Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

காவேரி சாரல் சாலையில் தெறிக்கும்!

##~##

  'ஆங்ங்க்க்...’ என்று காமெடியில் வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் நகைச்சுவை நடிகர் பாண்டு, இதுவரை 500 படங்களில் நடித்து இருக்கிறார். ஓவியம் வரைவதிலும் வல்லவரான பாண்டு, இங்கே தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

 ''காவிரிக் கரையில் இருக்குற அழகான ஊர் குமாரபாளையம். ஒரு காலத்தில் அரபு நாடுகளுக்கு லுங்கி ஏற்றுமதி செய்து பெயர் வாங்குன ஊர். இங்கு கைத்தறி, விசைத்தறி ரெண்டும் இருக்கு. ஊர் முழுவதும் நெசவாளர்கள்தான்.

குமாரபாளையம் பழைய போலீஸ் ஸ்டேஷன் பின்னாடி கச்சேரிப் பள்ளிக்கூடம் இருக்கு. அங்கேதான் அஞ்சாம் வகுப்பு வரை படிச்சேன். அப்புறம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிச்சேன். அங்கே பல நண்பர்களும் பல்வேறு அனுபவங்களும் கிடைச்சுது. குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். தொழில்நுட்பக் கல்லூரியின் சேர்மன் இளங்கோவன், சந்திரசேகர், வெங்கடேஷ், ஆர்.இ.ஆர். வெங்கடேஷ், பாலச்சந்தர், அச்சாபீஸ் சண்முகம், ராஜாராம் ஆகியோர் என் நெருங்கிய நண்பர்கள்.

என் ஊர்!

எனக்குப் பாடம் எடுத்ததில் தங்கப்பிரகாசம் வாத்தியாரை மறக்கவே முடியாது. வாட்டசாட்டமா இருப்பார். அன்னைக்கு அவர்தான் எனக்கு ஹீரோ. அவர் எடுத்த பாடம் இன்னும் நினைவில் இருக்கு. நான் ஏழாவது படிக்கும்போது முருகேசம் பிள்ளைனு ஒரு தமிழ் வாத்தியார். இவர் வகுப்பில் தூய தமிழ்ல பேசணும். இல்லைன்னா, அவரோட பிரம்பு பேசும். அவருக்குப் பயந்தே நல்ல தமிழை உச்சரிச்சேன். எனக்குப் படிக்கிற காலத்தில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம். ஒரு முறை தமிழ் வாத்தியார் பாடம் எடுத்துட்டு இருந்தப்ப அவரை வரைஞ்சுட்டு இருந்தேன். எதேச்சையாக் கவனிச்ச அவர், அதைப் பார்த் துட்டு ஓவியம் வரைய ஊக்குவிச்சார். அதே மாதிரி எங்க ஊர்ல இருந்த

என் ஊர்!

ஆர்ட்டிஸ்ட் பாவா சுப்ரமணியமும் நான் ஓவியம் கத்துக்க நிறைய உதவி செய்தார்.  

என் வீட்டுக்குப் பக்கத்துலயே காவிரி ஆறு ஓடும். ஆடி மாசம் வந்துட்டா ஆத்துல ஓடுற வெள்ளம், ரோட்டுல நடக்குறவங்க முகத்தில் தெறிக்கும். நாங்க வெள்ளையன் கடையில் மீன் தூண்டில் வாங்கியாந்து ஆத்துல மீன் பிடிப்போம். கெளுத்தி, கெண்டைனு நிறைய மீன் மாட்டும். ஆறா மீன் பார்க்க பாம்பு மாதிரியே இருக்கும். செம ருசி. சில சமயம் பாம்புகளும் தூண்டில்ல மாட்டி கிலி கிளப்பும்!

எங்க ஊர் ஸ்ரீ முருகன் தியேட்டர்ல தரை டிக்கெட் விலை 25 பைசா, பெஞ்ச் 35 பைசா, சோபா 70 பைசா. நான் எப்பவுமே தரை டிக்கெட்தான். அப்புறம் லட்சுமி தியேட்டர் வந்தது. 'கற்பகம்’ இந்தத் தியேட்டர்ல போட்ட முதல் படம். அது இங்க 100 நாள் ஓடுச்சு. அங்கே ரிலீஸான 'புதிய பறவை’ படத்தை 11 தடவை பார்த்தேன்.

எங்க ஊர்தான் எனக்குக் கற்பனை வளம் கொடுத்துச்சு. பசங்களை  ஒன்றுதிரட்டிக் கதை சொல்வேன். என் கற்பனையிலேயே கதை சொல்றதால, எனக்கு 'டூப்பு பாண்டு’னு பட்டப் பெயர். எங்க ஊர்ல மாரியம்மன் கோயில் பண்டிகை மூணு நாள் நடக்கும். அப்ப கூத்து, நாடகம்னு ஊரே களைகட்டும். எங்க மக்களே நடிப்பாங்க. நாடக நடிகைகளை மட்டும் சேலம் - கல்லாங்கூத்து தெருவில் இருந்து கூட்டி வருவாங்க. 'அரிச்சந்திரா, இழந்த காதல், வீர சிவாஜி, அலெக்சாண்டர்’னு பல நாடகங்கள் நடக்கும். விசில் பறக்கும்.

எப்படி எல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நினைச்சேனோ அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு குமாரபாளையத்துலதான் கிடைச்சுது!''

சந்திப்பு: கி.ச.திலீபன், படம்: கே.கார்த்திகேயன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு