Election bannerElection banner
Published:Updated:

அண்ணன் இட்ட ஆணை!

அண்ணன் இட்ட ஆணை!

##~##

''ஓவியத்துக்கும் எனக்குமான உறவு 60 ஆண்டுகளைக் கடந்தது. நகைச்சுவை, அழுகை என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் மொழியாக எனக்கு ஓவியம் இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் ஓவியத்துடனே கடக்கிறது!'' - இயல்பாகப் பேசுகிறார் ஓவியர் ராமச்சந்திரன். ஆழ்வார்பேட்டை வின்யாசாவில் இவருடைய ஓவியக் கண்காட்சியை ரசித்தபடியே பேசியதில் இருந்து...

 ''சொந்த ஊர் பட்டுக்கோட்டை. பள்ளியில் படித்ததுகூட நினைவில்லை. படம் வரைஞ்சதுதான் நினைவில் இருக்கு. சிறு வயதில் வீடு, கோயில் என சுவர்களில் என் கைபடாத இடமே இல்லை. கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனக்குப் பழக்கம். அண்ணன் என்றே அழைப்பேன். 10-ம் வகுப்பு முடிச்சுட்டு ஓவியர் ஆசை யில் இருந்த என்னை அவர்தான் சென்னைக்கு அழைத்து வந்தார். ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெரு வில் உள்ள அறை ஒன்றில்தான் தங்கி இருந்தோம்.

அண்ணன் இட்ட ஆணை!

அண்ணன் கவிஞர் மட்டுமில்லை. நகைச்சுவையாகவும் பேசி நடிப்பார். 'அண்ணே, பக்கத்து வீட்டுப் பையன் ஒரு பொண்ணைக் காதலிக்கிறானாம்’னு சொன்னால், 'பருவ மனசு ரெண்டும் துடிக்குது... பரம்பரை வெட்கம் வந்து தடுக்குது’னு அடுத்த நிமிஷம் பாட்டுப் படிப்பார். ஒரு நாள் இரவு நல்ல காரமான ஹோட்டல் சாப்பாடு. காலைக் கடனை முடிச்சிட்டு வந்தவர், 'அண்ணன் காரம் தின்னு காரம் தின்னு ஓரமெல்லாம் எரியுது... அந்தக் கடை செஞ்ச வேலை இப்ப காலையிலதான் தெரியுது’னு அவரின் டைமிங் கவிதையைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை.

என் 22 வயது வரை அவரோடுதான் இருந்தேன். நடிகன் ஆகணும்னுதான் எனக்கு ஆசை. அண்ணன்கிட்ட சொன்னப்ப, 'நடிப்பு உனக்குச் சரிப்பட்டு வராது. அது பெரிய போராட்டம். நீ படைப்பாளியாவே இரு’ன்னார். அவர் சொன்னதை ஏத்துக்கிட்டு ஓவியத்தில் கவனம் செலுத்தினேன். இதுவரை சினிமாவுக்குனு லட்சம் பேனர்கள் செய்து இருப்பேன்.  

அண்ணன் இட்ட ஆணை!

தோணும்போது கவிதை எழுதுவேன்.

அண்ணன் இட்ட ஆணை!

'படித்து முடித்த பின்/மடித்து வைத்த/புத்தகம் போல்/விடிந்தது பொழுது/முடிந்தது கனவு’னு நான் எழுதின கவிதையை அண்ணன் பாராட்டினார். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு கருவை எடுத்துக்கிட்டு வரைவேன். மீனவர்களின் வாழ்க்கையை 3,000 ஓவியங்களில் பதிவுசெய்தது எனக்கே திருப்தி அளித்தது. மண் வெட்டுவது, ஏர் உழுவது, ஏற்றம் இறைப்பது, காய்கறி விற்பது முதல் ஜாக்கெட் போடாத பெண்கள், கோவணம் கட்டிய ஆண்கள் வரை என் ஓவியத்துக்கு உயிர்த் தந்த கருக்களாக இருந்தார்கள்.  

சந்தோஷம், அழுகைனு எப்போதும் தூரிகைதான் எனக்குத் துணை. சாப்பாடு இல்லாத காலகட்டத்திலும் ஆனந்தமா ஓவியம் வரைஞ்சு இருக்கேன். மனசுல எதை உள்வாங்குறோமோ அதுதான் வெளியே படைப்பா வரும். இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்குப்பா. 75 வயசாகுது. காலம், கற்பூரம் மாதிரி கரையாம எனக்கு உதவணும். தூரிகை பிடிச்சுக்கிட்டே என் உயிர் போகணும். இதுதான் என் ஆசை!'' உரத்துச் சொல்கிறார் ராமச்சந்திரன்.

- க.நாகப்பன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு