Election bannerElection banner
Published:Updated:

"அனுராகக் கருக்கின் வெள்ளம்.. ஆண், பெண் பற்றிய படைப்புகள் தொடர்வது இதனால்தான்!" மலையாள கிளாஸிக் பகுதி 18

"அனுராகக் கருக்கின் வெள்ளம்.. ஆண், பெண் பற்றிய படைப்புகள் தொடர்வது இதனால்தான்!" மலையாள கிளாஸிக் பகுதி 18
"அனுராகக் கருக்கின் வெள்ளம்.. ஆண், பெண் பற்றிய படைப்புகள் தொடர்வது இதனால்தான்!" மலையாள கிளாஸிக் பகுதி 18

`மலையாள கிளாசிக்' தொடரின் 18-வது பகுதி. `அனுராகக் கருக்கின் வெள்ளம்' படம் குறித்த கட்டுரை.

உலகம் பெரியது. கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்து போகவேண்டிய இந்த பூமியில் கதைகளும்கூட அப்படிக் கொட்டிக் கிடக்கின்றன. இன்ன கதை மட்டுமே சொல்லவேண்டும், அது மட்டுமே கலை என்பதை எந்தத் தரப்பிலிருந்து கூவினாலும், அது மைனாரிட்டியின் முனகல்தான் என்று படுகிறது. ஒரு ஆள் நீலப்படம்தான் எடுக்கத் துணிகிறார் என்றால், அவர் நினைத்ததைக் கொண்டு வந்திருக்கிறாரா என்பதுதான் அவரது சரக்கைப் பற்றின அளவுகோல். மட்டமாய் படுகிற படங்களிலிருந்து விலகுவது அவரவர் விருப்பமாகும் இல்லையா... காதல் படங்களைப் பற்றி பல பொருமல்கள் உள்ளன. அது ஒரு வேஸ்ட் விவகாரம் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், உலகில் எவ்வளவு சொன்னாலும் தீர்க்கப்படாத காரியம் ஆண் பெண் உறவுகளாகத்தான் இருக்கும். ஒரு தேசம் முழுக்க முழுக்க அறிவும் விழிப்பு உணர்ச்சியும் பெற்று புரட்சிகளால் விடுதலையை அடைந்தால்கூட ஆணோ பெண்ணோ தனது இணையின் முன்னால் பேத்தல்களை நிகழ்த்தாமல் தவிர்த்து நகர்ந்து செல்கிற முதிர்ச்சி தெரியுமா என்பது சந்தேகம்தான். எனவே, நான் காதல் கதைகளின் பக்கம். `அனுராகக் கருக்கின் வெள்ளம்' படத்தில் அதற்கான விவாதங்கள் இருக்கின்றன. 

இத்தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் !

அதைவிடவும் சுவாரஸ்யமாய் ஒரு வரியைச் சொல்கிறார்கள். ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ... காதல் எதையாவது ஒன்றைக் கொடுக்காமல் போகாது என்பதுதான் அது. ஒரு மனிதன் தனது பிழைப்புப் பயணத்தில் மூச்சிரைத்துப் போகும்போது ஒரு சங்கீதப் பின்னணி அவசியம். அட்லீஸ்ட் வலிக்கிற கால்களை வருடிக்கொள்ள உட்காரும்போது மனதை மீட்ட வேண்டி வரலாம். அதற்கு ஒரு முகம் வேண்டாமா?

அபிலாஷ் ஒரு ஆர்க்கிடெக். வழக்கம்போல காசுண்டாக்குகிற ஓட்டத்தில் மிகுந்த குழப்பத்துடன் இருக்கிறான். அவனுக்குக் காதல் இப்போது கசக்கிறது. எலிசபத் என்கிற எலியின் டார்ச்சர். இப்போ நீ எங்க இருக்கே, சாப்பிட்டியா, தூங்கிட்டியா, இன்டர்வியூக்குப் போகலையா, எத்தனாவது படிக்கட்டுல ஏறிகிட்டிருக்க, எனக்கு வயித்து வலி அதனால முத்தம் குடு... போன்றவைகள் அவனுக்கு எரிச்சலை மூட்டுகின்றன. ஒரு காலத்தில் சூடும் சுவையுமாக இருந்த ஒன்று, இப்போது அவனைப் பொறுத்தவரை ஆறி அடங்கிவிட்டது. நண்பர்களும் விட்டுத்தொலை என்றுதான் உபதேசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் தனது வீட்டுக்கே வந்து விட்டுப்போன குறும்புகள் எல்லாம் ரசிக்கும்படியாய் இல்லை, டூமச்சாகப் போகிறது என்று நினைக்கிறான். அவளைத் தவிர்த்துக்கொண்டே இருக்கிறான்.

ஒருநாள் பிரேக்கப்கூட சொல்லியாற்று.

அபியின் அப்பா ரகு. போலீஸ் அதிகாரி. ஒருநாள் ஒரு கிராஸிங்கில் தனது மாஜி காதலியைப் பார்த்துவிடுகிறார். மறைந்துபோன நதியாய்  ஒரு காதல் பெருக்கெடுக்கிறது. அவர் அலைக்கழிக்கப்படுகிறார். நண்பனைக் கதை சொல்லிக் கொல்கிறார். அவருக்கு அவளது போன் நம்பர் வேண்டும். அதற்கான முயற்சிகளில் பல குழப்படிகள் நடந்து, அவருக்குக் கிடைப்பது எலியின் நம்பர். அபியுடன் பிரேக்கப் ஆகி, சரக்கெல்லாம் அடித்து பாத்ரூமுக்குள் உட்கார்ந்து ஓவென்று அழுது, ஒருநாள் அபியுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது இருந்த வீராப்பில், அபியின் அப்பா ரகுவிடம், செல்போனில் நானேதான் உங்கள் அனுராதா என்று சாதித்து விடுகிறாள். ரகு பயங்கர ஹாப்பி. இடைவிடாமல் அவளிடம் கடலை போட்டுக்கொண்டிருக்கிறார்.

அபிக்கு ஆத்திரம். அவளைக் கட்டுப்படுத்த முடியாது.

எலி அவரிடம் பேசுவதே வேறு.

அதன்படி ரகு, வீட்டில் ஒரு பிராப்பர்ட்டி மாதிரி கிடந்து, எந்திரம் போலவே சுழன்று வேலை செய்தவாறிருந்த தனது மனைவி சுமாவை அவர் முதலிலிருந்து பார்க்க ஆரம்பிக்கிறார். மகனையும் மகளையும் திருட்டுத்தனமாகக் கடந்து, வெட்கத்துடன் சொந்த மனைவியை முத்தமிட்டு தாங்க்ஸ் என்கிறார். மசாலா தோசை வாங்கித் தருகிறார். பெட்ரூமில் கர்ணகொடூரமாய் பாடுகிறார். கடைக்குப் போய் வருகிறார். மொத்தத்தில், இல்லறத்தில் மாற்றம். மகன் என்ன செய்கிறான் என்பதிலும் அக்கறை வருகிறது. எலி அவரைத் தலைகீழாக மாற்றியிருக்கிறாள். இதற்கிடையே பிரேக்கப் என்பதை அபியிடமே உறுதி செய்துகொண்டு கிச்சு என்கிற ஒரு அசடு எலியை முற்றுகையிட்டு, அவளிடம் எப்போதும் சாப்பிட்டியா, தூங்கினியா, போய்ச் சேர்ந்துட்டியா கேட்டுக்கொண்டிருக்கிறது. அவள் அவனிடம் மரியாதையாய்தான் நடந்து கொள்கிறாள்.

ஒரு கட்டத்தில் அபி எலியை உணர்ந்தவாறே இருக்கிறான். கிச்சுவை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. அவளே அவனை மணக்க சம்மதித்துவிட்டதாய் கேள்வி. அபி தனது தொழிலில் தெளிவு பெற்று எலியுடன் சேர்ந்து சில இலக்குகளில் பயணிக்கிறான். அவளது நெருக்கம் இப்போது அவனுக்குப் பரவசமாய்த்தானிருக்கிறது. ரகுவின் காதல் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்து, கடைசியாய் எலி அவரிடம் உண்மையைச் சொல்கிறாள். அவர் நொறுக்கிப் போனாலும், ஆறுதல் செய்ய சுமா இருக்கிறாள் என்பது ரொம்ப முக்கியம்.

கல்யாணத்துக்குச் சென்று எலியைத் தடுத்து நிறுத்தமுடியுமா என்று அபியும் நண்பனும் முயற்சி செய்ததில், போலீஸிடம் வேறு ஒரு காரியத்துக்காகச் சிக்கிக்கொள்கிறார்கள். ரகு அவனை அறைந்த பின்னர் விசாரிக்கிறார். மகனுக்கு எலியின் மீதுள்ள காதல் புரிய, மீண்டும் கல்யாணத்துக்கு விரைகிறார்கள். அது முடிந்துவிட்டது. ரகு கிச்சுவைப் பிடித்து வைத்துக்கொள்ள, அபி எலியிடம் பேசுகிறான். அவளது அன்பை எடுத்துக்கொள்ளாததற்கு எல்லாக் கோணங்களிளிலும் மன்னிப்பு கேட்டுவிட்டு சடாரென மவுத் கிஸ்கூட அடிக்கிறான். அப்பா சொல்லிக் கொடுத்த தந்திரம். ஒரு பெண் ஒரு முத்தத்தில் உருகி, எல்லாம் மறந்து தனது பழைய காதலுக்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது இல்லையா? கிச்சு பாவம், அவனுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. எலி மயங்கித் ததும்ப எல்லாம் இல்லை, பளாரென்று ஓர் அறை வைக்கிறாள். கல்யாணம் நடப்பதற்கு முன்னால் சொல்லியிருந்தால், ஓடி வந்திருப்பேனே? என்று சிறிது அழுதுவிட்டு, அப்புறம் விடை சொல்லிக்கொண்டு அசட்டுச் சிரிப்பு சிரிக்கிற கிச்சுவோடு கிளம்பிச் செல்கிறாள்.

மகனும் அப்பாவும் தத்துவம் பேசிக்கொண்டு திரும்புகிறார்கள்.

இப்போது ஒரு கிராஸிங். மறுபடியும் அனுராதா. அப்பனும் மகனும் துரத்துகிறார்கள். அந்தப் பெண் அனுராதாவே அல்ல. காதலியைப் பற்றின நினைவு லட்சணம் அப்படி இருந்திருக்கிறது. மச்சத்துக்காகத் துரத்தியிருந்திருந்து, இப்போது வெட்கப்படுகிறார். அப்புறமென்ன, திரும்பி வந்து ஓர் ஒதுக்கமான இடத்தில் அவர்கள் இருவரும் காதலைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதுடன் படம் முடிகிறது.

`அனுராகக் கருக்கின் வெள்ளம்' என்றால், காதலின் தேங்காய்த் தண்ணீர் என்று பொருள். இனித்துக் கிடக்கிற தண்ணீர். படத்தின் காட்சிகள் அனைத்துமே சுவாரஸ்யமானவை. 

மிகவும் சுளுவான திரைக்கதை. பாத்திரங்களை மிக நேர்த்தியாகக் கையாண்டிருப்பார்கள். பக்ருதீன், சோனி போன்ற நண்பர்களை கதைக்குள் வைத்திருந்தது மிக அழகாக இருந்தது. அவர்களைப் பங்களித்த வைத்த முறை திரைக்கதையின் வளமென்றே சொல்லவேண்டும். உப கதாபாத்திரங்கள் ஒன்றுமே சோடையில்லை. மற்றும் விசேஷங்களுடனும் இருந்தது. எழுதியவர், நவீன் பாஸ்கரன்.

ஒரு சிறிய படம்தானே என்று எந்தத் தொழில் நுட்பங்களிலும் குறை வைத்திருக்கவில்லை. நமக்குப் பிடிக்கக்கூடிய ஒளிப்பதிவு.

வெறுப்பேற்றாத இசை, பாடல்கள்.

நடிப்பைப் பற்றி சொல்லவேண்டுமென்றால், வாய் ஓயாமல் பேசி, சண்டை போட்டு, கதறிக் கூச்சலிட்டு தன்னை ஓர் அசல் பெண்ணாகவே வைத்துக்கொண்டுவிட்ட ரஜீஷா விஜயனைத்தான் முதலில் சொல்லவேண்டும். அவரை மறந்தும் ஒரு பெர்ஃபாமென்ஸ் பண்ணிக்கொண்டிருக்கிற ஒரு நடிகையாய் கொண்டுவிட முடியாது. பெரிய அழகி என்று சொல்லமுடியாத போதும், அவரது நடத்தையால் அவர் உட்கார்ந்து கொள்கிற சிம்மாசனம் பக்கா. சுமாவாக, ரகுவின் மனைவியாக வந்த ஆஷா சரத்தின் புன்னகை அந்தக் குடும்பத்தைத் தாங்கும் பலம். பிஜூ மேனன் தனது ஆகப்பெரிய இறுக்கங்களையெல்லாம் களைந்து ஜோதியில் கலப்பது நடந்தது பல இடங்களிலும்!. அதுவே வியப்புதான். நான் அனுவைக் கட்டுவதற்காகத்தான் போலீஸ் ஆனேன். இல்லையென்றால் மனுஷங்க யாராவது அந்த வேலைக்குப் போவாங்களா என்று கேட்கிற போலீஸாக அவர் பொருத்தமாகவே இருந்தார்.

அபி என்கிற பையன் இன்றைய ஆள். அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதில் ஒருவன். அவனுக்கு விடுதலை வேண்டும் என்றிருக்கிறது. ஆனால், எதிலிருந்து விடுதலை என்பது தெரியாது. அந்தக் குழப்பமான இளமையின் துருதுருப்புடன் படபடவென்றிருக்கிற ஒரு கேரக்டரில் ஆசிப் அலி சரியாகவே அமர்ந்திருக்கிறார்.

மணியன் பிள்ளை ராஜு எப்போதே தன்னை நிறுவிக்கொண்ட சீனியர் நடிகர்களில் ஒருவர். அவருக்கு இந்தப் படத்தில் எலியின் அப்பாவாக ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சர்வ சாதாரணமாய் ஊதித் தள்ளுகிறார்.

இவர்கள் எல்லோரையும்விடவும் பக்ருதினாக செய்த சௌபின் சாகிரைப் பற்றித்தான் நிறையச் சொல்லவேண்டும். அநேகமாய் அவர் தனது நகைச்சுவையை, நிகழ்த்திக் காட்டுவதில்லை. அவர் கதாபாத்திரமாக மட்டுமே இருக்கிறார். அப்படி இருந்தே அதன் வேறு விதமான பரிமாணங்களைக் காட்டுவதன் மூலம் மக்களை சிரிக்கத் தூண்டுகிறார். முக்கியமாக, அவருக்கு வருகிற சந்தேகங்கள். கொஞ்சம்கூட அலட்டிக் கொள்வதில்லை. இது மலையாள நகைச்சுவைக்குள் புதிய உத்தி என்றே படுகிறது. இறுதிவரையில் அவருடைய கேரக்டருக்குள்ளிருந்து அவர் கொஞ்சமேகூட நகர்ந்துகொள்வது இல்லை. பின் வரும் காலத்தின் முக்கியமான நடிகராக சௌபின் நிலைக்கப்போகிறார்.

படத்தின் இயக்குநர் காலித் ரஹ்மான். இவருடைய முதல் படம் இது. 

ஆனால், மிக முக்கியமான படங்களில் எல்லாம் பலருக்கும் உதவியாகப் பணிபுரிந்திருக்கிறார் என்பதைப் பார்த்தேன். அதன் தொடர்ச்சி இந்தப் படத்திலும்கூட இருக்கிறது. பிரபலங்கள் இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்திருக்கிறார்கள். எனினும், மேலே மேலே தனது தளங்களை உயர்த்திக்கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது.

பொதுவில் இந்தப் படத்தில் சற்றே ஊன்றி கவனித்தால், கதை மாந்தர்கள் அத்தனைபேரும் தன்னை வழிநடத்திச் செல்கிற அன்பைத்தான் தேடுகிறார்கள். அல்லது அது அருகிலிருப்பது அறியாமல் தேடித் திரிகிறார்கள். படங்களைப் பொறுத்தவரை காதலைச் சொல்வது எனில் இது முக்கியமான பாயின்ட். வாழ்வில் மட்டுமென்ன என்று யோசிக்கலாம். நாம் அப்படித்தானே?. நாம் நமது பக்கமிருந்து நமக்கு என்ன கிடைக்கிறது என்று வேவு பார்த்திருந்து, நமக்கு என்ன கிடைக்கவில்லை என்று கொதித்திருந்து, இன்னது கிடைப்பதாக சந்தோஷித்திருந்து, இப்படி இல்லையே என்று வெறுத்திருந்து  வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் அந்த ஓர் அடிப்படையால்தான்!.

அன்பு பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது. அன்பு பற்றி கொட்டி முழங்கப்படுகிறது. அன்பினால் அன்பினுள் வாழ்வதாகவே கற்பிதம் கொள்கிறோம். ஆனால், அது ஒரு போதும் நம்மோடு முழுமையாய் இருந்ததில்லை என்றும் அப்படி இருந்திருந்தால்கூட அது விலகிச் சென்றவாறே இருக்கிறதென்றுமே நான் நினைக்கிறேன். 

அதனால்தான் ஆண் பெண் பற்றிய படைப்புகள் முடிந்தபாடில்லை!.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு