Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்

தகர ரயிலும்...ஸ்ரீராம் பாப்புலர் சர்வீஸும் !மானா.பாஸ்கரன்

##~##

'கடல்புரத்தில்..’, 'எஸ்தர்’ போன்ற காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளால் தமிழ் இலக்கிய அன்னைக்குப் பெருமை சேர்த்த எழுத்தாளர் வண்ணநிலவன் தன் சொந்த ஊரான 'தாதன் குளம்’ பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்...

'திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையில் உள்ள இருப்புப் பாதையில் உள்ள ஊர் தாதன்குளம். அப்ப எல்லாம் எங்க ஊருக்கு 'ஸ்ரீராம் பாப்புலர் சர்வீஸ்’ங்ற பெயரில் ஒரே ஒரு பஸ் காலையிலும், சாயங்காலமும் வந்து போகும். மத்த நேரங்கள்ல பக்கத்துல கருங்குளத்துல இறங்கி நடந்துதான் வரணும்.

என் சின்ன வயசில் தாதன்குளத்தில்தான் படித்தேன். அப்புறம்தான் திருநெல்வேலி சாப்டர் பள்ளிக்கு மாறினேன். எங்க தாத்தா இலங்கைக்குச் சென்று கொழும்பில் ஹோட்டல் நடத்தியவர். அதனால, 'கொழும்புப் பிள்ளை வீடு’ன்னு எங்க வீட்டைச் சொல்வாங்க. அவர் சட்டை போட்டு நான் பார்த்ததே இல்லை. அதுவும் அவரோட அடையாளம்தான். தாதன்குளத்தில் பூவலிங்க சாமி கோயில் ரொம்ப விசேஷம். பெருசா சிலை வடிவத்துல சாமி இருக்காது. சின்ன லிங்கம்தான். தானே வளர்ந்ததுன்னு சொல்வாங்க. அதுதான் எங்க குலதெய்வம். இந்த சாமிக்கு பங்குனி மாசத்துல உத்திர திருவிழா கனஜோரா நடக்கும். நாங்க சாஸ்தா கோயில்னு  சொல்வோம்.

என் ஊர்

எங்க ஊர்ல பகல்ல ஜனநடமாட்டத்தையே பார்க்க முடியாது. எல்லா ஜனங்களும் காட்டு வேலைக்குப் போயிடுவாங்க. அப்ப எல்லாம் பருத்தி ஏகத்துக்கு விளைஞ்சு நிற்கும். பருத்தி சாகுபடிதான் எங்க ஜனங்களோட பொருளாதார  ஆதாரம்.

என் முதல் நண்பன் சங்கரபாண்டி. என் வீட்டுக்குப் பக்கத்துலதான் அவன் வீடு. அவன் தகரத்தில் செய்த ரயில் வெச்சு விளையாடிட்டு இருப்பான். அந்தத் தகர ரயிலுக்காகவே அவன்கூட சிநேகமானேன் நான்.

என் ஊர்

எங்க வீட்டுக்கு அடுத்த தெருவில் சாத்தப்பானு ஒரு மிலிட்டரிகாரர் இருந்தார். சாயங்காலம் ஆனா தெரு பசங்களை கூட்டிவெச்சு மிலிட்டரி கதைகளாச் சொல்வாரு. தாதன்குளத்துல ரொம்ப ஸ்பெஷல் முஸ்லிம் வீடுகள்தான். முஸ்லிம் தெரு பெருசா இருக்கும். அங்க வீடுகள்லாம் அப்பவே பெரிய பெரிய பங்களா மாதிரி இருக்கும். எல்லா வீடுகள்லயும் மார்பிள் போட்டு தரை மினுமினுங்கும்.

என் ஊர்

இப்போ எங்க ஊர் ரொம்பவே மாறிப்போச்சு. தனியார் பள்ளிக்கூடம் நிமிர்ந்து நிக்குது. ஆட்டோ, டுவீலர், கார், பஸ்னு பரபரக்குது. கொஞ்ச காலத்துக்கு முன்னால குலதெய்வத்துக்குப் படையல் போடப் போயிருந்தேன். ஊர்ல தெரிஞ்சவர்னு எங்க அப்பாவோட நண்பர் கொம்பையாத் தேவர் மட்டும்தான் இருந்தார்.

தாதன்குளம் பக்கத்து ஊர்ல 'லீகல்’னு ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. எங்க ஊர்ல இருந்து நடந்தே போயிடலாம். அந்த டூரிங் டாக்கீஸ்ல கொம்பையாத் தேவர்தான் மேனேஜர். படம் பார்க்கப் போற எங்க குடும்பத்து ஆளுக யார்கிட்டேயும் காசு வாங்கிக்க மாட்டார். நிறைய படம் பார்த்து இருக்கேன். அங்கு பார்த்த கறுப்பு-வெள்ளை படங்களை இப்பவும் மறக்க முடியலை. எங்க தாத்தா, அப்பா ரெண்டு பேரும் காங்கிரஸ்காரங்க. நான் சொல்றது பழைய காங்கிரஸை. அதனால எங்க வீட்டுக்கு நல்ல மரியாதை. அப்பா எழுத்தாளர் கல்கியின் ரசிகர். எங்க தாதன்குளம் வீட்டைவிட்டு நாங்க வர்ற வரையில் எங்க வீட்டு முகப்புல 'கல்கி’ படத்தை அப்பா மாட்டிவெச்சு இருந்தார்.

என் ஊர்
என் ஊர்

இன்று - சென்னை பெருநகரத்தில்... புழுதிக் காற்றில்... அடுக்ககத்தின் அனல் மூச்சுகளில்... எப்போதாவது ஞாபகப் பறவை பறந்து சொந்த ஊரில் போய் உட்கார்ந்துகொள்ளும். அதான் எனக்கான இளைப்பாறல்!''  

-மானா.பாஸ்கரன்
படங்கள்:எல்.ராஜேந்திரன், ச.இரா.ஸ்ரீதர்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு