளர் தீஸ்தா செடல்வாட்

இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்குமா?
ஆம், இருண்ட காலங்களைப் பற்றிய பாடல்கள் இருக்கும்

நாடகவியலாளர் பெர்டோல்ட் பிரெக்ட்டின் முக்கியமான கவிதை வரி இது.    

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவின் உண்மை கண்டறியும் அறிக்கை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உ.வாசுகியின் கட்டுரையுடன் இணைந்து அண்மையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டது. வெளியீட்டு நிகழ்வில், பத்திரிகையாளர்கள் தீஸ்தா செடல்வாட், கவிதா முரளிதரன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னையில் மக்களுக்கு ஆதரவாக இருந்து வரும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் குழுவின் சுப்பு முத்துராமலிங்கம், மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவின் தோழர் செல்வா ஆகியோர் கலந்துகொண்டனர். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். 

2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் அந்த மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு எதிராகவும், அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு எதிராகவும் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக வழக்கு தொடுத்தவர்களில் முதன்மையானவர் தீஸ்தா. தூத்துக்குடி கலவரத்தின் உண்மை வீரியத்தை அவரது பேச்சின் வழியாக உணரமுடிந்தது. புத்தக வெளியீட்டில் இடம்பெற்ற அவரது உரையில்தான் மேலே சொன்ன கவிதை இடம்பெற்றிருந்தது.

``ஜாலியன் வாலாபாக் பயங்கரத்தின் 100 வது ஆண்டு நினைவுதினம் வரும் ஏப்ரல் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது அதைத்தான் நினைவுபடுத்துகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டது, உத்தரப்பிரதேசத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது, தற்போது தூத்துக்குடியில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டது என அத்தனைக்கும் ஒரு தேசியப் பின்னணி இருக்கிறது. மக்களின் போராட்டங்களில் வன்முறையைத் தூண்டிவிட்டு தங்களுக்கான அரசியல் ஆதாயங்களைத் தேடிக்கொள்வதுதான் அது.

மத்தியில் இருக்கும் தற்போதைய ஆட்சி 2014-ல் பதவியேற்றவுடன் நில அபகரிப்பு தொடர்பான ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. அதற்குப் பிறகு, இங்கே நடந்தவற்றை நாம் கவனித்தாக வேண்டும். தமிழ்நாடு உட்பட பி.ஜே.பி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நில அபகரிப்பு தொடர்பான மாநில மசோதா கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் பொதுச் சொத்துகளும் நிலங்களும் தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ஊடகங்கள் இதைப் பற்றி எல்லாம் செய்தியாக்குவது இல்லை. மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பற்றி எழுத வேண்டியவர்கள், மக்களிடையே இருக்கும் தனி மனித வன்மங்களைப் பெரிதுபடுத்திச் செய்தியாக்கிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு கடந்த மார்ச் மாதத்தில் மகாராஷ்ட்ர விவசாயிகள் 40,000 பேர் நாசிக்கிலிருந்து மும்பைவரை பேரணியாக வந்தபோது, அதைப் பற்றி தொடக்கத்தில் எந்த ஊடகங்களும் பேசவில்லை. மும்பை எல்லையை அவர்கள் அடைந்ததும் அது பிள்ளைகளுக்கான பரீட்சைக் காலம் என்பதால் 'இரவில் மட்டுமே நாங்கள் பேரணியாக நடந்து வருவோம்' என்று அவர்கள் அறிவித்த பிறகுதான் ஊடகங்கள் விவசாயிகளின் போராட்டத்தைக் கவனித்தன. ஊடகங்களுக்கு அரசால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஊடகங்கள் விலை பேசப்படுகின்றன. ஊடகங்களின் நிலைமை இப்படியாக இருப்பது ஒரு பத்திரிகையாளராக எனக்கு வருத்தம் அளிக்கிறது. 1949-ல் அம்பேத்கர் பதிவு செய்ததை இங்கே நினைவுகூர வேண்டியிருக்கிறது. 'நாம் அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டாலும் சமூக, சமத்துவ, பொருளாதார விடுதலையைப் பெறவில்லை' என்றார். அந்த நிலை இன்று வரை நீடிக்கிறது. அவர் இயற்றிய அரசியல் சாசனம் எங்குமே பின்பற்றப்படுவதில்லை.

தூத்துக்குடியில் போலீஸூக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரத்தை யார் கொடுத்தது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கூட்டத்தைக் கலைக்க மொத்தம் 39 அரசியல் சாசன விதிமுறைகள் இருக்கின்றன. அதில் எதுவுமே தூத்துக்குடி போராட்டத்தில் பின்பற்றப்படவில்லை. தூத்துக்குடியில் போடப்பட்ட 144 உத்தரவு நிரந்தரமாகவே பல மாநிலங்களில் அமலில் இருக்கிறது. ஒரு காவல்துறை எப்படி இருக்க வேண்டும் என்கிற ஆழமான கேள்வி தூத்துக்குடி சம்பவத்தில் அவர்கள் நடந்துகொண்டவிதத்தைப் பார்த்து எழுகிறது. ஜாலியன் வாலாபாக் தொடர்பான குற்றச்சாட்டில் மூன்று நபர் கமிஷன் ஜெனரல் டயரை விசாரித்தது. விசாரணைக் கமிஷனில் இருந்தவர்களில் என் தாத்தாவும் ஒருவர். டயர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அதுபோன்ற விசாரணை தற்போது தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடத்துவது சாத்தியமா. மக்களைச் சுட்டது யார் என்பதற்கு வீடியோ ஆதாரம் அடங்கிய ஆவணங்கள் நம்மிடம் இருக்கின்றன. அந்த ஆவணங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறி.

மனித உரிமையைப் பாதுகாக்கப் பலர் செயல்படும்போது அவர்கள் மீது அவதூறு வழக்குகள் தொடருவது இங்கே நீட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. 'Urban Naxalite' என்கிற பெயரில் இப்படியானவர்களைக் கைது செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கைது செய்வது கல்லூரிப் பேராசிரியர்களை, கல்வி ஆர்வலர்களைத்தான். சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் சந்திரசேகர் ஆசாத் ராவண் என்கிற இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பீம் ஆர்மி என்னும் இயக்கத்தின் வழியாக 370 பள்ளிகளை நடத்தியதுதான் அவர் செய்த குற்றம். கடந்த மே மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு கலவரத்தைத் தூண்டிவிட்டதாகக் காரணம்காட்டி, அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 29 வழக்குகள் போடப்பட்டன. அனைத்து வழக்குகளிலும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை கொடுத்து வெளியே விட்டது. அரசியல் நோக்கத்தில்தான் அவர் கைதுசெய்யப்பட்டதாக நீதிமன்றம் சொன்னது. ஆனால், பிணையில் வெளிவந்த அன்று மாலையே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்தியக் காவல்துறை எப்படிச் செயல்படவேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. ஒவ்வொரு மாநிலக் காவல்துறைக்கும் தனித்தனியாக விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எந்த ஒரு மாநிலத்திலும் மாஜிஸ்திரேட் உத்தரவு இல்லாமலோ அல்லது துப்பாக்கி ஏந்தவேண்டிய அடிப்படைச் சூழல்கள் இல்லாமலோ காவல்துறையில் எவரும் பொதுமக்களை நோக்கிச்சுட முடியாது. தூத்துக்குடி மாஜிஸ்ட்ரேட்டும் அப்படி கட்டளையிடவில்லை, துப்பாக்கி ஏந்திச் சுடும் அளவுக்கான சூழலும் இல்லை. இதற்காக நான் காவல்துறையில் இருக்கும் அனைவரையும் குற்றஞ்சாட்டவில்லை.

மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் காவல்துறையினரும் இருக்கிறார்கள். அதே சமயம் 22 மே’18-ல் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளி. இந்த நிலையில்தான் சட்ட அமலாக்கத்துறையின் தலையீடு தேவையாக இருக்கிறது. துப்பாக்கிச்சூட்டுக்கு யார் உத்தரவிட்டது என்கிற கேள்வியை அவர்கள் எழுப்ப வேண்டும். உத்தரவிட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கையில் அதிமுக்கியமானதொரு ஆயுதம் இருக்கிறது. அதனை ‘சூ மோட்டோ’ என்பார்கள். எந்தச் சமயங்களில் எல்லாம் அரசு தன்னிச்சையாகச் செயல்படுகிறதோ அப்போதெல்லாம் நீதிமன்றம் சூ மோட்டோவை பிரகடனப்படுத்த ஆற்றல் இருக்கிறது. இமாலய மலைப்பகுதிகளில் கோகோ கோலா மற்றும் பெப்ஸி நிறுவனம்  தன்னிச்சையாக தங்களது விளம்பரங்களை வரைந்ததற்கு எதிராகக் கடைசியாக 2002-ம் வருடத்தில் உச்ச நீதிமன்றத்தில் சூ மோட்டோ கொண்டுவரப்பட்டது,. அந்தப் பிரச்னையைவிட தற்போதைய இருண்ட காலத்தில் நிலவும் பிரச்னைகளின் வீரியம் அதிகம்.  உச்ச நீதிமன்றம் இந்தச் சூழலில் துணிந்து செயல்படாததும் வருத்தமளிக்கிறது.  தோழர்களே! மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்கான தேவை தற்போது எழுந்துள்ளது” என்றார்.     
நூல் பெயர்: ஸ்டெர்லைட் போராட்டம்: அரசு வன்முறை
பதிப்பாளர் : பாரதி புத்தகாலயம்