Election bannerElection banner
Published:Updated:

பறவையே எங்கு இருக்கிறாய் ?

குள.சண்முகசுந்தரம்படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

##~##

பிரசன்னா - பள்ளிப் பருவத்திலேயே பறவைகளை படிக்கக் கிளம்பி இருக்கும் 14 வயது சிறுவன்! படிப்பது ஒன்பதாம் வகுப்பு. ஆனால், பறவைகளைப் பற்றி பி.ஹெச்டி. செய்யும் அளவுக்கு அனுபவம்.  

பிரசன்னா கேமரா பிடித்த கதையைச் சொல்கிறார் அவனுடைய அப்பா மணிவண்ணன். ''நானும் எனது டாக்டர் நண்பர்களுமாகச் சேர்ந்து தேனியில் 'வனம் டிரஸ்ட்’னு ஓர் அமைப்பை நடத்திட்டு இருக்கோம். வன விலங்குகளைப் பாதுகாப்பது குறித்து மலைவாழ் மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதுதான் அதன் பணி. இதற்காக பெரியாறு ரிசர்வ் காட்டுக்குள் வருஷத்துக்கு நாலு முறையாவது கேம்ப் போடுவோம். அப்படிப் போகும்போது அங்கே கண்ணில்படும் விலங்குகளை போட்டோ எடுத்துட்டு வந்து இவன்கிட்டே காட்டுவேன். அதைப் பார்த்துட்டு 'நானும் காட்டுக்கு வருவேன்’னு அடம்பிடிச்சான்.

பறவையே எங்கு இருக்கிறாய் ?
பறவையே எங்கு இருக்கிறாய் ?

காட்டுக்குள்ள அலைய உடல்ல தெம்பு வேணும். நிறைய அனுபவம் வேணும். இவனை அடர்ந்த காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போகாம ஊரை ஒட்டி இருக்குற காடுகளுக்குக் கூட்டிட்டுப்போனேன். அங்கே விலங்குகளைப் பார்க்க முடியாதே.. அதனால பறவைகளைத் தேடித் தேடி  போட்டோ எடுத்தோம். அப்படித் தேடுறது இவனுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பறவைகளைத் தேடிக் காட்டுக்குள்ள கிளம்பிருவான். வித்தியாசமான பறவைகளை போட்டோ எடுக்குறதுக்காக மணிக்கணக்கில் காத்து இருப்பான். கடந்த ஒரு வருஷத்துல மட்டும் சிவகங்கை மாவட்ட வனப் பகுதிகளில் 78 வகையான பறவைகளை போட்டோ எடுத்து இருக்கான். இது இல்லாமல் பெயர் தெரியாத 30- க்கும் மேற்பட்ட பறவைகளையும் போட்டோ எடுத்து இருக்கான்!'' என்று பெருமிதப்படுகிறார் மணிவண்ணன்.

பறவையே எங்கு இருக்கிறாய் ?

பறவைக் கதை சொல்லத் தொடங்கினான் பிரசன்னா. ''சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிற வேட்டங்குடி சரணாலயம்தான் பறவைகளின் சொர்க்க பூமி. இனப் பெருக்கத்துக்காகத் தங்கள் ஊருக்கு வந்து போகும் அந்தப் பறவைகளுக்கு, கிராம மக்கள் பக்க பலமா இருக்காங்க. பறவைகள் பயப்படக்கூடாதுன்னு தீபாவளிக்குப் பட்டாசு கூட வெடிக்கிறது இல்லை.

பறவையே எங்கு இருக்கிறாய் ?

நான் போட்டோ எடுத்துட்டு வர்ற பறவைகளின் பெயர்களை சலீம் அலி எழுதி இருக்கிற புத்தகத்தைப் புரட்டிக் கண்டுபிடிச்சிருவேன். சாப்டூர் ஜமீன்தார் ராம்குமாருக்கு பறவைகளைப் பற்றிய விஷயங்கள் அனைத்தும் அத்துபடி. சில நேரங்களில் சலீம் அலியின் புத்தகத்தில் இல்லாத புதிய வகை பறவைகளும் கேமராவில் சிக்கிரும். அந்த போட்டோக்களை ஜமீன்தாருக்கு அனுப்பி வெச்சுருவேன். அவர் அதைப்  பற்றிய விஷயங்களை எனக்கு அனுப்பிவைப்பார். பறவைகளைப் பாதுகாப்பது சம்பந்தமா காரைக்குடியில் ஒரு கண்காட்சியை நடத்த இருக்கிறோம். அடுத்து இந்திய அளவிலும் அரிய வகை பறவைகளைத் தேடிக் கண்டுபிடிச்சு க்ளிக் பண்ணணும். பறவைகளைப் பற்றிய என்னோட போட்டோகிராஃபி பயணம் ஆயுளுக்கும் நிற்காது!''

பிரமிக்கவைக்கிறான் பிரசன்னா!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு