Election bannerElection banner
Published:Updated:

அன்போடு கொடுப்பதுதான் பரிபூரணம்!

அன்போடு கொடுப்பதுதான் பரிபூரணம்!

##~##

''எந்தக் குழந்தையும் பிறக்கும்போது ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும். அதற்குத் தாயின் உடல் வலுவாகவும், மனம் மகிழ்ச்சியாகவும் இருப்பது அவசியம். இன்று இந்தச் சூழல் வறியவருக்கு வாய்ப்பது இல்லை. அந்தக் குறையை நாங்கள் போக்குகிறோம்!''- மயிலிறகு வருடலாக மிருதுவாகப் பேசுகிறார் கோவை - சிவசாந்தா தாய் - சேய் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் நிர்மலா!

 சிவசாந்தா தாய் - சேய் மருத்துவமனையைக் கோயிலாக வணங்குகிறார்கள் கோவைவாசிகள். பல்வேறு துறைகளில் சேவை செய்துவரும் கோவை அன்னலட்சுமி குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இந்த மருத்துவமனை. கோவை மருதமலை சாலையில் உள்ள நியூ தில்லை நகரில் இருக்கிறது சிவசாந்தா. இங்கு சிகிச்சை பெறுவோர் அவரவர் வசதிக்கு ஏற்ப இயன்றதைக் கொடுத்தால் போதும். இல்லாதவர்கள் ஒற்றை நாணயம் கொடுத்தாலும் புன்னகையுடன் வாங்கிக்கொள்கிறார்கள்.

அன்போடு கொடுப்பதுதான் பரிபூரணம்!

''எங்க குரு சாந்தானந்த சரஸ்வதி, 'சேவை, அன்பு, கொடு’ ஆகிய மூன்று விஷயங்களை எங்க மனசுல கல்வெட்டுபோல செதுக்கி இருக்கார். ஒருத்தர் மேல அன்பு இல்லாம எதையும் முழு மனசா கொடுக்க முடியாது. அன்பு நிறைஞ்ச மனசோட கொடுக்கிற போதுதான் சேவை பரிபூரணமாகும். இதைச் சொல்லிக் கொடுத்த எங்க குரு, 86-ம் வருஷம் சிவாஞ்சலி என்கிற அறக்கட்டளையை நிறுவினார். இயன்ற வரை இலவச உணவு, இலவச மருத்துவம் அளிப்பதுதான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.

அன்போடு கொடுப்பதுதான் பரிபூரணம்!

சிவசாந்தா மருத்துவமனை ஏழ்மையான கர்ப்பிணிப் பெண்களின் நலனை மனதில்கொண்டு உருவானது. நல்ல உடல் மற்றும் மன நிலையில் ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்து, வளர்ந்தால்தான் எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பது எங்க குருவின் தீர்க்க       மான எண்ணம். அதனால் 'மூன்று மாதம் முதல் மூன்று வருடம் வரை’னு ஒரு திட்டத்தை ஆரம்பிச்சார்.

மூன்று மாசக் கர்ப்பிணிப் பெண்கள் இங்கே வந்தா போதும். குழந்தையோட மூன்று வயசு வரைக்கும் தாய் -சேய் ஆரோக்கியத்துக்கு நாங்க பொறுப்பு ஏத்துக்குறோம். கருவில் உள்ள குழந்தையின் இதயத் துடிப்பை அறிவதற்கான இ.சி.ஜி., அல்ட்ரா ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, வைட்டமின் மாத்திரைகள், சத்தான உணவு, முடிந்தவரை சுகப் பிரசவம், இயலாத நிலையில் அறுவை சிகிச்சை, பிறந்த சிசுக்கான தடுப்பூசிகள், மூன்று வயது வரை அந்தக் குழந்தைக்கான ஊசிகள்னு படிப்படியான நிலைகளில் பக்குவமான பராமரிப்பு அளிக்கிறோம். சிகிச்சைக்கு விருப்பப்பட்ட பணத்தைக் கொடுத்தா போதும். மிகவும் விலை உயர்ந்த மருந்துகளை கணிசமான தள்ளுபடி விலையில் கொடுக்கிறோம். பல விஷயங்கள் முற்றிலும் இலவசம். கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்லதையே நினைத்து, நல்லதையே செய்தல் முக்கியம். அதுக்காக மனநல ஆலோசனையும் தர்றோம். ஒரு அம்மா தன்னோட கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்துக்கிற மாதிரிதான் நாங்களும் பார்த்துக்குறோம்.  

அன்போடு கொடுப்பதுதான் பரிபூரணம்!

ஒவ்வொரு வியாழக்கிழமை காலையில அக்குபஞ்சர், அக்குபிரஷர் சிகிச்சைகள் இலவசம். ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்துறோம். இங்கே வர்றவங்களும் இலவசமா காரியத்தைச் சாதிச்சுட்டுப் போயிடலாம்னு நினைக்கிறது இல்லை. பரஸ்பர நிம்மதி, சந்தோஷத்தோடயே எல்லாம் நடந்துட்டு இருக்குது. தினப்படி வருமானத்தைவெச்சுதான் இந்த மருத்துவ மனையை நடத்துறோம்.

பல வசதியான கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் இங்கே வந்து பிரசவம் பார்த்துக்குறாங்க. அவங்க நன்கொடை கொடுக்குறாங்க. அதேபோல, 'இன்னிக்கு என் பிறந்த நாள். ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கான செலவை ஏத்துக்குறேன்’னு சொல்லி நிதி உதவி பண்றவங்களும் இருக்காங்க. எல்லாம் எங்கள் குருவின் ஆசீர்வாதம்!'' என்கிறார் ஆத்மார்த்தமாக.

மழை பொழியும் மகத்துவம் உணர்ந்து விடை பெற்றோம்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு