Election bannerElection banner
Published:Updated:

சாதிக்கப் பிறந்தவள் சந்தியா!

சாதிக்கப் பிறந்தவள் சந்தியா!

##~##

ன்னம்பிக்கையின் மறு உருவம் சந்தியா! உருவமோ நோயோ தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று விதியை மாற்றி எழுதிய தைரியசாலி. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் சந்தியாவைப் பார்க்கும் யாருமே அசந்துவிடுவார்கள்.

 தரையில் உருண்டு புரண்டே குழந்தைகளுக்குத் தலைவாரி விடுவது, ஓவியம் வரைவது, எம்ப்ராய்டிங் செய்வது, வகுப்பு எடுப்பது என அத்தனை வேலைகளையும் செய்யும் சந்தியாவின் உயரம், ஒன்றே முக்கால் அடிதான். ஆனால், வயது 18. இவரால் எல்லோரையும்போல் நடக்கவோ, உட்காரவோ முடியாது. எல்லாமே படுக்கையில்தான். எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், சந்தியாவின் எலும்புகள் பிஸ்கட்டைப்போல மென்மை யாக இருக்கும். அடிக்கடி உடைந்துவிடும்.

மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் லாரன்ஸ், ''சந்தியா, பவளத்தானூர் பக்கத்தில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பொண்ணு. 10 வருஷத் துக்கு முன்பு அவங்க அம்மா அவளை இங்க பிசியோ தெரபி பயிற்சி கொடுப்பதற்காக அழைத்துவந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக நாங்களே அவளை இங்கே தங்கவெச்சுக்கிட்டோம். அவதான் எங்க இல்லத்தின் செல்லக் குழந்தை.

சாதிக்கப் பிறந்தவள் சந்தியா!

சந்தியா உட்கார்ந்தா உடலின் எடை தாங்காம எலும்புகள் உடைஞ்சுடும். மூச்சுத் திணறல் வரும். அதனால் படுத்த படுக்கையாத்தான் அவளால இருக்க முடியும். அவளைத் தூக்கினாக்கூட கைக் குழந்தையைத் தூக்குற மாதிரி பார்த்து பக்குவமாத்தான் தூக்குவோம். இப்படி பல பிரச்னை இருந்தாலும், அதை எல்லாம் அவ சட்டையே பண்ண மாட்டா. உருண்டு புரண்டே நிறைய வேலைகள் செய்வா. எங்க இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சந்தியாதான் தொகுப்பாளினி. தினமும் காலையில் எழுந்து எல்லா குழந்தைகளுக்கும் தலை வாரி, மேக்கப் போட்டு விடுறதே அவதான்.

உடல்ரீதியாகத்தான் அவள் பாதிக்கப் பட்டு இருக்காளே தவிர, மனரீதியா நம்ம எல்லோரையும்விட ஆரோக்கியமா இருக்கா. இப்ப சந்தியா எட்டாம் வகுப்பு படிக்கிறா. சந்தியாவுக்கு சிக்ஸ்த் சென்ஸ் உணர்வுகள் அதிகம். ஹாலில் படுத்துட்டு இருப்பா. குழந்தைகள் ஓடி வர்ற சத்தம் கேட்டா, நொடியில் கட்டிலுக்குக் கீழே உருண்டு ஓடிடுவா. இவளைக் குளிக்க வைக்குறதுக்கும், கழிவறைக்குக் கூட்டிட் டுப் போறதுக்கு மட்டுமே ஒருத்தர் உதவி தேவை. மற்றபடி டிரெஸ் பண்ணிக்குறது, மேக்கப் போட்டுக்குறது, சாப்பிடுறதுனு எல்லாத்தையும் அவளே செஞ்சுக்குவா.

சாதிக்கப் பிறந்தவள் சந்தியா!

சந்தியாவால் அதிகம் பேச முடியாது. அப்படியும் விசுவோட அரட்டை அரங்கத்தில் முதல் பரிசு வாங்கி இருக்கா. ஓவியப் போட்டி, கவிதைப் போட்டியிலும் கலக்குறா. ஆனா, தன்னைப் பார்த்து யாராவது பரிதாபப்பட்டா மட்டும் அவளுக்குப் பிடிக்காது!'' என்று நெகிழ்கிறார்.

சந்தியாவுடன் பேசினோம். ''அப்பா வேலாயு தம், அம்மா சுபதினி. எனக்கு சந்தோஷ்  தம்பி யும் சரண்யா தங்கச்சியும் இருக்காங்க. அவங்க எல்லாம் நல்லா படிச்சுட்டு இருக்காங்க. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்துட்டுப் போவாங்க. விவரம் தெரிஞ்சதும்  இப்படி ஒரு குறைபாடு எனக்கு இருக்குனு முதல்முறையா தெரிஞ்சப்ப, கொஞ்சம்  கஷ்டமாத்தான் இருந்துச்சு. அப்புறம் என்னை நானே தேத்திக்கிட்டேன். என்னால முடிஞ்ச வரைக்கும் மத்தவங்க மாதிரியே எல்லா வேலைகளையும் செய்யப் பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கேன். நிறையப் படிக்குறேன்.

இந்த மண்ணுல பிறந்த யாருமே சாகப் பிறந்தவங்க கிடையாது. சாதிக்கப் பிறந்தவங்க! எங்க தலைவர் பிரபாகரன் போல எனக்கும் நிறைய லட்சியம் இருக்கு. என்னைக் கண் கலங்காம அன்பா பார்த்துக்குற இந்த இல்லத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியலை. சீக்கிரம் பட்டப்படிப்பு முடிச்சு, இந்த இல்லத்துக் குழந்தைகளுக்கு டீச்சர் ஆகணும். அதுதான் நான் இவங்களுக்குக் காட்டுற நன்றிக் கடன்!'' பக்குவமும் நிதானமு மாகப் பேசுகிறார் சந்தியா.

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு